தமிழகத்தின் வளர்ச்சி, பாதுகாப்புக்காகவே அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இடம்பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுவது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

தமிழகத்தின் வளர்ச்சி, பாதுகாப்புக்காகவே அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இடம்பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுவது சரியா

சரிதான்!
அமைச்சர் பியூஷ் கோயல் கூறியது சரியே. எந்த ஒரு சாதனையையும் தனியாக இருந்து சாதிப்பது மிகக் கடினம். இதனை உணர்ந்த பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து  வளர்ந்து வரும் தமிழகத்தை மேலும் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளது சரியானது. தமிழகத்தின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் உதவியாக இருக்கும் எனப் புரிந்து கூட்டணி சேர்ந்துள்ளனர். எனவே, அமைச்சர் பியூஷ் கோயல் கூறுவது சரிதான்.
உஷா முத்துராமன், மதுரை.

தவறு!
கடந்த மக்களவைத் தேர்தலின்போது ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க தனித்தே நின்று, இரண்டு இடங்கள் தவிர அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. எப்படியாவது தமிழகத்தில் காலூன்றிவிட பா.ஜ.க. முனைகிறது. அதற்கு அ.தி.மு.க.வைப் பயன்படுத்துகிறது. தமிழகத்தின் வளர்ச்சி , பாதுகாப்புக்காக கூட்டணி என்று சொன்னால், இன்னமும் தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை என்பதை பா.ஜ.க. தாமாகவே ஒப்புக்கொள்கிறது.   சுயநலம் ஒன்றே குறிக்கோளாய் தெரிகிறது. எனவே, தமிழகத்தின் வளர்ச்சி, பாதுகாப்புக்காகவே அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க. இடம்பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுவது தவறு. 
ப. தாணப்பன், 
தச்சநல்லூர்.

தமிழகத்தைக் காப்பாற்ற...
மத்தியில் மீண்டும் பா.ஜ.க. அரசு அமையுமானால் வளர்ச்சியை முன்னெடுப்பதில் அ.தி.மு.க.வுக்கு உதவலாம். அதனால், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் இன வெறுப்பு, மொழி வெறுப்பைத் தூண்டிவிடும் சில கட்சிகளிடமிருந்து தமிழகத்தைக் காப்பாற்றும் கடமை பா.ஜ.க.வுக்கு இருப்பதைத்தான் அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். அதுபோன்று கருத்துச் சுதந்திரத்தை காப்பாற்றும் நிலைதான் தமிழகத்தில்உள்ளது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. எனவே, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சொல்வது சரிதான்.
ரமேஷ், 
களம்பூர்.

ஆச்சரியமில்லை!
தமிழகத்தின் வளர்ச்சியிலும், தமிழக மக்களின் முன்னேற்றத்திலும் ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு அக்கறையோ அல்லது பொறுப்போ இல்லாதது போலத் தோன்றச் செய்கிறது மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் கருத்து. தமிழகத்தில் தனித்து நின்றால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை நன்குணர்ந்த பா.ஜ.க., ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க.வுடன் தேர்தல் உடன்பாடு செய்து கொண்டதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இந்தியாவின் ஒரு பகுதி தமிழகம் என்பதையும், தமிழக முன்னேற்றத்தில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கும் பொறுப்பு உள்ளது என்பதையும் மக்கள் நன்கு அறிவார்கள். எனவே, பியூஷ் கோயலின் கருத்தால் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்.
எம்.ஜோசப் லாரன்ஸ், துறையூர்.

காலத்தின் கட்டாயம்!
தமிழகத்தின் வளர்ச்சி, பாதுகாப்புக்காகவே அ.தி.மு.கவுடன் பா.ஜ.க. கூட்டணி என அமைச்சர் பியூஷ் கோயல் கூறியிருப்பது தேர்தல் நேர பேச்சு. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைக்க வாய்ப்புள்ள பெரிய கட்சியுடன் (பா.ஜ.க.) கூட்டணி அமைப்பது அ.தி.மு.கவுக்கு உதவியாக இருக்கும்; தமிழகத்துக்கும் உதவியாக இருக்கும் என்பதும் உண்மை. இந்தக் கூட்டணி காலத்தின் கட்டாயம். தமிழகமும் பயன் பெறும்.
எஸ்.வி.ராஜசேகர், சென்னை.

பாரபட்சம் கூடாது!
தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற வேண்டும் என்ற நிலையில், அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளதே தவிர தமிழகத்தின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுவது உண்மை அல்ல. மேலும் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ள அரசு, தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் அரணாக இருக்க வேண்டும் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.

புத்திசாலித்தனமாக...
தமிழகத்தில் தனித்து நின்றால் ஓர் இடத்திலும் வெற்றி பெற முடியாது என்பதை பா.ஜ.க. வினர் அறிந்துள்ளனர். தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே தமிழகத்தில் பா.ஜ.க. கால் ஊன்ற முடியும் என்பதை அறிந்து புத்திசாலித்தனமாக கூட்டணி வைத்துள்ளனர். தமிழகத்தின் வளர்ச்சி-பாதுகாப்பு பற்றி பா.ஜ.க.வுக்கு அக்கறை கிடையாது. பா.ஜ.க.வின் வளர்ச்சி பற்றி மட்டுமே சிந்தனை என்பதுதான் உண்மை. எனவே, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியது சரியில்லை.
என்.சண்முகம், 
திருவண்ணாமலை.

சந்தர்ப்பவாதம்?
மத்தியில் ஆளும் அரசு,  அனைத்து மாநில அரசுகளையும் ஒன்றுபோல் எண்ண வேண்டும். அந்த மாநில வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு அந்த மாநில அரசுடன் கூட்டணி வைத்துத்தான் தீர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும். அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லையென்றால், தமிழகத்துக்கு நல்லது செய்யமாட்டார்களா? மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் கருத்து சந்தர்ப்பவாதமாகத் தெரிகிறது. 
கோ. ராஜேஷ் கோபால், 
அரவங்காடு.

அக்கறை உள்ளதா?
தமிழகத்தின் வளர்ச்சிக்காக அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் பியூஷ் கோயல் கூறுவது சரி அல்ல.
காவிரி, மீத்தேன், நீட் தேர்வு, ஸ்டெர்லைட் ஆலை என்று ஒவ்வொரு பிரச்னையையும் நன்கு ஆய்வு செய்தால் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்ன செய்தது என்று புரியும். எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து மட்டும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பா.ஜ.க. உதவுகிறது என்றெல்லாம் கூற முடியாது. புயல் பாதிப்புகளின்போது தமிழகம் கோரிய நிதியையும், மத்திய அரசு வழங்கிய நிதியையும் ஒப்புநோக்கினாலே தமிழகத்தின் மீது பா.ஜ.க.வுக்கு உள்ள அக்கறை புரியும்.
பொன்.கருணாநிதி, 
கோட்டூர்.

தேர்தல் முடிவுக்குப் பிறகு...
அ.தி.மு.கவுடன் பா.ஜ.க. கூட்டணி சேர்ந்திருப்பது தமிழகத்தின் வளர்ச்சி, பாதுகாப்புக்காக என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் 
கூறுவது, தமிழர்கள் ஏமாளிகளாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறார்போலும். மக்களவைத் தேர்தல் முடிவுகள் வந்ததும் பியூஷ் கோயல் பாடம் கற்றுக் கொள்வார்.
கோதைமாறன், 
திருநெல்வேலி.

உறுதிமொழி யாருக்கு?
தமிழகத்தின் வளர்ச்சிக்கு இதுவரை மத்திய அரசு என்ன செய்துள்ளது? அதன் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏதும் இல்லையே. இந்த நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறுமானால், அடுத்த மூன்றாண்டுகளுக்கு தமிழக அமைச்சர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்;  வளர்ச்சியும் பெறுவார்கள் என்பதைக் குறிக்கும் வகையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். இது தமிழக அமைச்சரவைக்கு கொடுக்கப்பட்டுள்ள உறுதிமொழி. மக்களுக்கு அல்ல.
ச.கிருஷ்ணசாமி, 
மதுரை.

தேர்தல் நேர பேச்சு!
தேர்தல் காலத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைப்பது குறிப்பிட்ட நோக்கத்துக்காகவோ, கொள்கைக்காகவோ அல்ல. எண்ணிக்கை அடிப்படையில் சீட் ஒதுக்கீடு செய்வதைப் பொருத்தும், வெற்றி வாய்ப்பு எந்த அணிக்குப் பிரகாசமாக உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டுமே கூட்டணிகள் அமைகின்றன. தமிழகத்தின் வளர்ச்சி, பாதுகாப்புக்காகவே அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க. இடம்பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுவது தேர்தல் நேர பேச்சு.
எஸ். ராஜசிம்மன், 
கிருஷ்ணகிரி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com