தமிழகத்தில் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டியது அவசியமா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

தமிழகத்தில் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டியது அவசியமா?

அவசியம்தான்!
பெரிய மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கும்போது கூடுதலான ஊழியர்கள் தேவைப்படுவார்கள்; மாவட்ட ஆட்சியர் தொடங்கி பல்வேறு துறைகளுக்கு அலுவலர்களும், அலுவலர்கள் செயல்பட கட்டடங்களும் தேவை. இதனால், அரசுக்குக் கூடுதல் செலவு ஏற்படுவது இயல்பானதுதான். பொது மக்களின் கோரிக்கைகளுக்காகவும், வசதிக்காகவும், அரசின் நிர்வாக வசதிக்காகவும் பெரிய மாவட்டங்களைப் பிரிப்பது அவசியமானதுதான்.
கே.வேலுச்சாமி, தாராபுரம்.

தேவையில்லை!
அனைத்து மாவட்டங்களிலும் லஞ்சம், முறைகேடு நிறைந்ததாகத்தான் நிர்வாகம் இருக்கிறது; இதைச் சரி செய்தாலே மக்களுக்கு நன்மை கிடைக்கும். புதிய மாவட்டங்களை ஏற்படுத்தினாலும் இதே நிலைதான் தொடரும் என்பதால் தேவையில்லாத ஒன்று. மேலும், புதிய மாவட்டத்தை அமைப்பதால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. அரசு அலுவலர்கள்தான் பலன் அடைவார்கள். அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர்ப் பிரச்னை உள்ளது. எனவே, அனைவருக்கும் குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் முதலில் ஏற்பாடு செய்யட்டும். புதிய மாவட்டம் தேவையா, இல்லையா என்பதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
மா.தங்க மாரியப்பன், கோவில்பட்டி.

நல்லதுதான்!
மக்கள்தொகைக்கு ஏற்ப புதிய மாவட்டங்கள் உருவாவது நல்லதுதான். நிர்வாகத் திறன் மேம்படுவதற்கு மாவட்ட பிரிப்பு நடவடிக்கை உதவும். மக்கள்நலத் திட்டப் பணிகள் விரைவாக நிறைவேற வாய்ப்புகள் உருவாகும். பொது மக்களின் குறைகளை மாவட்ட ஆட்சியர் உடனுக்குடன் நிவர்த்தி செய்ய முடியும். ஆனால், பிற இடங்களிலிருந்து மாற்றுப் பணி (டெபுடேஷன்) அடிப்படையில் புதிய பணியிடங்களில் பணியாளர்களை அமர்த்தும்போது, அவர்கள் ஏற்கெனவே இருந்த இடங்களில் பணிகள் தேக்கம் அடையாமல் அரசு பார்த்துக் கொள்வது அவசியம்.
பவளவண்ணன், நடுவிக்கோட்டை.

வீண் செலவு!
ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டால் அந்த மாவட்டத்துக்கு நீதிமன்றம், காவல் துறை, கல்வித் துறை முதலான துறை அலுவலகங்கள் தேவைப்படும்; அதிகாரிகளும் தேவைப்படுவார்கள். ஒரு மாவட்டம் உருவாகி 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் சில தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படுவதில்லை. இதே போன்று ஒவ்வொரு வட்டத்துக்கும் இந்தப் பிரச்னை உள்ளது. தகவல் தொழில்நுட்பம் வெகுவாக முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில், புதிய மாவட்டங்களை உருவாக்குவது என்பது வீண் செலவுதான். ஒரு மாவட்டத்தின் எந்த ஒரு பகுதியில் இருந்தும் 150 கி.மீ. தொலைவில் மாவட்ட தலைநகரங்கள் அமையுமாறு மாவட்ட எல்லைகள், வருவாய் கோட்டம், வட்டங்கள் ஆகியவை திருத்தி அமைக்கப்பட வேண்டும். அரசின் அனைத்துச் செயல்பாடுகளிலும் நிதிச் சிக்கனம் எதிரொலிக்க வேண்டும்.
கோ.நடராஜன், சென்னை.

ஒவ்வொரு தொகுதிக்கும்...
பெருகி வரும் மக்கள்தொகை, வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் ஒரு மாவட்டம் என்ற அடிப்படையில் மொத்தம் 39 மாவட்டங்களை உருவாக்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாக வலியுறுத்தப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றுவர பயண நேரமும் செலவும் அதிகமாகிறது. எனவே, புதிய மாவட்டங்களை உருவாக்குவது அவசியம்தான்.
ரா.ராஜதுரை, சீர்காழி.

லஞ்சத்தை ஒழிக்க...
தமிழகத்தில் தற்போது மிக அதிக அளவில் மாவட்டங்கள் உள்ளன. எனவே, இனி புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டியதில்லை. மேலும், புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதால் சில புதிய அலுவலகங்கள் வருகின்றன; ஒருசில துறைகளில் மாவட்ட தலைமை அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன. புதிதாக ஊழியர் பணியிடங்கள்கூட உருவாக்கப்படுவதில்லை. இவை பெரும்பாலும் பணியிட மாற்றங்கள் மூலமே நிரப்பப்படுகின்றன. இதனால், பயண நேரம்-போக்குவரத்துக் கட்டணம் மீதமாவது ஆகிய நன்மை மட்டுமே பொது மக்களுக்குக் கிடைக்கிறது. அரசு நிர்வாகத்தில் சிவப்பு நாடா முறை தாமதங்கள் ஒழியாமல் மக்களுக்கு பெரிய பயன் எதுவும் கிடைக்கப் போவதில்லை. எனவே, புதிய மாவட்டங்கள் உருவாக்குவதைவிட லஞ்சம், ஊழலை ஒழித்து, நிர்வாகம் செம்மையாக நடைபெற அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
பொன்.கருணாநிதி, கோட்டூர்.

நிர்வாகத் திறன்...
தமிழகத்தில் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டியது அவசியம்தான். சுதந்திரத்துக்குப் பிறகு தமிழக மக்கள்தொகை பல மடங்கு அதிகரித்துள்ளது. மக்களின் தேவைகளான வீடு, கல்விக் கூடங்கள், தொழிற்பயிற்சிக் கூடங்கள், வேலைவாய்ப்புக்கான தொழிற்சாலைகள், நவீன அறிவியல் சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்கூடங்கள் முதலானவை பல்வேறு இடங்களிலும் அமைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் புதிய மாவட்டங்களை உருவாக்குவதால், தமிழக அரசின் நிர்வகிக்கும் திறன் எளிமையாக்கப்படும். குறிப்பாக, தகவல் தொழில்நுட்பமும், காவல் துறையும் செயல்பட மிகவும் பயனுள்ளதாக அமையும். மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.
எழில் சோம.பொன்னுசாமி, சென்னை.

வேண்டாம்!
ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை என மத்திய அரசு முழங்குகிறது. ஆனால், தற்போதுள்ள மாவட்டங்கள் போதாதென்று மேலும் புதிய மாவட்டங்களை உருவாக்கி எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு விரும்புகிறது. 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றாக்கி நவீன இந்தியாவை உருவாக்கினார் வல்லபபாய் படேல். மொழிவாரி மாநிலங்கள் வரையறுக்கப்பட்ட பிறகு, மேலும் மாவட்டங்கள் பிரிக்கப்படுவது சரியல்ல. எனவே, மாவட்ட பிரிப்புகள் வேண்டாம்.
எஸ்.ஜி.இசட்கான், திருப்பூர்.

ஆன்லைன் இருந்தாலும்...
என்னதான் ஆன்லைன் வசதி இருந்தாலும் இன்னமும் சில விஷயங்களுக்கு நேரில் செல்லத்தான் வேண்டியுள்ளது. பொது மக்களுக்கும் அரசுக்கும் நேரடித் தொடர்பு அதிகரித்து விட்டது. முன்பெல்லாம் ஒரு நாள் முழுவதும் செலவழித்தால் வேலை முடிந்து விடும்; ஆனால், இப்போதெல்லாம் ஒரே வேலைக்கு மீண்டும் மீண்டும் அரசு அலுவலகங்களுக்கு அலையும் நிலை ஏற்படுகிறது. அதுவும் தொலைவில் இருந்தால் நாள் முழுவதும் நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளது. எனவே, மாவட்டங்களைப் பிரிக்க வேண்டியது அவசியம்தான்.
வரதன், திருவாரூர்.

தொலையும் அடையாளம்!
மகாகவி பாரதியார் வாழ்ந்த காலத்தில் இந்தியாவின் மக்கள்தொகை 30 கோடி; தற்போது நாட்டின் மக்கள்தொகை சுமார் 130 கோடி. மக்கள் நலன் கருதி மாவட்டங்களை பிரிப்பது அவசியமாக இருந்தாலும், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் உருவானபோது, மகாகவி பாரதியை இழந்தது; இன்று திருநெல்வேலியிலிருந்து தென்காசி மாவட்டம் உருவாகும்போது குற்றால அருவியை இழக்கும். இவ்வாறு மாவட்டங்களிலிருந்து புதிய மாவட்டங்கள் உருவாகும்போதெல்லாம் அந்தந்த மாவட்டங்கள் அதனதன் அடையாளங்களைத் தொலைக்கின்றன என்பதால், மேலும் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டியது அவசியம்தானா?
கோதைமாறன், திருநெல்வேலி.

வேலைவாய்ப்புக்காக...
தமிழகத்தில் வேலைவாய்ப்பை முன்னிட்டு புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டியது அவசியம்தான். தமிழகத்தில் தற்போது பல பொறியியல் கல்லூரிகள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பொறியியல் படித்து முடித்த மாணவர்கள் பலர் குழுவாக பேக்கரி, மளிகைக் கடை வைத்து தொழில் புரிகின்றனர். புதிய மாவட்டங்களை உருவாக்கும்போது இது போன்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 
எம்.சம்பத்குமார், ஈரோடு.

பலன் கிடைக்காது!
தமிழகத்தில் மாவட்டங்களைப் பிரிப்பது தேவையற்ற செயலாகும். இதனால் எந்தவித வளர்ச்சியும் ஏற்படாது. மாவட்டங்களை அடிக்கடி பிரிப்பதால் குழப்பம் ஏற்படும். பொருளாதார முன்னேற்றம் பாதிக்கப்படும். மாவட்டங்களைப் பிரிப்பதால் எந்தவிதப் பலனும் கிடைக்கப் போவதில்லை. பணி மாறுதல்கள், முகவரி மாற்றம் போன்றவை காரணமாக பொது மக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள்.  எனினும், அரசியல்வாதிகளுக்கு லாபகரமாக இருக்கும்.
தி.சே.அறிவழகன், திருப்புலிவனம்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அரசு மருத்துவர்கள் ஒத்துழையாமைப் போராட்டம் நடத்துவது சரியா?

இதுபற்றி வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகளை பத்து வரிகளுக்கு மிகாமல் அஞ்சல் அட்டையில் 
எழுதி, வரும் திங்கள்கிழமைக்குள் கிடைக்குமாறு
விவாத மேடை பகுதி, தினமணி, 
29, இரண்டாவது பிரதான சாலை, 
அம்பத்தூர் தொழிற்பேட்டை, 
சென்னை - 600 058 
என்ற முகவரிக்கு அனுப்பவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com