Enable Javscript for better performance
உள்ளாட்சிப் பதவிகளால் திமுக-காங்கிரஸ் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது குறித்து என்ன கருதுகிறீர்கள்- Dinamani

சுடச்சுட

  

  உள்ளாட்சிப் பதவிகளால் திமுக-காங்கிரஸ் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது குறித்து என்ன கருதுகிறீர்கள் என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

  By DIN  |   Published on : 22nd January 2020 02:25 AM  |   அ+அ அ-   |  

   

  காலம் சொல்லும்
  திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே மோதல், கருத்து வேறுபாடு என்பது இன்றல்ல, 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு தெரிந்த நாளிலிருந்தே இருந்து வருகிறது. 40 இடங்கள் காங்கிரýக்குக் கொடுத்து 8 இடங்களில் மட்டும் வென்று மீதியை கோட்டை விட்டதால், ஆட்சியை திமுக கைப்பற்ற முடியாமல் போனது, தலைவர்கள் - தொண்டர்கள் மத்தியில் ஆறா வடுவாக உள்ளது. எப்படியாவது அவர்களாகச் செல்வார்களா என எதிர்பார்த்திருந்த சமயம், அதற்கு உள்ளாட்சி தேர்தல் பயன்பட்டது. கால் பட்டால் குற்றம், கை பட்டால் குற்றம் என்ற நிலையில் இருந்த திமுகவுக்கு, கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒரு காரணமாகிவிட்டது. விடுவார்களா, "கை' கொடுப்பார்களா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.
  க.அருச்சுனன், செங்கல்பட்டு.

  மோதல் ஏன்?
  திமுக - காங்கிரஸ் இடையே ஏற்பட்டது மோதல் அல்ல;  தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்ட பெரும் மனப் புழுக்கம் வெளிப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் "மாவட்ட அளவில் பேசிக் கொள்ளுங்கள்' என்று திமுக தலைமை திசைதிருப்பி, ஒன்றியச் செயலாளர்களோ தாங்கள் சுட்டிக்காட்டும்  தொகுதியில்தான் தோழமைக் கட்சிகள் நிற்க வேண்டும்  என்ற நிலையில், எந்த மாவட்டங்களிலும் தோழமைக் கட்சிகளோடு சுமுக நிலை உருவாகவில்லை; மாறாக, உரசல்களும், மோதல்களும் ஏற்பட்டன. எனவே, தலைவர்கள் மத்தியில் உள்ள பக்குவப்பட்ட மனமுதிர்ச்சி, அடிமட்ட தொண்டர்கரிடம் வர வேண்டும். வரும் காலங்களிலாவது உரசலும், மோதலும் இல்லாமல், தோழமை உணர்வோடு அணுகி சிறப்பாகச் செயல்பட வேண்டும்.
  சொ.திலகர், நெல்லிக்குப்பம்.

  மோதல் இயல்பே...
  உள்ளாட்சித் தேர்தல் என்பது பொதுத் தேர்தலைவிட முற்றிலும் மாறுபட்டது. இதில் உள்ளூர் செல்வாக்குள்ள மனிதர்கள்தான் வெற்றிபெற முடியும். திமுக மற்றும் காங்கிரஸ் இரண்டு கட்சிகளிலுமே உள்ளூர் செல்வாக்கு உள்ளவர்கள் இருப்பார்கள். எனவேதான் பிரச்னை உருவாகிறது. மேலும், அதிமுக தோன்றுவதற்கு முன்பு திமுக மற்றும் காங்கிரஸ்தான் எதிர்கட்சிகளாக செயல்பட்டு வந்தன. இவர்களுக்கிடையே உள்ள கூட்டணி ஒருமனதாக இருக்காது. தேர்தல் வெற்றிக்காக வேறு வழியின்றி ஏற்பட்ட கூட்டணியாகத்தான்  இருக்கும். மனத்தாங்கல், குழப்பம் இயல்பாகத்தான் இருக்கும்; எனவே, உள்ளாட்சித் தேர்தலில் மோதல் இருக்கத்தான் செய்யும்.
  மா.தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

  காங்கிரஸுக்குத்தான்...
  உள்ளாட்சிப் பதவிகளால் திமுக, காங்கிரஸ் இடையே மோதல் போக்கு வலுத்து கூட்டணி பிளவுபடுமானால் அடுத்துவரும் ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்கள், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சித் தேர்தல்களில் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்பது உறுதி. தமிழகத்தில் காங்கிரஸ் தனது சுயபலத்தை இழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தேசிய அளவிலும் வலுவிழந்து வரும் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக.,வுடன் சுமுக உறவை ஏற்படுத்திக் கொண்டு தேர்தல் களத்தைச் சந்தித்தால் மட்டுமே தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியும். காங்கிரஸ், கூட்டணியிலிருந்து பிரிவதால் திமுகவிற்குப் பின்னடைவோ, இழப்போ எதுவுமில்லை என்பதே நிதர்சனம்.
  எஸ்.ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.

  தற்காலிகமானதே...
  திமுக - காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு தற்காலிகமானதுதான். திமுக - காங்கிரஸ் கூட்டு என்ற சொல்லுக்கு இன்னும் மக்களிடையே ஒருவித வரவேற்பு உள்ளது. உழைப்பு என்று வரும்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்தாலும் ஓர் ஒட்டுண்ணியாகவும், சாருண்ணியாகவும் அது செயல்படுகிறது என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொண்டு, தன் செயல்பாட்டை திருத்திக்கொள்ள வேண்டும். 
  பி.மரியா லாசர், நாகப்பட்டினம்.

  பிரிவு ஏற்படாது
  உள்ளாட்சிப் பதவிகளால் திமுக - காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு உள்ளூர் பிரச்னைகளை மையமாகக் கொண்டவை. இதை காங்கிரஸ் தலைமைதான் அவசரப்பட்டு அறிக்கையாக வெளியிட்டுவிட்டது. தில்லி தலைமையைச் சந்தித்த பின் பிரிவிற்கு வாய்ப்பே இல்லை என்று மறுப்பு வெளியிட்டு விட்டது. திமுக சில இடங்களில் பாதிக்கப்பட்டாலும் தலைமை இதை மாவட்ட நிர்வாகத்திடம் பார்த்துக் கொள்ளும்படி விட்டுவிட்டு அமைதியாகிவிட்டது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் குறிப்பிட்ட அளவு  இடங்கள் கிடைக்காமல்போய்விடுமோ என காங்கிரஸுக்கு பயம். திமுக அதைத்தான் செய்யப் போகிறது என்பது தெரிகிறது. காங்கிரஸ் - திமுக கூட்டணி ஒன்றை விட்டால் மற்ற ஒன்றுக்கு வாய்ப்பில்லை. இன்றைய மோதல் போக்கு பிரிவை ஏற்படுத்தாது என்று உறுதியாக நம்பலாம்.  
  அ.கருப்பையா, பொன்னமராவதி.

  சுயநலத்துடன்...
  காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூட்டிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரிப்பு தெரிவிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை திமுக புறக்கணித்தது, அவர்கள் அரசு அதிகாரம் பெற எதுவும் செய்வார்கள் என்பதைக் காட்டுகிறது. இது கொள்கையில்லாத, அரசியல் அதிகாரம் பெற மட்டுமே அமைக்கப்பட்ட கூட்டணி. மக்கள் நலனைவிட, தன் கட்சிக்கு ஆதாயம் கிடைக்க திமுக எதுவும் செய்யும். திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கு பேரம் பேசியதாகக் கூறி,  மனிதநேய மக்கள் கட்சி  கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது. "வாக்கு மட்டும் வேண்டும்; பதவிகள் கிடையாது' எனப்  "பெரிய அண்ணன்' மனப்பான்மையுடன் திமுகவின் செயல்பாடுகள் தொடர்கின்றன. 
  கே.ஜெ.சாதிக், திருவாரூர்.

  அறிக்கையே காரணம்
  உள்ளாட்சிப் பதவிகளில் உள்ளூரில் உள்ள பிரபலமான மற்றும் மக்களுக்கு சேவை புரிபவர்கள் பற்றி அந்த பகுதி மக்கள் நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள். கட்சிகளுக்கு அங்கு வேலையில்லை. திமுக-காங்கிரஸ் மோதல் போக்கு உள்ளாட்சிகளைப் பொருத்து தேவையற்ற ஒன்றாகும். இந்த நிலையில் கே.எஸ் அழகிரி அறிக்கை மூலம் திமுகவை விமர்சனம் செய்து இரண்டு கட்சிகளின் உறவுக்குப் பங்கம் ஏற்படுத்தி விட்டார்; பின்னர் கே.எஸ்.அழகிரி-ஸ்டாலின் சந்திப்பில் தற்போது கசப்புணர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
  மு.நடராஜன், திருப்பூர்.

  திமுகவுக்கு...
  பொதுவாக அனைத்துப் பிரச்னைகளிலும் திமுக தலைவராக இருந்த கருணாநிதி - ஸ்டாலின் அணுகுமுறைகளில் பெருத்த வேறுபாடு உள்ளது. ஸ்டாலின் அணுகுமுறைகள் அனைத்திலும் முதிர்சியற்ற அணுகுமுறைதான் வெளிப்படுகிறது. கூட்டணி குறித்து மற்றவர்களை விட்டு பேசச் சொல்கிறார். கே.எஸ்.அழகிரியைப் பொருத்தவரை ப.சிதம்பரத்தின் ஆதரவாளராக இருந்தாலும், நாகரிகமான முறையில் வெளிப்படுத்துகிறார். சூழ்நிலை கட்டாயத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையைத் தவிர்த்திருக்கலாம். எனினும், இந்த விரிசல் திமுகவுக்கு எதிர்காலத்தில் பலத்த அடியைக் கொடுக்கும். 
  செங்காளிமுத்து, பொரசப்பாளையம். 

  தொண்டர்களுக்குள்...
  தேர்தல் காலத்தில் கூட்டணி கட்சிகள் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் வெற்றி பெற்ற நிலையில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி, துணைத் தலைவர் பதவி, ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி, துணைத் தலைவர் பதவி - இவற்றில் கூட்டணிக் கட்சிகளில் வேறுபாடு ஏற்படும். அப்படிப்பட்ட சமயத்தில் காங்கிரஸ் - திமுக-வுக்கு இடையே மோதல் போக்கு ஏற்படுவது இயல்பானது. மேலும்,  காங்கிரஸ் தேசிய கட்சி, திமுக மாநில கட்சி; இந்த வேறுபாடு இன்னும் மோதல் போக்கை அதிகப்படுத்தும். தொண்டர்களுக்குள் ஒற்றுமை இருந்தால் கட்சித் தலைவர்களிடையே மோதல் போக்கு ஏற்படாது.
  டி.வி.கிருஷ்ணசாமி, சென்னை.

  மறந்து...
  அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பதவிகளால் திமுக - காங்கிரஸ் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது என்பது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக தில்லியில் காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்தி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கூட்டிய கூட்டத்தில், கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை காரணமாக திமுக சார்பில் எவரும் பங்கேற்கவில்லை .  உள்ளாட்சித் தேர்தலைப்  பொருத்தவரை கட்சி  கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் பலர் உள்ளனர். இதனை இரு கட்சிகளும் மறந்து இரட்டை கரங்கள் என்பதை செயலில் காட்ட வேண்டும்.
  பி.துரை, காட்பாடி.

  முற்றுப்புள்ளி?
  ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொகுதி பங்கீடுகளில் நடந்த உரசல்களுக்குப் பிறகு திமுக - காங்கிரஸ் கட்சிகளிடையே இடைவெளி சற்று அதிகரித்திருப்பதை மறுப்பதற்கில்லை. காங்கிரஸுக்கு வாக்கு வங்கி இல்லை என துரைமுருகனும், "துரைமுருகனுக்கு ஞாபக சக்தி குறைந்துவிட்டது, கூட்டணியால் யார் பலனடைந்தார்கள் என்பதை சற்று பின்னோக்கிப் பார்க்க வேண்டும்' என மோகன்குமார மங்கலமும் மாறி மாறி அறிக்கை யுத்தம் நிகழ்த்தினர். இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதைப் போல் கே.எஸ்.அழகிரி - ஸ்டாலின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. 
  பா.சிதம்பரநாதன், கருவேலன்குளம்.

   


  பெரியார் குறித்துப் பேசியதற்கு மன்னிப்புக் கேட்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளது குறித்து என்ன கருதுகிறீர்கள்?

  இதுபற்றி வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகளை பத்து வரிகளுக்கு மிகாமல் அஞ்சல் அட்டையில் 
  எழுதி, வரும் திங்கள்கிழமைக்குள் கிடைக்குமாறு
  விவாத மேடை பகுதி, தினமணி, 
  29, இரண்டாவது பிரதான சாலை, 
  அம்பத்தூர் தொழிற்பேட்டை, 
  சென்னை - 600 058 
  என்ற முகவரிக்கு அனுப்பவும்.
  இமெயில்: edit.dinamani@gmail.com 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai