Enable Javscript for better performance
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சென்னை-சேலம் இடையேயான 8 வழிச் சாலைத் திட்ட ரத்துக்கு தடை விதிக்க உச்சநீத- Dinamani

சுடச்சுட

  

  தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சென்னை-சேலம் இடையேயான 8 வழிச் சாலைத் திட்ட ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்திருப்பது சரியா, தவறா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

  By DIN  |   Published on : 12th June 2019 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடைசிப் புகலிடம்!
  தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த ரத்து ஆணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்தது நல்ல செய்தி. பாராட்டப்பட வேண்டிய தீர்ப்பு. பாமர மக்களின் கடைசிப் புகலிடம் நீதிமன்றம். ஏழை விவசாயிகளுக்கு உச்சநீதிமன்றம் ஆதரவாக நிற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்தல் வரை அமைதி காத்தவர்கள், இப்போது வேகம் காட்டியதற்கு சரியான பதிலடியை உச்சநீதிமன்றம் கொடுத்துள்ளது.
  பொன்.கருணாநிதி, கோட்டூர்.

  ஆலோசிக்கலாமே!
  ஜனநாயக நாட்டில் அரசாங்கத்தை மக்கள்தான் தேர்வு செய்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்களுக்குத் தேவையானதை மட்டுமே செய்ய வேண்டியது கடமையாகும். அதை விட்டு விட்டு தேவையில்லாதவற்றைக் கொண்டுவருவது மக்கள் விரோத நடவடிக்கையாகவே இருக்கும். மக்களிடம் வாக்குகளைப் பெற்று ஆட்சியில் அமர்ந்த பின், மக்களிடம் தேவையற்றவற்றைத் திணிக்க முயல்வது மக்கள் விரோத ஆட்சியாகத்தானே கருத்தில் கொள்ள வேண்டும். எந்தவொரு திட்டத்துக்கும் மக்களை கலந்தலோசிப்பதே சிறந்த அரசாங்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமையும்.
  நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.

  சரிதான்!
  விவசாயத்தின் மீது அக்கறை கொண்டு நாட்டின் நலன் கருதி உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. விளை நிலங்களை எல்லாம் விவசாயிகள் ஏற்கெனவே விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் சேலம் விவசாயிகள், விவசாயத்தை விடாமல் செய்து வருகின்றனர். அவர்களைப் பாராட்டலாம். எனவே, இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் மறுத்திருப்பது சரிதான்.
  சு.ஆறுமுகம், கழுகுமலை.

  தண்ணீர், காலத்தின் கட்டாயம்!
  உச்சநீதிமன்றம் மறுத்திருப்பது முற்றிலும் சரி. நாட்டுக்கு எட்டுவழிச் சாலையல்ல தற்போதைய தேவை. குடிக்க, குளிக்க, நீர் இல்லாமல் அவதிப்படும் கோடானு கோடி மக்களுக்குத் தண்ணீர் அளிக்க, நிலத்தடி நீர் அளவை அதிகரிக்க அரசு ஆவன செய்யாமல் ஏதோ செய்து கொண்டிருக்கிறது. இருக்கக் கூடிய நீர்நிலைகள் மேலும் பறிபோகாமல் காப்பாற்றி நீரைச் சேமிப்பதற்கான முயற்சியை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும். சமுதாய ஏக்கத்தின் மீது கவனம் செலுத்தி அரசு ஆவன செய்ய வேண்டும்.
  எஸ்.முருகானந்தம், தாழக்குடி.

  மறுப்பு சரிதான்!
  எட்டுவழிச் சாலைக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்திருப்பது சரி. வயல்வெளிகளை அழித்து எட்டுவழிச் சாலை வரக் கூடாது. வாகனங்கள் எண்ணிக்கை எட்டுவழிச் சாலையால் அதிகமாகும். மாசும் கூடும். வாகனங்களை வைத்திருப்பவர்கள் சுற்றிக் கொண்டு போகலாம்.  சென்னை-சேலம் இடையே தற்போதுள்ளதைவிட குறைந்த தொலைவில் வாகனங்கள் சென்றால் நேரம் மீதமாகும் என்று கவலைப்படாமல், வயல்வெளிகளை அழிக்காமல் காப்பதே முக்கியம்.
  எஸ்.வி.ராஜசேகர், சென்னை.

  மறுப்பு சரியல்ல!
  மக்கள்தொகை பெருகப் பெருக அவர்கள் வசதிக்காக நாட்டை விரிவாக்கம் செய்வது இயல்பே. அப்படிப்பட்ட திட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக்கொள்ள உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது சரியல்ல.
  கோ. ராஜேஷ் கோபால், அரவங்காடு.

  நம்பாததே காரணம்...
  தினமும் குறைந்தபட்சம் 8,000 வாகனங்கள் பயணிக்கக் கூடிய வாய்ப்புகள் இருந்தால் மட்டுமே எட்டுவழிச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவதில் தவறில்லை. ஏற்கெனவே சென்னைக்கும் சேலத்திற்கும் போதுமான சாலை வசதிகள் இருக்கும்போது, ஐந்து மாவட்டங்களில் உள்ள வாழ்வாதாரமான விவசாய நிலங்களையும் இயற்கை வளங்களையும் அழித்துத்தான் சாலை போட வேண்டுமா என ஒவ்வொரு பாமரனையும் சிந்திக்க வைத்து விட்டது. இந்தச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றினால் பயணம் செய்யும் நேரம் மீதமாவதோடு எரிபொருளும் குறையும் என்ற வாதங்களை மக்களும் நீதிமன்றங்களும் நம்பத் தயாராக இல்லை என்பதுதான் உண்மை. நீதிமன்றத்தின் தீர்ப்பு சரி.
  என்.வி.சீனிவாசன், சென்னை.

  கண்ணை விற்றுச் சித்திரம்?
  ஆளும் அரசியல்வாதிகளுக்குக் கமிஷன் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் எட்டுவழிச் சாலை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இயற்கையான மலை, மரங்களை அழித்து புதிய சாலைத் திட்டம் தேவையா? இவற்றையெல்லாம் உணர்ந்துதான் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. எட்டுவழிச் சாலை திட்டம் என்பது கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போலத்தான்.
  ரா.ராஜதுரை, சீர்காழி.

  தீர்ப்பல்ல!
  சென்னை-சேலம் இடையேயான எட்டு வழிச் சாலைத் திட்ட ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்திருப்பது சரியா, தவறா என்றால், இது தீர்ப்பல்ல என்றுதான் சொல்ல வேண்டும். வழக்கின் விசாரணையின் போது ஒரு திட்டத்துக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பதும், தடையை ரத்து செய்வதுமாக ஆரம்பத்தில் இருக்கும். ஆனால், அடுத்தடுத்து விசாரணைக்கு  வரும்போது  மாறுபட்ட உத்தரவுகள் பல வழக்குகளில் வழங்கப்படுகின்றன. எனவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சென்னை - சேலம் இடையேயான எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்திருப்பது சரியா, தவறா என்பதைவிட இது தீர்ப்பல்ல என்பதே சரி.
  பி.துரை, காட்பாடி.

  100 சதவீதம் சரி!
  தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சென்னை - சேலம் இடையேயான எட்டு வழிச் சாலைத் திட்ட ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்திருப்பது சரிதான். வேளாண் விளைநிலங்கள் ஏற்கெனவே படிப்படியாக அழிக்கப்பட்டு நகர மேம்பாடு என்ற பெயரிலும், துணை நகரங்கள் என்ற பெயரிலும் அடுக்ககங்களாக மாறிவரும் சூழலில் இப்போது எட்டு வழிச் சாலை என்ற பெயரில் வேளாண் விளைநிலங்கள் அழிக்கப்படுவது ஏற்புடையதல்ல. வேளாண் தொழிலையே நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை சாலை மேம்பாடு என்ற பெயரில் அழிப்பதும், வேளாண் தொழிலை படிப்படியாகக் குறைப்பதும் எந்த வகையிலும் நியாயமில்லை. உச்சநீதிமன்றம்  எட்டுவழிச் சாலைத் திட்ட ரத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்திருப்பது 100 சதவீதம் சரிதான்.
  கவியழகன்,  திருவொற்றியூர்.

  பிடிவாதம் வேண்டாம்!
  விளைநிலங்கள், வனங்கள், குளங்கள் என அனைத்து வாழ்வாதாரங்களையும் அழித்து ஒரு தேசிய நெடுஞ்சாலை, அதுவும் அத்தியாவசியமற்ற நெடுஞ்சாலை அமைப்பது தேவையற்றது. மக்கள் நலன் காப்போம் என்று உறுதி எடுத்து பதவி ஏற்ற ஆட்சியாளர்களே இது குறித்து முடிவு எடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து அவர்களே முயற்சிப்பது தவறு. உயர்நீதிமன்றம் தலையிட்டு திட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கிய பிறகு, ரத்துக்குத் தடை கோருவது கோருவது வீண் பிடிவாதம். எனவே, திட்டத்தின் ரத்து தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்திருப்பது மிகச் சரியானது.
  ப. தாணப்பன், தச்சநல்லூர். 

  மிக மிக தவறு!
  சென்னை-சேலம் எட்டு வழிச் சாலைத் திட்ட ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்திருப்பது மிக மிக தவறு. மற்ற தேசிய நெடுஞ்சாலையைவிட சென்னை-சேலம் சாலை அதி முக்கியமானது. தென்னிந்தியாவில் உள்ள இடங்களுக்கு ராணுவத் தளவாடங்களை விரைவில் கொண்டு செல்ல முக்கியமானது. ராணுவ உதிரி பாகங்கள் தயாரிக்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. மேலும், தரமான சாலை வசதி அமைவதால் விவசாய விளைபொருள்கள் விரைவில் கொண்டு செல்லப்படும். பல சிறு, குறு தொழில்கள் மேம்படும். ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சரி அல்ல.
  சி.இராஜா சுந்தரம், சென்னை.

  தேவையற்றது!
  தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் எட்டு வழிச் சாலைத் திட்டம் தேவையற்றது. நான்கு வழிச் சாலையைப் பயன்படுத்தி தேவையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பூர்த்தி செய்யட்டும். நாட்டின் தற்போதைய தேவை சாலை விரிவாக்கமும் விரைவான வாகனப் போக்குவரத்தும் அல்ல. மாறாக, வாழ்வின் அடிப்படைத் தேவை தண்ணீர்தான். ஏனெனில் நாட்டை தண்ணீர்ப் பஞ்சம் அழித்து விடும்  போலும். ஆனால், தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்குவதற்கான திட்டம் இல்லை. 
  எஸ்.சொக்கலிங்கம், 
  கொட்டாரம்.

   

  தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வுதான் என்ன?

  இதுபற்றி வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகளை பத்து வரிகளுக்கு மிகாமல் அஞ்சல் அட்டையில் எழுதி, வரும் திங்கள்கிழமைக்குள் கிடைக்குமாறு
  விவாத மேடை பகுதி, தினமணி, 
  29, இரண்டாவது பிரதான சாலை, 
  அம்பத்தூர் தொழிற்பேட்டை, 
  சென்னை - 600 058 
  என்ற முகவரிக்கு அனுப்பவும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai