தமிழக மக்களின் உரிமைகளை மீட்பதற்காகவே அதிமுக-பாஜக அணியில் இணைந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறுவது சரியா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

பெரும்பாலான இளைய சமுதாயம் எதிர்பார்த்த தலைவர் அன்புமணி ராமதாஸ். கட்சிக்காக கூட்டணி வைத்தேன் என்பது ஏற்புடையதல்ல.

ஏற்க முடியாது!

பெரும்பாலான இளைய சமுதாயம் எதிர்பார்த்த தலைவர் அன்புமணி ராமதாஸ். கட்சிக்காக கூட்டணி வைத்தேன் என்பது ஏற்புடையதல்ல. மாற்றம் முன்னேற்றம் என்ற நிலையில் இது ஏமாற்றமே. மக்கள் முடிவு சரியாக இருக்கும் என்பது உறுதி.
பா.நித்தியானந்தம், வேலூர்.


சரிதான்!

தமிழக மக்களின் உரிமைகளை அதிமுக-பாஜக அணியில் இணைந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறுவது ஒரு வகையில் சரிதான். தற்போதைய நிலையில் இந்தியாவில் மோடி அலை வீசுகிறது. அந்த அலைக்குத் தகுந்தபடி தமிழகத்தில் சூழல் நிலவும் நிலையில், தமிழக மக்களின் உரிமை சார்ந்த விஷயங்களை சாதகமாக்கிக் கொள்ள முடியும். 

ஜெ.கஜேந்திரன், புஷ்பகிரி.


அரசியல் உத்தி

தமிழக மக்களின் உரிமை மீட்புக்காகவே அதிமுக-பாஜக அணியில் இணைந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறுவது வெறும் அரசியல் உத்தி. நமது உரிமையைப் பெறுவதில் நமக்குள்ள, சுதந்திரம் பிறரது உரிமைகளை மதிப்பதிலும் இருக்க வேண்டும். அவர் கோரும் தமிழக மக்களின் உரிமைகள் சுயநலம் சார்ந்தது. உரிமைகள் என்ற பெயரில் தமிழகத்துக்கு நன்மை தரும் திட்டங்கள் பலவற்றை எதிர்ப்பதில் அவரது அரசியல் இயக்கம் தலையிடுவது உரிமை மீட்பு அல்ல. தமிழக நலம் பறிப்பு. 

ச.கந்தசாமி, தூத்துக்குடி.


கூட்டணி சரிதான்!

அன்புமணி ராமதாஸ் கூறுவது முற்றிலும் சரியே. உண்மையைக் கூறுகிறார். சாத்தியமாகக் கூடியதையே கூறுகிறார். தனித்துப் போட்டியிட்டது சரி என்பவர்கள், வெற்றி பெறுவதை பற்றிச் சிந்திக்க வேண்டும். வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதே அன்புமணி ராமதாஸின் எண்ணம். அதனால்தான் இந்தக் கூட்டணி என்ற மாற்றம்.
அசுவின், சோழன் குடிகாடு.


முடிவு சரியில்லை!

தமிழகத்தின் உரிமைகளை மீட்பதற்காக அதிமுக-பாஜக அணியுடன் இணைந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறுவது சரியான காரணமில்லை. சரியான முடிவும் இல்லை. மாற்றம் முன்னேற்றத்தைக் கொடுத்து விட்டது. தமிழகத்தின் உரிமைகளை யாரிடமிருந்து மீட்கப் போகிறீர்கள்? பிரதமர் மோடியிடமிருந்தா,  முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்தா என்ற விளக்கம் இல்லையே!  

தொ.எழில் நிலவன், களமருதூர்.


விஜயகாந்த் போன்று...

இளைஞர்களும், ஆரோக்கியமான அரசியலை விரும்புபவர்களும் அன்புமணி ராமதாஸிடம் நிறையவே எதிர்பார்த்தார்கள்.  ஒரு கட்டத்தில், இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக வந்திருக்கிறார் என்று கருதிய நிலையில், மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி என்ற முடிவை எடுத்திருக்கிறார். இதே போன்றுதான் விஜயகாந்தும் மக்களை ஏமாற்றி விட்டார்.

கோதைமாறன், திருநெல்வேளநகர்.


நகைப்புக்குரியது

இந்தியாவில் அனைத்துக் கட்சிகளும் மக்களின் உரிமைகள் மற்றும் தங்கள் கட்சியின் கொள்கைகள் ஆகியவற்றை தேர்தல் கூட்டணியின்போது மறந்து விடுகின்றன. தேர்தல் முடிந்த பின்னர், கொள்கை மற்றும் உரிமைகள் பற்றி முழக்கமிடுகின்றன. இதற்கு தமிழகம் விதிவிலக்கல்ல. தமிழகத்தில் உள்ள தேசியக் கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகளுக்கு அறம் சார்ந்த நிலைப்பாடு இல்லை. எனவே, தமிழக மக்களின் உரிமைகளை மீட்பதற்காக அதிமுக-பாஜக அணியில் இணைந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறுவது நகைப்புக்குரியது.

டி.ஆர். ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.


தீர்க்கப்படுமா?

அன்புமணி ராமதாஸ் கூறுவது சரி அல்ல. பா.ம.க. வைத்துள்ள 10 கோரிக்கைகள் பல நீதிமன்றத்திலும், சில நீதிமன்றம் சொல்லியும் தீர்க்கப்படாத  பிரச்னைகள். கோரிக்கைகள் நியாயம் எனினும், அவை கடந்து வந்த பாதை மிக நெடியது. அவர்கள் இந்தக் கூட்டணியில் இருக்கப் போகும் காலத்தில் தீர்க்கப்படுமா என்பதே கேள்வி.

தி.ந.கேசவன், சென்னை.


பொதுமக்களை...

(இட)மாற்றம், (குடும்ப) முன்னேற்றம், பணம்-பதவி ஆகியவைதான் பா.ம.க.வின் இன்றைய நிலை. தவிர, தமிழக மக்களின் உரிமைகளை மீட்பதற்காக அதிமுக-பாஜக அணியில் சேர்ந்தோம் என்பது பொதுமக்களை முட்டாளாக்குவது ஆகும். தேர்தலில் சரியான பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்.

கே.ஏ.கே.முத்து, ராணிப்பேட்டை.


எந்த உரிமை இல்லை?

இப்போது தமிழக மக்களுக்கு எதில் உரிமை இல்லை? விரும்பிய கட்சிக்கு வோட்டளித்து வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது. விரும்பியதைப் பேச, எழுத என அனைத்துக்கும் உரிமை இருக்கும்போது, எந்த உரிமையை மீட்க வேண்டும்? பல திட்டங்களைச் செயல்படுத்த அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்திருக்கலாமே தவிர, தமிழக மக்களின் உரிமைகளுக்கும் இதற்கும் என்ன தொடர்பு? அனைத்து உரிமைகளும் இருக்கும்போது, அன்புமணி ராமதாஸ் சொல்வது சரியில்லை.

உஷா முத்துராமன், மதுரை.


சந்தர்ப்பவாதக் கூட்டணி?

காவிரி பிரச்னை, நீட் தீர்வு, 10 சதவீத இட ஒதுக்கீடு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை போன்றவற்றில் தமிழக உரிமைகளுக்காக மத்திய அரசை அதிமுக எதிர்த்துள்ளது. எந்தப் பிரச்னையையும் அதிமுகவுடன் இணைந்து பா.ம.க. எதிர்க்கவில்லை.மாறாக, அதிமுக அரசை எதிர்த்துப் போராடியிருக்கிறது. திராவிடக் கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று கூறிய டாக்டர் ராமதாஸ், நாடாளுமன்றத்தில் பா.ம.க. இடம்பெறவும், அன்புமணி ராமதாûஸ அமைச்சராக்குவதற்காகவும் ஏற்படுத்திக் கொண்டுள்ள சந்தர்ப்பவாதக் கூட்டணியாகும்.

ப. அடைக்கலம், ஸ்ரீவில்லிப்புத்தூர்.


இடையூறுதான்!

வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராகப் போராடும் இன, மொழி, மத அடிப்படைவாதக் குழுக்களோடு சேர்ந்து கொண்டு தி.மு.க.வும் அவர்கள் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களைக்கூட எதிர்ப்பது என்பது மோடி எதிர்ப்பு அரசியலுக்குப் பயன்படலாம். 
தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு இடையூறுதான்.

பொ.பன்னீர்செல்வன், புதுக்கோட்டை.


சுயநலமே காரணம்!

தனித்து நின்றால் நினைத்த இலக்கை அடையமுடியாது என்பதற்காகவே ராஜதந்திரமாக அதிமுக, திமுக என மாறி மாறி கூட்டணி வைத்து அமைச்சரவையிலும் இடம்பிடித்து வந்திருக்கிறது பா.ம.க.  கடந்த முறை தனித்து முழங்கிய "மாற்றம்-முன்னேற்றம்' பலன் எதனையும் தரவில்லை. அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்ததற்காக தமிழக மக்களின் உரிமைகள் என்று சொல்வதில் உண்மை இல்லை. சுய நலத்துக்காகவே கூட்டணியில் இணைந்திருக்கிறது. 

ப.தாணப்பன், தச்சநல்லூர்


எப்படி ஏற்க முடியும்?

தமிழக மக்களின் உரிமைகளை மீட்பதற்காகவே பாஜக அணியில் இணைந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறுவதை ஏற்க முடியாது. தமிழக மக்களின் உரிமைகளை யாரிடமிருந்து மீட்கப் போகிறார்? யார் அந்த உரிமைகளைப் பறித்து வைத்திருக்கிறார்கள்? யாரையெல்லாம் இவ்வளவு காலம் கடுமையாகச் சாடினாரோ, விமர்சித்தாரோ, ஊழல் புகார் பட்டியல் அளித்தாரோ அவர்களுடன் அவர் கட்சியினரேகூட  எதிர்பாராத வகையில் திடீரென கூட்டணியும், கூட்டு விருந்தும் கொள்வதை எப்படிச் சரியென எடுத்துக்கொள்ள முடியும்? 

கவியழகன், திருவொற்றியூர். 


தேர்தல் வெற்றிக்காக...

இப்போதுள்ள சூழலில் தனியாக பா.ம.க. போட்டியிட்டால் ஒரு எம்.பி. தொகுதிகூட கிடைக்காது என்பதை உணர்ந்து, அதிமுக-பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. ஏதாவது சொல்லவேண்டுமே என்பதற்காக "தமிழக மக்களின் உரிமைகளை மீட்பதற்காக...' என்ற அலங்கார வார்த்தையை அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். அவர் மத்திய அமைச்சராகவும் எம்.பி.யாகவும் பணியாற்றி தமிழக மக்களின் எந்த உரிமையை மீட்டார்? 

செ.முருகானந்தம், தாழக்குடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com