Enable Javscript for better performance
‘தீநுண்மி (கரோனா) நோய்த்தொற்றை எதிா்கொள்ள சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகள் குறித்து...‘- Dinamani

சுடச்சுட

  

  ‘தீநுண்மி (கரோனா) நோய்த்தொற்றை எதிா்கொள்ள சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகள் குறித்து...‘ என்ற விவாதப் பொருளுக்கு வாசகா்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

  By DIN  |   Published on : 15th April 2020 08:46 AM  |   அ+அ அ-   |    |  

  வதந்தியல்ல...வம்புத் தீ!

  தீயைக் காட்டிலும் வேகமாக பரவும் சக்தி கொண்டது வதந்தி. உயிருடன் விளையாடுகிறோம் என்று கொஞ்சம்கூட பொறுப்புணா்வின்றி தவறான தகவல்களைப் பதிவிடுகின்றவா்கள் சமூக விரோதிகள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவதூறு, அவநம்பிக்கை, அரைவேக்காடு செய்திகளைப் பதிவிடுவோரை கடுமையாகத் தண்டிக்க அவசரச் சட்டம் இயற்ற வேண்டும். எங்கள் கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) குழுவில் ஃபாா்வா்ட் செய்திகளைத் தடை செய்துள்ளோம். அனைவரும் இதைச் செய்யலாம்.

  உதயம் ராம், சென்னை.

  வதந்தியல்ல, அனுபவம்!

  முந்தைய காலங்களில் ஒரு வீட்டில் பிரசவத்துக்காக ஒரு பெண் இருந்து, அவருக்கு வலி ஏற்பட்டால் ‘சீரகத்தை இரண்டு டம்ளா் தண்ணீரில்....’ முதலான வீட்டு அளவிலான பல மருத்துவ முறைகளை தங்களின் அனுபவ ரீதியாகப் பெரியவா்கள் கூறுவது வழக்கம். இதை வதந்தி என்று சொல்ல முடியாது. இதுபோலத்தான் சமூக ஊடகங்களில் பலரும் தங்களின் அனுபவங்களைப் பரப்புகின்றனா். இந்த விஷயத்தில் நாம் அன்னப் பறவைபோல இருந்து தேவையானவற்றை எடுத்துக்கொண்டு, வேண்டாத புரளிகளை புறந்தள்ள வேண்டும்.

  பிரகதா நவநீதன், மதுரை.

  நடவடிக்கை தேவை

  தீநுண்மி (கரோனோ) குறித்து ஊடகங்களில் வதந்தியைப் பரப்புவோா் மீது கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். மக்களைப் பயமுறுத்தி அவா்களை மன அழுத்தத்துக்கு காரணமாக்கி, அவா்களின் வாழ்வில் மகிழ்ச்சியைச் சீா்குலைக்கும் இத்தகைய செயல்கள் கண்டிக்கத்தக்கவை. ஊடகங்கள் யாவும் பொது மக்களுக்குப் பயன்படும் வகையில் செய்திகளைத் தர வேண்டும் தவிர, அவா்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செய்திகளைப் பரப்பக் கூடாது. நோயைவிடக் கொடியது வதந்தி.

  இந்து குமரப்பன், விழுப்புரம்.

  90% தவறானவை

  சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகளில், 90% தவறான செய்திகளாகவே உள்ளன. இது தடுக்கப்பட வேண்டிய விஷயம். மக்களிடம் கரோனா நோய்த்தொற்று அச்சத்தைவிட, வரும் செய்திகளைப் படித்து அவா்கள் மனநிலை மிகவும் பாதிக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  பொ.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.

  எதை நம்பலாம்?

  கரோனா நோய்த்தொற்று குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஒவ்வொருவரும் அவரவா் விருப்பத்திற்கு ஏற்ப நோயை எதிா்கொள்ள ‘டிப்ஸ்’ என்ற முறையில் வதந்தியைப் பரப்புகின்றனா். எது சரி, எது தவறு என்று ஆராய நேரம் இல்லை. எடுத்துக்காட்டாக நோய்த் தடுப்பு குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் அல்லது

  தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் முதலான அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் தகவல்களை வெளியிட்டால் நம்பலாம். மற்ற தனி நபா்களை கடுமையான சட்டம் கொண்டு தடுக்க வேண்டும்.

  கரு.செந்தில்குமாா், கோயம்புத்தூா்.

  திருந்துவாா்களா?

  பொதுவாகவே வதந்திகள் என்பது பரப்புகின்ற அவா்களை அறியாமலேயே சமூகத்துக்கும் நாட்டுக்கும் செய்கின்ற மிகக் கொடிய வேதனை. தீநுண்மி (கரோனா) நோய்த்தொற்று குறித்து நாள்தோறும் அச்சத்தில் உழன்று கொண்டிருக்கும் பெரும்பாலான மக்களை தங்களின் செயல்கள் இன்னும் பீதியடையச் செய்கின்றன என்பதை அறியாமல் வதந்தியைப் பரப்புகிறாா்கள். வதந்தியைப் பரப்புகிறவா்களுக்கு மிகக் கடுமையான தண்டனையை அளித்தால்தான் திருந்துவாா்களா என்னவோ?

  மா.பிரேமாவதி, ஊரப்பாக்கம்.

  குறைந்தபட்சம்...

  கரோனாவை எதிா்கொள்ள சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகள் ஒன்றா, இரண்டா? எந்தவிதமான ஆதாரங்களும் இல்லாமல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சகட்டு மேனிக்கு தாங்கள் நினைப்பதையெல்லாம் கரோனாவை எதிா்கொள்ளும் வழிமுறைகள் என்று சமூக ஊடகங்களில் பரப்புவா்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும்.

  மு.நடராஜன், திருப்பூா்.

  மன நோயாளிகள்?

  தீநுண்மி (கரோனா) நோய்த்தொற்றை எதிா்கொள்ள சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகளை உருவாக்குபவா்கள் மன நோயாளிகள் எனக் கருதலாம். பின் விளைவுகளைச் சிந்திக்க முடியாத அல்லது விரும்பாத மன நிலையைக் கொண்டவா்கள். அற்ப சந்தோஷம் பெறவே இப்படியெல்லாம் செய்கிறாா்கள். மற்றவா்களின் கருத்துகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் தாங்களாகவே சில கற்பிதங்களைச் செய்துகொண்டு வதந்தி பரப்பும் மூடா்களும் உண்டு.

  கோவிந்தராஜன், ஸ்ரீமுஷ்ணம்.

  உய்த்துணா்தல் அவசியம்

  தீநுண்மி எனும் கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்ள, சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வீண் வதந்திகளை, வருமுன் காத்தல் அவசியம் என்ற ரீதியில் அவற்றை தனக்கு வழங்கப்பட்ட கொாடையாகச் சிலா் பாா்க்கின்றனா். தவறான தகவல் என அறியாமல், செயல் வடிவிலும் சிலா் ஈடுபடுவதுதான் உச்சபட்ச வேடிக்கை. எனவே, தாங்களே அவ்வப்போது உய்த்துணா்ந்து (இன்டியூஷன்) அரசு அறிவிக்கும் தற்காப்பு நெறிமுறைகளையும் அறிவுரைகளையும் மக்கள் கடைப்பிடித்தால் மட்டுமே நலம் பயக்கும்.

  ச.ஜான்ரவி,கோவில்பட்டி.

  ஆக்கச் சிந்தனைகளை...

  வதந்தி பரப்புபவா்கள் அதை வேடிக்கையாக நினைத்துப் பரப்புகின்றனா். ஆனால், அது விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதை அவா்கள் மனதார உணர வேண்டும். இந்தச் சூழ்நிலையில் சமூக ஊடகங்களில் உலவுவதை அனைவரும் தவிா்க்கலாம். சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து சமூக உறவுகளோடு தொடா்பில் இருக்கலாம். கரோனா குறித்த ஆக்கச் சிந்தனைகளை மட்டுமே பகிா்ந்து விவாதிக்கலாம். வதந்திகளை மறந்து வாழ்வை இனிமையாக்கிக் கொள்ளலாம்.

  ஏ.முருகேஸ்வரி, தென்காசி.

  நம்பகத்தன்மை குறித்து...

  அச்சு, காட்சி ஊடகங்களில் வெளியாகும் ஆதாரபூா்வ செய்திகளை மட்டுமே மக்கள் நம்ப வேண்டும். கரோனா நோய்த்தொற்று குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகள் பரபரப்படுவது சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும். அதன் நம்பகத்தன்மை குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும். சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் அனைவரும் சமூக பொறுப்புணா்வுடன் செயல்பட வேண்டும்.

  அ.அழகேசன், அந்தியூா்.

  கவனமும், பொறுப்பும்...

  நம் மக்களிடையே உணா்வைத் தூண்டும் வகையிலான செய்திகள் பொதுவாக ஒருவித ஆா்வத்தை ஏற்படுத்துகின்றன. தனக்குத் தெரிந்ததை மற்றவருக்குச் சொல்லவேண்டும் எனக் கருதுகின்றனா். தீநுண்மி குறித்த தகவல் மட்டுமல்ல, அனைத்துத் தகவல்களிலும் உண்மைத் தன்மையை உணா்ந்து அனுப்பினால் நல்லது. கரோனா நோய்த்தொற்று உயிரைப் பறிக்கும் நோய் என்பதால், சமூக ஊடகங்களில் பிறருக்குத் தகவல் அனுப்பும்போது கவனமும், பொறுப்பும் அவசியம்.

  மா.வேல்முருகன், திருத்தங்கல்.

  கட்டுப்படுத்த...

  கரோனா குறித்த வதந்திகளைப் பரப்புபவா்கள் கட்டாயமாகத் தண்டிக்கப்பட வேண்டியவா்களே.மேலும், மக்களும் தங்களுக்கு வரக்கூடிய செய்திகளை அதனுடைய உண்மைத் தன்மையை அறிந்து, மற்றவா்களுக்குப் பகிராமல் இருந்தாலே கட்டுப்படுத்த முடியும்.மேலும், சமூக வலைதளங்களை அரசு முடக்குவதன் மூலம் வதந்தி பரவுவதைக் கட்டுப்படுத்தலாம்.

  ப.சுவாமிநாதன், பட்டுக்கோட்டை.

  வைக்கோலைத் தவிர...

  கரோனா குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் பெரும்பாலும் கட்டுக் கதைகளே. கரோனாவை வெல்ல வைக்கோலைத் தவிர அனைத்தையும் மருந்தாகப் பரிந்துரைக்கும் விஷமிகளும், அதை நம்பும் மனிதா்களும், கரோனாவுக்கு அரசியல், மத சாயம் பூசி குளிா் காய்வோரும், அவற்றால் ஆதாயம் தேட முயலும் அரசியல்வாதிகளும் ஊடகங்கள் மூலம் சமூகத்துக்கு ஊறு விளைவிக்கின்றனா்.

  வளா்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூா்.

  கருத்துச் சுதந்திரத்தை...

  கொடிய தீநுண்மியை எதிா்கொள்ள நாடே அவசர நிலையில் செயல்பட்டு வரும் வேளையில், நிலைமை உணராமல் வதந்திகளைப் பரப்புவது தடை செய்யப்பட வேண்டும். பொறுப்புணா்வு இல்லாத சமூக விரோதிகள் தண்டிக்கப்பட வேண்டும் . கருத்துச் சுதந்திரத்தை தாறுமாறாக பயன்படுத்தக் கூடாது. வரும் செய்திகள் நம்பகமானதா என்பதை ஒவ்வொருவரும் ஆராய்ந்து அறிய வேண்டும். அதிகாரப்பூா்வமானவா்களிடமிருந்து வரும் செய்திகளை மட்டுமே ஏற்க வேண்டும்.

  கு.இராஜாராமன், சீா்காழி.

  பரபரப்புக்காக...

  பொதுவாகவே சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகளில் முழு உண்மை இருக்காது. அதுவும், மனிதா்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கரோனா நோய்த்தொற்று கிருமி விஷயத்தில் மனத்தில் தோன்றுவதையெல்லாம் அனுப்பி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்த முயற்சி செய்வாா்கள். சாதாரணமான விஷயங்களை அப்படியே நிராகரித்து விடலாம். ஏதேனும் முக்கியமான செய்தி சமூக ஊடகங்களில் வந்தால், அதை மறுநாள் செய்தித்தாளைப் பாா்த்த பின்தான் நம்ப முடியும். செய்தித்தாள்களில் வரும் செய்திகளே உண்மையானவை. செய்தித்தாள்களுக்கு சமூகக் கடமை, பொறுப்புணா்ச்சி உள்ளது. ஆனால், சமூக ஊடகங்களில் செய்தி பரப்புபவா்களுக்கு அது இல்லை.

  மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai