பிரதமர் மோடி மீண்டும் வேண்டுமா அல்லது குழப்பம் வேண்டுமா என நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கேட்டிருப்பது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

பிரதமர் மோடி மீண்டும் வேண்டுமா அல்லது குழப்பம் வேண்டுமா என நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கேட்டிருப்பது சரியா 

சரியான கருத்து!
வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவுக்குப் பெரும்பான்மை பலத்துடன் கூடிய மத்திய ஆட்சிதான் பாதுகாப்பானதாகும். மொரார்ஜி  தேசாய் முதல் தேவெ கௌட வரை கூட்டணி ஆட்சி என்பது நிலையற்ற குழப்பமான ஆட்சியைத்தானே நடத்தியது. இது நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும். அடிக்கடி தேர்தல் நடத்துவது வளரும் நாட்டுக்கு உகந்ததல்ல. எனவே, குழப்பமில்லாத நிலையான ஆட்சியை யார் வேண்டுமானாலும் தரலாம். அதை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியதால் தவறான கருத்தாகாது.
அண்ணா அன்பழகன், 
அந்தணப்பேட்டை.

மக்கள் தீர்மானிப்பர்!
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த அரசு அமைய வேண்டும் என விருப்பப்படுகிறார்களோ, அதைத் தேர்வு செய்வார்கள். யார் வந்தாலும், அது மக்களுக்கான அரசாக அமையாது. மக்களுக்கான அரசாக அமையவிடாமல் அவர்களை பணக்காரர்கள் ஆட்டுவிப்பார்கள். மோடி வேண்டுமா, குழப்பம் வேணுமா எனக் கேட்பது தவறு. இருவரில் யார் மக்களுக்காக உழைப்பார்கள் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்பது உறுதி.
தொ.எழில் நிலவன், களமருதூர்.

மீண்டும்...
பிரதமர் மோடிக்குக் குடும்ப உறுப்பினர்கள் இல்லை. அவர் காமராஜரைப் போல வாழ்பவர். இதனால் அவர் தன்னலம் என்று எதையும் செய்யும் சாத்தியம் இல்லாதவர். இதனால் இவரே பிரதமராக மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்னும் அருண் ஜேட்லியின் கேள்விக்குப் பதில் என்ன தெரியுமா? பிரதமர் மோடி மீண்டும் வேண்டும் என்பதே.
இரா.கல்யாணசுந்தரம், மதுரை.

நெருக்கடி நிலை காலத்துக்கு...
பிரதமர் மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சியில் மக்களுக்கு எந்தவிதப் பலனும் கிடைக்காத நிலையில், அருண் ஜேட்லியின் இந்தப் பேச்சு, தேர்தல் நேர நகைச்சுவையாகவே பார்க்கப்பட வேண்டும். 2014-ஆம் ஆண்டு தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மோடி முன் நிறுத்தப்பட்டார். இன்று நிரந்தர பிரதமர் வேட்பாளர் என்ற ஒரு மாயத் தோற்றத்தைக் கட்டமைத்துள்ளனர். 1975-ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை காலத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓர் அணியில் திரண்டதை அருண் ஜேட்லி குழப்பக் கூட்டணி என்று கூறுவாரா?  மோடி என்ற ஒற்றை நபருக்குப் பின்னால் எதிர்க் கருத்துக் கூற துணிவில்லாதவர்களால் அமைந்திருக்கும் அணியே குழப்பமான அணியாகும்.
ச.கருணாகரன், தூத்துக்குடி.

தேர்தல் பேச்சு!
மக்கள் நலன் என்பதைக் கருத்தில் கொண்டு, தாங்கள் சேவகர்கள் என்றும் தமிழகத்தின் பாதுகாப்பு என்றும் உள் அர்த்தம் கொண்டால் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி சொல்வது நூற்றுக்கு நூறு சரி என்று கூறலாம். இதற்கு நேரடி அர்த்தம்தான் என்றால், தேர்தல் நேர அரசியல்வாதிகளின் பேச்சின் வரிசையில் இதுவும் ஓர் அங்கம் என்று மட்டும்தான் கருத முடியும். இதுவே யதார்த்தம்.
க.சுல்தான் ஸலாஹீத்தீன், 
தூத்துக்குடி.

தெளிவு கிடைக்கும்!
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கேட்டிருப்பது சரிதான். குழப்பம் உள்ள இடத்தில்தான் தெளிவு கிடைக்கும். நாரதர் கலகம் நன்மையில்தான் முடியும் என்பதுபோல குழப்பம் என்று சொன்னதால் குழம்பிய உள்ளங்களில் தெளிவு சிறிது நேரத்தில் பிறக்கும் என்பதும் உண்மை. அமைதியாக இருந்து சோதனைகளைச் சாதனைகளாக மாற்றும் மோடியின்  செயல் சிலருக்குக் குழப்பமாகத்தான் தெரியும். அப்படிக் குழம்பியவர்கள் சிறிது நேரம் கழித்து நன்றாக யோசித்தால் அந்தக் குழப்பம் விலகி நிச்சயம் தெளிவான ஒரு முடிவு கிடைக்கும்.
உஷா முத்துராமன், மதுரை.

புதிய பிரதமரை...
பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நிலையான ஆட்சி தர முடியும் என்பதைக் குறிக்கும் வகையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இவ்வாறு கூறியுள்ளார். வேறு கட்சி ஆட்சி அமைத்தால் குழப்பம் ஏற்படும். நிலையான ஆட்சியாக இருக்க முடியாது. கூட்டணி ஆட்சிதான் அமையும் என்கிற நோக்கத்தில்தான், மீண்டும் பிரதமர் மோடி வேண்டுமா, குழப்பம் வேண்டுமா என அவர் கேட்டிருக்கிறார். இந்தக் கேள்வி தவறானது. நிலையான குழப்பமில்லா கூட்டணி ஆட்சி அமையும். இந்திய மக்கள் புதிய பிரதமரை எதிர்பார்க்கிறார்கள்.
இரா.துரைமுருகன், தியாகதுருகம்.

நிலையான ஆட்சியை...
எதிர்வரும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட எண்ணியும், அவற்றின் முயற்சி எடுபடாமலும் வெற்றி பெற முடியாமலும் போய்விட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், முரண்பட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தாலும் வலுவற்ற அந்தக் கால ஜனதா கூட்டணி கட்சி ஆட்சி போல குழப்பங்களால் நிலைகுலைந்து போகும் என்பதுதான் நிதர்சனம். ஆகையால், இன்றைய இந்தியாவுக்கு நிலையான, நேர்மையான ஆட்சியை மோடி தலைமையால் மட்டுமே தர முடியும் என்ற வகையில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கேட்டிருப்பது முற்றிலும் சரிதான்.
எஸ். ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.

குழப்புவதற்கா?
அருண் ஜேட்லியின் கூற்று, மக்களை முட்டாளாக்கிக் குழப்பத்தில் ஆழ்த்தவே பயன்படும். இதுவரை அறிமுகப்படுத்தியிருக்கும் நல்ல திட்டங்களை மக்கள் முன் விவரித்து வருங்காலங்களில், சிறுபான்மை, அடித்தட்டு மக்களின் எண்ணங்களை திருப்திப்படுத்தும் வண்ணம் பல்வேறு நலத்திட்டங்களை அளிக்க உறுதியெடுத்திருக்கிறோம் என்ற உறுதிமொழியை பா.ஜ.க. அறிவித்திருப்பின் நலம் பயத்திருக்கும்.
நவீன்குமார், 
நடுவிக்கோட்டை.

உறுதியான அரசு தேவை!
கருத்து சரியானதே. ஆட்சி என்பது ஒரு தேர். ஒரு முனைப்புடன், ஒரே பக்கம் இழுக்கும் பட்சத்தில் சரியான முறையில் ஓடும்.  ராஜ் நாராயணன், சரண் சிங் மூலம் ஏற்கெனவே கூட்டணி அரசியலை சந்தித்துள்ளது இந்தியா. தேர்தல் முடிந்த கர்நாடக மாநிலம், நிர்வாகத்தில்  இன்றும் பல பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. எனவே, தேவை உறுதியான அரசு.
டி.சேகரன், மதுரை.

தவறு இல்லை!
தேர்தல் நேரங்களில் தங்கள் கட்சி வெற்றி பெற கட்சிக்காரர்கள் தங்கள் தலைமையைப் பெருமைப்படுத்திப் பேசுவது எல்லாக் கட்சியினருக்கும் வாடிக்கையே. நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருப்பதும் அதுபோன்றதுதான். இதில் தவறேதும் இல்லை.
கோ.ராஜேஷ் கோபால், அரவங்காடு.

மக்கள் தீர்ப்பே...
17-ஆவது மக்களவைத் தேர்தலின்போது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி நம் நாட்டின் வாக்காளர்கள் வாக்குகளைப்  பதிவு செய்து கட்சிகளின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கூட்டணித் தலைவரான பிரதமர் மோடியோ அல்லது ராகுல் காந்தியோ தேர்தல் முடிவின்படி ஆட்சி செய்வர். வாக்களர்களின் தீர்ப்பே 
மக்கள் தீர்ப்பு.
எஸ்.நாகராஜன், அஸ்தினாபுரம்.

 ஏற்க முடியாது!
பா.ஜ.க.வை நிதிஅமைச்சர் அருண்ஜேட்லி ஆதரித்து பேசித்தான் ஆக வேண்டும். பிரதமர் மோடி மீண்டும் வேண்டும் என்று அழுத்தமாகச் சொல்லாமல், குழப்பம் வேண்டுமா என்று கேட்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் குழப்பம் எதுவும் இல்லை. இனி தனிக் கட்சி மத்தியில் பெரும்பான்மை பிடிக்கும் எனக் கூறுவது கடினம். நிதி அமைச்சர் கூறி இருப்பது ஏற்புடையது அல்ல.
என்.சண்முகம், 
திருவண்ணாமலை.

சரியே!
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கேட்டிருப்பது சரியே. தேர்தல் சமயத்தில் பிரதமர் யார் என்று தெரிவித்துப் பிரசாரம் செய்வது, இந்திய மக்களுக்கு தேர்தலில் வாக்களிக்க உறுதியாக இருக்கும். இந்திரா காந்தி, வாஜ்பாய், ராஜீவ் காந்தி உள்ளிட்டோரை பிரதமர் என அறிவித்து குழப்பம் இல்லாமல் முந்தைய காலங்களில் தேர்தல் நடந்தது. பிரதமர் யார் என்பது தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என எதிர்க்கட்சிகள் அறிவித்திருப்பது மக்களிடையே குழப்பத்தை உருவாக்கியுள்ளது.
சி.பா.சந்தானகோபாலகிருஷ்ணன், 
கடலூர்.

தேர்தல் முடிவில்...
பிரதமர் மோடி மீண்டும் வேண்டுமா அல்லது குழப்பம் வேண்டுமா என நிதி  அமைச்சர் அருண் ஜேட்லி கேட்டிருப்பது சரியல்ல. குழப்பம் என்று யாரைப் பார்த்து இவர் கூறியுள்ளார் என்பது புரியவில்லை. வாக்களர்களிடம் வாக்குக் கேட்கும் முறை மிகவும் பணிவாகவும், இனிமையாகவும் இருக்க வேண்டும். குழப்பத்தில் இருப்பவர் தேர்தலின் முடிவில் தெளிவடைவார்; மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள் என்று நம்புவோம்.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com