Enable Javscript for better performance
ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டைத் திட்டம் குறித்து என்ன கருதுகிறீர்கள் என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்த- Dinamani

சுடச்சுட

  

  ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டைத் திட்டம் குறித்து என்ன கருதுகிறீர்கள் என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

  By DIN  |   Published on : 18th September 2019 01:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பலன் அளிக்கும்
  குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பம், அருகில் உள்ள ஊருக்கு மாற்றலாகிப் போனால் குடும்ப அட்டையை அந்த ஊருக்கு மாற்றம் செய்ய பெரிதும் சிரமப்பட வேண்டும். நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் அமலுக்கு வந்தால் இந்தியாவின் எந்தப் பகுதிக்கு மாற்றலாகிப் போனாலும் கவலையில்லை. தமிழ்நாட்டுக்குள்ளேயே வேறு ஊர் மாறிச் செல்பவர்களுக்கு இந்தத் திட்டம் மிகுந்த நன்மை அளிக்கும்.
  மா.தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

  குழப்பம் ஏற்படும்
  ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டைத் திட்டம் நம் நாட்டில் சாத்தியமில்லாதது. தங்கியிருந்த ஊரிலிருந்து வேறு ஊருக்குப் போனால் அங்கு  குடும்ப அட்டையினைப் பதிவு செய்து கிடைக்க வேண்டிய நியாயவிலைப் பொருள்களை வாங்குவதற்குப் பல முறை அலைய வேண்டும். ஒருவேளை நாடு முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகள் கணினிமயமானால் சாத்தியம். ஆனால், இதற்கு கடையில் கணினி, இணைய தள வசதியுடன் அதை இயக்கும் திறமையுள்ள நபரை பணியில் அமர்த்த வேண்டும். இது மிகப் பெரிய செலவை ஏற்படுத்தும். எனவே, இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருவது கொஞ்சம் கடினம்.
  உஷா முத்துராமன், மதுரை.

  ஒருமைப்பாடு
  மத்திய அரசுப் பணியில் இருப்போர், பணியின் நிமித்தம் இந்திய நாட்டின் பிற மாநிலங்களுக்கு மாற்றப்படும்போது குடும்ப அட்டைகளை மாற்றுவதற்கு சிரமப்படுகின்றனர். மத்திய அரசின் இந்தத் திட்டத்தால் அனைவரும் பயனடைவார்கள். மேலும், இதனால் ஒரே நாடு என்னும் ஒருமைப்பாடும் வலுவாகும். இது வரவேற்கத்தக்கதே.
  கோ.ராஜேஷ்கோபால், அரவங்காடு.

  தெளிவில்லை
  ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டைத் திட்டம் பல விளக்கங்களுக்கு உட்பட்டது. வேறு மாநிலங்களிலிருந்து குடிபெயரும் குடும்பங்கள் என்றால் பிரச்னை இல்லை. குடும்ப உறுப்பினர்களில் ஒரு சிலர் மட்டும் வேறு மாநிலத்துக்கு தற்காலிக வேலை, கட்டட வேலை போன்றவற்றுக்குச் செல்வோர் எவ்வாறு பயன்படுத்த முடியும்? குடும்பத்துடன் வேறு இடங்களுக்குச் செல்வோருக்கு வேண்டுமானால் இந்தத் திட்டம் பயன்படும். வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு மாநிலம் உணவுப் பொருள்களை வழங்கினால் அதை மத்திய அரசு அளிக்குமா அல்லது அந்தந்த மாநிலங்கள் வழங்குமா? திட்டம் நடைமுறைப்படுத்தும்போதுதான் தெளிவு பிறக்கும். அதுவரை குளறுபடிதான்.
  தி.ரெ.ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.

  பெருமை தரும்
  சிறந்த திட்டம்தான். குடும்ப அட்டைதாரர்கள் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற பெருமையை இது தரும். எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பார்த்தவுடனே தெரிந்துகொள்ளலாம். எந்த மாநிலத்தில் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கின்றனர்; அதற்குரிய காரணம் என்ன என்பதை இந்தத் திட்டத்தின் மூலம் அறிய முடியும். தேர்தல் ஆணையத்துக்கு இது உதவியாக இருக்கும். குற்றவாளிகள் தங்கள் பெயரை மாற்றியிருப்பதை அந்தந்த மாநில காவல் துறையினர் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். வேலைவாய்ப்பு, வங்கிகளில் பணப் பரிமாற்றம் போன்றவற்றில் உண்மை நிலை மேம்பட இந்தத் திட்டம் உதவும். 
  டி.வி.கிருஷ்ணசாமி, நங்கநல்லூர்.

  சிக்கலை யோசித்தால்..
  ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டைத் திட்டம் என்பது கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. நடைமுறைச் சிக்கலை யோசித்தால்தான் தலை சுற்றுகிறது. மாநிலம் விட்டு மாநிலம் குடிபெயர்பவர்களின் வசதிக்காக என்று வைத்துக் கொண்டாலும், எந்த மொழியை அட்டையில் அச்சிடுவது? சேர்க்கை, நீக்கல் எப்படி? மொழி மாற்றமா? வேறு அட்டையா? இது போன்ற பல வினாக்களுக்கு விரிவான திட்ட அறிக்கை வெளிவந்த பிறகுதான் சரியா, தவறா என விடை கிடைக்கும். 
  கே.வேலுச்சாமி, தாராபுரம்.

  நல்லதுதான்....
  இந்தத் திட்டம் முற்றிலும் நல்லது. இந்தியா முழுவதும் செல்லுபடியாகும் பணத்தின் புழக்கம் எப்படியோ, அப்படித்தான் இந்தத் திட்டமும் அமையும். அரசு ஊழியர்கள், வெளி மாநிலத்தில் பணியாற்றுவோருக்கு இது மிகவும் உதவும்.  ஆதார் அட்டையைப் போன்று, இந்தக் குடும்ப அட்டைத் திட்டமும் மக்களுக்கு முழுப் பலனைத் தரும்.
  சு.இலக்குமணசுவாமி, மதுரை.

  கூடுதல் செலவை...
  குடும்ப அட்டையிலாவது  தேசத்தில் சமத்துவம் மலர்கிறதே என்று மகிழலாம். உணவுப் பங்கீடு அட்டை மூலம் வழங்கப்
  படும் பொருள்களும், வழங்கும் விதமும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரையில் இங்கு இலவசங்களும், மானியங்களும் ஏராளம். தமிழகம் போன்ற மாநிலங்களில் வசிக்கும் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். இலவச, மானிய விலைப் பொருள்களை அவர்களுக்கும் வழங்குவதில் தவறில்லை. அது நியாயம்தான். ஆனால், அதனால் ஏற்படும் கூடுதல் செலவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். 
  பொன்.கருணாநிதி, கோட்டூர்.

  ஆய்வு அவசியம்
  இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக பல விஷயங்களை ஆராய வேண்டும். பல்வேறு உணவுப் பழக்கவழக்கங்களைக் கொண்டிருக்கும் நமது நாட்டில், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் முறையை ஆராய்ந்து தெளிய வேண்டும். தமிழகத்தில் ஏழை மக்களுக்கு இலவச அரிசி விநியோகம் அமலில் உள்ளது. இதன் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது. பிற மாநிலங்களிலிருந்து பல்வேறு வேலைகளுக்காக தமிழகம் வந்தவர்களைக் கணக்கெடுத்து இணைக்கப்பட வேண்டுமல்லவா? இந்தக் குறைகளை மத்திய, மாநில அரசுகள் முதலில் ஆராய வேண்டாமா?
  என்.எஸ்.முத்துகிருஷ்ணராஜா, 
  இராஜபாளையம்.

  உரிமை பறிப்பு?
  நாடு முழுவதுக்குமான ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தை நிறைவேற்றுவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இது குறித்த தெளிவான புரிதல் மக்களிடையே இல்லை. மேலும், இதை மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் திட்டமாகக் கருதி எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. மத்திய, மாநில அரசுகளுக்கிடையே கருத்தொற்றுமை ஏற்பட்டாலொழிய இந்தத் திட்டம் நிறைவேறுவது சாத்தியமில்லை. 
  பா.சிதம்பரநாதன், கருவேலன்குளம்.

  மானியங்களை முறைப்படுத்த...
  இந்தத் திட்டம் வரவேற்கக் கூடியது. ஏனெனில், இதன் மூலம் அரசின் ரேஷன் மானியங்கள் முறைப்படுத்தப்படும்; தேவைக்கேற்ப வீணாகாமல் வழங்கப்படும் என்பது உறுதி. நாட்டில் அமல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்கள், நாட்டின் வளர்ச்சிக்கான அடிப்படை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 
  மு.சம்சுல் ஹூதா, பெருநாழி.

  வேண்டாம்
  இந்தத் திட்டம் வெற்றி பெறாது. இது மாநிலங்களின் உரிமையைப் பாதிக்கும். திருமணமான பெண்கள் வேறு ஊருக்கோ வேறு மாநிலத்துக்கோ செல்வார்கள். மக்களிடம் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு ஆட்சியாளர்கள் சர்வாதிகார ஆட்சி புரிவதுபோல் தோன்றுகிறது. தேச ஒற்றுமையைக் கருதி இந்தத் திட்டத்தை உடனே கைவிடுவதுதான் மக்களின் நலனுக்கு ஏற்புடையதாகும். 
  சா.கண்ணபிரான், திருநெல்வேலி.

  ஆதார் போன்று...
  பான் அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றதே இது. வளர்ச்சி அடைந்த மின்னணு இயந்திரப் பயன்பாடு இந்தத் திட்டத்துக்கு உதவும். பணி நிமித்தம் வேறு நகரங்களுக்குக் குடிபெயரும் ஊழியர் மற்றும் வணிக நிலையத்தினருக்கு ஏற்படும் இன்னல்கள் இந்தத் திட்டம் மூலம் களையப்படும். எந்தத் திட்டமும் தொடக்கத்தில் சில சோதனைகளை ஏற்படுத்தினாலும் நாளடைவில் அதைச் சரி செய்து திட்டத்தை வெற்றி பெறச் செய்ய முடியும்.  வளரும் தேசத்துக்கு இது போன்ற திட்டங்கள் பயனுள்ளதுதான். 
  எஸ்.ஞானப்பிரான், சென்னை.

  தேவையில்லை
  இந்தத் திட்டம் தேவையற்றது. குடும்ப அட்டைக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்கள் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடுவதுடன், அதற்கான விலை நிர்ணயமும் வேறுபடுகிறது. குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், கேரளம் முதலிய மாநிலங்களில் குடும்ப அட்டைக்கு வழங்கப்படும் பிரதான உணவுப் பொருள் அரிசியாகும். அரிசிக்கு வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது; தமிழகத்தில் குடும்ப அட்டைக்கு இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது. அத்துடன் துவரம்பருப்பு, பாமாயில் வழங்கப்படுகிறது. இதனால்,ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டைத் திட்டம் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே, ஒரே நாடு என்பதை ஏற்கலாம். ஒரே குடும்ப அட்டை என்பது தேவையற்றது.
  பி.துரை, காட்பாடி.

   

  5-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு ஆகியவற்றுக்கும் பொதுத் தேர்வு முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உத்தரவிட்டுள்ளது சரியா?

  இதுபற்றி வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகளை பத்து வரிகளுக்கு மிகாமல் அஞ்சல் அட்டையில் எழுதி, வரும் திங்கள்கிழமைக்குள் கிடைக்குமாறு
  விவாத மேடை பகுதி, தினமணி, 
  29, இரண்டாவது பிரதான சாலை, 
  அம்பத்தூர் தொழிற்பேட்டை, 
  சென்னை - 600 058 
  என்ற முகவரிக்கு அனுப்பவும்.
  இமெயில்: edit.dinamani@gmail.com


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai