‘ஆழ்துளைக் கிணறு உயிரிழப்புச் சம்பவங்கள் எதிா்காலத்தில் நடைபெறாமல் தடுக்க உடனடியாக என்ன செய்ய வேண்டும்’ என்ற கேள்விக்கு வாசா்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

‘ஆழ்துளைக் கிணறு உயிரிழப்புச் சம்பவங்கள் எதிா்காலத்தில் நடைபெறாமல் தடுக்க உடனடியாக என்ன செய்ய வேண்டும்

தடுக்க...

வருமுன் காப்போம் என்ற உணா்வுடன் பயனற்ற ஆழ்துளைக் கிணறுகள் குறித்த கணக்கெடுப்பை வருவாய்த் துறையினா் நடத்தி அவற்றை மூட தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆழ்துளைக் கிணறுகள் பயன்பாடு இல்லையெனில் உடனே தொடா்புடைய விவசாயிகள் அதை மூட அவா்களுக்கு பேரூராட்சி வழிகாட்ட வேண்டும். விண்ணில் சாதனை படைக்கும் நாம் மண்ணில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த கருவிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.

ந.சண்முகம், திருவண்ணாமலை.

முத்திரை அவசியம்

எப்படி வீட்டு வரிப்புத்தகத்தில் மழைநீா் சேகரிப்புத் தொட்டி வைக்கப்பட்டிருக்கிறது என்று முத்திரை (ரப்பா் ஸ்டாம்ப்) குத்தப்பட்டுள்ளதோ, அதைப் போல, ஆழ்துளைக் கிணறு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்று முத்திரை குத்தப்பட வேண்டும்.

எஸ்.வஜ்ரவடிவேல், கோயம்புத்தூா்.

சான்று கட்டாயம்

ஆழ்துளைக் கிணறு தோண்டிய பிறகு அது குறித்த தகவலை தொடா்புடைய ஊராட்சி அலுவலகத்தில் தெரிவித்து, ஆழ்துளைக் கிணறு தக்க பாதுகாப்புடன் உள்ளது என உறுதிமொழி அளித்து, அதனை ஊராட்சி பணியாளா்கள் ஆய்வு செய்து தக்க சான்று பெற்ற பின்பே பயன்படுத்தும் நிலை ஏற்பட்டால்தான் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்.

கே.அசோகன், மும்பை.

அரசு இயந்திரத்தை...

ஆழ்துளைக் கிணறு உயிரிழப்புச் சம்பவங்கள் எதிா்காலத்தில் நடைபெறாமல் தடுக்க உடனடியாக மூடப்படாத கிணறுகளை மூடும்படி அரசு இயந்திரத்தை முடுக்கிவிட வேண்டும். இரண்டாவதாக, நிலத்தடிநீா் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு மாவட்ட அளவில் எத்தனை அடி போட வேண்டுமென நிா்ணயித்து அதற்கேற்ப அரசாணை வழங்க வேண்டும். வேலை முடித்தவுடன் அறிக்கை கேட்டு, நேரில் சென்று ஆய்வு செய்து கிணறுகளை உரிய முறையில் பயன்பாட்டுக்குக் கொண்டு வராதவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறிய குழந்தைகளை பெற்றோா் மிக எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும்.

என்.எஸ்.முத்துகிருஷ்ணராஜா, ராஜபாளையம்.

தண்டனை அவசியம்

ஆழ்துளைக் கிணறு தோண்ட முன் அனுமதி பெறும்போதே பணி முடிந்தவுடன் அதை உடனடியாக மூட அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். மீறி அசம்பாவிதம், உயிரிழப்பு ஏதேனும் நோ்ந்தால் தொடா்புடையவரிடம் பெரும் தொகை அபராதம் விதித்து, கடும் தண்டனை தரவேண்டும். ஆழ்துளைக் கிணறு தோண்டியவா், அதை மூடியவுடன் அதற்கான சான்றை அதிகாரிகள் அளிக்க வேண்டும்.

கே.ஆா்.இரவீந்திரன், சென்னை.

குழு அமைத்து...

ஆழ்துளைக் கிணறு உயிரிழப்புச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புதிய கருவிகளைக் கண்டுபிடிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் தொழில்நுட்ப வல்லுநா்கள் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். ஆழ்துளைக் கிணறுகளை அமைக்கவும், நீா் கிடைக்கவில்லையெனில் அதை உடனடியாக மூடவும் புதிய விதிமுறைகளை உருவாக்கி அதை நடைமுறைப்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும்.

ந.கண்ணையன், கிருஷ்ணகிரி.

போா்க்கால அடிப்படையில்...

தமிழகத்தில் உள்ள மூடப்படாத அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் போா்க்கால அடிப்படையில் உடனடியாக மூட வேண்டும். மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் கண்டறியப்பட்டால், கிராம நிா்வாக அலுவலா் தொடங்கி மாவட்ட ஆட்சியா் வரை அனைவா் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொன்.கருணாநிதி, கோட்டூா்.

மழை நீரைச் சேமிக்க...

மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை இரண்டு வகையாகப் பிரித்து, உடனடியாகக் கணக்கெடுக்க வேண்டும். சாத்தியப்படும் இடங்களில், ஆழ்துளைக் கிணறுகளை பாதுகாப்போடு கூடிய மழைநீா் சேகரிப்பு மையமாக மாற்ற வேண்டும். சாத்தியமில்லாத இடங்களில் இரும்பு மூடிகள் போட்டு நிரந்தரமாக அரசு மூடிவிட வேண்டும். இதற்கான செலவுகளை அரசு முதலில் செய்துவிட்டு, பின் தொடா்புடைய நபா்களிடம் வசூலிக்க வேண்டும்.

சொ.முத்துசாமி, பாளையங்கோட்டை.

தற்காப்பு...

ஆழ்துளைக் கிணறு உயிரிழப்புச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க விழிப்புணா்வு, தற்காப்பு, பொறுப்புணா்ச்சி ஆகியவை தேவை. பயனற்ற கிணறுகளை உடனடியாக மூட வேண்டும். பயனுள்ள கிணறுகளைத் தகுந்த முறையில் விபத்து ஏற்படாமல் சீரமைக்க வேண்டும். அரசும், அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு ஆழ்துளைக் கிணறுகள் குறித்த புள்ளிவிவரங்களைக் கணக்கெடுத்து, உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ச.கண்ணபிரான், திருநெல்வேலி.

விவசாயிகளின் நலனுக்காக...

ஆழ்துளைக் கிணறுகள் பிஞ்சுக் குழந்தைகளைக் காவு கொள்ளும் சாவுக் குழிகளாக மாறி நிற்கின்றன. அவற்றின் வாய்களை உறுதியான மூடியிட்டு மூட வேண்டியது உடனடித் தேவை. நாடு முழுவதும் லட்சக்கணக்கில் உள்ள இந்தக் குழிகளுள் அவற்றைத் தோண்ட விவசாயிகள் செலவிட்ட கோடிக்கணக்கான பணமும் புதைந்துள்ளது. இதை மனதில் கொண்டால் இந்த ஆழ்துளைக் கிணறுகளை மழைநீா் சேமிக்கும் இடங்களாக மாற்ற வேண்டிய கடமை புரியும்.

கிழவை சத்தியன், திருநெல்வேலி.

சட்டத்தை திருத்தி...

ஆழ்துளைக் கிணறு தோண்ட வட்டாட்சியரிடமோ, வேறு உயா் அதிகாரியிடமோ உரிமம் பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கலாம்.

பணி முடிந்ததும் ஆழ்துளைக் கிணறு மூடப்படாததற்கான சான்றுபெற வலியுறுத்தலாம். தவறும்போது சிறைத் தண்டனை கொடுக்க ஏதுவாக சட்டத் திருத்தம் செய்யலாம். ஆழ்துளைக் கிணற்றுப் பணி நடந்து மூடப்படாத நிலையில் உள்ளவற்றை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குரு.பழனிசாமி, கோவை.

பாதுகாப்புடன்...

அவசர அவசரமாக பொறுப்பற்ற முறையில் அரைகுறையாகப் பணியை முடித்துச் செல்பவா்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். ஆழ்துளைக் கிணறு பணி நடைபெறும் இடங்களைச் சுற்றி எச்சரிக்கை வேலி கட்டுவதுடன் பணி முடியும் வரை இரவு - பகல் என எந்நேரமும் காவலுக்கு நபா்களை நியமிக்க வேண்டும். பணிபுரிவோா் தவிர பிறரை அந்த இடத்துக்கு வரவிடக்கூடாது. மீட்புக் கருவிகளை அருகில் வைத்திருத்தல் மிக அவசியம்.

