Enable Javscript for better performance
5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவதை தமிழக அரசு- Dinamani

சுடச்சுட

  

  5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவதை தமிழக அரசு ரத்து செய்துள்ளது குறித்து என்ன கருதுகிறீர்கள் என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில.....

  By DIN  |   Published on : 12th February 2020 02:11 AM  |   அ+அ அ-   |  

   

  வரவேற்கத்தக்கது
  10,11,12 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு வைத்து அவர்களை உயர் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வைக்கும் ஆசிரியர்கள் 100 சதவீதம் பெற பாடுபடுகிறார்கள். இந்த நேரத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு வைத்தால் 10, 11, 12 ஆம் வகுப்புகளைக் கவனிக்க இயலாத நிலை உருவாகிவிடும். தேர்ச்சி விகிதம் குறையும். மாணவர்கள், பெற்றோர்கள் நலன் கருதி 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
  தி.சே.அறிவழகன், 
  திருப்புலிவனம்.

  சரியல்ல...
  எட்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இ.எஸ்.எல்.சியாக நடத்தப் பெற்றது. ஒரு கட்டத்தில் இ.எஸ்.எல்.சி தேர்ச்சி பெறுவதே பெருமையாகக் கருதப்பட்டது. இதில் தேர்ச்சி பெறுவோர் பொருளாதார வசதியும், போக்குவரத்து வசதியும் இல்லாத காலத்தில்  ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இரண்டாண்டுகள் படித்து ஹையர் கிரேடு ஆசிரியராகத் தொடக்கப் பள்ளியில் பணியாற்றினர்.  இன்று எட்டாம் வகுப்புப் பயிலும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளையும் அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அவர்களால் அரசுப் பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் சூழலில் ரத்து செய்திருப்பது சரியல்ல.
  ச.கிருஷ்ணசாமி, மதுரை.

  பொறுப்புணர்ச்சி
  ரத்து செய்யப்பட்டது தவறான ஒன்று. தேர்வு வைத்து எவரையும் தோல்வி அடையச் செய்யத் தேவையில்லை. ஆனால் தேர்வு என்ற ஒன்று வைத்தால்தான் அந்த மாணவனுக்கும், பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் ஒரு பொறுப்புணர்ச்சி வரும். 
  வரதன், திருவாரூர்.

  தேர்வு அவசியமே!
  இப்போதுள்ள முப்பருவ கல்விமுறையில் தனித்தனியே அந்தந்த பருவத்திற்கான மூன்று பருவத் தேர்வு நடத்துவதுடன் நிறைவாக மூன்று பருவத்திற்கான பாடங்களையும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளும் வகையில் ஆண்டு முடிவில் எளிமையான ஒரு பொதுத் தேர்வு அவசியமே! 
  இரா.திவ்யா, சென்னை.

  எப்படி இயலும்?
  1 முதல் 8-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரையும் தேர்வு பெறச் செய்ய வேண்டும். எந்த மாணவரையும் தேர்வில் தோல்வி அடைந்ததாகக் காட்டக் கூடாது என்பது அரசு ஆணை. எனவே 5-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்புக்கு தேர்வு வைப்பது என்பது எதற்காக?
  மா.தங்கமாரியப்பன், 
  கோவில்பட்டி.

  மன அமைதி
  முன்பு 8-ஆம் வகுப்பில் இஎஸ்எல்சி என்ற தேர்வு வைத்திருந்தார்கள். தற்போது நடைமுறையில் இல்லை. மாணவ, மாணவிகளை 8, 10 வயதிலேயே பொதுத் தேர்வு எழுத வைப்பது அவ்வளவு நல்லதல்ல. தற்போதுள்ள 10, 11, 12 ஆகியவற்றில் தேர்வு எழுத வைப்பதுதான் மன அமைதியைத் தரும் என்பதில் ஐயமில்லை. 
  ரேவதி சம்பத்குமார், 
  ஈரோடு.

  ஊக்கம் தரும்
  5, 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அரசு  ஒரு சட்டம் பிறப்பித்தது. இத்தேர்வு மாணவர்களின் படிக்கும் திறனை அதிகப்படுத்தும் மேல் வகுப்புகளுக்குச் செல்லச் செல்ல அச்சம், கூச்சம் இருக்காது. அரசும், மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை என அடிக்கடி செய்திகள் வெளியிடுகிறது.வழக்கமான தேர்வுகள் ஊக்கத்தை அதிகப்படுத்தும்.
  கே.எஸ்.வெங்கடேசன், 
  கேட்டவரம்பாளையம்.

  ஆசிரியரின் கடமை
  வரவேற்க வேண்டிய முடிவுதான். பொதுத் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியானதில் இருந்து மாணவர்களிடம் ஒருவித பதற்றம் நிலவியது. மாநில அரசு, மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தும் விதமாக அவசரமாக அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. வரும் காலங்களில் கல்வி சம்பந்தமாக எந்த ஒரு முடிவும் எடுப்பதற்கு முன்பும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் தங்களது கடமையைச் சரியாக செய்தாலே போதுமானது. 
  மு.செந்தமிழ் செல்வி, 
  சென்னை.

  சரியான புரிதல் தேவை
  தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. பள்ளிக் கல்வித் துறையிடம் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களின் உளநலம், பணிப்பளு, மன உளைச்சல் ஆகியன பற்றி சரியான புரிதல் இல்லை. இனிமேலாவது கல்வியாளர்கள், உளநல ஆய்வாளர்கள், பெற்றோர்கள் ஆகியோரது வழிகாட்டுதலை பள்ளிக் கல்வித்துறையினர் பெற்று தங்களது திட்டங்களை அறிவிக்க வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள தேர்வுகளை ஒழுங்காக நடத்தி மாணவர்களின் கல்வி சிறக்க உதவ வேண்டும்.
  பி.மரியா லாசர், நாகப்பட்டினம். 

  ரத்து செய்தது சரிதான்
  5-ஆம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்தது சரி தான். ஆனால் 8-ஆம் வகுப்பு பொது தேர்வை எதிர்கொள்ளும் வண்ணம் மாணவர்கள் முதிர்ச்சி அடைந்திருப்பார்கள். மாணவர்களின் திறன் வெளிப்படும். ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதும் தெரியவரும். தனி அமைப்புகள் மூலம் 5, 8 வகுப்பில் பயிலும், விருப்பப்பட்ட மாணவர்களுக்கு  பொதுத் தேர்வை நடத்தி அவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கலாம்.
  எஸ். மோகன், கோவில்பட்டி.

  அறிவித்திருக்கலாம்
  5, 8 -ஆம்  வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து என்பதை விட  8-ஆம் வகுப்புக்கு மட்டும் பொதுத்தேர்வு என்று சொல்லாமல் தகுதித்தேர்வு என்றும் இதிலும் அடுத்த வகுப்பு  தேர்ச்சிக்கு இடையூறு இல்லை  என்றும் அறிவித்திருக்கலாம்.
  பி. ரவி,  அறச்சலூர். 

  சிவப்புக் கம்பளம்
  ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை ரத்து செய்ததை ஒரு சிவப்புக் கம்பளத்தை விரித்து ஒரு பக்கத்தில் பிள்ளைகளும் மற்றொரு புறத்தில் பெற்றோர்
  களும் மகிழ்ச்சியுடன் பூக்களைத் தூவி வரவேற்கத் தயாராக உள்ளதால் செய்தி கேட்டு மகிழ்ச்சியில் துள்ளுவர். பள்ளித் தேர்வு என்று சிறிய பயத்தை சமாளிக்க முதலில் கற்று பிறகு பொதுத் தேர்வை சந்திக்கலாம் என்ற துணிவைக் கொடுத்த இந்த அறிவிப்பை வரவேற்கலாம்.
  உஷாமுத்துராமன்,  திருநகர்.

  தரமான கல்விக்கு வழி...
  கிராமங்களில் ஐந்து வகுப்புகளுக்கும் ஆசிரியர் இருந்தால் மட்டுமே சிறந்த கல்விக்கு சாத்தியம். மூன்று கால பருவ முறையும், சமச்சீர் கல்வி முறையும் சதிச் செயல்களே. தமிழகத்தில் புதிய தொடக்கப் பள்ளிகளும், தரம் உயர்த்துதல் என்ற பெயரில் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளிகளை ஏற்படுத்தாமல் இருந்தாலே தரமான கல்வி கிடைக்கும்.
  பெ.இராமலிங்கம், ஈரோடு.

  எண்ணித் துணிக!
  5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு; ஒரே மாதிரியான வினாத்தாள்; அவரவர் பள்ளியிலேயே தேர்வு எழுதலாம்; எளிமையான தேர்வு; மூன்றாண்டுகளுக்குக் கட்டாயத் தேர்ச்சி (இடைநிற்றல் நிகழாது) என்றெல்லாம் அறிவித்துவிட்டு திடீரென தேர்வை விலக்கிக் கொண்டது ஏனோ? தேசியக் கல்வி கொள்கைக்காக என்று இல்லாவிட்டாலும் கற்றலுக்கு மதிப்பீடு அவசியம்தானே!  அதனால், எண்ணித் துணிக! 
   கு. இராஜாராமன், சீர்காழி.

  முற்றிலும் சரி
  முற்றிலும் சரியானது. காரணம் இளம் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டுவிடும். தேர்வு என்பது குழந்தைகளின் அறிவை சோதிக்கத்தானே தவிர, அவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்க அல்ல..! பொதுத் தேர்வை ரத்து செய்ததில் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்..! 
  கே. இந்து குமரப்பன், 
  விழுப்புரம். 

  விழிப்புணர்வு
  முழுமையான பயிற்சி பெறாத மாணவர்கள் பொதுத்தேர்வை சந்திக்கும் போது சற்று பயம் இருக்கும். அந்த பயத்தை எட்டாம் வகுப்பிலேயே தெளிவுபடுத்த வேண்டியது ஆசிரியர்களின் கடமை, அரசாங்கத்தின் கடமை. இது கட்டாயம் அல்ல, ஆனால் அதுபற்றிய விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் எழவேண்டும். பல தற்கொலைக்குக் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு இருந்திருக்கிறதை நாம் பார்த்திருக்கிறோம்.  முதலில் நாம் மாணவர்கள் மத்தியில் உள்ள பொதுத்தேர்வு பயத்தினை போக்க வேண்டும். 
  தி.நரேந்தர், சென்னை.

   

   

  காவிரி டெல்டா பகுதியை  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது பற்றி என்ன கருதுகிறீர்கள்?


  இதுபற்றி வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகளை பத்து வரிகளுக்கு மிகாமல் அஞ்சல் அட்டையில் எழுதி, வரும் திங்கள்கிழமைக்குள் கிடைக்குமாறு
  விவாத மேடை பகுதி, தினமணி, 
  29, இரண்டாவது பிரதான சாலை, 
  அம்பத்தூர் தொழிற்பேட்டை, 
  சென்னை - 600 058 
  என்ற முகவரிக்கு அனுப்பவும்.
  இமெயில்:  edit.dinamani@gmail.com 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai