வாரிசு அரசியல் குறித்த கமல்ஹாசனின் கருத்து ஏற்புடையதா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

வாரிசு அரசியல் குறித்த கமல்ஹாசனின் கருத்து ஏற்புடையதா

ஏற்புடையதே
வாரிசு அரசியல் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் கருத்து ஏற்கக் கூடியதே.  அரசியலில் வாரிசு முறை இருக்கக் கூடாது. அதனால்தான் ஜனநாயக முறையை நாம் தேர்ந்தெடுத்தோம். வாரிசு அரசியலில் வாரிசின்  ஒற்றைக் கருத்துக்கு மட்டுமே வலிமை உண்டு. மற்றவர்களுக்கு அதனை வழிமொழியும்  வாய்ப்பு மட்டுமே கிடைக்கும். மற்றவர்களின் கருத்துகள் நன்றாக இருந்தாலும் வாரிசுகளால்  ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. மொத்தத்தில் வாரிசு முறை அரசியலும், மன்னராட்சி முறையும் வெவ்வேறல்ல ஒன்றுதான்.
சுரேஷ் ஐய்யாப்பிள்ளை, 
பழையகாயல்.

ஏற்புடையதல்ல
வாரிசு அரசியல் குறித்து கமல்ஹாசன் பேசுவது, சுதந்திரத்துக்குப் பிந்தைய அரசியல் வரலாறு அவருக்குத் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது. ஜவாஹர்லால் நேரு, ஷேக் அப்துல்லா, தேவிலால், சிந்தியா, பிஜு பட்நாயக் போன்ற எத்தனையோ தலைவர்களின் குடும்ப வாரிசுகள் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். அரசியலில் வாரிசுகள் உருவாவது தவிர்க்க முடியாதது. எனினும், அப்படி உருவாகும் வாரிசுகள் தமது கட்சியில் அடிமட்டத் தொண்டனாக ஆரம்பித்து படிப்படியாக பல போராட்டங்களைச் சந்தித்து தெளிவான அரசியல் ஞானம் பெற்றவர்களாக இருந்தால், அதை ஆட்சேபிக்கவோ விமர்சிக்கவோ கூடாது. எனவே, வாரிசு அரசியல் குறித்து பொதுவாக கமல்ஹாசன் கருத்துத் தெரிவிப்பது ஏற்புடையதல்ல.
துடுப்பதி வெங்கண்ணா, 
பெருந்துறை.

வாரிசு திணிப்பு கூடாது
வாரிசு அரசியல் குறித்த கமலின் கருத்து ஏற்புடையதே. பொதுவாக குடும்ப அரசியலை பொதுமக்கள் விரும்புவதில்லை. திறமை, உழைப்பு, தியாகம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவர் வளர்ந்து கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வருவதை இந்திய மக்கள் மனமுவந்து ஏற்றுக் கொண்டுள்ளனர். நேருவுக்கு பின் இந்திரா காந்தி வந்ததையோ, கருணாநிதிக்குப் பின் ஸ்டாலின் வந்ததையோ யாரும் குறை கூறவில்லை. ஆனால், ராகுல் காந்தியையும், பிரியங்கா காந்தியையும் தலைமைப் பொறுப்புக்கு முன்மொழிவதை பெரும்பாலோர் விரும்பவில்லை. அதேபோல, உதயநிதியை திடீரென இளைஞர் அணி பொறுப்புக்கு கொண்டுவந்ததை தமிழக மக்கள் வெகுவாக ரசிக்கவில்லை. இது எதார்த்தம். கட்சிக்காரர்கள் வேண்டுமானால் இதை மறுக்கலாம். ஆனால்,  "வாரிசு' திணிப்பை மக்கள் விரும்பவில்லை என்பதே உண்மை. 
பொன்.கருணாநிதி, கோட்டூர்.

பயனில்லை
எம்.ஜி.ஆரைப் போல் தானும் முதல்வர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் ஏற்பட்டது. ஆனால், கமல்ஹாசனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஒரே ஒற்றுமை இருவரும் நடிகர்கள் என்பது மட்டுமே. மேலும், எம்.ஜி.ஆரிடம் இருந்த தகுதிகள், அவர் மீது மக்கள் வைத்திருந்த அன்பு ஆகியவை கமல்ஹாசனிடம் இல்லை. அரசியலில் ஈடுபட்டால் மக்கள் நிலைமை என்ன? அவர்கள் அனுபவித்து வரும் கஷ்டங்கள் என்ன? மேலும் நாட்டில் ஊழலும் நிர்வாகச் சீர்கேடுகளும் அதிகரித்துள்ளன. அவற்றைச் சரிசெய்து நல்லாட்சி தர தன்னிடம் உள்ள திட்டங்கள் என்னென்ன என்பதை கமல்ஹாசன் சொல்ல வேண்டும். அதை விடுத்து வாரிசு அரசியல் போன்ற தேவையற்ற விஷயங்களில் கருத்துச் சொல்வதால் மக்களுக்கு எந்தவோர் பயனும் இல்லை. 
மா.தங்க மாரியப்பன், கோவில்பட்டி.

சரியானதுதான்
பழங்கால மன்னர்களின் வாரிசு முடியாட்சி முடிந்து, சுதந்திர இந்தியாவில்  மக்களாட்சிதான் நடைபெறுகிறது. ஆனால், கடந்த அரைநூற்றாண்டு காலமாக தமிழகம் உட்பட பல மாநிலங்களில் வாரிசுகளின் ஆட்சியும், குடும்ப அரசியலும்தான் கோலோச்சுகின்றன. மக்களாட்சியின் மாண்பு சீர்குலைந்துவிட்டது என்பதைக் குறிக்கும் வகையில், வாரிசு ஆட்சியும், குடும்ப அரசியலும் நாட்டுக்கு நல்லதல்ல என்று கமல்ஹாசன் மிகச் சரியாகக் கூறியுள்ளார்.
கே.வேலுச்சாமி, தாராபுரம்.

சரியல்ல
இந்தியாவில் வாரிசு அரசியல் சர்வ சாதாரணமாகிவிட்டது. தமிழகம் மட்டுமின்றி வட இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களும் தங்களது வாரிசுகளை அரசியலில் ஈடுபடுத்தும் நிலை காண முடிகிறது. வாரிசுகளை அரசியலில் ஈடுபடுத்தாத நிலை இனி காண இயலாது. எனவே, கமல்ஹாசனின் கருத்து ஏற்புடையதாகாது.
கே.சிங்காரம், வெண்ணந்தூர்.

மன்னராட்சியின்...
அரசியலில் வாரிசு அரசியல் சரியாக இருக்காது என்று கமல்ஹானின் கருத்து ஏற்புடையது. சில அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலையும், குடும்ப அரசியலையும் உருவாக்கி வருகின்றன. மன்னராட்சியின் மறு வடிவம்தான் இந்த வாரிசு அரசியல், குடும்ப அரசியல். வாரிசு அரசியல் என்று ஆகிவிட்டால் இரண்டாம் நிலைத் தலைவர்களின் வளர்ச்சி கட்சியில் இருக்காது. இரண்டாம் நிலைத் தலைவர்கள் என்னதான் கட்சிக்காக உழைத்தாலும் முன்னேற்றம் இருக்காது. நாளடைவில் கட்சி காணாமல் போய்விடும். மாணவர்களும், இளைஞர்
களும் விரைவில் அரசியலுக்குள் நுழைந்து கசடுகளை அகற்ற வேண்டும்.
எம்.ராஜா, திருச்சி.

இந்தியாவின் தலைவிதி
வாரிசு அரசியல் ஏற்புடையது இல்லைதான்; ஆனால், என்ன செய்வது? அது இந்திய அரசியலின் தலைவிதியாக இருக்கிறது. இதற்கு காங்கிரஸ்தான் முன்னுதாரணம். அதை திமுக உடும்புப் பிடித்துக் கொண்டது. வயது, அறிவு, அனுபவத்தில் யார் பெரியவரோ அவருக்கே கட்சியின் தலைமையும், ஆட்சியும் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால்தான் தமிழகம் மேம்படும். எனவே, கமல்ஹாசன்  கூறியது சரி.
மகிழ்நன், கடலூர்.

மிகையான கூற்று
வாரிசு அரசியலை ஏற்கலாகாது என்ற தெளிவுடன் தமிழகம் இருக்கிறது. தற்போது திமுகவில் மட்டுமே வாரிசு அரசியல் இருக்கிறது. இதை மறுத்து விட்டு, தமிழகம் வாரிசு அரசியல் பிடியில் சிக்கியிருக்கிறது என கமல்ஹாசன் கூறுவது மிகையான கூற்றாகும்.
சாய் ஜயந்த், சென்னை.

மக்கள் விரும்பினால்...
வாரிசு அரசியல் குறித்த கமல்ஹாசனின் கருத்து வரவேற்கத்தக்கதே. அதே சமயம் தகுதியும், திறமையும், வெற்றி கொள்ளத்தக்க அறிவும் உடையவர்களைப் புறக்கணித்து விடமுடியாது. வாரிசு என்பதால் வலிய புகுத்தப்படுவதை ஏற்க முடியாது. வாரிசு என்பதையும் தாண்டி மக்களால் வேண்டி விரும்பி ஏற்கப்படும்போது தவிர்த்துவிடவும் முடியாது. அந்த இடத்தை அடைய தகுதியையும் திறமையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எம்.எஸ்.இப்ராஹிம், 
சென்னை.

தவிர்க்க முடியாது
நம்நாட்டில் தவிர்க்க முடியாத அளவுக்கு வாரிசு அரசியல் ஊடுருவியுள்ளது. உண்மையில் உழைக்கக் கூடியவர் என்று கண்டறிந்து நேர்மையானவர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்களேயானால் வாரிசு அரசியல் படிப்படியாகக் குறைந்து விடும். மாணவர்கள், மக்கள் ஆகியோரை இணைத்து தன் குடும்பத்தைப் பெரிதாக்கிக் கொள்கிறேன் என்கிறார் கமல்ஹாசன். மாணவர்கள், மக்கள், அவரது குடும்பம் ஆகியவற்றில் ஒன்று வாரிசாக பார்க்கப்படும். அதனால்,
இன்றைய நிலையில் வாரிசு அரசியல் தவிர்க்க முடியாதது. 
ஆர்.பட்டாபி, சென்னை.

குழப்புகிறார்
அரசியல், சினிமா போன்று எழுத்துத் துறை உள்பட எந்தத் துறையானாலும் அவற்றில் வாரிசுகளைக் காண்கிறோம். அப்படியிருக்கையில், வாரிசு அரசியலை தாம் விரும்பவில்லை என்றும், தமிழக அரசியலிலிருந்து குடும்ப அரசியலை பிரிக்க முடியாது என்றும் கமல்ஹாசன் கூறுகிறார்; மேலும், "நீங்கள்தான் என் குடும்பம்' என்று மக்களைப் பார்த்து அவர் கூறுவது குழப்பமாக உள்ளது.
கோதைமாறன், 
திருநெல்வேலி.

விதிவிலக்கு உண்டு
அரசியல் வாரிசு சரியாக இருக்காது என்ற நடிகர் கமல்ஹாசனின் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும் விதி விலக்கு என்பது இதை மாற்றக்கூடியதாக அபூர்வமாக அமையும். அப்போதைய சூழ்நிலையைக் குறித்து பேசக்கூடிய பேச்சு கால மாறுபாட்டில் மாறக் கூடியதாக அமையும். எதுவும் எப்போதும் நிரந்தரம் இல்லை. இன்று இருப்பதும்  பொய்; நாளை இறப்பதும் மெய். நிரந்தரமான உலகில் நிரந்தரமற்ற மனிதனின் பேச்சு நியாயமாக இருந்தாலும் காலமாறுபாட்டில் நிரந்தரமாக இருக்க முடியாது. 
டி.வி.கிருஷ்ணசாமி, சென்னை.

வாக்காளர்கள்தான்...
அரசியலில் வாரிசு குறித்த கமல்ஹாசனின் கருத்து அவருடைய சொந்தக் கருத்தாகும். அவர் அரசியல் கட்சியை நிறுவி தேர்தலைச் சந்தித்திருக்கிறார். மக்களாட்சியில் கருத்துச் சுதந்திரமும், எழுத்துச் சுதந்திரமும் அனைவருக்கும் உண்டு. எனவே, கமல்ஹாசனின் கருத்து ஏற்புடையதா என்ற கேள்விக்கு இடமில்லை. வாரிசு அரசியலில் யார் நல்லவர், யார் மக்களுக்கு உழைப்பார் என்று நமது வாக்காளர்கள்தான் தேர்வுசெய்ய வேண்டும். தமிழகத்தில் ஊழலை அகற்ற வேண்டியது வாக்காளர்களின் கடமையாகும்.
ச.கண்ணபிரான், திருநெல்வேலி.

தேர்வு முறை மட்டுமல்ல, கல்வி முறையே மாற்றப்பட வேண்டும் என்று லதா ரஜினிகாந்த் கூறியிருப்பது குறித்து என்ன கருதுகிறீர்கள்?

இதுபற்றி வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகளை பத்து வரிகளுக்கு மிகாமல் அஞ்சல் அட்டையில் எழுதி, வரும் திங்கள்கிழமைக்குள் கிடைக்குமாறு
விவாத மேடை பகுதி, தினமணி, 
29, இரண்டாவது பிரதான சாலை, 
அம்பத்தூர் தொழிற்பேட்டை, 
சென்னை - 600 058 
என்ற முகவரிக்கு அனுப்பவும்.
இமெயில்: edit.dinamani@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com