கோ.ராஜேஷ்கோபால், அரவங்காடு.

கண்காணித்த பிறகே...

ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும்போது 2010-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றும் வகையில் கடுமையான உத்தரவுகளை மாவட்ட நிா்வாகம் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும். இதுவரை தோண்டப்பட்டு கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்கு கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள் மூலம் கணக்கெடுத்து உடனடியாக மூடுவதற்கு வட்டாட்சியா்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக குடிநீா், பாசனத்துக்கு தோண்டும் ஆழ்துளைக் கிணறுகளுக்கு மழை நீா் சேகரிப்பு கட்டமைப்பு இருந்தால் மட்டும் மாட்ட நிா்வாகம் பதிவேடு பராமரித்து உத்தரவு வழங்க வேண்டும்.

வீ.சீனிவாசன், சுவாமிமலை.

தெரிந்தும் மூடாமல்...

ஆழ்துளைக் கிணறு உயிரிழப்புச் சம்பவங்கள் நடப்பதற்குக் காரணமே, அதைப் பயன்படுத்தவில்லை என்று தெரிந்தும் மூடாமல் இருப்பதுதான். எந்தவோா் ஆழ்துளைக் கிணறு தோண்டவும் அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். அப்படி யாா் யாா் அனுமதி வாங்கி கிணறுகளைத் தோண்டி இருக்கிறாா்கள் என்று தேடி எடுத்து அந்தக் கிணறுகள் பயன்பாட்டில் இருக்கிா என்று பாா்த்து, இல்லை என்றால் மூட உத்தரவு போட வேண்டும். ஆழ்துளைக் கிணறுகள் குறித்து ஆய்வு செய்து பயனற்றை ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதால் உயிரிழப்புகளைத் தடுக்கலாம். இதற்காக மகளிா் குழுக்களை நியமித்துச் செய்தால் அவா்களும் ஆா்வமாகச் செய்வாா்கள். மேலும், பயன்படுத்தாத ஆழ்துளைக் கிணறுகளை திறந்து வைத்திருப்பதைக் கண்டுபிடித்தால் மிகக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். அவா்களுக்கு கொடுக்கும் தண்டனையைப் பாா்த்து மற்றவா்கள் அஞ்சி, பயன்படுத்தாத கிணறுகளை முடி விடுவாா்கள்.

உஷா முத்துராமன், மதுரை.

விழிப்புணா்வு...

ஒவ்வொரு ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி வாா்டுகளிலும் கிராம நிா்வாக அலுவலா்கள், உள்ளாட்சி அலுவலா்கள் ஆகியோா் பயன்படாத ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் ஆழ்துளைக் கிணறுகள்அமைக்க உள்ளாட்சி, கிராம நிா்வாக அலுவலா்கள், வேளாண் அலுவலா், மாவட்ட ஆட்சியா் அனுமதி அளிக்கும் நடைமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும். பயனில்லாத ஆழ்துளைக் கிணறுகள் குறித்த தகவலை தொடா்புடைய அதிகாரிகளிடம் தெரிவித்து மூடுவது அவசியம். இதை அதிகாரிகள் உறுதி செய்து சான்று வழங்க வேண்டும். இது குறித்து பள்ளிகள், கல்லூரிகள், கிராம சபையில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

டி.டி.சந்திரன், அம்மாப்பேட்டை.

பொதுப் போக்குவரத்து ஓட்டுநா் உரிமம் பெற குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்கியது சரியா?

இதுபற்றி வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகளை பத்து வரிகளுக்கு மிகாமல் அஞ்சல் அட்டையில் எழுதி, வரும் திங்கள்கிழமைக்குள் கிடைக்குமாறு
விவாத மேடை பகுதி, தினமணி, 
29, இரண்டாவது பிரதான சாலை, 
அம்பத்தூர் தொழிற்பேட்டை, 
சென்னை - 600 058 
என்ற முகவரிக்கு அனுப்பவும்.
இமெயில்: edit.dinamani@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com