Enable Javscript for better performance
தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வுதான் என்ன என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில..- Dinamani

சுடச்சுட

  

  தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வுதான் என்ன என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

  By DIN  |   Published on : 19th June 2019 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தண்ணீர்...கண்ணீர்...
  தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்கான தீர்வு மக்களாகிய நம்மிடமே உள்ளது. குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கான கேடுகள் அனைத்தையும் செய்த நாம், இன்று அதற்காக கண்ணீர் வடிக்கிறோம். ஏரிகள், குளங்கள், காடுகள் அனைத்தையும் குடியிருப்புப் பகுதிகளாக மாற்றியவர்கள் நாம்தான்.
  குடிநீர்ப் பற்றாக்குறை என்ற பரிதவிப்புகளுக்குப் பிறகும் நீர் பயன்பாட்டில் சிக்கனம் இல்லை. சேமிப்பு நோக்கில் செலவை அமைத்துக் கொள்வதில்லை; குளித்தல், துவைத்தல், பாத்திரம் துலக்குதல், கை-கால் கழுவுதல் என எல்லா வகைகளிலும் எந்தவித அக்கறையும் இன்றி தண்ணீரை செலவு செய்கிறோம். எந்தச் சீர்திருத்தமானாலும் மக்களின் பங்களிப்பே முதன்மை பெற வேண்டும். எனவே, தண்ணீர் தட்டுப்பாட்டுக்கான தீர்வு நம் கையில்தான் உள்ளது.
  ச.கந்தசாமி, தூத்துக்குடி.

  தீதும் நன்றும்...
  தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பது போன்று தற்போதைய தண்ணீர் தட்டுப்பாடு நாம் ஏற்படுத்திக் கொண்டது. கடும் கோடை காரணமாக இந்த முறை நாம் சிரமப்பட்டே ஆக வேண்டும். எனினும், சில முயற்சிகளை தொடர்ந்து  செய்தால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் சமாளிக்க முடியும். பொதுப்பணித் துறை வெளியிட்டுள்ள அண்மைக்கால ஆய்வின்படி,  358 பகுதிகளில் நிலத்தடி நீர் மிகுந்த அபாய கட்டத்தில் உள்ளது; மேலும் 35 பகுதிகளில் நீர் பயன்படுத்த முடியாத அளவு உவர் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகு தமிழகத்தில் பல மாவட்டங்களில் பெரிதாக குடிநீர்த் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. இனி அரசை எதிர்பார்க்காமல், மக்களும், சேவை அமைப்புகளும் ஆறு, ஏரி, குளங்களைத் தூர்வார வேண்டும்.
  உடுமலை அமிர்தநேயன், 
  உடுமலைப்பேட்டை.

  நிரந்தரத் தீர்வு தேவை
  தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தரத் தீர்வை கண்டுபிடிக்க வேண்டும். நிலத்தடி நீரைச் சேமிக்க போர்க்கால அடிப்படையில் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மழைநீர் சேகரிப்பு அவசியத்தை உணர வேண்டும். மழைக் காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் நீரை நீர்த் தேக்கங்கள் மூலம் சேமித்து, நீரை முறையாகப் பயன்படுத்த வேண்டும். மேலும், கடல் நீரினை சுத்தகரிப்பு செய்து தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும்.
  எம்.ஆர்.முத்துக்குமார், 
  தாணிக் கோட்டகம்.

  கிணறு உதவும்!
  தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு என்ன என்று ஒவ்வொருவரும் கேள்வி எழுப்புவதைவிட, நாம் அதற்கு என்ன செய்யலாம் என யோசிக்க வேண்டும். அடிக் குழாய் அமைப்பதை விட்டு ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் கிணறு இருக்க வேண்டுமென அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டு மாடியிலிருந்தும் அந்தக் கிணற்றுக்கு குழாய் இணைப்பு செய்யும் நிலையில், சிறிதளவு மழை பெய்தாலும் அந்தக் குழாய் வழியாக கிணற்றுக்கு மழை நீர் செல்லும்.  இவ்வாறு செய்தால் தேவைக்கான தண்ணீரை தொடர்ந்து பெற முடியும்.
  வீட்டில் ஷவரில் நேரடியாக தண்ணீரைப் பயன்படுத்திக் குளிப்பதைக் காட்டிலும், வாளிகளில் நீரை நிரப்பி பயன்படுத்துவதன் மூலம் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த முடியும். மழை பொழியும் காலங்களில் நீரைச் சேமிப்பது குறித்து அதிகம் சிந்திக்க வேண்டும்.
  உஷா முத்துராமன், மதுரை.

  மழை நீர் சேகரிப்புக்கு...
  நிலத்தடி நீர் மட்டம் குறைந்து அதலபாதாளத்துக்குச் சென்று விட்டதே தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு மிக முக்கியமான காரணமாகும். நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த, தற்போது செயல்படாமல் முடங்கி கிடக்கும் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். அவர் ஆட்சியில் கொண்டு வந்த மழை நீர் சேகரிப்பு திட்டதுக்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும். நிலத்தடி நீரை பன்னாட்டு குளிர்பான கம்பெனிகள், உள்நாட்டு மினரல் வாட்டர் தயாரிப்பாளர்கள் உறிஞ்ச தடை விதிக்க வேண்டும்.
  ரா.ராஜதுரை, சீர்காழி.

  இப்படிச் செய்தால்...
  தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு என்ன செய்வது என்பது பொறுப்புடன் சிந்திக்க வேண்டிய செயலாகும். நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பெயரளவுக்கு இல்லாமல் அவற்றை அக்கறையுடன் தூர்வார வேண்டும். மழைக் காலங்களில் நீரைச் சேமிக்க வேண்டும். பொறுப்பற்ற முறையில் செயல்படுவோர் தண்ணீர் தட்டுப்பாட்டைச் சந்திப்பதில் தவறில்லை. பொறுப்புணர்வு ஏற்பட்டு, மழை, வெள்ள நீரை சேமித்தாலே போதும்; தண்ணீர் பிரச்னையே இருக்காது.
  பூ.சி.இளங்கோவன், 
  அண்ணாமலை நகர்.

  கடல் நீரை சுத்திகரித்து...
  வறண்டு போன குளங்கள், கண்மாய்களை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கள் வீடுகளில் மழைநீரை பொதுமக்கள் சேமிக்க வேண்டும். வீடுகளில் மழைநீர் சேகரிப்புக்கென தனி இடத்தைத் தொடர்ந்து பராமரிப்பது அவசியம். கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தண்ணீர் அத்தியாவசியம் என்பதால், போர்க்கால அடிப்படையில் அரசு செயல்பட வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட நீரை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதற்கு தமிழ்நாடு குடிநீர் வாரியம் மூலம் ஆவன செய்ய வேண்டும்.
  எஸ்.பரமசிவம், மதுரை.

  வீணாக்க வேண்டாம்!
  நீர்நிலைகளைப் பாதுகாக்க அரசும், தனியார் நிறுவனங்களும், குறிப்பாக, பொதுமக்கள் முன்வர வேண்டும்.  பருவ காலங்களில் கிடைக்கும் மழை நீரை வீணாக்கி வரும் நாம், கோடையில் தண்ணீருக்காகத் திண்டாடுகிறோம். முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா செயல்படுத்திய மழைநீர் சேமிப்புத் திட்டத்தை தமிழக அரசு தீவிரமாகச் செயல்படுத்த முன்வர வேண்டும்.
  எம்.முஹம்மது கடாஃபி, 
  கொடிக்கால் பாளையம்.

  கட்செவி அஞ்சல் மூலம்...
  தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு உரிய உதவிக் குறிப்புகளை கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-அப்), முகநூல் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்தலாம். அதாவது, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோர், அதற்குரிய வழிமுறைகளை பிறருக்குத் தெரியப்படுத்தி சமுதாயத்துக்கு தங்களது பங்களிப்பைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் நிலையில் முக நூலில் பிறரின் பாராட்டையும் பெற முடியும். சமூக வலைதளங்களில் மூழ்கியுள்ள இன்றைய இளைய தலைமுறையினர் இதன் விழிப்புணர்வு பெற்று தண்ணீரைச் சேமிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்வார்கள். தண்ணீர் தட்டுப்பாடும் குறையும்.
  வி.சரவணன், சிவகங்கை.

  நிலத்தடி நீர் அளவு உயர...
  தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்போது யோசிப்பதைவிட, வரும் முன்னரே அது குறித்து யோசிப்பதே நல்லது. அனைத்துப் பகுதிகளிலும் நீர் சேமிப்புக் குளங்களை அதிக அளவில் ஏற்படுத்தி, கோயில் குளங்களைப் பராமரிப்பது போன்று அதைவிட அதிக முக்கியத்துவம் அளித்து சேமிக்கவும், பாதுகாக்கவும் வழிவகை செய்ய வேண்டும். இருக்கும் குளங்களையும், ஏரிகளையும் ஆழப்படுத்தி அவற்றில் கழிவுநீர் கலக்காமலும், மற்ற கழிவுகளைக் கொட்டாமல் இருக்கவும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவ்வாறு ஆங்காங்கே தண்ணீர் சேமிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டாலே நிலத்தடி நீர் உயர்ந்து விடும்.
  கோ.லோகநாதன், 

  திருப்பத்தூர்.
  விழிப்புணர்வு அவசியம்!
  வீடுகளில் குளிப்பதற்கு பயன்படுத்தும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தலாம். வீடுகளில் குழாயிலிருந்து நேரடியாக தண்ணீரைப் பிடித்து பயன்படுத்தாமல், சிறிய அளவிலான வாளிகளில் தண்ணீரை வைத்துக் கொண்டு பாத்திரங்களைக் கழுவலாம். ஆறு, ஏரி, குளங்களில் தண்ணீரைச் சேமித்து வைக்கலாம். நீர் சிக்கனம் தேவை என்ற வாசகங்களை எழுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.
  த.சேரன், கொளப்பாடு.

  இரண்டு தீர்வுகள்!
  தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க இரண்டு தீர்வுகள் உள்ளன. 1. தற்காலிகத் தீர்வு; 2.நிரந்தரத் தீர்வு. முதல் தீர்வின்படி, தமிழ்நாட்டில் ஓடும் அனைத்து நதிகள், ஆறுகள், ஏன் ஓடைகளில்கூட தண்ணீரைத் தேக்கி வைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இரண்டாவது தீர்வின்படி, கிருஷ்ணா, கோதாவரி, காவிரி நதிகளை இணைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப்படுத்த தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். அதிருஷ்டவசமாக, தமிழகத்தின் தண்ணீர் பிரச்னை குறித்து அறிந்துள்ள ஒரு மத்திய அமைச்சர் (நிதின் கட்கரி) பொறுப்பேற்றுள்ளார். எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம். 
  சொ.முத்துசாமி, 
  பாளையங்கோட்டை.

   

   

  தமிழக எம்.பி.-க்களில் ஒருவர், மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்தில் இல்லாமல் இருப்பது சரியா?
  இது குறித்த கருத்துகளை வாசகர்கள் பத்து வரிகளுக்கு மிகாமல் அஞ்சல் அட்டையில் எழுதி, வரும் திங்கள்கிழமைக்குள் கிடைக்குமாறு 
  விவாத மேடை பகுதி, தினமணி, 
  29, இரண்டாவது பிரதான சாலை, 
  அம்பத்தூர் தொழிற்பேட்டை, 
  சென்னை - 600 058 
  என்ற முகவரிக்கு அனுப்பவும்.

   இமெயில்: edit.dinamani@gmail.com
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai