முதுநிலை மருத்துவ படிப்புகளுக்குநீட் தேர்வு தேவையில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்திருப்பது சரியா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்குநீட் தேர்வு தேவையில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்திருப்பது சரியா?

சரியான முடிவு
முதுநிலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு தேவை இல்லை; வெறும் தேர்வினால் மட்டும் திறன் வளராது என்பது சரிதான். மருத்துவ பட்டப் படிப்புக்கு நீட் தேர்வு மூலம் மாணவர்களைத் தேர்வு செய்யும் முறை உள்ளது.  பிறகு என்ன? எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க நீட் தேர்வு முறை அமல்படுத்தியதற்கு, தகுதி, திறமை வளர்த்தல் எனக் காரணம் கூறுகின்றனர். நீட் தேர்வு மட்டுமே ஒரு மருத்துவரின் தகுதியையும் திறனையும் வளர்த்துவிட முடியாது. கல்லூரியில் சேர்ந்த பின்பு, திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்கிறோமோ, பயிற்சியில்  எவ்வளவு அக்கறை காட்டுகிறோமோ அதன் அடிப்படையில் திறமையான மருத்துவர், மனிதர் என்று அடையாளப்படுத்த முடியும். கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வந்தால் குழப்பம் ஏற்படாது.
கலைப்பித்தன், 
கடலூர்.

தேர்வு தேவை!
நீட் தேர்வு முறை வந்த பிறகு, எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையில் தகுதி உள்ளோருக்கு செலவில்லாமல் படிக்க இடம் கிடைக்கிறது. இதனால் நன்கொடை மூலம் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்து தகுதிக் குறைவானவர் மருத்துவராவது தடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு முறையைக் கடைப்பிடித்தால், குறைந்த மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற சுமாரான மருத்துவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு தகுதி பெறும் வாய்ப்பு இருக்காது;  திறமையான மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்பு படிக்க வாய்ப்பு கிடைக்கும். மக்களுக்கு சிகிச்சை அளிக்க திறமையான மருத்துவர்கள் கிடைப்பார்கள். எனவே, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க நீட் தேர்வு தேவையில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்திருப்பது ஏற்புடையதல்ல.
மா.தங்கமாரியப்பன், 
கோவில்பட்டி.

பரிந்துரை சரி!
ஏற்கெனவே ஒருமுறை நீட் தேர்வு மூலம் தேர்வு பெற்று, தன் திறமையை நிரூபித்த இளநிலை மருத்துவ மாணவரை,  முதுநிலை படிப்பில் சேர மீண்டும் ஒரு முறை நீட் தேர்வு எழுதச் சொல்வது தேவையற்றது என்று மத்திய சுகாதார அமைச்சகம் கருதியிருக்கலாம்; அதுதான் காரணமென்றால், அதன் பரிந்துரை சரிதான்.
சி. முத்துசாமி, 
பாளையங்கோட்டை.

தவறு!
நகரத்திலும் சரி, கிராமப்புறங்களிலும் சரி திறமையான மாணவச் செல்வங்கள் குவிந்துள்ளனர். இவர்கள் பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே எம்.பி.பி.எஸ். படிப்புக்கு தேர்வு செய்யலாம்; அதாவது, எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க இப்போதுள்ள நீட் தேர்வு நடைமுறையை ரத்து செய்யலாம். இதனால், ஏழை நெசவாளி, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவு நனவாகும். இதை விடுத்து, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு தேவையில்லை என்பது ஒரு கண்ணில், சுண்ணாம்பு மற்றொரு கண்ணில் வெண்ணெய் வைத்தது போலாகும்; சுகாதார அமைச்சகம் பரிந்துரைப்பது முற்றிலும் தவறாகும். 
இலக்குமணசுவாமி, 
மதுரை.

நியாயமானது!
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு தேவையில்லை என்ற முடிவு முற்றிலும் சரியானதே. தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு  நீட் தேர்வு வேண்டாம் என்ற குரல் பலமாக ஒலித்துவரும் நிலையில், இந்த முடிவு நியாயமானது. 
எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்று சிகிச்சை அளிக்கத் தகுதியான ஒருவர், மீண்டும் நீட் தேர்வு பயிற்சி மையங்களை தேடும் நிலையை இந்த முடிவு மாற்றிவிடும். எம்.பி.பி.எஸ். தேர்வில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், தற்போது அமலில் உள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு உரிய தேர்வுப் பட்டியல் அமைய வேண்டும்.
பொன் கருணாநிதி, 
கோட்டூர்.

தேர்வு அவசியம்!
தகுதியற்றவர்கள் எல்லாத் துறைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர்; நியமனத்தில் விதிகள் மீறப்படுகின்றன என்றெல்லாம் நீதிமன்றங்கள் சுட்டிக் காட்டியிருக்கும் சூழலில் மத்திய சுகாதார அமைச்சகம் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு தேவையில்லை என்று பரிந்துரைத்திருப்பதை ஏற்க முடியாது. லட்சக்கணக்கில் பணம் கொடுத்தால் பட்டங்களை பல்கலைக்கழகங்கள் தரும் வகையில் நம் கல்வி முறை வணிகமாக மாறி வருவதைக் கருத்தில் கொண்டு உரிய பயிற்சியும், நீட் தேர்வும் அவசியம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்வது காலத்தின் கட்டாயம்.
பவளகண்ணன், 
நடுவிக் கோட்டை.

முற்றிலும் சரி
மருத்துவ படிப்புக்காக (எம்.பி.பி.எஸ்.) ஏற்கெனவே ஒருமுறை நீட் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, பட்டம் பெற்று பின்னர் அடுத்த நிலையில் முதுநிலை மருத்துவக் கல்வி கற்க மீண்டும் எதற்காக நீட் தேர்வு எழுத வேண்டும்?  எனவே, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு  நீட் தேர்வு தேவையில்லை என்று மத்திய சுகாதாரத் துறையின் பரிந்துரை முற்றிலும் சரி.
கே. வேலுச்சாமி, தாராபுரம்.

புரியாத புதிர்!
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு தேவையில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்திருப்பது புரியாத புதிராக உள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புக்கு (எம்.பி.பி.எஸ்.) தரமான மருத்துவ மாணவர்களைத் தேர்வு செய்ய முயற்சி மேற்கொண்ட மத்திய அரசு, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்கள் அனைவரும் தரமானவர்களாக இருப்பர் எனக் கருதுகிறதா? இளநிலை மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு, அது சார்ந்த முதுநிலை மருத்துவப் படிப்புக்கு விலக்கு-மத்திய அரசின் தெளிவின்மையே இதற்குக் காரணம். எனவே, எம்.பி.பி.எஸ்., முதுநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பாடத் திட்டம், கல்வி முறை, தேர்வு மதிப்பீடு ஆகியவற்றைக் கடுமையாக்கினாலே போதுமானது; நீட் தேர்வு அவசியமற்றது. அரசுக்குக் கூடுதல் செலவு; மாணவர்களுக்கு வீண் சுமை.
ச.கந்தசாமி, இராசாப்பட்டி.

நேர்காணல் மூலம்...
மருத்துவ பட்டப் படிப்புக்கு நீட் தேர்வு உள்ளது; நீட் தேர்வு கூடாது என்ற விவாதம் நடக்கக்கூடிய நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர இரண்டு ஆண்டுகள் தனியார் மருத்துவமனைகளிலோ அரசு மருத்துவமனைகளிலோ மருத்துவராக நல்ல முறையில் பணிபுரிந்து சான்றிதழ் இருந்தால் அதை அடிப்படையாக கொண்டு நேர்காணல் தேர்வு நடத்தி முதுநிலை மருத்துவ படிப்புக்கு தேர்வு செய்யலாம். இந்த அடிப்படையில் மத்திய சுகாதாரத் துறையின் பரிந்துரை சரி. 
டி.வி. கிருஷ்ணசாமி, 
சென்னை.

சரியானதுதான்!
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு தேவையில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்திருப்பது சரி. இளநிலை மருத்துவப் படிப்பில் (எம்.பி.பி.எஸ்.) சேர நீட் தேர்வு எழுதி  டாக்டர் பட்டம் பெற்ற பிறகு  முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு அவசியமில்லை என்பது மிகவும் சரி. 
என்.எஸ். முத்துகிருஷ்ணராஜா, 
ராஜபாளையம்.

சுமையே!
நீட் தேர்வை எழுதிய பிறகே, எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்துள்ளனர். நீண்டகாலம் பணியாற்றி நன்கு அனுபவம் பெற்று முதுநிலை மருத்துவப் படிப்பை மேற்கொள்கின்றனர். எனவே, மீண்டும் நீட் தேர்வு என்பது முதுநிலை மருத்துவ படிப்பில் சேர ஒரு சுமையே.
எம்.எஸ்.இப்ராகிம், சென்னை.

மன அழுத்தம் குறையும்!
மருத்துவப் படிப்பில் பெற்ற மதிப்பெண், மருத்துவராக பணியாற்றிய அனுபவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் தேர்வு செய்யப்படுகின்றனர். எனவே, இளநிலை மருத்துவத்தில் தகுதியானவர் என்ற தேர்வே போதுமானது. இதனால், இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு மன அழுத்தம், செலவு, கால வரம்பு குறையும். எனவே, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு தேவையில்லை என்ற முடிவு சரியானதுதான்.
டி.ஆர்.ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.

திசைதிருப்பவா?
 நெக்ஸ்ட் தேர்வு எழுதினால்தான் டாக்டர் என தகுதி பெற்று சிகிச்சை அளிக்க முடியும் என மருத்துவ அமைப்பினர் கூறுவதை மத்திய சுகாதார அமைச்சகம் கண்டுகொள்ளாமல், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு தேவையில்லை என்று கூறுவது சரியல்ல; நீட் தேர்வை எதிர்த்துப் போராடுபவர்களை திசைதிருப்பும் செயல்.
பி.சுந்தரம், வெண்ணந்தூர்.

எந்த ஒரு படிப்புக்கும்...
தமிழகத்தில் பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க முன்பு நுழைவுத் தேர்வு இருந்தது; பின்னர் நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து எம்.பி.பி.எஸ். படிப்புக்கு நீட் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டது; இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டத்திலேயே நீட் தேர்வுக்கான பாடங்களைச் சேர்த்து விட்டால் தேர்வே தேவையிருக்காது; மேலும், பண விரயமும் தடுக்கப்படும். நீட் தேர்வில் தோல்வி அடைந்தால் தற்கொலை செய்து கொள்வோரும் உண்டு. எனவே, எந்த மருத்துவப் படிப்புக்கும் நீட் தேர்வு தேவையில்லை.
ரா.ராஜதுரை, சீர்காழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com