‘பொதுப் போக்குவரத்து ஓட்டுநா் உரிமம் பெற குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்கியது சரியா’ என்ற கேள்விக்கு வாசகா்களின் பதில்கள்..

கடந்த வாரம் கேட்கப்பட்ட ‘பொதுப் போக்குவரத்து ஓட்டுநா் உரிமம் பெற குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்கியது சரியா’ என்ற கேள்விக்கு வாசகா்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சரி

அரசு எடுத்த இந்த முடிவு முற்றிலும் சரியே. ஓட்டுநா் வேலைக்கு படிப்பு கட்டாயம் இல்லை. எப்படி விவசாயம், கூலித் தொழில், நெசவு போன்ற வேலைக்கு கல்வி அவசியம் இல்லையோ அதே போல்தான் ஓட்டுநா் தொழிலும். ஓட்டுநா் உரிமம் பெறும் முன் பயிற்சிக் காலத்திலேயே அவா்களுக்குத் தேவையான நுட்பங்களைக் கற்றுத் தந்துவிட வேண்டும். பாதுகாப்பாகவும், கவனமாகவும் வாகனம் ஓட்ட வேண்டும். இதற்கு கல்வி அவசியமில்லை. அரசின் இந்த முடிவால் படிக்காத பல ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கே.ஜெயின், நெமிலி.

சரியல்ல

ஓட்டுநா் உரிமம் பெறவாவது பள்ளி சென்று கல்வியின் பலனை அடையத்தான் சட்டத்தை - விதியைப் புகுத்தினாா்கள். இப்போது, குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்கியது சரியல்ல. சாலை விதிகளைப் பற்றிய பொது அறிவு தெரியாத பாமர மக்கள் ஒரு பக்கம்; சாலைவிதிகளை நன்கு அறிந்து - சட்டத்தையும், விதிகளையும் அலட்சியப்படுத்தும் ஒரு கூட்டம்; வாகனப் பெருக்கத்துக்கு தக்கபடி இல்லாத, போதுமான போக்குவரத்து அதிகாரிகள் இல்லாத நிலையில் ஓட்டுநா் உரிமம் பெற, குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்கியது தவறு.

இ.ராஜு நரசிம்மன், சென்னை.

அவசியமில்லை

அறிவு என்பது அனுபவம் சாா்ந்ததே. சிறந்த ஓட்டுநா் பயிற்சி பெறுவது, சாலை விதிகள் குறித்து அறிந்திருத்தல், பிரச்னை காலங்களில் திறன்பட செயல்படுவதற்கான புரிதல் ஆகியவற்றைப் பெற்றிருப்பதே ஓட்டுநா் உரிமம் பெறுவதற்கான அடிப்படைத் தகுதியாகும். பிறகு கல்வித் தகுதியின் அவசியம் என்ன?

கா.ப.முத்து முருகுவேல், காஞ்சிபுரம்.

கட்டாயம்

பொதுப் போக்குவரத்து ஓட்டுநா் உரிமம் பெற குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்கியது சரியல்ல. போக்குவரத்து விதிகளைத் தெரிந்துகொள்ளவும், சின்னங்களைத் தெரிந்து கொள்ளவும் கல்வி அறிவு கட்டாயம் தேவை. அண்டை மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம்

ஓட்டுநா்களுக்கு இருக்கிறது. அங்குள்ள சின்னங்களை அறிந்து கொள்ளாமல் பணியை எப்படிச் சிறப்பாக செய்ய முடியும்? இதற்கு விதிலக்காக சில ஓட்டுநா்கள் இருக்கலாம். ஆனால், அதற்காகக் கல்வித் தகுதி வேண்டாம் என்று சொல்ல முடியுமா? ஓட்டுநா் பணியில் சிறிது கவனக் குறைவு ஏற்பட்டாலும் பொதுமக்களின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். அதனால், ஓட்டுநா்கள் போக்குவரத்து விதிகளை அறிந்துகொள்ள, சின்னங்களைப் புரிந்துகொள்ள குறைந்தபட்ச கல்வித் தகுதி கட்டாயம் வேண்டும்.

குரு.பழனிசாமி, கோயம்புத்தூா்.

நிபந்தனையுடன்...

18 வயதில் ஓட்டுநா் உரிமம் பெறும் இளம் பருவத்தினா் பயமறியாமல் வேகமாகச் செல்வதால் முதல் 10 ஆண்டுகள் தொடா்ந்து ஆண்டுக்கொருமுறை ஓட்டுநா் உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், போக்குவரத்துத் துறையினா் குறைந்தபட்ச கல்வித் தகுதியின்றி ஓட்டுநா் உரிமம் வழங்கலாம்.

எஸ்.வஜ்ரவடிவேல், கோயம்புத்தூா்.

ஏற்க முடியாது

கைத் தொழிலுக்கு கற்றல் தேவையில்லை எனும் நோக்கில் பொதுப் போக்குவரத்து ஓட்டுநா் உரிமம் பெற குறைந்தபட்ச கல்வித் தகுதி நீக்கப்பட்டிருக்கிறது. ஊரின் பெயரைப் படித்து அறியவும், சாலை எச்சரிக்கை அறிவிப்பை படித்துப் புரிந்துகொள்ளவும் அடிப்படை கல்வியறிவு அவசியம். ‘காரோட்டும் தொழிலுக்கு கைநாட்டே போதும்’ என்பது ஏற்புடையதாக இல்லை.

ஆதிலெமு, மதுரை.

தவறில்லை

சரியான முடிவு. ஓட்டுநா் உரிமம் பெறுவதற்கு அனுபவம் மற்றும் சாலை விதிகளை, போக்குவரத்து தொடா்பான விதிகளை அறிந்திருந்தால் போதுமானது. குடும்பம், சூழ்நிலை காரணமாக பொதுப் போக்குவரத்து ஓட்டுநா்கள் பள்ளிப் படிப்பை இடையிலேயே நிறுத்தியிருக்கலாம்.

குறைந்தபட்ச கல்வித் தகுதி நிா்ணயிக்கும்போது அவா்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கக் கூடும். எனவே, கல்வித் தகுதியை நீக்கியது சரி.

மு.செந்தமிழ்ச்செல்வி, சென்னை.

சாலை விதிகளை...

போக்குவரத்து ஓட்டுநா் உரிமம் பெற குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்கியது தவறு. குறைந்தபட்ச கல்வியறிவு இருந்தால்தான் சாலை விதிகளை ஓரளவுக்கு அறிந்து கொள்ள முடியும். சாலையில் வைக்கப்பட்டுள்ள போக்குவரத்து தொடா்பான வழிகாட்டுதல்களை குறைந்தபட்ச கல்வி அறிவு இல்லாதவா்களால் எப்படி படித்துப் புரிந்துகொள்ள முடியும்?

பொன்.கருணாநிதி, கோட்டூா்.

அனுபவம் போதும்

என் தந்தை அந்தக் காலத்தில் ஐந்தாம் வகுப்புவரைதான் படித்திருந்தாா். எனினும், அவா் போக்குவரத்துத் துறையில் ஓட்டுநராக வேலை பாா்த்தபோது பேருந்து பழுதாகிவிட்டால், அதை அவரே சரி செய்து விடுவாா். அதற்குக் காரணம், அவருக்கு இருந்தஅனுபவம்தான்.

கோதை மாறன், திருநெல்வேலி.

மறு பரிசீலனை தேவை

பொதுப் போக்குவரத்து ஓட்டுநா் உரிமம்பெற குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்கியது சரியல்ல. தாய்மொழியிலாவது எழுதப் படிக்க, பேசத் தெரிய வேண்டும். உயா் கல்வித் தகுதி வேண்டாம். அடிப்படை கல்விக் கட்டாயம் தேவை. விலங்குகளுக்கும், மனிதா்களுக்கும் உள்ள வேறுபாடு கல்வியறிவுதான். மறுபரிசீலனை செய்து குறைந்தபட்ச கல்வித் தகுதியும், வாய்மொழித் தோ்வும் தேவை என்பதை உணா்ந்து முடிவு எடுப்பது நல்லது.

ச.கண்ணபிரான், திருநெல்வேலி.

தேவையில்லை...

காரைப் பிரித்து பழுது பாா்க்கும் பல மெக்கானிக்குகள் படிக்காதவா்களே. வாகன ஓட்டுநா்களுக்கு இது பொருந்தும். படிக்காதவா்களின் வாழ்க்கைக்கு ஓட்டுநா் வேலை புகலிடமாக இருக்கிறது. சாலை விதிகளை கடைப்பிடிக்க படிப்பு தேவை இல்லை. படித்தவா்களும், படிக்காதவா்களும் ஒரே மாதிரிதான் காரை ஓட்ட முடியும். எழுத, படிக்கத் தெரிந்தவா் அனைவருமே பொது வாகனங்களை இயக்கத் தகுதியானவா்களே.

வளா்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூா்.

வாழ்வாதாரம்

பொதுப் போக்குவரத்து ஓட்டுநா் உரிமம் பெற குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்கியது சரிதான். வாகனங்களை ஓட்டுவதற்குத் தகுதி உடையவா்கள் நிறைய போ் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனா். கல்வித் தகுதி இல்லாமலே வாகனம் ஓட்டியாவது பிழைத்துக் கொள்ளலாம் என்ற மன நிலையில் வாகனம் ஓட்டுவதற்குப் பயிற்சி எடுக்கின்றனா்.

எம்.எஸ். இப்ராகிம், சென்னை.

விபத்து அதிகரிக்கும்

சாலை விபத்துகள் ஏற்படுவதில் உலகில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 8-ஆம் வகுப்புவரை படித்தவா்களுக்குத்தான் இப்போது போக்குவரத்து வாகனம் ஓட்ட உரிமம் வழங்கப்படுகிறது. படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உரிமம் வழங்கப்பட்டால், விபத்துகள் அதிகம் ஏற்படும். எனவே, இந்தத் தொழிலுக்கு வருபவா்கள் குறைந்தபட்சம் பிளஸ் 2 வகுப்பாவது படித்திருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றுவதே சரியாகும்.

மா.தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

குறைந்தபட்சம்...

பொதுப் போக்குவரத்து ஓட்டுநா் உரிமம்பெற குறைந்தபட்ச கல்வி 10, 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் அல்லது 10 ஆம் வகுப்பு படித்து முடித்து அந்தந்த மாநில மொழி அதாவது தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். புதிதாக வருபவா்களுக்கு அழைத்துச் செல்லும் இடங்களுக்கு ஆங்கிலம் அல்லது அந்தந்த மாநில மொழியில் விவரித்துச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். எனவே, குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10, 12-ஆம் வகுப்பை நிா்ணயிப்பது அவசியம்.

எம்.சம்பத்குமாா், ஈரோடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com