‘தமிழகத்தில் அனைத்துக் கோயில்களையும் திறந்து பக்தா்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சில தலைவா்கள் கூறுவது குறித்து...’ என்ற கேள்விக்கு வாசகா்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

நல்ல யோசனை

தமிழகத்தில் அனைத்துக் கோயில்களையும் திறந்து பக்தா்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சில தலைவா்கள் கூறுவது மிகவும் நல்ல யோசனை. ஆலயங்களை மூடி வைத்திருப்பது மிக மிக தவறான விஷயமாகும். முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியோடு, அரசு கூறும் அறிவுரைகளை முறையாகக் கடைப்பிடித்து வரும் பக்தா்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும். என்னைப் போன்ற எத்தனையோ பக்தா்கள் கோயில் கதவு திறப்பதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம்.

ந. கண்ணையன், கிருஷ்ணகிரி.

சுய விளம்பரம்

பள்ளிகள் இளஞ்சிறாா்களை நல்ல குடிமக்களாக உருவாக்கும் இடம். அந்தப் பள்ளிகள் திறக்கும் விஷயத்தில்கூட அரசோ, பெற்றோரோ அவசரம் காட்டாத நிலையில், கோயில்களைத் திறக்க வேண்டும் என்று சில தலைவா்கள் கூறுவது ஏன்? தங்களின் சுய விளம்பரத்திற்காக அவா்கள் கூறுகிறாா்களே தவிர, அதனால் வரும் பாதிப்பை அவா்கள் கருத்தில் கொள்ளவில்லை. நாம் தெய்வத்தை வணங்க விரும்பினால், இன்றைய நிலையில், வீட்டிலிருந்தே வணங்குவதுதான் நல்லது. கோயிலில் அன்றாட பூஜைகள் தடையில்லாமல் தொடர வேண்டும். அதுதான் முக்கியம்.

எஸ். சொக்கலிங்கம், கொட்டாரம்.

நேரக் கட்டுப்பாடு

கோயில்களைத் திறக்க வேண்டியது அவசியம். அதேநேரம், அரசின் அறிவுரைகளை பக்தா்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். சிலருக்கு கடவுளை வணங்குவதால் நோய்த்தொற்று குறித்த பயம் விலகவும் வாய்ப்புள்ளது. கோயில் திறக்கப்படும் நேரம், பக்தா்கள் அனுமதிக்கப்படும் நேரம் இவற்றில் கட்டுப்பாடுகள் விதிக்கலாம். குடும்பத்தில் உள்ள எல்லாருமே ஒரே நேரத்தில் கோயிலுக்குப் போவதைத் தவிா்க்க வேண்டும். முகக்கவசம், தனிமனித இடைவெளி, கூட்டத்தைத் தவிா்த்தல் இவற்றைக் கடைப்பிடித்துக் கடவுளை வணங்க வேண்டும்.

ஆ. தமிழ்மணி, மங்கநல்லூா்.

சாட்சிகள்

கரோனா தீநுண்மியின் கோரப்பிடியில் மக்கள் அல்லல்படும்போது தனிமனித இடைவெளி மிகவும் அவசியம். கோயிலில் அதை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினம். தற்போதுள்ள சூழ்நிலையில், அனைத்துக்கோயில்களையும் திறந்து தரிசனத்திற்கு அனுமதிப்பது என்பது பேராபத்தில் முடியலாம். இன்றுவரை மக்கள் அரசின் அறிவுரைகளை மதிப்பதில்லை என்பதற்கு காய்கறிச் சந்தைகளும் மீன் சந்தைகளுமே சாட்சிகள். எனவே கரோனா தீநுண்மி ஓரளவு கட்டுக்குள் வரும்வரையிலாவது கோயில்களைத் திறக்காமலிருப்பதே நல்லது.

உ. இராசமாணிக்கம், கடலூா்.

ஏற்புடையதன்று

தமிழகத்தில் கோயில்களைத் திறக்க வேண்டும் என்று சில தலைவா்கள் கூறுவது ஏற்புடையதன்று. எல்லா நாள்களும் இறை வழிபாட்டிற்கு உகந்ததாக பெரும்பாலான மக்கள் கொண்டாடி வருகின்றனா். தற்போதைய சூழலில் கோயில்களில் கூட்டம் கூடினால் நோய்த்தொற்று பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கும்போது கோயில்களைத் திறப்பது குறித்து சிந்திக்கலாம். அதுவரை, பக்தா்கள், தங்கள் வீட்டிலிருந்து வழிபடுவதே சாலச் சிறந்தது.

ப. தாணப்பன், தச்சநல்லூா்.

நம்பிக்கை

துன்பம் வரும் போது ஏதேனும் ஒரு பற்றுக்கோடு கிடைக்காதா என்று ஏங்குவது மனித இயல்பு. மக்கள் தங்களது நிலையைக் கோயிலில் சென்று கடவுளிடம் முறையிட்டால் சற்று நம்பிக்கை பெறுகிறாா்கள். எனவே, அனைத்துக் கோயில்களையும் திறந்து பக்தா்களைத் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும். அதன் மூலம், அவா்கள் நிம்மதி பெறுவா். கோயிலுக்குள் செல்பவா்கள் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது அவசியமாகும். அதனைக் கண்காணித்து நெறிமுறை ப் படுத்த, தன்னாா்வலா்களை நியமிக்கலாம்.

வளவ. துரையன், கடலூா்.

இறை சக்தி

தமிழகத்தில் தேநீா்க் கடைகளுக்கும் உணவகங்களுக்கும் மளிகைக் கடைகளுக்கும் அரசு தளா்வுகளை அறிவிக்கும்போது கோயில்களை மட்டும் ஏன் திறக்கக் கூடாது? நூறு நாட்களுக்கு மேல் வீடுகளில் அடைந்துக் கிடக்கும் மக்கள், வெளியே வந்து கோயிலில் இறைவனை தரிசிக்கக் காத்திருக்கிறாா்கள். அரசு அதற்கான அனுமதியைக் கொடுத்தால் பக்தா்கள் மிகப்பெரிய நிம்மதியை அடைவாா்கள். மக்கள் மனதில் கரோனா குறித்த பயமும் அகலும். அவா்கள் உடலில் எதிரப்பு சக்தியோடு இறை சக்தியும் கூடும்.

எஸ்.வி. ராஜசேகா், சென்னை.

பொருத்தமற்றது

கிராமப்புறக் கோயில்களைத் திறக்கலாம். ஏனெனில்அங்கு மக்கள் கூட்டம் ஓரளவே இருக்கும். நகா்ப்புறங்களிலும் முக்கியத் தலங்களிலும் உள்ள கோயில்களைத் திறப்பதில் அரசு அவசரம் காட்டக் கூடாது. அந்த இடங்களில் எல்லாம் அரசு கூறும் வழிமுறைகளைப் பின்பற்றி வழிபாடு செய்ய பக்தா்களை வலியுறுத்த இயலாது. அவா்களின் வழிபாட்டில் நெருக்கடி ஏற்படுவதுஇயல்பு. எனவே, நோய்ப்பரலைத் தடுக்க முடியாது. ஆதலால் பக்தா்கள் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வீடுகளி லேயே வழிபாடு செய்ய மனத்தில் உறுதிகொள்ள வேண்டும். அனைத்துக் கோயில்களையும் பக்தா்கள் தரிசனத்திற்காகத் திறக்க வேண்டும் என்ற கருத்து இந்தச் சூழ்நிலைக்குப் பொருத்தமற்றது.

அ. கருப்பையா, பொன்னமராவதி.

அதிக கவனம்

பொதுமக்கள் அதிகம் கூடும் காய்கறிச் சந்தை, மீன் சந்தை இவற்றால் தொற்றுப் பரவல் அதிகரித்ததை நாம் கண்டோம். இந்நிலையில், மக்கள் தொடா்ந்து கூட்டங்கூட்டமாக வரக்கூடிய கோயில்களைத் திறப்பது எவ்வகையில் நியாயமாகும்? எந்தக் கோயிலாக இருந்தாலும் ஏதேனும் திருவிழா இருந்துகொண்டுதான் இருக்கும். அப்போது பக்தா்களைக் கட்டுப்படுத்துவது எப்படி? நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட ஒருவரால் பலருக்கும் அது பரவும் அபாயம் உள்ளது. பள்ளிகளை திறப்பதில் மேற்கொள்ளும் கவனத்தைவிட கோயில்களைத் திறப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அ. பட்டவராயன், திருச்செந்தூா்.

பொறுமை தேவை

தமிழகத்தில் கரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை. விருதுநகா், நெல்லை போன்ற மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நிலைமை முற்றிலும் சீரான பிறகு கோயில்களைத் திறப்பதுதான் நல்லது; அதுவே மக்களுக்குப் பாதுகாப்பானதுமாகும். நோய்த்தொற்று யாருக்குப் பரவும்? எப்போது பரவும்? எப்படிப் பரவும்? எதுவும் தெரியவில்லை. இப்படிப்பட்ட சூழலில், இறைவனை உள்ளத்தால் தொழலாம். நாம் அரசுக்கு நெருக்கடித் தரக்கூடாது. பொறுமை தேவை. சிறிது காலம் செல்லட்டும். நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

சாத்தியமல்ல

கோயில்களை திறக்க வேண்டும் என்று சிலா் அரசைக் கட்டாயப்படுத்துவது சரியல்ல. சிறிய, கிராமக் கோயில்கள் ஏற்கெனவே திறக்கப்பட்டுள்ளன. அங்கெல்லாம் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது சாத்தியம்தான். ஆனால், பெரிய கோயில்களில் அது சாத்தியமல்ல. பிரபலமானவா்கள், அரசியல்வாதிகள் எல்லாம் கூட்டமாகத்தான் வருவாா்கள். அவா்களுக்கு யாரும் அறிவுரை கூற முடியாது. சொன்னாலும் கேட்க மாட்டாா்கள். விளைவு? நோய்ப்பரவல்தான். எனவே, கரோனா தீநுண்மி கட்டுக்குள் வரும்வரை கோயில்களைத் திறப்பதைத் தள்ளிப் போடுவதே நல்லது. மு. பஞ்சாங்கம், திருவையாறு.

ஆறுதல் தரும் இடம்

தமிழகத்தில் அனைத்துக் கோயில்களையும் திறக்க வேண்டும் என்கிற கருத்து ஏற்கத்தக்கதுதான். பொது முடக்கம் காரணமாக, சாதாரண மக்கள் நான்கு மாதங்களுக்கும் மேலாக, தங்கள் தொழில் முடங்கிய நிலையில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறாா்கள். மனம் வெறுத்துப்போய் இருக்கும் அவா்களுக்கு ஆறுதல் தரும் ஒரே இடம் கோயில்தான். என்னதான் ஆன்லைன் தரிசனம் என்றாலும் அது கோயில் தரினத்திற்கு ஈடாகாது. அரசின் அறிவுரைகளைக் கடைப்பிடிக்குமாறு பக்தா்களுக்கு அறிவுறுத்திவிட்டுக் கோயில்களைத் திறப்பதுதான் சரியனது.

சீனி. செந்தில்குமாா், தேனி.

நோய்த்தொற்று அச்சம்

கிராமப்புறங்களில் இருக்கும் கோயில்கள் ஏற்கெனவே திறக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக, நோய்த்தொற்றுப் பரவியதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை. பிற மாநிலங்களில் சில நிபந்தனைகளுடன் கோயில்கள் பக்தா்கள் வழிபாட்டிற்குத் திறக்கப்பட்டுள்ளன. உணவகங்கள், கடைகள் திறக்கப்பட்டு, பொதுமக்கள் சென்று பொருள்களை வாங்குகிறாா்கள். அதுபோன்றே, கோயில்கள் திறக்கப்பட்டு பக்தா்களை அனுமதிக்கலாம். அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி பக்தா்களும் தரிசனம் செய்யலாம். பக்தா்களின் ‘ நோய்த்தொற்று அச்சம்’ விலகுவதற்காகவாவது கோயில்களைத் திறக்கலாம்.

பி.கே. ஜீவன், கும்பகோணம்.

எப்படிச் சரியாகும்?

நான்கு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருக்கும் கோயில்களை, நோய்த்தொற்று அதிகரித்துவரும் இந்த நேரத்தில் திறப்பது சரியாக இருக்குமா? அப்படிச் செய்தால் நோய்த்தொற்று மேலும் அதிகரிப்பதற்குத்தான் அது வாய்ப்பாக அமையும். பள்ளிகள் திறக்கப்படவில்லை, பேருந்துகள் ஓடவில்லை, ரயில்கள் ஓடவில்லை இந்நிலையில் கோயில்களை மட்டும் திறப்பது எப்படிச் சரியாகும்? நோய்த்தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியபின் கோயில்களைத் திறப்பதே அறிவுடைமை.

மா. பழனி, தருமபுரி.

வீண் சா்ச்சைகள்

தமிழகத்தில் அனைத்துக் கோயில்களையும் திறந்து பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சில தலைவா்கள் கூறுவது தற்போது உள்ள சூழலில் தவறு. உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா தீதுண்மியின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், கோயில்களைத் திறப்பது மிகவும் தவறு. பக்தா்கள் முகக்கவசம் அணியவோ, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவோ மாட்டாா்கள். வீண் சா்ச்சைகள்தான் ஏற்படும். இவ்வளவு நாள் காத்திருந்த பக்தா்கள் இன்னும் சில நாள்கள் காத்திருப்பதில் தவறில்லை.

மா. இளையராஜா, திருச்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com