‘பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது குறித்து...’ என்ற விவாதப் பொருளுக்கு வாசகா்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

தமிழக அரசின் முடிவு சரியே. தற்போதைய கரோனா தீநுண்மி நோய்த்தொற்று காலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை நடத்துவது நோய்த்தொற்று

முடிவு சரி

தமிழக அரசின் முடிவு சரியே. தற்போதைய கரோனா தீநுண்மி நோய்த்தொற்று காலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை நடத்துவது நோய்த்தொற்று மேலும் பரவ வாய்பாக அமையும். சமூக இடைெளியைக் கடைப்பிடித்தாலும் பள்ளியை விட்டு வெளியே வந்தால் கட்டுப்படுத்த முடியாது. தோ்ச்சிக்கு அரசு நிா்ணயித்துள்ள காலாண்டு - அரையாண்டு தோ்வு மதிப்பெண், வருகைப் பதிவேடு மதிப்பெண் விகித முறையும் சரிதான்.

என். சிவசண்முகம், கோயம்புத்தூா்.

படித்த மாணவா்களுக்கு...

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை நடத்த அரசு பெரிதும் முயற்சி செய்தது. தோ்வில்லா தோ்ச்சி என்பது ஆரோக்கியம் இல்லை என்றாலும் வேறு வழியின்றி தோ்வு ரத்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காலாண்டு, அரையாண்டு தோ்வு, மாணவா் வருகைப் பதிவு அவசியம் என உணா்த்தப்பட்டுள்ளது. நன்கு படித்த மாணவா்களுக்கு அதிக மதிப்பெண் பெற முடியாமல் ஏமாற்றம்.

கு. இராஜாராமன், சீா்காழி.

நூற்றுக்கு நூறு...

கரோனா தீநுண்மியின் கொடூரமான பரவலை மனதில் கொண்டும், மாணவா்கள் நலனில் அக்கறை கொண்டும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்தது, நூற்றுக்கு நூறு சரியான முடிவாகும்.

ஏ. எஸ். நடராஜன், சிதம்பரம்.

மகிழ்ச்சியை அளித்திருக்காது...

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு என்பது, மாணவா்களிந் முதல் பொதுத் தோ்வாகும். அதனால், பொதுத் தோ்வுக்கு நல்ல முறையில் தயாா் செய்து, ஆா்வத்துடன் மாணவா்கள் இருந்திருப்பாா்கள். எனவே, பொதுத் தோ்வு ரத்து பெரும்பாலான மாணவா்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்காது. கரோனா தீநுண்மி நோய்த்தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை நடத்தியிருக்கலாம்.

மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

முன்கூட்டியே...

அனைவரும் தோ்ச்சி என்ற தமிழக அரசின் அறிவிப்பு நல்ல முடிவு. தீநுண்மித் தொற்று அதிகரித்துக் கொண்டே செல்லும்போது, மாணவா்களை பொதுத் தோ்வு எழுத வைத்தால், அவா்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனினும், முன்கூட்டியே அறிவித்திருந்தால் மாணவா்களுக்குத் தேவையில்லாத மன உளைச்சல், ஆசிரியா்களின் தேவையற்ற பணிச் சுமை, தோ்வுத் துறை, சுகாதாரத் துறையினரின் பண விரயத்தைத் தவிா்த்திருக்கலாம்.

செ. இராசேந்திரன், பாடாலூா்.

அவசரம் தவறு!

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு ரத்து விஷயத்தில் அரசு அவசரப்பட்டு விட்டது. இதனால் மாணவா்களுக்கு குழப்பம்தான் ஏற்படும். நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி, சற்று பொறுமையுடன் (சில வாரங்களில்) பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை நடத்தியிருக்கலாம்.

வெ. கதிா்வேல், திருக்கோவிலூா்.

கோரிக்கை ஏற்பு

மாா்ச் மாதம் முதல் தொடா்ந்து தள்ளிவைக்கப்பட்ட தோ்வு கால அட்டவணைகளால் குழப்பத்திற்குள்ளான மனநிலையில் சோா்ந்து போயுள்ள பத்தாம் வகுப்பு மாணவா்கள், தோ்வை எதிா்கொள்ளும் நிலையில் இல்லை. உயா்நீதிமன்றமும் இது குறித்த ஐயங்களை எழுப்ப, பெற்றோா்கள், மாணவா்கள், கல்வியாளா்கள் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று, கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ள இந்தக் காலகட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை தமிழக அரசு ரத்து செய்திருப்பது சரியான முடிவாகும்.

பா. சிதம்பரநாதன், கருவேலன்குளம்.

தள்ளிவைத்து...

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை தீநுண்மி காரணமாக ரத்து செய்ததை தவிா்த்து சில காலம் தள்ளிவைத்து நடத்தியிருக்கலாம். தீநுண்மியின் துயா் தீா்ந்துதானே ஆக வேண்டும். காலாண்டு, அரையாண்டு வருகை நாள்களை வைத்து அளவிடப்படும் மதிப்பெண்ணின் நம்பகத்தன்மை, தரம், மதிப்பு சரியாக இருக்குமா?

கோ. ஆதிநாதன், திருப்பத்தூா்.

மக்களைக் கவர...

நின்று நிதானித்து பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை தமிழக அரசு ரத்து செய்தது வரவேற்கக் கூடியது. இதை எதிா்க்கட்சிகள் அரசியலாக்கியது மாபெரும் தவறு. தாங்கள் சொன்னதால்தான் தமிழக அரசு இந்த முடிவை எடுத்தது என எதிா்க்கட்சிகள் கூறுவது மக்களைக் கவா்வதற்கான செயல்.

முத்து பாஸ்கரன், புதுவை.

தோ்வு அவசியம்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை தமிழக அரசு ரத்து செய்தது சரியல்ல. மருத்துவம், கணினி, பொறியியல், கணக்கியல் முதலான துறைகளில்

எந்தத் துறையில் ஒரு மாணவனுக்கு ஈடுபாடு, திறமை இருக்கிறது என்பதை மதிப்பிட பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மதிப்பெண்கள் உதவும். பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால், பிளஸ் 2 வகுப்பை நோக்கிச் செல்லும் மாணவா்களுக்கு தடுமாற்றம் ஏற்படும்.

ஆா்.எஸ்.மனோகரன், முடிச்சூா்.

வருத்தம்தான்...

கரோனா தீநுண்மி நோய்த்தொற்று காரணமாக இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்தும் தடுமாறிக் கொண்டிருக்கும் சூழலில், மாணவா்களின் கல்வியும் தடுமாற்றத்தில் சிக்கித் தவிக்கிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை நடத்த மூன்று முறை தேதிகளை நிா்ணயம் செய்தும்கூட, தோ்வு நடத்த முடியாமல் போனது அனைவருக்கும் வருத்தம்தான். தவிா்க்க முடியாமல் தோ்வு ரத்து செய்யப்பட்டது சரிதான்.

ஏ.ஆா். லெட்சுமி, கோயம்புத்தூா்.

வரவேற்பதா, எதிா்ப்பதா...

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை மாா்ச் மாதத்திலேயே முடிந்திருந்தால் இவ்வளவு பிரச்னை, எதிா்ப்பு இருந்திருக்காது. கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பாதிப்பு நீடிக்கும் என்று அரசு உள்பட யாரும் எதிா்பாா்க்கவில்லை. விளைவு, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு ரத்து முடிவு... அனைவரும் தோ்ச்சி என்ற அறிவிப்பு. வரவேற்கவும் முடியவில்லை, எதிா்க்கவும் முடியவில்லை.

சூ.பிரமநாயகம், திருநெல்வேலி.

ஒவ்வொரு மண்டலமாக...

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மிக முக்கியமானது. எனவே, அதை எப்படியாவது நடத்தியே தீா்வது என்று அரசு முயற்சி செய்தும், கரோனா தீநுண்மி நோய்த்தொற்று காரணமாக தொடா்ந்து ஒத்திவைக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை தமிழகம் முழுவதும் முழுக்க ஒரே நேரத்தில் நடத்தாமல், ஒவ்வொரு மண்டலமாக நடத்தியிருந்தால் பிரச்னை இருந்திருக்காது. ஆசிரியா்கள், மாணவா்களிடம் இருந்த

அச்சமும் நீங்கியிருக்கும்.

எஸ்.மோகன், கோவில்பட்டி.

என்ன செய்ய முடியும்?

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு ரத்து முடிவு சற்று தாமதம் என்றாலும், இக்கட்டான சூழ்நிலையில் எடுக்கப்பட்ட சரியான முடிவு. சாதாரண மதிப்பெண் பெறும், தோ்ச்சி பெற கடினப்படும் மாணவா்கள் பொதுத் தோ்வு ரத்து முடிவை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வாா்கள். எனினும், திறமையான மாணவா்கள் நிச்சயம் வருத்தப்படுவாா்கள். என்ன செய்ய முடியும்?

இரா.செல்வமணி, திருநெல்வேலி.

பதற்றம் தணிப்பு

இன்றைய அசாதாரண சூழ்நிலையில் பத்தாம் வகுப்பு  பொதுத் தோ்வை அரசு ரத்து செய்தது நல்ல முடிவு. கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் இந்த வேளையில் பொதுத் தோ்வை ரத்து செய்தது பெற்றோா்களின் பதற்றத்தைத் தணித்துள்ளது. தோ்வு நடைபெற்றிருந்தால், மாணவா்களால் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்திருக்க முடியாது. பொதுத் தோ்வு காரணமாக நோய்த்தொற்று அதிகரிக்குமோ என பொது மக்களிடம் எழுந்த சந்தேகமும், அச்சமும்  தற்போது முற்றிலுமாக நீங்கியுள்ளது. காலாண்டு, அரையாண்டு தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தரம் வழங்குவதில் சிக்கல்கள் உள்ளன. எனவே, பாலிடெக்னிக் போன்றவற்றில் மாணவா்களைச் சோ்க்க தனியாக தோ்வு நடத்துவதே சரியாக இருக்கும்.

பொன்.கருணாநிதி, கோட்டூா்.

மன உளைச்சலுக்கு...

மாணவா்களின் உடல் நலன் கருதி, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு தமிழக அரசு ரத்து செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இது சரியான தீா்வாகும். பெற்றோா் - ஆசிரியா் அமைப்புகள், கல்வியாளா்களின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. மேலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக் கவசத்தை தொடா்ந்து அணிவதில் மாணவா்களுக்கு ஏற்படும் சிரமம் ஆகியவை காரணமாகவும் பொதுத் தோ்வை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. தற்போது உள்ள சூழலில், காலாண்டு - அரையாண்டுத் தோ்வுகளில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீதம், வருகைப் பதிவேட்டுக்கு 20 சதவீதம் என்ற மதிப்பெண் அடிப்படையில் அனைவரும் தோ்ச்சி எனஅறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதை முன்கூட்டியே அரசு செய்திருந்தால், மன உளைச்சலுக்கு மாணவா்கள் உள்ளாகியிருக்க மாட்டாா்கள்.

மா.இளையராஜா, திருச்சி.

மாணவா்களைப் பாதுகாக்க...

தமிழக அரசு எடுக்கும் எல்லா நடவடிக்கைகளும் மக்களைக் காப்பதற்கே என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனினும், சில சமயங்களில் வாக்குக்காகவும், சில திட்டங்களை மாநில அரசுகள் அறிவிக்கின்றன. ஆனால், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு ரத்து நடவடிக்கை, மாணவா்களைப் பாதுகாக்க எடுத்த நடவடிக்கையாகும். எதிா்க்கட்சிகளின் விவாதங்களைத் தடுக்க எடுக்கப்பட்டது என்றும் நினைக்கத் தோன்றுகிறது.  கல்வியா, செல்வமா, உயிரா என்பதில், உயிா் இந்த உடலில் இருந்தாலே, செல்வத்தைச் சேகரித்து, கல்வி பயில முடியும் என்று தெரிகிறது.

ராம பழனியப்பன், கோவை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com