Enable Javscript for better performance
திமுக கூட்டணி தேர்தலுக்காக உருவானது அல்ல என்று மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகி- Dinamani

சுடச்சுட

  

  திமுக கூட்டணி தேர்தலுக்காக உருவானது அல்ல என்று மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியிருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

  By DIN  |   Published on : 27th March 2019 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நம்பலாம்
  ஜி.ராமகிருஷ்ணன் கூறுவது மிகவும் சரியானது. திமுக-மார்க்சிஸ்ட் கூட்டணி தேர்தலுக்கு மட்டுமானது மட்டுமல்ல; தேர்தலுக்குப் பிறகும் மதவாத சக்திகள் வேரூன்றாமல் தடுப்பதற்கும், மதச்சார்பற்ற அரசு உருவாக துணை நிற்பதற்கும், அதிமுக மற்றும் பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், மக்களை நல்வழி நடத்திச் செல்லவும் இந்தக் கூட்டணி ஏற்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர். நாம் இதை நம்பினால் நம்பலாம்.
  மா.தங்கமாரியப்பன், 
  கோவில்பட்டி.

  பதவிக்காக...
  மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் கூறுவது அவரளவில் மட்டுமே சரியானது. ஒத்த கருத்து, ஓரளவு இணக்கமான கொள்கை, தமிழக மக்களின் நலம் ஆகியவை சார்ந்து உருவானதல்ல. தனித்துப் போட்டியிட்டால் பதவி, செல்வாக்கு, அதிகாரம் ஆகியவற்றைப் பெறுவது சாத்தியமாகாது. வெற்றி பெறும் வாய்ப்புக்காக உருவான கூட்டணி. தனித்து நின்று தனித்துவம் பேசிய காலம் கடந்து போய்விட்டது. இது இந்தத் தேர்தலுக்கு மட்டுமே உருவான கூட்டணியாக இருக்கலாம்.
  ச.கந்தசாமி, தூத்துக்குடி.

  தெளிவு...
  மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் கூறியிருப்பது தெளிவான கருத்தாகும். தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் அவர் கூறியுள்ள கருத்து வரவேற்கத்தக்கது. திமுக கூட்டணியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இடதுசாரிக் கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும், முஸ்லிம் லீக்கும், பிற கட்சிகளும் இணைந்து தர்ம யுத்தம் தொடங்கியுள்ளன.
  ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

  காதில் பூ?
  மாநிலத்துக்கு ஒரு கொள்கையோடு கேரள மாநிலத்தில் காங்கிரஸை எதிர்க்கும் இடது சாரி கட்சியினர், தமிழகத்தில் கூடா நட்பு கேடாய் முடியும் என்று காங்கிரஸ் குறித்துக் கூறிய கட்சியுடன் கூட்டணி; 2ஜி வழக்கை பதிவு செய்து களங்கப்படுத்திய கட்சியுடன் நிரந்தர கூட்டணி;கொலைப் பழியோடு வெளியேற்றிய திமுகவோடு கல்லறையிலிருந்தாலும் கூட்டணி சேர மாட்டேன் என்று சத்தியம் செய்த வை.கோ. மீண்டும் கூட்டணி; ஜாதி, மத அடிப்படையிலான கட்சிகளையும் சேர்த்துக் கொண்டதற்கு பெயரோ மதச்சார்பற்ற கூட்டணி. பதவிக்காக அமைந்த சந்தர்ப்பவாதம் என்பது வெட்ட வெளிச்சமான பிறகும், தேர்தலுக்காக கூட்டணி அல்ல என்று ஜி.ராமகிருஷ்ணன்  கூறி காதில் பூ சுற்றலாமா?
  அ.யாழினி பர்வதம், சென்னை.

  சரிதான்!
  திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுவான கோரிக்கைகளுக்காக இணைந்து போராடி வருகின்றன. மத நல்லிணக்கம், மாநில உரிமைகள், இட ஒதுக்கீடு, சமூக நீதி, மூட  நம்பிக்கை எதிர்ப்பு போன்ற பல பிரச்னைகளில் இந்தக் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமையான கருத்தும், சிந்தனையும் உள்ளது. மோடி எதிர்ப்பு என்பதைத் தாண்டி பல கருத்துகளில் இந்தக் கட்சிகள் ஒன்றுபட்டு இருப்பதால் ஜி.ராமகிருஷ்ணன் கூறியது ஒரு வகையில் சரியான கருத்துதான்.
  பொன்.கருணாநிதி, கோட்டூர்.

  தேர்தல்கால கூட்டணி!
  பாஜகவுடன் திமுக கூட்டணி சேர்ந்திருந்தபோது மார்க்சிஸ்ட் கட்சி எந்தக் கூட்டணியில் இருந்தது? அது எத்தகைய கூட்டணி? சேர்ந்த இடத்தில் சேற்றை வாரிப் பூசிக்கொண்டாலும் சந்தனம் என்று கூறித்தானே ஆக வேண்டும்? அணி மாறி கூட்டணி சேர்ந்திருந்தாலும் இப்படித்தான் கூறியிருப்பார் ஜி.ராமகிருஷ்ணன். எனவே, தேர்தல் காலத்தில் அமையும் கூட்டணிகள் லட்சியக் கூட்டணிகள் அல்ல 
  என்பதுதான் நிதர்சனம்.
  கே.வேலுச்சாமி, தாராபுரம்.

  ஏற்புடையதே!
  ஒத்த கருத்துடைய கட்சிகளின் சாதி, மத, இன,பேதமற்ற கூட்டணியாக திமுகவுடன் இணைந்துள்ள கட்சிகள் தமிழ்நாட்டின் நலன் ஒன்றையே பிரதானமாகக் கொண்டு, காலத்தின் கட்டாயத்தில் முற்காலங்களில் கையாண்டதன் அடிப்படையில் கூட்டணி வைத்துக் கொண்டதையெல்லாம் பார்த்தால்தான் தெரியும். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பது உண்மைதான். எனவே, மார்க்சிஸ்ட் கட்சியின்அரசியல்  தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனின் கருத்து சரியானதே.
  மு.அ.ஆ.செல்வராசு, வல்லம்.

  ஒத்த கருத்தினால்...
  மத்திய-மாநில அரசுகளின் மீது ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையின் அடிப்படையில், ஆட்சி மாற்றம் கொண்டுவர வேண்டும் என ஏற்பட்டிருப்பதுதான் திமுக கூட்டணியாகும். ஒத்த கருத்துடைய மதச்சார்பற்ற கூட்டணி என்றே கூறலாம். இடதுசாரிகளும், திமுகவும் கடந்த சில ஆண்டுகளாக இணைந்து தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் போராடிக் கொண்டிருப்பதால், தேர்தல் கூட்டணி அல்ல என்று கூறியிருப்பது சரிதான்.
  ஆறு.கணேசன், தூத்துக்குடி.

  நகைச்சுவை
  திமுக கூட்டணி தேர்தலுக்காக உருவானதல்ல என்றால், பின் எதற்காக என்று பார்த்தால் பேருந்து கட்டண உயர்வையும், பொதுத்துறையைத் தனியார் மயம் ஆக்குவதை எதிர்த்தும் என்கிறார் ஜி.ராமகிருஷ்ணன். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பேருந்து, ரயில் கட்டணங்களை உயர்த்தவே மாட்டார்களா? பொதுத் துறையைத் தனியாருக்கு கொடுக்கவே மாட்டார்களா? அப்படிக் கொடுத்தால் இவர்களே அது கொள்கைக்கான கூட்டணி அல்ல; தேர்தல் உடன்பாடுதான் என்பார்கள். காங்கிரஸ் கட்சியுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்றார்கள். இப்போது காங்கிரஸ் கட்சியும் அடங்கிய கூட்டணியில் அங்கம் வகிக்கிறார்கள். இதையெல்லாம் தேர்தல்கால நகைச்சுவை என்று எடுத்துக் கொள்வதுதான் சரியாக இருக்கும். 
  சொ.முத்துசாமி, 
  பாளையங்கோட்டை.

  உண்மை என்ன?
  திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து தனிக் கட்சி ஆரம்பித்து, திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் சூட்டி  அறிவித்த கொள்கைகளும் கோட்பாடுகளும், பல ஆண்டுகளுக்கு முன்பே மண்ணுக்குள் புதைந்து விட்டன. மாநில சுயாட்சி, இந்தி மொழி மீது தேவையற்ற வெறுப்பு, இலங்கைத் தமிழர் பிரச்னை, தமிழக மீனவர் பிரச்னை, கச்சத்தீவு பிரச்னை  போன்ற பொய் மான்களை காட்சிப்படுத்தி கட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மார்க்சிஸ்ட் அரசியல் சித்தாந்தங்கள் என்றும் நீடித்து நிலைப்பவை. திமுக
  வுடன் தேர்தல் கால கூட்டணி அமைத்தால்தான், ஓரிரண்டு தொகுதிகளையாவது பெற்று கட்சிக்கு நிலையான அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் இந்தக் கூட்டணி தேர்தலுக்கு மட்டுமே என்பது உண்மை.
  த.நாகராஜன், சிவகாசி.

  வெற்றிக்காக...
  2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சி
  களையும் புறக்கணித்து தனிக் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது மட்டுமல்லாமல், இரு திராவிடக் கட்சிகளையும் வசை பாடியது மார்க்சிஸ்ட் கட்சி. அந்தத் தேர்தலில் படுதோல்வி அடைந்த மார்க்சிஸ்ட் கூட்டணி, தற்போது மத்திய-மாநில அரசுகளின் மீதான அதிருப்தி, அதிமுகவில் பிளவு போன்ற காரணங்களால் திமுக அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்த்து அதனுடன் கூட்டணி அமைத்துக் கொண்டனர் என்பதே யதார்த்தம். தேர்தல்கால அரசியல் கூட்டணிகள் கொள்கை கூட்டணி என்று சொல்வதெல்லாம் அர்த்தமற்றது. தேர்தலுக்கு தேர்தல் கூட்டணியை மாற்றி அமைத்துக் கொள்ளும் மார்க்சிஸ்ட் கட்சி, கொள்கைகளையும் மாற்றிக் கொள்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
  எஸ்.ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.

  தேர்தல் கணக்குதான்!
  மக்கள் நலக் கூட்டணி அமைத்தபோது, திமுகவினர் சுமத்திய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மறந்து அவர்களுடனேயே மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணி அமைக்கிறது என்றால், அதற்கு ஒரே காரணம் தேர்தல் கணக்குதான். வேறு எதற்காகவும் இத்தகைய சமாதானங்களை அவர்கள் செய்ய வாய்ப்பில்லை.
  சாய் ஜயந்த், சென்னை.

  ஆசைதான்...
  தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கூட்டணிகள் எல்லாம் கொள்கை அடிப்படையில் ஏற்பட்டதல்ல. ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி கொள்கைகள், குறிக்கோள்கள் உண்டு. இவர்களுடைய முதன்மையான நோக்கம் தேர்தல்தான். எப்படியாவது வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற கொள்கைகளை மறப்பார்கள். அணி மாறிய பின் வசை பாடுவார்கள். திமுக குறித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் கடந்த காலங்களில் கூறியதை நினைவுகூர்ந்தால், ஆசை வெட்கமறியாது என்றுதான் கூற முடியும்.
  டி.ஆர்.ராசேந்திரன், 
  திருநாகேஸ்வரம்.

  மாறி மாறி...
  தேசிய அளவில் காங்கிரஸ் மீதும் தமிழகத்தில் திமுக மீதும் ஊழல்களைப் பட்டியலிட்டவர்களே இவர்கள்தான். 2 ஜி பற்றி ஆரம்பம் முதல் நடப்பு வரை விளக்க அறிக்கை வெளியிட்டவர்களும் இவர்களே. ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்தது 2 சீட்டுகளாவது கோரி மாறி மாறி திராவிடக் கட்சிகளின் கதவுகளைத் தட்டுவது இடதுசாரிகளின் வழக்கமான நடைமுறை.
  ந.சந்திரமௌலி, ஊத்துக்குளி.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai