Enable Javscript for better performance
"5-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு ஆகியவற்றுக்கும் பொதுத் தேர்வு முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உத்தரவ- Dinamani

சுடச்சுட

  

  "5-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு ஆகியவற்றுக்கும் பொதுத் தேர்வு முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உத்தரவிட்டுள்ளது சரியா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

  By DIN  |   Published on : 25th September 2019 04:24 AM  |   அ+அ அ-   |    |  

   

  தேர்வு சரிதான்

  தரமான கல்வி என்பதன் முதல் நிலைதான் பொதுத் தேர்வு. பிள்ளைகளின் வளர்ப்பில் பெற்றோரும் ஆசிரியர்களும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். அப்போதுதான் நல்ல சமுதாயம் மலரும். அதற்கு 5 , 8-ஆம் வகுப்புகளுக்குப் பொது தேர்வு முறையே சரியான தீர்வாக அமையும். எனவே, பொதுத் தேர்வு அறிமுகத்தை வரவேற்போம். 
  ந.தமிழ்க் காவலன், திருவாரூர்.

  அவசியம் என்ன?

  மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்படும்  5, 8-ஆம் வகுப்புகளுக்கு  பொதுத் தேர்வை நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது தவறு. தமிழகத்தைப் பொருத்தவரை கிராமப்புற மாணவர்களை இது பெரிதும் பாதிக்கும். மத்திய அரசை ஆதரிக்கும் இந்த நடைமுறை தொடர்ந்தால் தாய்மொழிக் கல்விக்கும் ஆபத்து என்பதை தமிழக அரசு ஏன் உணரவில்லை?
  அ.கருப்பையா, பொன்னமராவதி.

  தேர்வு தேவைதான்
  5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு சரியே. தேர்வு இல்லையெனில் கற்றலில், கற்பித்தலில் அலட்சியம் ஏற்படும். கற்றலின் தரம் குறையும். தொடக்க, நடுநிலை கல்வி முடித்தவர் தவறின்றி எழுதப் படிக்கத் தெரியாமல் சான்றிதழ் பெற்று வருவது இழிவல்லவா? தமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை தேர்ச்சி தடையின்றி மூன்று ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தும் வகையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும், தேர்ச்சிக்கு குறைந்தபட்ச மதிப்பெண்களை நிர்ணயம் செய்யலாம். தேர்வே கூடாது என்பது சரியல்ல.
   கு.இராஜாராமன், சீர்காழி.

  தேவையில்லை
  சிறு வயதில் இந்த பொதுத் தேர்வு 
  மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பெற்றோர்கள், மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வே போதுமானது. தேர்வில் தோல்வி அடைந்து இடைநிற்றல் ஏற்பட வாய்ப்புண்டு. கல்விக்கு தடை ஏற்படும். இளம் வயதில் தோல்வி மனப்பான்மை ஏற்படும். எனவே,  பொதுத் தேர்வு தேவையில்லை.
  டி.டி.சந்திரன் அம்மாப்பேட்டை, தஞ்சாவூர்.

  உயர் கல்வி உயர...
  தேர்வு எழுதிய எல்லா மாணவர்களுக்கும் கட்டாயத் தேர்ச்சி என்றால் பொதுத் தேர்வு வீண்.  எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி கொடுத்து, பள்ளியில் கற்றனைத்து ஊறும் அறிவு ஏற்கெனவே எட்டாக்கனியாகி விட்டது.  பயிற்சி இல்லாதவர்களுக்காக நுழைவுத் தேர்வினை விட்டதால், பொறியியல் கல்வி வீழ்ந்து கெட்டது.  பயிற்சியற்ற மாணவர்களைக் கண்டறிந்து, திரும்பப் படிக்க வைக்கப் பயன்படுமாயின் பொதுத் தேர்வுகளை வரவேற்கலாம். பள்ளிக் கல்வி சிறப்புற்றால் மட்டுமே, உயர் கல்வி உயரும்; நாடு வளரும்.
  முனைவர் பா.இளங்கோ,கோயம்புத்தூர். 

  இடைநிற்றல் அதிகரிக்கும்
  மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல இலவசத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. எனினும், ஆண்டுதோறும் பள்ளி இடைநிற்றல் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை அறிமுகப்படுத்தினால் இடைநிற்றல் அதிகரித்து, ஆசிரியர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மாணவர் தரத்தை அவ்வப்போது கவனித்து, தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களையும் ஊக்குவித்தால் எதிர்பார்க்கும் பலன் நிச்சயம் கிடைக்கும்.
  தே.இரா.வீரராகவன், கும்பகோணம்.

  தேர்வு நல்லதுதான்
  5-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு ஐ.ஏ.எஸ். தேர்வு தரத்தில் பொதுத் தேர்வு நடத்தப் போவதில்லை. ஓராண்டு காலம் அவர்களுக்குக் கற்பிக்கப்பட்ட பாடங்களிலேயே வினாக்கள் கேட்கப்படும். ஏற்கெனவே 8-ஆம் வகுப்புக்கு மாவட்ட அளவில் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது; அது மாநில அளவில் விரிவுபடுத்தப்படுகிறது. இந்தத் தேர்வு நடத்துவதன் மூலம் 5, 8-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஏதோ தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டதைப் போன்ற மாயையை உருவாக்குவது சரியல்ல.
  சு.இராஜரத்தினம், இராஜாக்கமங்கலம்.

  கல்வித் தரம் உயராது
  பல ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களுக்கு தேர்வு வைத்து தேர்ச்சியை அறிவித்து வந்ததால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாக இருந்தது. இதனைத் தவிர்ப்பதற்காக கொண்டுவரப்பட்டதுதான் 8-ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்பது. தற்போது 5, 8-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு என்பதால் நாம் மீண்டும் 20, 25 ஆண்டுகள் பின்னோக்கிப் பயணிக்கிறோம். இதனால் பாதிப்புக்குள்ளாகப் போவது கல்வியறிவு இல்லாத ஏழை பெற்றோர்களின் குழந்தைகளே. பொதுத் தேர்வு வைப்பதாலேயே கல்வித் தரம் உயர்ந்து விடாது. கல்வி என்பது மாணவர்களை போட்டித் தேர்வுக்கு தயார்படுத்துவது அல்ல. மாறாக,  நடத்தை மாற்றத்தை ஏற்படுத்தி சிறந்த குடிமகன்களை உருவாக்குவதே கல்வி என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து செயல்பட வேண்டும்.
  ப.வெங்கடாசலம், கிருஷ்ணகிரி.

  காலத்தின் கட்டாயம்
  சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் பள்ளிகளில், 8-ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களே உயர் வகுப்புக்கு அனுமதிக்கப்பட்டனர். எனவே 8-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு என்பது புதிதல்ல. பள்ளிக் குழந்தைகளை ஒழுக்கசீலர்களாக உருவாக்குவது பெற்றோர், ஆசிரியர், அரசு ஆகியோரின் கூட்டு முயற்சி. மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்துவது ஆசிரியர்களின் கடமை. எனவே, 5, 8-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்துவது காலத்தின்கட்டாயம்.
  த.நாகராஜன், சிவகாசி.

  அச்சத்தை உண்டாக்கும்
  இப்போதுள்ள மெக்காலே கல்வி முறையானது ஆங்கிலேயர் ஆட்சிக்கு அதிகாரிகளையும் குமாஸ்தாக்களையும் உருவாக்கவே அறிமுகமானது. முன்னேறிய நாடுகளின் கல்விச் சூழல் குழந்தைகளை ஐந்து வயதுக்கு மேல் பள்ளிக்கு அனுப்புவதும், பத்து வயதுக்கு மேல் தேர்வு என்பதுமாக இருக்கிறது. இங்கே உள்ள கல்வியாளர்கள் இதைச் சொல்லிச் சொல்லி மாய்கிறார்களேயொழிய, அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. பள்ளிக்குச் செல்வதை பெரும் அவஸ்தையாக குழந்தைகள் கருதும் இன்றைய சூழலில் இந்தத் தேர்வு முறை மேலும் அவர்களை சோர்வடையச் செய்து, கல்வி குறித்து அச்சத்தை அவர்களுக்கு உண்டாக்கும். 
  துடுப்பதி வெங்கண்ணா, பெருந்துறை.

  நல்ல முடிவு
  5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது;  அதை ஏற்று தமிழக அரசும் பொதுத் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளது சரிதான். பொதுத் தேர்வு என்றால்தான் அக்கறையுடன் மாணவர்கள் படிப்பார்கள். 
  பி.துரை, காட்பாடி.

  தரமான கல்வி கிடைக்க...
  பொதுத் தேர்வு முறையை 5, 8-ஆம் வகுப்புக்கும் அறிமுகப்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது  சரிதான். அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படவேண்டுமெனில் இது போன்ற நடவடிக்கைகள் அவசியம். ஒரே பாடத்திட்டம், ஒரே, கேள்வித்தாள்  இருக்கும்போதுதான்  அனைவருக்கும்  தரமான கல்வி கிடைப்பது உறுதி அளிக்கப்படும்.
  சு. தர்ஷன் அபிஷ், பழைய காயல்.

  ஆர்வத்தைத் தூண்டினால்...
  கல்வியின் தரம் குறைந்து காணப்படுவதற்கு கற்றலில் ஆர்வம் இல்லாததே காரணம். அதற்கு சமூகமும் ஆசிரியர்களும்தான் பொறுப்பு. மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பாடத்திட்டம் அமைய வேண்டும். இதுவே நிரந்தரத் தீர்வாக அமையும். பொதுத் தேர்வு பயமுறுத்தி படிக்க வைக்கும்; கற்றுக் கொடுக்காது.
  வெ.பாலமுருகன், சென்னை.

  என்ன நியாயம்?
  புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு இன்னமும் வரவில்லை. 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை தமிழக அரசு  அறிவித்துள்ளது பெற்றோரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாநில அளவில் 10 வயது குழந்தைக்கு தேர்வு நடத்துவது என்ன நியாயம்? உளவியல் ரீதியாக குழந்தைகள் பாதிப்படைவார்கள்.  
  எம்.ராஜா, திருச்சி.

  நெஞ்சம் நடுங்குகிறது
  ஆரம்பக் கல்வி கட்டாயமாக்கப்பட்ட பிறகுதான் குழந்தைகளை பலர்  பள்ளிக்கே அனுப்பினர். அதுவும் மதிய உணவு வழங்கித்தான் குழந்தைகளை அரசு படிக்க வைக்க முடிந்தது. எழுத்தறிவு பெற்ற ஒரு சமூகம் இப்போதுதான் மலரத் தொடங்கியுள்ளது. இந்தத் தலைமுறையில்தான் முதல் பட்டதாரிகளைப் பல குடும்பங்கள் பெற்றிருக்கின்றன. இந்த நிலையில் ஆரம்பக் கல்விக்கே பொதுத் தேர்வு எனும் சுவர் எழுப்பும் செயலை யாரும் செய்ய மாட்டார்கள். குழந்தைகளின் மனதில் அச்சத்தை விதைக்கவா கல்வி?  தர நிர்ணயம் என்ற பெயரால் பின்தங்கிய, அடித்தட்டு, கிராமப்புற மாணவர்களை படிக்கவிடாமல் செய்வதற்கா ஒரு கல்விக் கொள்கை? இதன் மூலம் அவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பும் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும். 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்றால்  நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது. 
  பிருந்தா சாரதி, சென்னை. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai