Enable Javscript for better performance
பிஎஸ்என்எல் மூடப்பட வேண்டும் என்பதில் அரசுக்கு விருப்பமில்லை: மத்திய தொலைத்தொடர்புத் துறைச் செயலர் அ- Dinamani

சுடச்சுட

  

  பிஎஸ்என்எல் மூடப்பட வேண்டும் என்பதில் அரசுக்கு விருப்பமில்லை: மத்திய தொலைத்தொடர்புத் துறைச் செயலர் அன்ஷு பிரகாஷ் - என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

  By DIN  |   Published on : 23rd October 2019 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நிலைப்பாடு சரி
  பிஎஸ்என்எல் மூடப்பட வேண்டும் என்பதில் அரசுக்கு விருப்பமில்லை என்ற மத்திய தொலைத்தொடர்புத் துறைச் செயலர் அன்ஷு பிரகாஷின் கருத்தை வரவேற்கிறேன். ஏற்கெனவே வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியிருக்கும் இந்தத் தருணத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடும் முயற்சி அதிருப்தியை ஏற்படுத்துவதோடு, சமூகத்தில் கொந்தளிப்பை உருவாக்கும். எனவே,  பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடுவதில்அரசுக்கு விருப்பமில்லை எனத் தெளிவாகக் கூறிய மத்திய தொலைத்தொடர்புத் துறைச் செயலரின் நிலைப்பாட்டை  வரவேற்கிறேன்.
  கே.எஸ். சுந்தரம், கோயம்புத்தூர்.

  கண் கெட்ட பிறகு...
  தரைவழி தொலைபேசி செயல்பாடு முழுமையாக இருந்தவரை வீடுகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் சிறப்பாகச் சேவை செய்த அரசு பிஎஸ்என்எல் நிறுவனம், செல்லிடப்பேசி செயல்பாடு வந்தபின் பணத்தாசையில் நெட்வர்க் பயன்படுத்தும் அனுமதியைத் தனியாருக்குத் தந்துவிட்டு, இப்போது அவர்களிடம் போட்டி போட முடியாமல் தத்தளிக்கும் நிலைமைக்கு வந்தபின், கோமாவில் கிடக்கும் நோயாளியைக் கொல்ல மாட்டோம் எனச் சொல்வதுபோல இருக்கிறது தொலைத்தொடர்புத் துறைச் செயலரின் அறிவிப்பு. கண் கெட்ட பிறகுதான் அரசு சூரிய நமஸ்காரம் செய்யுமோ?
  செ.ஆசைத்தம்பி, தாரமங்கலம். 

  மூடாமல் இருக்க...
  பிஎஸ்என்எல் நிறுவனத்தை லாபத்தில் செயல்படும் நிறுவனமாக மாற்றுவது மத்திய அரசிடம்தான் உள்ளது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குப் போட்டியாக வாடிக்கையாளர்களைக் கவரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டால் மட்டுமே பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து செயல்பட வாய்ப்புள்ளது. எனவே, பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மூடுவிழா நடத்துவதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு முயற்சி செய்யும் என நம்புவோம்.
  நா.ஆமினத்து ஜாக்ரினா, கீழக்கரை. 

  மூடக் கூடாது
  பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடக் கூடாது. காரணம், இன்றைய அலைவரிசைகளில் முதன்மையாக இருப்பது பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டுமே.  நெட்வர்க் பிரச்னை இல்லாததால், மற்ற நிறுவனங்களிலிருந்து பிஎஸ்என்எல் இணைப்புக்குப் பலரும் மாறி வருகிறார்கள்.  பிஎஸ்என்எல் நிறுவனத்தை மத்திய அரசு இன்னும் சிறப்புடன் நடத்த வேண்டும்.
  இந்து குமரப்பன், விழுப்புரம்.  

  உண்மையில்லை
  தொலைத்தொடர்புத் துறைச் செயலர் அன்ஷு பிரகாஷ் கூறியதில் உண்மையில்லை.  தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 4ஜி சேவையை வழங்கி இரு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு இன்னும் வழங்கப்படவில்லை. மக்கள் வேறு வழியின்றி தனியாருக்குப் போக வேண்டிய சூழலுக்குத் தள்ளியதே அரசுதான். நம்பிக்கைக்குப் பாதகமாக அதன் சேவையை முடக்க நினைப்பது அதனைத் தாமாக மூட வைப்பதற்கான நேரடி நடவடிக்கையாகும்.
  ப. தாணப்பன், தச்சநல்லூர்.

  சேவை தொடரட்டும்
  பிஎஸ்என்எல் நிறுவனத்தை நடத்துவதில் இருக்கும் பிரச்னையே அதிநவீன தொழில்நுட்பப் பயன்பாட்டு முறைகள்தான். வாடிக்கையாளர்கள் விரும்பும் சேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வைக்க, பிஎஸ்என்எல் நகரம்தோறும் கிளைகளைக் கொண்டிருந்தாலும், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நகரங்கள் மட்டுமின்றி, கிராமங்களிலும் அதற்கேற்ற வசதிகளை அமைத்து, மக்களைக் கவரக்கூடிய சேவைகளையும்,  அதற்கான விளம்பரங்களையும் செய்து விடுகின்றனர்.  நாடு முழுவதும் இல்லையென்றாலும், நிறுவன மறுசீரமைப்பு மற்றும் லாபம் ஈட்டக் கூடிய கிளைகளில் மட்டும் சேவையைத் தொடர்வது நல்லது.
  பாலமுரளி பாலாஜி, த.பட்டணம்.

  சொல்லும் செயலும்
  சிலருக்கு சொல்லும் செயலும் வேறு வேறாக இருக்கும்.  அதே கதைதான் பிஎஸ்என்எல் மூடப்பட வேண்டும் என்பதில் அரசுக்கு விருப்பமில்லை என்ற அன்ஷு பிரகாஷ் பேச்சும்...தொலைத்தொடர்பில் தனியாரை அவர்கள் இஷ்டப்படி வளர்த்துவிட்டு, பிஎஸ்என்எல் நிறுவனத்தை ஏனோ தானோவென்று மத்திய அரசு கவனிப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே.
  சின்னஞ்சிறுகோபு,  சிகாகோ.  

  மக்களின் நம்பிக்கையை...
  பிஎஸ்என்எல் மூடப்பட வேண்டும் என்பதில் அரசுக்கு விருப்பமில்லை என்பது நல்ல நிலைப்பாடு. ஆனால், பிஎஸ்என்எல்-ஐ பலப்படுத்தும் வகையில் 4ஜி சேவையை நாடு முழுவதும் கொண்டுவர வேண்டும். கவர்ச்சித் திட்டங்கள் மூலம் தனியார் நிறுவனங்கள் பொருள் சேர்ப்பதற்கு அரசு துணை நிற்காமல் பொதுத் துறையான பிஎஸ்என்எல்  நிறுவனம் புதுப் பொலிவு பெற முயற்சி எடுக்க வேண்டும்.அனைத்துத் தனியார்களையும்விட  அரசு இயந்திரம் சக்தி வாய்ந்தது என்பதை நிரூபித்து, மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டிய தருணம் இது.
  பா.சக்திவேல், கோயம்புத்தூர்.

  ஆறுதல் அளித்தாலும்...
  பிஎஸ்என்எல் மூடப்பட வேண்டும் என்பதில் அரசுக்கு விருப்பமில்லை என்ற செய்தி நமக்கு ஆறுதல் அளித்தாலும், மறுபுறம் அச்சத்தை உண்டாக்குகிறது. பொருளாதார நெருக்கடியில் பிஎஸ்என்எல் இருந்து வருகிறது. இதற்குத் தீர்வு காண ஊழியர்கள் சங்கம், மத்திய தொலைத் தொடர்புத் துறை செயலர்கள் துறை அமைச்சர்கள் உள்ளிட்ட குழுவை நியமித்துப் பரிசீலனை செய்ய வேண்டும்.
  என்.எஸ்.முத்துகிருஷ்ணராஜா, 
  ராஜபாளையம்.

  நகைச்சுவை
  பிஎஸ்என்எல் மூடப்பட வேண்டும் என்பதில் அரசுக்கு விருப்பமில்லை என்று தொலைத்தொடர்புத் துறைச் செயலர் கூறியுள்ளதை நகைச்சுவை என்றே சொல்ல வேண்டும். பாரம்பரியமிக்க இந்திய தொலைத்தொடர்புத் துறையை பிஎஸ்என்எல் என மாற்றியபோதே இந்த நிறுவனம் சரியத் தொடங்கிவிட்டது. அப்போதைய அரசும் சரி, தற்போதைய அரசும் இந்த நிறுவனத்தை முன்னேற விடாமல் தடுத்து வருகின்றன; இதற்கு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அலைக்கற்றைகளை பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு வழங்க அக்கறை காட்டவில்லை என்பதே சான்று.
  பி.துரை, காட்பாடி.

  தீவிர முயற்சி மூலம்...
  அமைச்சர் முதல் பிஎஸ்என்எல் கடைநிலை ஊழியர்கள் வரையில் உள்ளவர்களுக்கு (தகுதிக்கு ஏற்ப தரப்பட்ட) சலுகைகள் குறைக்கப்பட வேண்டும். வாடிக்கையாளர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். காலத்துக்கேற்ப தேவைகளை அறிந்து (4ஜி, 5ஜி) சேவை புரிந்து வாடிக்கையாளர்களை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். அரசு தொலைத்தொடர்புதான் அனைத்துக்கும் ஆதிமூலம் என்பதை மக்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் உணர்த்த வேண்டும். முயற்சிகள் முழுமையாய் இருந்தால் மூடப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது.
  ஆர்.விஜயலட்சுமி, சிவகங்கை.

  காப்பாற்றுவதே முக்கியம்
  சென்னையில் 2015-ஆம் ஆண்டு பெருவெள்ளம் ஏற்பட்ட போதும், இந்தியாவில் இயற்கை இடர்ப்பாடுகள் பல ஏற்பட்ட போதும் நமக்குப் பேருதவியாக இருந்தது பிஎஸ்என்எல் நிறுவனமே. அத்தகைய நிறுவனம் இன்று மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை அரசு விரும்பவில்லை எனச் சொல்லாமல், அதைக் காப்பாற்ற முனைப்போடு செயல்படுதல் இன்றியமையாதது. 
  ம.சக்திவேலாயுதம், திருநெல்வேலி.

  நஷ்டத்திலிருந்து மீள...
  எந்தவோர் அரசுத் துறையில் நஷ்டம் ஏற்பட்டாலும் அந்தத் துறையை மூடுவது மட்டுமே அதற்குத் தீர்வாகாது.  எதனால் நஷ்டம் ஏற்பட்டது என்று  ஆராய்ந்து அதைத் தீர்க்கும் வழியை அறிவதுதான் நல்ல முடிவு. இந்த நிறுவனத்தில்  பணிபுரிவோர் அனைவரும்  பாதிக்கப்படுவார்கள். எனவே, வாடிக்கையாளர்களை  அதிகரிக்கும் வழியினை அறிந்து அதை நடைமுறைப்படுத்தினால்  நல்ல மாற்றம் ஏற்படும். ஒரு நிறுவனத்தை எளிதில் மூடிவிடலாம்; ஆனால், அதை மறுபடியும் தொடங்கி மக்கள் மத்தியில் பிரபலமாக்குவது மிகவும் கடினம் என்பதை அன்ஷு பிரகாஷ் அனுபவம் மூலம் உணர்ந்திருப்பார். அதனால்தான் அவர் இப்படிச் சொல்லியிருக்கிறார்.
  உஷா முத்துராமன்,  மதுரை.

  எச்சரிக்கை அவசியம்
  மூட வேண்டிய அவசியமில்லை. எல்லா அரசு நிறுவனங்களும் மந்தமாகவும், சேவை மனப்பான்மை இல்லாமலும் செயல்படுவதைப் போலத்தான் பிஎஸ்என்எல் நிறுவனமும் செயல்படுகிறது. ஆனால், தனியார் செல்லிடப்பேசி சேவை மிகவும் சிறப்பாகச் செயல்படுவதால்,  பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மந்தமான சேவை வெளிப்படுகிறது. அதற்காக மூட வேண்டிய அவசியமில்லை. தரமான சேவையை மக்களுக்குத் தர வேண்டும் என்று பிஎஸ்என்எல்-ஐ வற்புறுத்த வேண்டும். நன்றாகச் செயல்படாவிட்டால் பிஎஸ்என்எல் நிறுவனம் மூடப்படும் அபாயம் உள்ளது என்ற நிலையைப் பணியாளர்கள் உணரும்படி அறிவிக்க வேண்டும். 
  மா.தங்கமாரியப்பன், 
  கோவில்பட்டி.

   


  தமிழகத்தில் பள்ளி பொதுத் தேர்வுகளில் கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்க அரசு முடிவு செய்திருப்பது மாணவர்களுக்குப் பலன் தருமா?


  இதுபற்றி வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகளை பத்து வரிகளுக்கு மிகாமல் அஞ்சல் அட்டையில் எழுதி, வரும் திங்கள்கிழமைக்குள் கிடைக்குமாறு
  விவாத மேடை பகுதி, தினமணி, 
  29, இரண்டாவது பிரதான சாலை, 
  அம்பத்தூர் தொழிற்பேட்டை, 
  சென்னை - 600 058 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai