Enable Javscript for better performance
அரசியல் நிகழ்வுகள் குறித்து ராணுவத் தலைமைத் தளபதி பதவியில் இருந்தவர் பேசியது சரியா என்ற கேள்விக்கு வ- Dinamani

சுடச்சுட

  

  அரசியல் நிகழ்வுகள் குறித்து ராணுவத் தலைமைத் தளபதி பதவியில் இருந்தவர் பேசியது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

  By DIN  |   Published on : 08th January 2020 02:55 AM  |   அ+அ அ-   |  

   

  தவறில்லை!
  அரசியல் நிகழ்வுகள் குறித்து ராணுவத் தலைமை தளபதி பேசியிருந்தால், அது நடைமுறை விரோதம். ஆனால், தலைமைப் பண்பு குறித்தும், மாணவர்களை சரியாக வழிநடத்த வேண்டும் என்றல்லவா விபின் ராவத் கூறினார். அதில் தவறில்லை. மாணவர்களுக்கு நல்லனவற்றைப் போதித்து வழி நடத்தவேண்டிய கடமை மூத்தவர்களாகிய ராணுவத் தலைமைத் தளபதி பதவி வகித்தவர் உள்பட நம் அனைவருக்கும் உண்டு.
  கோவிந்தராஜன், ஸ்ரீமுஷ்ணம்.

  பதவியை எதிர்பார்த்து...
  அரசியல் நிகழ்வுகள் குறித்து அரசுக்கு ஆதரவாக அவ்வப்போது கருத்து தெரிவித்து, தன்னை அரசின் ஆதரவாளராகத் திட்டமிட்டு அடையாளப்படுத்தி வந்திருக்கிறார் விபின் ராவத். தன்னுடைய தலைமைப் பண்பு குறித்து அவர் ஏன் யோசிக்கவில்லை? அவரின் பேச்சு அரசுக்குச்  சாதகமாக இருந்ததால் அதைத் தடுக்கவில்லை. மாறாக, முப்படைத் தளபதி என்ற பரிசை அவருக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. அதனை எதிர்பார்த்துத்தான் அவ்வாறு செயல்பட்டிருப்பார் போலும்.
  கு.இராஜாராமன், சீர்காழி.

  சரிதான்...
  நாட்டைக் காக்கும் பெரிய பொறுப்பில்  இருக்கும் அவருக்கு அரசியல் அறிவு நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும். அதனால், யோசிக்காமல் எதையும் பேச மாட்டார் என்பதால்,  அரசியல் நிகழ்வுகள் குறித்து அவர் பேசியது மிகச்  சரியே.
  உஷா முத்துராமன்,  மதுரை.

  நடைமுறைக்கு எதிராக...
  ஜனநாயக நாடு என்ற அம்சத்தில் மக்களால் தேர்வு செய்யப்படுகிற அமைப்புதான் ஆளும் முழு அதிகாரம் பெற்றது. ராணுவத் தலைமைத் தளபதி பதவியில் இருப்பவர், பாதுகாப்பு காரணிகள் குறித்த நகர்வுகளுக்கு அரசுக்கு உதவி செய்கிற பிரதிநிதி. அரசியல் நிகழ்வுகள் குறித்து ராணுவத் தலைமைத் தளபதி கருத்துக் கூறுவது இதுவரையிலும் இந்தியாவில் இல்லாத நடைமுறை.
  பா.சக்திவேல், 
  கோயம்புத்தூர்.

  வழக்கம்தான்...
  இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படும் வெளிநாட்டு தீய சக்திகளை எச்சரிக்கும் வகையில் நமது ராணுவத் தலைமைத் தளபதி அறிக்கை விடுவது வழக்கம். அந்த வகையில்தான் இதுவும். 
  என்.ராமச்சந்திரன், நாமக்கல்.

  விதிவிலக்கல்ல...
  இப்போதெல்லாம் அரசுப் பதவிக்காலம் முடிந்தும், ஆட்சியாளர்களின் அனுசரணையுடன் பதவி நீட்டிப்பு, ஆணையங்களில் தலைவர் பதவி, மாநில ஆளுநர் பதவி போன்ற இரண்டாவது இன்னிங்ஸை அதிகாரிகள் விரும்புகின்றனர். அதற்காக சிலர் ஆளும் கட்சியின் கடைக்கண் பார்வைக்காக இது போன்று சற்று கூடுதலாகப் பேசுவதும் உண்டு. ராணுவ உயர் அதிகாரிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
  வளர்மதி ஆசைத்தம்பி, 
  தஞ்சாவூர்.

  பேசியது சரியே...
  அரசியல் நிகழ்வுகள் குறித்து ராணுவத் தலைமைத் தளபதி பதவியில் இருந்தவர் பேசுவது சரியே. ஆட்சியின் தவறுகள் பற்றியோ, அரசியல் கட்சிகளில் ஒழுங்கற்ற போக்குகள் பற்றியோ, பொது மக்களது அவசியமில்லாத போராட்டங்கள் பற்றியோ கவலைப்படாதவர்கள் இந்தியக் குடிமகன்கள் அல்லர் என்றே கூற வேண்டும். 
  ச.கந்தசாமி, இராசாப்பட்டி.

  ஏற்க முடியாது
  அரசியல் நிகழ்வுகள் பற்றி அதிகார வர்க்கம் அமைதி காத்திடுவதுதான் நடுநிலையான செயல். ஏற்கெனவே நீதிமன்றம், தேர்தல் கமிஷன், இந்திய ரிசர்வ் வங்கி, சிபிஐ, வருமானவரித் துறை  முதலானவற்றின் போக்கு, ஆளும் தரப்பை ஆதரிக்கும் நிகழ்வுகளாகக் கருதப்படுகின்றன. பதவி விலகும் ராணுவத் தலைமை தளபதி கருத்து தெரிவித்த உடனேயே இவர் தலைமை பதவிக்கு வருவதற்கு உண்டான ஏற்பாடு என்பது புலப்பட்டு விட்டது. அரசியல் நிகழ்வுகள் குறித்து அவர் கருத்துச் சொல்லியதை ஏற்க முடியாது. 
  திருவருள் லத்தீப், 
  கல்லிடைக்குறிச்சி.

  தவறை உணர்ந்ததால்...
  இந்திய ராணுவம் என்பது பாதுகாப்புக்காக தம்மை முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்ட வீரர்களால் ஆனது. இதில் தலைமைத் தளபதியும் அடக்கம். இவர்கள் யாரும் அரசியல் பேசுவது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. இதுவரை யாரும் அரசியல் பேசியதுமில்லை. தலைமைத் தளபதி விபின் ராவத் அரசியல் பேசினாலும், "இனி நான் அரசியல் பேசமாட்டேன்' என்று உடனே தன் தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்துவிட்டார். எனவே இதை இத்துடன் விட்டுவிடலாம்.
  மா.தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

  சரிதான்...
  அரசியல் நிகழ்வுகள் குறித்து ராணுவத் தலைமைத் தளபதி பதவியில் இருந்தவர் பேசியது சரிதான். பணி நிறைவு பெற்றவர் என்ற அடிப்படையிலும், தன்னுடைய உரிமை என்ற முறையிலும் அவர் பேசியிருக்கலாம். இது மக்களாட்சியின் தனிநபர் உரிமையாகும். அவருடைய கருத்தில் பிழையிருந்தால் சுட்டிக் காட்டலாம். ஆனால் அவருடைய உரிமையைப் பாதிக்கக் கூடாது. 
  ச.கண்ணபிரான், திருநெல்வேலி.

  விதிகளை மீறி...
  இந்திய ராணுவச் சட்டம் 1950-இல் பிரிவு 21-இல்,  பத்திரிகைகளிடமோ, பொதுக் கூட்டங்களிலோ அரசியல் அல்லது அரசியல் சாராத விஷயங்களை ராணுவ அதிகாரிகள் பேசக் கூடாது என விதி உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நடந்த  போராட்டத்தை  தலைவர்கள் தூண்டி விடுவதாக ராணுவத் தலைமைத் தளபதி, நடத்தை விதிகளை மீறிப் பேசியதை, தலைமைப் பண்புகள் குறித்துத்தான் அவர் பேசியதாக சிலர் சமாளித்தாலும் தவறுதான்.
  ஆர்.எஸ்.மனோகரன், முடிச்சூர். 

  முரண்
  இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், அரசியல் சாசனத்தைக்காக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். இவ்வாறு இருக்க, அரசியல் நிகழ்வுகள் குறித்து ராணுவத் தலைமைத் தளபதி பதவியில் இருந்தவர் பேசியது முரண்பாடானது. இது நமது அரசியல் அமைப்புக்கு எதிரானதாகும்.
  பா.சிதம்பரநாதன், கருவேலன்குளம்.   
   
  உள்நோக்கம்?
  அரசியல் நிகழ்வுகள் குறித்து ராணுவத் தலைமைத் தளபதி பதவியில் இருப்பவர் பேசியது மிகப் பெரிய தவறாகும். அரசுப் பதவியில் இருப்பவர்கள் கட்சி அரசியலில் ஈடுபடுவதோ, பங்கெடுப்பதோ தவறு எனும்போது, ராணுவத் தலைமைப் பதவியில் இருப்பவர் எவ்வாறு பேசலாம்? அரசியல் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுத்துத் தண்டித்திருக்க வேண்டும். அதை விடுத்து, அவருக்குப் பதவி உயர்வு கொடுப்பது என்பது ஏதோ உள்நோக்கம் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. 
  பூ.சி.இளங்கோவன், 
  அண்ணாமலை நகர்.  

  எல்லை மீறக் கூடாது!
  அரசியல் நிகழ்வுகள் குறித்து ராணுவத் தலைமைத் தளபதி பதவியில் இதுவரை யாரும் இருந்தவர்கள் பேசியதில்லை. இப்போது எதிர்பாராத நிலையில் விபின் ராவத் பேசியதுதான் இந்த விவாதத்திற்கே வினாவாக அமைந்துவிட்டது. பதவிக்காக எதையும் எங்கும் மாற்றிக்கொள்ளும் அரசியல் தலைமையும் கட்டுப்பாடு, ஒழுக்கம் போன்றவற்றில் சிறந்த ராணுவத் தலைமையும் ஒரே மாதிரியானவை இல்லை. எனவே, அதன் எல்லையைத் தாண்டி ராணுவம் பேசாமலிருப்பதே நல்லது.
  கவியழகன், திருவொற்றியூர்.

  கண்டனம்
  ராணுவத் தலைமைத் தளபதி கருத்து முற்றிலும் கண்டனத்துக்குரியது. இந்திய ஜனநாயகம் இத்தனை ஆண்டுகள் தொடர்வது,    ராணுவத்தின் தலையீட்டை அரசியலில் அனுமதிக்காமல் இருந்ததுதான். ராணுவத் தலையீடு இருந்தால் அண்டை நாடுகளில் நிகழ்ந்ததைப் போன்று நாமும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். எனவே, வரும் காலங்களில் ராணுவத்தின் தலைமைத் தளபதி அரசியலை பற்றி கருத்து தெரிவிக்கும்போது, ஆளும் அரசுக்குச் சாதகமான கருத்தாக இருந்தாலும் கண்டிக்க வேண்டும். அதுதான் இந்திய ஜனநாயகத்துக்கு நல்லது.
  ப.சுவாமிநாதன், 
  பட்டுக்கோட்டை.

  மருத்துவப் பரிசோதனை முடிவுகளில் 34 சதவீதம் தவறானவை என்ற ஆய்வு முடிவு குறித்து என்ன கருதுகிறீர்கள்?

  இதுபற்றி வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகளை பத்து வரிகளுக்கு மிகாமல் அஞ்சல் அட்டையில் எழுதி, வரும் திங்கள்கிழமைக்குள் கிடைக்குமாறு
  விவாத மேடை பகுதி, தினமணி, 
  29, இரண்டாவது பிரதான சாலை, 
  அம்பத்தூர் தொழிற்பேட்டை, 
  சென்னை  600 058 
  என்ற முகவரிக்கு அனுப்பவும்.
  இமெயில்: edit.dinamani@gmail.com 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai