திமுகவில் உருவாகியுள்ள இரட்டைப் பதவி பிரச்னை குறித்து என்ன கருதுகிறீர்கள்' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

திமுகவில் உருவாகியுள்ள இரட்டைப் பதவி பிரச்னை குறித்து என்ன கருதுகிறீர்கள்

சரியான முறை எது?
திமுகவில் உருவாகியுள்ள இரட்டைப் பதவி பிரச்னையில் ஒருவருக்கு ஒரு பதவி என்பதுதான் சரியான முறை. அப்போதுதான் ஒரு பதவியை செம்மையாகச் செய்ய முடியும். அது மட்டுமின்றி பல நபர்களுக்கு பதவிகள் கிடைக்க வழி ஏற்படும். எனவே, ஒருவருக்கு ஒரு பதவி என்பது திமுகவில் மட்டுமல்ல, எல்லா அரசியல் கட்சியினரும் கடைப்பிடிக்க வேண்டிய முறையாகும். தகுதியான நபர்களுக்குச் சரியான நேரத்தில் ஒரு பதவியை அளிப்பது என்பது, கட்சிக்கு மட்டுமல்லாது தனி நபர்களுக்கும் பலன் அளிக்கும்.
ந.கண்ணையன், கிருஷ்ணகிரி.

நியாயம்தானா?
திமுக இளைஞரணி உறுப்பினரின் வயது வரம்பு 35 என்றிருந்தபோது, 50 வயது கடந்த மு.க.ஸ்டாலின்தான் இளைஞரணி தலைவர். கூடவே, துணை முதல்வர், பிறகு மேயர், பொருளாளர் என இரட்டைப் பதவிகள். இன்று தலைவர், பொதுச் செயலாளர் அதிகாரங்களை ஒருசேர எடுத்துக் கொண்டு, கட்சி அறக்கட்டளையிலும் பதவி. இந்த நிலையில் கட்சியினருக்கு மட்டும் இரட்டைப் பதவி கிடையாதென கே.என்.நேரு, டி.ஆர்.பாலு என மூத்த தலைவர்களை அவமதிப்பது என்ன நியாயம்?.
அ.யாழினிபர்வதம், சென்னை.

பிரச்னை இல்லை
இது திமுகவின் நிர்வாக வசதிக்காக ஏற்படுத்தப்பட்டது. டி.ஆர்.பாலுவிடமிருந்து கே.என் நேருவுக்கு பதவி மாற்றப்பட்டுள்ளது. இதில் விதிமுறை இல்லை. திருச்சி மாவட்டத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நேரு, ஊராட்சித் தேர்தலில் மாவட்டத்தில் அதிரடி புரட்சியை ஏற்படுத்தியதால், கட்சி அளவில் பதவியை வழங்கியிருக்கிறது திமுக. இதிலே எந்தப் பிரச்னையும் இல்லை. திமுகவில் மட்டுமல்ல, பல கட்சிகளில் இரட்டைப் பதவி குறித்த சிந்தனை இருக்கிறது. திமுகவில் இப்போது உருவாகியுள்ள இரட்டைப் பதவி பிரச்னை கட்சிக்கு வலிமை தரும் என்பதே பலரின் கருத்து. 
ந.சண்முகம், திருவண்ணாமலை.

களப்பணி ஆற்றுவோரை...
பெரியாரின் தி.க.-விலிருந்து கருத்து வேறுபாடு காரணமாக திமுக பிரிந்தபோது, கட்சிக்கு தலைவர் பதவி உருவாக்கப் பெறவில்லை. கால சுழற்சியில் தலைவர் பதவியும், மாவட்டங்கள் வாக்கு வங்கிக்காக பிரிக்கப்பட்டு, செயலாளர்கள் பதவியும் உருவாக்கப்பட்டன. பதவிகளின் எண்ணிக்கைப் பெருக்கம், கட்சியின் களப் பணிகளைவிட மேலாண்மைப் பணிகளை அதிகரிக்கச் செய்யும். திமுகவில் தற்போதுள்ள இரட்டைப் பதவி முறை, சிறிய அளவிலான உழைப்பவர்களையும் புறக்கணித்தது போல ஆகும். எனவே, கட்சிப் பதவிகள் 
பரவலாக்கப்பட்டு, களப் பணியாற்றுபவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இதுவே கட்சிக்கு வலிமையும், பலமும் சேர்க்கும்.
த.நாகராஜன், சிவகாசி.

பாகுபாடு கூடாது
திமுகவில் உருவாகியுள்ள "இரட்டைப் பதவி' பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வு தொடங்கியுள்ளது. ஒருவருக்கு ஒரு பதவிதான் என்பது நல்ல விஷயம். இதனால் தகுதியும், திறமையும் வாய்ந்த இன்னும் சிலருக்குப் பதவிகள் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் உருவாகும். இது வரவேற்கக்கூடிய விஷயம். திமுகவுக்கு இது நல்லது. இந்த ஒற்றைப் பதவி என்பது, அனைத்து மட்டங்களில் பதவிகளில் உள்ளவர்களுக்கும் பொருந்த வேண்டும். இதில் பாகுபாடு இருக்கக் கூடாது. இது போன்ற நடவடிக்கைகளை திமுக மேற்கொள்வது அந்தக் கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது.
பொன். கருணாநிதி, கோட்டூர்.

சர்ச்சை மறையும்
இந்த இரட்டைப் பதவி பிரச்னை திமுக தலைவராக கருணாநிதி இருந்த காலத்திலேயே இலைமறை காயாக இருந்தது. அது கருணாநிதியின் திறமையால் அமுக்கப்பட்டு வெளிவராமல் இருந்தது; இன்று அது வெளிப்பட்டுள்ளது; அவ்வளவுதான். விரைவில் இது அமுக்கப்பட்டு விடும் எனக் கருதுகிறேன்.
கோ.ராஜேஷ்கோபால், அரவங்காடு.

உள்கட்சிப் பிரச்னை
இரட்டைப்  பதவி பிரச்னையை திமுகவின் உள்கட்சிப் பிரச்னையாகத்தான் பார்க்க வேண்டும். ஒரு மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கும்போது நிர்வாக வசதி அதிகமாக உள்ளது. அதுபோல ஒரு கட்சியின் பொதுச் செயலாளர், தலைவர் போன்ற பதவிகளுக்கு அதிக முக்கியத்துவம் தேவை. அனைத்து கட்சித் தொண்டர்களையும் ஒரு தலைவர் வழி நடத்திச் செல்ல போதுமான வசதி தேவையெனில், ஒரு துணைத் தலைவர் அல்லது இரட்டைப் பதவி அவசியம் தேவைப்படும். 
அ.அலெக்சாண்டர், 
வரதராஜன்பேட்டை.

சாமர்த்தியமான முடிவு
திமுகவில் உருவாகியுள்ள இரட்டைப் பதவி பிரச்னை அக்கட்சியில் உள்ள பிரச்னை அன்று. கட்சித் தலைமை இது குறித்து எடுத்துள்ள முடிவு. ஒரே நபர் இரண்டு பதவிகளை வகிக்கும்போது இரண்டு பணிகளிலும் சரிவரக் கவனம் செலுத்த இயலாது எனக் கருதி பணிப் பகிர்வு செய்ய முடிவெடுத்திருக்கலாம். முதுமையின் காரணமாக ஒருவரது இரட்டைப் பதவிகளில் ஒன்றை மற்றவருக்கு அளிக்க எண்ணியிருக்கலாம். கட்சியின் மேல் மட்டத்தில் உள்ள பலருக்கும் பதவிகளைப் பகிர்மானம் செய்து சமரசம், சமாதானப் படுத்தியிருக்கலாம். இது பிரச்னை அல்ல; மாறாக, கட்சித் தலைமையின் சாமர்த்தியமான முடிவு.
ச.கந்தசாமி, இராசாப்பட்டி.

யார் வேண்டுமானாலும்...
கருணாநிதியின் தலைமையில் திமுக திறம்பட செயல்பட்டதைப் போல ஸ்டாலின் தலைமையில் செயல்படவில்லை. குடும்பக் கட்சி என்று பெயர் பெற்றுவிட்டதை மாற்றும் வகையில் யாரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, கட்சிப் பதவிகளில் கருணாநிதி குடும்பத்தினரே பெரும்பாலும் நியமிக்கப்படுகின்றனர். எனவே, இரட்டைப் பதவி முறை தவிர்க்க முடியாத விஷயமாக ஆகிவிட்டது. யார் வேண்டுமானாலும் திமுகவில் உயர் பதவிக்கு வர முடியும் என்ற நிலை வரவேண்டும். அப்போதுதான் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் வளர முடியும்.
மா.தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

மக்கள் நலனை...
அரசியலில் இரட்டைப் பதவி வகிப்பதெல்லாம் இப்போது இயல்பாகிவிட்டது. நல்லாட்சி நடத்த ஒற்றைப் பதவியையோ, இரட்டைப் பதவியையோ கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கம் மட்டும் இருந்தால் போதும். திமுகவும் அதைப் பின்பற்றினால் கட்சிக்குப் பலன் உண்டு.
கே. இந்து குமரப்பன், விழுப்புரம். 

தலையிடுவது சரியல்ல
முதலில் இதை ஒரு கட்சியின் உட்கட்சி அமைப்பு ரீதியிலான ஏற்பாடு என்றே பார்க்க வேண்டும். இதனால் இந்திய அரசியல் அமைப்புக்கோ பொதுஜன நன்மைக்கோ எவ்விதப் பிரச்னையும் இல்லை. கட்சிப் பதவிகள் அளிப்பதில் கட்சி முன்னோடிகளிடையே ஏற்படும் திருப்தியைக் களைய அல்லது சமரசத்தை ஏற்படுத்த இந்த ஏற்பாடு  தேவைதான். சமுதாயத்துக்கு திமுக என்ன செய்தது என்றுதான் பார்க்க  வேண்டுமேயொழிய, அந்தக் கட்சியின் உட்கட்சி அரசியல் அமைப்பில் தலையிடுவது சரியல்ல.
துடுப்பதி வெங்கண்ணா, பெருந்துறை.

வியப்பொன்றுமில்லை
திமுக-வின் முன்னணி தலைவர்கள் மட்டுமே இரட்டைப் பதவிகளை பல ஆண்டுகளாக தன்வசமே வைத்திருக்கின்றனர். இதனால், கட்சியில் அடுத்த நிலையில் உள்ளவர்களால் எந்தப் பதவியையும் அடைய முடியவில்லை. எனவே, பிரச்னைகள் உருவாவதில்  வியப்பொன்றுமில்லை. சுழற்சி முறையில் பதவிகளை  வழங்கும்போது பிரச்னை ஏற்படாமல் தவிர்க்கலாம்.
ப.சுவாமிநாதன், பட்டுக்கோட்டை. 

குடும்ப அரசியல்?
உதயநிதி ஸ்டாலினை செல்வாக்கு மிக்கவராக வலம்வர வைக்கவே அதிக செல்வாக்கு உள்ளவர்களின் பதவியை இரட்டைப் பதவி என்ற பெயரில் செல்வாக்கற்றவர்களாக மாற்றும் குடும்ப அரசியலின் உச்சகட்டம் திமுகவில் அரங்கேறுகிறது. ஸ்டாலினின் பலமும் கருணாநிதிதான்; பலவீனமும் கருணாநிதிதான். தனது மகனுக்கு (உதயநிதி) தானே பலவீனமாகி இருந்துவிடக் கூடாது என்பதில் ஸ்டாலின் மிகத் தெளிவாக, உறுதியாகச் செயல்படுகிறார். உட்கட்சி ஜனநாயகம் குடும்ப அரசியலால் எடுப்பார் கைப்பிள்ளையாக திமுகவில் பரிதவித்துக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.
சீ.காந்திமதிநாதன், கோவில்பட்டி.  

சிண்டு முடிக்கும் வேலை
திமுகவில் தோன்றி உள்ள இரட்டைப் பதவி பிரச்னை குறித்து சொல்வதற்கு என்ன இருக்கிறது! திமுக ஆட்சிக்கு வந்துவிடாத படிச் சிண்டுமுடித்து மகிழும் யாரோ செய்யும் வேலை இது. பந்தைத் தண்ணீரில் அமுக்கினாலும் அது மேலேதான் வரும்.
தெ.முருகசாமி, புதுச்சேரி.

முற்றுப்புள்ளி
திமுகவில் உருவாகியுள்ள இரட்டைப் பதவி பிரச்னை தவிர்த்திருக்கக் கூடிய ஒன்று. இப்போது கருணாநிதி இருந்திருந்தால் மனக்கசப்புகள் இன்றி பிரச்னையை ராஜ தந்திரமாகக் கையாண்டு இருப்பார். கருத்து வேறுபாடுகள் எழும்போதே பிரச்னைக்கு ஒரு முற்றுப் புள்ளியை ஏற்படுத்த வேண்டும். 
எம்.எஸ்.இப்ராகிம், சென்னை.

வரவேற்கலாம்
தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களைப் பொருத்தமட்டில் இரட்டைப் பதவி என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. காலத்திற்கேற்றாற்போல கட்சியையும், ஆட்சியையும், தக்கவைத்துக் கொள்ள மாவட்டங் களைப் பிரித்தும், பல்வேறு பொறுப்புகளை சீனியர்களுக்கு அளித்தும், இரட்டைப் பதவி திமுகவில் உருவாகியுள்ளது. 
கட்சியைப் பொருத்தவரை வரவேற்க வேண்டியவையே. 
அ.கருப்பையா, பொன்னமராவதி.

5, 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு  நடத்துவதை தமிழக அரசு ரத்து செய்துள்ளது குறித்து என்ன கருதுகிறீர்கள்?


இதுபற்றி வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகளை பத்து வரிகளுக்கு மிகாமல் அஞ்சல் அட்டையில் 
எழுதி, வரும் திங்கள்கிழமைக்குள் கிடைக்குமாறு
விவாத மேடை பகுதி, தினமணி, 
29, இரண்டாவது பிரதான சாலை, 
அம்பத்தூர் தொழிற்பேட்டை, 
சென்னை - 600 058 
என்ற முகவரிக்கு அனுப்பவும்.
இமெயில்: edit.dinamani@gmail.com 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com