Enable Javscript for better performance
ஏழை மக்களின் ஜாதி எதுவோ, அதுவே எனது ஜாதி என பிரதமர் மோடி கூறியிருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன- Dinamani

சுடச்சுட

  

  ஏழை மக்களின் ஜாதி எதுவோ, அதுவே எனது ஜாதி என பிரதமர் மோடி கூறியிருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில... சரிதான்!

  By DIN  |   Published on : 22nd May 2019 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   

  அன்றைய மோடி ஒரு  தேனீர் கடைக்காரர். காலை முதல் இரவு வரை உழைப்பவர். யாரிடமும் சம்பளம் வாங்காதவர்; விடுமுறை என்பது என்னவென்று அறியாதவர்; லஞ்சம் வாங்க முடியாதவர்; தீபாவளிக்கு போனஸ் எதிர்பார்க்க முடியாதவர். மேற்கூறியவற்றுக்காக போராட முடியாதவர். எனவே, ஏழை மக்களின் ஜாதி எதுவோ, அதுவே எனது ஜாதி எனப் பிரதமர் மோடி கூறியது சரியே.
  பி.ராமன், நீலகிரி.

  வாக்கு பெறவே...
  ஏழை மக்களின் ஜாதி எதுவோ, அதுவே எனது ஜாதி எனப் பிரதமர் மோடி கூறியது தவறான கருத்தாகும். தேர்தலுக்காக மக்களை ஏமாற்றி வாக்கு பெறவே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜாதிய அமைப்பை தூக்கிப் பிடிக்கும் ஒரு கட்சியில் இருந்துகொண்டு இப்படியொரு கருத்தைக் கூறுவது தவறானதாகும். மக்களுக்கு நன்மை செய்யுங்கள்; அதுவே உங்களை உயர்த்தும். செய்ததைச் சொல்லி வாக்கு கேளுங்கள். மக்களை ஏமாற்ற வேண்டாம்.
  தொ.எழில் நிலவன், களமருதூர்.

  நம்பிக்கை அளிக்கும்!
  மிகச் சரியானதே. மக்களில் பிறப்பால் ஜாதி  இல்லை;  தற்போது பொருளாதாரத்தால் மட்டுமே பகுக்கப்படுகின்றனர். தங்களது நிலையை நினைத்து வருந்தும் மக்களுக்கு, நானும் உங்கள் நிலையிலிருந்து வந்தவன்தான் என்ற தன்னம்பிக்கை கருத்தை வெளிப்படுத்துவதாகவே தோன்றுகிறது. எல்லோருக்கும் காலம் உண்டு; வாழ்க்கைச் சக்கரம் சதா சுழன்றுகொண்டே இருப்பது. எனவே, தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள்; எதிர்காலம் சிறக்கும் என்பதையே அவரது பேச்சு சுட்டுகிறது.
  அவிநாசியப்பன் மயில்சாமி, 
  சூலூர்.

  பிரசாரம்!
  ஏழைகளின் ஜாதி எதுவோ, அதுவே எனது ஜாதி என்று பிரதமர் மோடி கூறியது தேர்தல்கால பிரசாரப் பேச்சாகும்.  அவர் ஏழைக் குடும்பத்தில் பிறந்ததால் இப்படிச் சொல்லியிருக்கலாம். ஆனால், அவர் ஜாதி என்று சொல்லிக் கொள்ளும் ஏழை மக்கள் நன்றாக இருக்க வேண்டுமானால், தேசத்தைப் பீடித்துள்ள கொடிய லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிய வேண்டும். ஐந்து ஆண்டுக்கால ஆட்சியில் ஊழல் ஏதும் நடைபெறவில்லை. ஆனால், அரசு அலுவலகங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் லஞ்சம், அரசு வேலைகளைச் செய்யும் ஒப்பந்ததாரர்கள் செய்யும் முறைகேடுகள் ஆகியவற்றை அகற்ற முயற்சி எடுத்தாலே போதும்; அவர் சொல்ல வேண்டியதே இல்லை. பிரதமர் ஏழைகளின் ஜாதி என்று மக்களே கூறி விடுவார்கள். நாடும் நலம் பெறும்.
  மா.தங்கமாரியப்பன்,
  கோவில்பட்டி.

  ஏழை ஜாதிதான்!
  நான் ஏழை மக்களின் ஜாதி  என நம் பிரதமர் மோடி கூறியது உண்மை. அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். தேநீர் கடையில் வேலை செய்தவர். அவர் உடை பணக்கார தோரணையாகத் தெரிந்தாலும், அவர் தினமும் உண்பது சாதாரண சாப்பாடுதான். வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்க உடை, அலங்காரம் கட்டாயம் தேவை. உடனே, இதை வைத்து அவரைப் பணக்காரர் என எடை போடக் கூடாது. அவர் ஏழை ஜாதியே.
  எஸ்.வி.ராஜசேகர், சென்னை.

  ஒப்புதலா?
  ஏழை மக்களின் ஜாதி எதுவோ, அதுவே எனது ஜாதி என்று பிரதமர் மோடி கூறியது, ஜாதி என்ற ஒன்று இருப்பதை அவர் ஒப்புக் கொள்வதாகத்தான் தோன்றுகிறது. ஏழ்மை நிலை என்பது ஒரு குறிப்பிட்ட மதத்துக்கோ அல்லது ஜாதிக்கோ மட்டும் உரியது எனக் கூற முடியாது. அனைத்து மதத்திலும் அனைத்து ஜாதிகளிலும் ஏழை, பணக்காரன் என்ற நிலை இருக்கிறது. ஏழைகள் அனைவரும் பண்பாளர்கள் என்று கூற முடியாது. எனவே, பிரதமர் தன்னுடைய பிரசாரத்தில் ஜாதியைத் தவிர்த்திருக்க வேண்டும்.
  எம்.ஜோசப் லாரன்ஸ், 
  சிக்கத்தம்பூர் பாளையம்.

  உணர்ந்துதான்...
  ஏழ்மை நிலையிலிருந்து முன்னேறி சாதித்துக் காட்டியவர்கள் அனைவரும் தாம் எந்த மாதிரி அடிப்படை நிலையிலிருந்து வந்தோம் என்பதை நன்கு உணர்ந்தே இருப்பார்கள். உதாரணமாக , ஆபிரஹம்  லிங்கன் போன்றவர்களைப் போல மோடியும் ஏழ்மையுடன் போராடித்தான் பிரதமர் ஆகியிருக்கிறார். வாழ்வின் தொடக்க நிலை எங்கு, இப்போது இருக்கும் நிலை என்ன என்பதை மறவாது உணர்ந்தே மோடி இவ்வாறு கூறியுள்ளார்.
  இ. ராஜு நரசிம்மன், சென்னை.

  நீலிக்கண்ணீர்!
  மனித வாழ்க்கையில் இட்டார் பெரியோர், இடாதோர் இழிகுலத்தோர் என்று அந்தக் காலத்தில் பிரித்தார் ஒளவையார் ஜாதி இரண்டு என்று. இன்று பொருளாதார அடிப்படையில்தான் ஜாதி; அந்த வகையில் ஏழை ஜாதி, பணக்கார ஜாதி என இரண்டுதான். பணக்காரர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி இருந்துகொண்டு, ஏழை ஜாதி என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார். இதைப் பேசும்போது அவர் அணிந்துள்ள ஆடைகளின் மதிப்பென்ன?  பிரதமரின் எந்தப் பேச்சும், எந்தச் செயலும் அவர் ஏழை ஜாதி என்பதை நிரூபிக்கவில்லை. 
  அ.கருப்பையா, பொன்னமராவதி.

  வீண் பேச்சு!
  பிரதமர் கூறியிருப்பது ஒரு வீண் பேச்சு ஆகும். மக்களை ஏமாற்றும் வித்தைதான் இது. ஏழையென்றும் அடிமையென்றும் எவருமில்லை ஜாதியில் என்ற மகாகவி பாரதியின் கூற்றைப் பிரதமர் எண்ணிப் பார்க்க வேண்டும். ஜாதி, மத பேதமற்றவரே தலைமைப் பண்பு உடையவர் ஆவார்.
  ச.கண்ணபிரான், திருநெல்வேலி.

  வழக்கம்தான்!
  அரசியலில் தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், தங்கள் கட்சியையும், பதவியையும் காத்துக் கொள்ளவும், தங்களை ஏழைப் பங்காளர்கள் என்று அரசியல்வாதிகள் கூறிக் கொள்வது வழக்கமான ஒன்றுதான். அதையேதான் மோடியும் கூறியுள்ளார். இது வழக்கமான பேச்சுதான்.
  கோ. ராஜேஷ்கோபால், அரவங்காடு.

  ரசிக்கலாம்!
  ஏழை மக்களின்  ஜாதி எதுவோ, அதுவே எனது ஜாதி என்று பிரதமர் பேசியிருப்பது ரசிக்கும்படி உள்ளது. சொந்த வாழ்வில் ஆடம்பரத்தை விரும்புபவர் மோடி. கார்ப்பரேட் கம்பெனிகளுக்குச் சாதகமான முடிவுகள் எடுக்கும் மோடி எப்படி ஏழை ஜாதியில் வருவார்?  எனவே, ஏழை ஜாதி என்று அவர் கூறுவது ஏற்புடையது அல்ல. 
  பொன்.கருணாநிதி, கோட்டூர்.

  பேச்சு தவறு!
  பிரதமர் பதவியென்பது நாட்டுக்கே பொதுவான பதவி. மதத்தையும், ஜாதியையும் கடந்து நிற்கும் உயர்ந்த பதவி. பிரதமராக இருக்கக் கூடியவர்கள் ஜாதி பற்றியோ, மதத்தைப் பற்றியோ எந்தவொரு சூழ்நிலையிலும் பேசக் கூடாது. இந்த நிலையில் ஏழை மக்களின் ஜாதி எதுவோ, அதுவே எனது ஜாதி என்று பேசியிருப்பது தான் வகிக்கும் பிரதமர் பதவியையே மதிக்காததுபோல் தெரிகிறது. இது ஏழை மக்களின் மனங்களைப் புண்படுத்துவதாக அமைந்துள்ளது.
  நன்னிலம் இளங்கோவன், 
  மயிலாடுதுறை.

  அதிசயம் இல்லை!
  ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆட்சிப் பீடத்தில் அமருவதால் ஏழை, பணக்காரன் பாகுபாடு இருக்கும். உலகம் உள்ளவரை ஏழை, பணக்காரன்  ஜாதி வேறுபாடுகள் இருப்பதற்குக் காரணம், எல்லோரும் வளமான வாழ்க்கையைத்தான் விரும்புகிறார்கள். வளமற்ற வாழ்க்கை ஏழைகளுக்கு. ஏழைகளை உழைக்கத் தூண்டி வளமற்ற நிலையை மாற்ற வேண்டி ஆட்சிப் பீடத்தில் உள்ளவர்கள் தாங்களும் ஏழை என்று ஏழைகளிடத்தில் கூறுகிறார்கள். ஏழை மக்களின் ஜாதிதான் எனது ஜாதி என்று பிரதமர் கூறியதில் அதிசயம் ஒன்றுமில்லை.
  டி.வி.கிருஷ்ணசாமி, நங்கநல்லூர்.

  அனுதாபம் பெற...
  பிரதமர் மோடி இப்படிப் பேசியதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. மோடி எப்போதும் தனக்கு எதிரான விமர்சனங்களை திசைதிருப்புவதற்காகப் பயன்படுத்தும் உத்தி. அவரைப் பற்றியோ அல்லது அவரது ஆட்சியைப் பற்றியோ எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை வைக்கும்போதுதான் அவர் தன்னை இவ்வாறாகக் கூறி மக்களுடைய அனுதாபங்களைப் பெற முயற்சி செய்வது வாடிக்கை.
  ப.சுவாமிநாதன், சென்னை.

   

   

  கோட்ஸேதான் முதல் இந்து தீவிரவாதி என்ற கமல்ஹாசனின் கருத்து சரிதானா? எஸ்.பிரசன்னா, பரமக்குடி.

  இது குறித்த கருத்துகளை வாசகர்கள் பத்து வரிகளுக்கு மிகாமல் அஞ்சல் அட்டையில் எழுதி,  வரும் திங்கள்கிழமைக்குள் கிடைக்குமாறு
  விவாத மேடை பகுதி, தினமணி, 
  29, இரண்டாவது பிரதான சாலை, 
  அம்பத்தூர் தொழிற்பேட்டை, 
  சென்னை - 600 058 
  என்ற முகவரிக்கு அனுப்பவும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai