காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது பற்றி என்ன கருதுகிறீர்கள் என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது பற்றி என்ன கருதுகிறீர்கள்

சட்டமாக்க வேண்டும்
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்துள்ளது நடைமுறைக்கு வரவேண்டுமென்றால், சட்டப்பேரவையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு, அரசாணை பிறப்பித்து சட்டமாக இயற்ற வேண்டும். மேலும், இந்த சிறப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் புதிய அனுமதி கிடையாது என்பதுடன், ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்ட நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்க முடியாத வகையில் அமைய வேண்டும். அப்போதுதான் இந்தத் திட்டத்துக்கு எதிராகப் போராடிய மக்களுக்குக் கிடைத்த வெற்றியாக பார்க்கப்படும்.
மு. நடராஜன், திருப்பூர்.

உடனடியாக அரசிதழில்...
வரவேற்கத்தக்கது. எனினும், இந்த அறிவிப்பு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பேரவைத் தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்பட்டதாக இருக்கக் கூடாது. வேளாண் தொழிலை உண்மையாகக் காப்பாற்றுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும் என்பதுதான் அனைவருடைய எதிர்பார்ப்பு ஆகும்.
ப.சுவாமிநாதன், பட்டுக்கோட்டை. 

"ஹைட்ரோகார்பன்' திட்டத்தை...
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது காலம் கடந்த அறிவிப்பு. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதிக்குள்ளாகவே எதற்கும் பயன்படாத பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்த அரசு முயற்சி செய்யட்டும். மக்களை சமாதானப்படுத்த விளைநிலங்களுக்கு அப்பால் ஹைட்ரோகார்பன் திட்டம் அமையட்டும். போராட்டத்தைத் தவிர்க்கவும், திட்டம் செயல்படுத்தப்படவும் இதுவே சரியான முடிவாக இருக்கும்.
ச. கந்தசாமி, இராசாப்பட்டி.

வேளாண் தொழிலை...
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வேளாண் தொழிலைப் பாதுகாக்கவும், வேளாண்மை சார்ந்த தொழிற்சாலைகளை உருவாக்கவும் தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும். ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களுக்காக வளம் பொருந்திய தஞ்சாவூர் மண்டலத்தை நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது. 
கிருஷ்ணபிரசாத், கோவை. 

உணர்வின் வெளிப்பாடு
ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாயமே அழிந்து போகும் என பலரும் கருத்துக் கூறிவந்தனர். அதை உணர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்துள்ளது, அவர்களின் வயிற்றில் பால் வார்த்தது போன்றது. 
கோ. ராஜேஷ் கோபால், 
அரவங்காடு.

தொழிற்சாலைகளும் வேண்டும்
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு விவசாயம் வளர்ச்சியடைய வேண்டும் என்ற நல்ல நோக்கம்தான் காரணம். பெரிய தொழிற்சாலைகள் வருவதைத் தடுப்பதற்காகவும் இந்த அறிவிப்பு பயன்படலாம். ஆனால், ஏதாவது ஒரு கராணம் கூறி பெரிய தொழிற்சாலையை ஆரம்பிக்க விடாமல், தொடர்ந்து இடையூறு செய்வது தவிர்க்கப்பட வேண்டும். தொழிற்சாலைகளை இயக்க அனுமதிப்பதுதான் நாட்டுக்கு நல்லது.
மா.தங்கமாரியப்பன், 
கோவில்பட்டி. 

எதிர்க்கட்சிகளின்...
விவசாயத்தின் முக்கியத்துவம் உணர்ந்து எடுக்கப்பட்ட முடிவு. மக்களின் எண்ணத்துக்கு முதல்வர் மதிப்பளித்துள்ளார். விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர், விவசாயிகளைப் பாதுகாக்க முன்னுரிமை தந்துள்ளார். 40 ஆண்டுகள் முன்பு நான்கு கோடி மக்கள்தொகையைக் கொண்டிருந்த தமிழகம், இன்று இரண்டு மடங்காகி, எட்டு கோடியைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில், இரண்டு மடங்கு விளைநிலங்கள் உருவாக்கி உள்ளோமா என்றால், இல்லை. மாறாக, இருக்கும் விளைநிலங்களை குறைத்துக் கொண்டே வருகிறோம். முதல்வரின் இந்த அறிவிப்பால், எதிர்க்கட்சிகளின் குரல்வளை தானாக அடைத்துப் போய் இருக்கிறது என்பதே உண்மை.
சீ.காந்திமதிநாதன், கோவில்பட்டி. 

மத்திய அரசின்...
காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது. இதற்கான சட்ட நடைமுறைகளைக் கொண்டுவருவதுடன், மத்திய அரசின் ஒத்துழைப்பையும் பெற வேண்டும். நடவு, அறுவடைப் பணிகளுக்கான நபர்களின் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமச் சாலைகளை அகலப்படுத்த வேண்டும். தடுப்பணைகள் கட்டவும், ஏராளமான தானிய சேமிப்புக் கிடங்குகளையும், விவசாய உபகரணம் வழங்கும் நிலையங்களையும் நிறுவ வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை மட்டும் பரிசீலிக்கும் தனி அமைப்பை அரசு ஏற்படுத்தி போராட்டங்களைத் தவிர்க்க வேண்டும்.
ச. சுப்புரெத்தினம், 
மயிலாடுதுறை.

இன்ப அதிர்ச்சி!
காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வில் சூழ்ந்த இருள் நீங்கி இன்பம் பயக்கும் பயனுள்ள கொள்கை முடிவு எடுத்து இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள முதல்வரின் அறிவிப்பு பாராட்டத்தக்கது.  செயற்கரிய செயலை  சட்டமாக்கி, அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் வகையில் விரைந்து செயல்பட வேண்டும்.
கு. இராஜாராமன், சீர்காழி. 

வாழ்வாதாரம் தொடர...
முதல்வர் அறிவித்துள்ள பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மூலம் 28 லட்சம் ஏக்கரில் 33 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்படும் 7 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் நிலைக்கும்.  2009-இல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டு, 2013-இல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முடக்கி வைத்த ஹைட்ரோகார்பன் திட்டம், இப்போது முடிவுக்கு வந்துள்ளது. 
கே. சிங்காரம், 
வெண்ணந்தூர்.

"சித்திரை' பரிசு!
தமிழ்ப் புத்தாண்டு (ஏப்.14) நெருங்கும் நிலையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் திட்டம்  சட்டமாகி நடைமுறைக்கு வரும் காலம், தமிழக விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் பொற்காலம் ஆகும். விளைநிலங்கள் பெருகுதல், மணல் எடுப்பு குறைதல், நிலத்தடி நீர் மட்டம் பெருகுதல் போன்ற நற்பலன்கள் கிடைக்கும்.
அ. செல்வராஜ், கரூர்.

நடைமுறைப்படுத்தப்படுமா?
மேலோட்டமாகப் பார்க்கும்போது முதல்வரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது போலத் தோன்றும். ஆனால், வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டியது மத்திய அரசு ஆகும். தமிழக அரசு அறிவித்த எத்தனையோ விஷயங்கள், மத்திய அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் இதை வெறும் கண்துடைப்பு, தேர்தல் அரசியலுக்கான அறிவிப்பாக மட்டுமே பார்க்க முடிகிறது. இந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே விவசாய மக்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பு மக்களும் வரவேற்க முடியும்.
கே.ஆர். உதயகுமார், 
சென்னை.

தாயின் கருணையாக...
முதல்வரின் அறிவிப்பை பாசம் மிக்க தாயின்  கருணையாகப் பார்க்க முடிகிறது. பொன்னி நதி என அழைக்கப்பட்ட காவிரியில் தண்ணிர் இன்றி வறண்ட காலம் போய், காவிரிப் படுகை வருங்காலங்களில் காப்புப் படுகையாக மாற வாய்ப்புள்ளது; தமிழக விவசாயத்துக்குக் கிடைத்த பொற்காலம் என்று போற்றலாம்.
உஷாமுத்துராமன்,  
மதுரை. 

ஒட்டுமொத்த தமிழகமும்...
மாசுக்  கட்டுப்பாடு   கருதி  வெளிநாடுகள்  எல்லாம் தங்கள் நாடுகளில் ஆலைகள் அமைக்காதபோது,  நாம்  மட்டும் பொன் விளையும்   (உணவு  கொடுக்கும்)   பூமியை  ஏன்  மாசுபடுத்த  வேண்டும்?  "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்' இனிப்பான  செய்தி.  டெல்டா  மாவட்டங்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தின் நலன் இதனால்  பாதுகாக்கப்படும்.
பி.ரவி, அறச்சலூர்.

உணவுத் தேவையை...
இந்த அறிவிப்பின் காரணமாக மூன்று டெல்டாமாவட்டங்கள் உள்பட 8 மாவட்டங்களில் 28 லட்சம் ஏக்கர் பரப்பளவில் தமிழகத்தின் 32 சதவீத உணவுத் தேவை பூர்த்தி செய்யப்படுவதுடன் விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும். அதே சமயம் விவசாயத்தைப் பாதிக்காத சிறு, குறு தொழில்களும் அனுமதிக்கப்பட்டால்தான்  வேலைவாய்ப்பும் பரவலாகக் கிடைக்கும். தமிழகம் உள்பட மாநில நலன்களில் சாதக - பாதக அம்சங்கள் குறித்து அந்தந்த மாநில நிர்வாகத்துக்கே தெரியும். எனவே, மாநிலத்தின் பிற திட்டங்கள் குறித்தும் தமிழக அரசே முடிவு செய்து, சட்டங்களை நிறைவேற்றினால்தான் மத்திய - மாநில அரசுகளின் உறவு சுமுகமாக 
இருக்கும்.              
உ.இராசமாணிக்கம், 
கடலூர். 


ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உரிமை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து என்ன கருதுகிறீர்கள்?

இதுபற்றி வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகளை பத்து வரிகளுக்கு மிகாமல் அஞ்சல் அட்டையில் 
எழுதி, வரும் திங்கள்கிழமைக்குள் கிடைக்குமாறு
விவாத மேடை பகுதி, தினமணி, 
29, இரண்டாவது பிரதான சாலை, 
அம்பத்தூர் தொழிற்பேட்டை, 
சென்னை - 600 058 
என்ற முகவரிக்கு அனுப்பவும்.
இமெயில்: edit.dinamani@gmail.com 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com