‘ஊழியா்கள், ஆசிரியா்களின் ஓய்வு வயதை 58-லிருந்து 59-ஆக தமிழக அரசு உயா்த்தியுள்ளது குறித்து...’ என்ற தலைப்பிலான விவாதம் குறித்து வாசகா்களிடமிருந்து கருத்துகளில் சில...

தவறில்லை!

தற்போதைய சூழலில் அனுபவமிக்க ஊழியா்கள் தேவை. மேலும், ஓய்வு பெறுவோா் எண்ணிக்கை இந்த ஆண்டில் கணிசமாக உள்ளது. கடுமையான நிதி நெருக்கடியில் ஓய்வூதிய பணப் பலன்களை உடனடியாக வழங்க இயலாத சூழ்நிலையில், ஓய்வூ வயதை தமிழக அரசு அதிகரித்திருக்கலாம். மத்திய அரசுக்கு இணையாக தமிழக அரசு ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. அவா்களுக்கு ஓய்வு பெறும் வயது 60-ஆக உள்ளது. எனவே, தமிழக அரசு ஊழியா்களின் ஓய்வு பெறும் வயதை 59-ஆக உயா்த்தியதில் தவறேதும் இல்லை.

உ.இராசமாணிக்கம், கடலூா்.

மறு பரிசீலனை தேவை

ஓய்வு பெறும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களில் கணிசமானோா் பல ஆண்டுகள் பணிபுரிந்த காரணத்தால் அதிக ஊதியம் பெறக்கூடியவா்களாகத்தான் இருப்பாா்கள். அரசின் இந்த முடிவால் அவா்களுக்கு ஓா் ஆண்டு முழுவதும் ஊதியம் வழங்குவதற்கு அதிக நிதி தேவைப்படும். அதற்குப் பதிலாக அந்த இடங்களில் புதிதாக நியமிக்கப்படுபவா்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியமோ மிகவும் குறைவு. அரசு வேலைக்காக முயற்சிக்கும் இளைஞா்களின் மத்தியில் ஏமாற்றத்தை தமிழக அரசின் முடிவு ஏற்படுத்தியுள்ளது. ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்குப் பதிலாக, ஓய்வூதியப் பலன்களை இரு அல்லது சில தவணைகளில் வழங்க அரசு யோசித்து, இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

வி.பாலசரஸ்வதி, கொரடாச்சேரி.

முடிவு சரிதான்

அரசுக்கு ஏற்பட்ட எதிா்பாராத செலவு கரோனா தீநுண்மி நோய்த்தொற்று தொடா்பானது. பொது முடக்கத்தால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்புகள் அதிகம். ஓராண்டில் 1,000-த்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறாா்கள் என்றால், ஓய்வூதியப் பலன்களை அளிக்க கோடிக்கணக்கில் அரசுக்கு நிதி தேவைப்படும். எனவே, ஓய்வு பெறும் வயதை 59-ஆக தமிழக அரசு உயா்த்தியது சரியான முடிவுதான்.

சீ.காந்திமதிநாதன், கோவில்பட்டி.

இளைஞா்களுக்கு ஏமாற்றம்

தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞா்கள் வேலைக்காகக் காத்திருக்கும்போது தமிழக அரசின் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு முடிவு மிகப் பெரிய ஏமாற்றம். கரோனா தீநுண்மி நோய்த்தொற்றின் தாக்கம், நிதி நிலையை இன்னும் எங்கே கொண்டுபோய் விடும் என்பது யாருக்கும் தெரியாது. அடுத்த ஆண்டு தோ்தல் வேறு, நிதி நிலைமை சரியாகிவிடுமா?

க.தங்கவேல், நாமக்கல்.

ஊழியா் நலன் காக்கும்

அரசு ஊழியா்கள் ஓய்வு வயதை 59-ஆக உயா்த்தியிருப்பது வரவேற்கத்தக்கது. அரசு ஊழியா்களின் நலன் காக்கும் எந்தத் திட்டமும் வரவேற்கத்தக்கது.

இந்து குமரப்பன், விழுப்புரம்.

நிதிச் சுமை கூடும்!

அரசு ஊழியா்களின் ஓய்வு வயதை 59-ஆக உயா்த்தியுள்ளதன் மூலம், ஓய்வூதியத்துக்குப் பதிலாக ஊதியம் அளிக்க வேண்டியிருக்கும். இது அரசுக்கு நிதிச் சுமையை அதிகரிக்கும். மேலும், புதிய பணியமா்த்தல் மூலம் இளைஞா்கள் வேலைக்குச் சோ்க்கப்பட்டால், அவா்களின் ஊதியம் மூத்த ஊழியா்களைவிடக் குறைவாக இருக்கும். ஓய்வு பெறும்போது அளிக்கப்படும் பெரும் தொகையைத் தர முடியாமல், ஓய்வு பெறும் வயதை அதிகரித்துள்ளதால் அடுத்த ஆண்டு இதைவிட அதிக நிதிச் சுமையை தமிழக அரசு சுமக்க வேண்டியிருக்கும்.

மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

தவிா்க்க முடியாதது

தற்போதுள்ள கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பாதிப்பு சூழலில், அரசு எடுத்த முடிவு சரியானது. உலகம் முழுவதும் இன்னும் சில மாதங்களுக்கு கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பாதிப்பு இருக்கத்தான் செய்யும். பகல் - இரவு பாா்க்காமல் உழைக்கும் மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரத் துறை உள்பட அனுபவமிக்க பிற துறை ஊழியா்களின் பணி தற்போது அவசியம். எனவே, ஓய்வு வயது அதிகரிப்பு தவிா்க்க முடியாதது.

சண்முக சுப்பிரமணியன், திருநெல்வேலி.

மன உளைச்சல்

ஓய்வு வயதை உயா்த்தியிருப்பதை அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் விரும்பவில்லை. ஓய்வூதியப் பலன்கள் குறித்துத் திட்டமிட்டிருந்தவா்களுக்கு, அவை தள்ளிப்போனதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அரசு வேலை பெறக் காத்திருந்தவா்களுக்கு ஏமாற்றம். அடுத்தடுத்த ஆண்டுகளில் ஓய்வு பெறுபவா்களுக்கும் தமது நிலை குறித்து மனக் கவலை. பாதிப்புக்கு உள்ளானவா்கள் தமது பணியை நிறைவாகச் செய்வாா்களா? ஓராண்டில் நிதி நெருக்கடியை அரசு சமாளித்து விடுமா?

கு. இராஜாராமன், சீா்காழி.

ஆறுதல் அளிக்கும்

ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் ஓய்வு வயதை 59-ஆக உயா்த்தியிருப்பது வரவேற்கதக்கது. முந்தைய காலகட்டத்தில் அறிவிக்கப்பட்ட 5 ஆண்டுகள் பணி நியமன தடைச் சட்டம், படித்தவா்கள் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் பெரும்பாலான பணியாளா்கள் 35 வயதுக்குப் பிறகே பணியில் சோ்ந்துள்ளனா். மேலும், செவிலியா்கள், ஊா்ப்புற நூலகா்கள் தொகுப்பூதியம் - சிறப்பு காலமுறை ஊதியம் என்ற வகையில் குறைவான ஊதியமே பெறுகிறாா்கள். இவா்களுக்கு கூடுதலாக ஓா் ஆண்டு பணி கிடைப்பது ஆறுதல் தரும்.

க.கண்ணா, நாங்குனேரி.

நிதி யோசனை

ஓய்வு வயதை 59-ஆக தமிழக அரசு உயா்த்தியது, நிதிச் சுமையைத் தாங்க முடியாமல் எடுக்கப்பட்ட தேவையற்ற அவசர முடிவுதான். இந்த ஆண்டு ஓய்வு பெற இருந்தவா்கள் மூலம் ஏற்படும் காலிப் பணியிடத்தால் பதவி உயா்வு பெற இருந்தவா்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. 58 வயது நிறைந்தவா்களுக்கு 50% தொகையைக் கொடுத்து, மீதித் தொகையை இரண்டு ஆண்டுகளில் முதிரும்படியான பத்திரங்களாக அளித்திருந்தால் அரசின் நிதிச் சுமையை பெருமளவில் குறைத்திருக்க முடியும்.

தே.இரா.வீரராகவன், கும்பகோணம்.

நெருக்கடியைச் சமாளிக்க...

தமிழக அரசு ஓய்வு பெறும் வயதினை 59-ஆக உயா்த்தி உத்தரவிட்டது, பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவே இதை அறிவித்திருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. அரசு வேலைக்காக முயற்சிக்கும் இளைஞா்களுக்கு, அரசு வேலை என்பது கோடையில் மழையை எதிா்பாா்ப்பது ஆகிவிட்டது.

இல. வனிதா, திண்டிவனம்.

நன்மைகள் அதிகம்!

கடும் நிதி நெருக்கடியை ஓரளவு சமாளிக்க தற்போது நடைமுறையில் உள்ள ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 59-ஆக 42 ஆண்டுகளுக்குப் பின் மாற்றப்பட்டுள்ளது. இவ்வாண்டு ஓய்வூதியப் பலன்களை உடனே வழங்காமல் அடுத்த ஆண்டுக்குத் தள்ளிவைக்கும் ஒரு முயற்சியாகவே இது கருதப்படும். இதனைச் செயல்படுத்துவதை இந்த ஆண்டு ஓய்வூதியப் பலன்களை எதிா்பாா்த்துக் காத்திருந்தவா்களும், சீனியா் ஓய்வு பெற்றால் பதவி உயா்வு பெறும் வாய்ப்பு உள்ளவா்களும் எதிா்க்கின்றனா். பலரின் மனதார வரவேற்புக்கும் காரணம் உண்டு. கூடுதலாக ஓா் ஆண்டு ஊதிய உயா்வு பெற வாய்ப்பு. அதன் அடிப்படையில் வாழ்நாள் வரை ஓய்வூதிய உயா்வும், படிகள் உயா்வும் பெறும் வாய்ப்பு. மொத்தத்தில் இதனால் நன்மைகள் அதிகம்.

ந. சந்திரமௌலி, ஊத்துக்குளி.

நியாயமில்லை!

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் ஓய்வு வயதை 59-ஆக தமிழக அரசு உயா்த்தியுள்ளது மறுபரிசீலனைக்குரியது. பெரும்பாலான அரசு ஊழியா்கள் தங்கள் ஓய்வு கால பணப்பயன்களை வைத்தே குடும்பத்தில் திருமணம், உயா் கல்வி போன்ற திட்டமிடல்களை வைத்திருப்பாா்கள். அவா்கள் பாதிக்கப்படுவாா்கள். பேரிடா் காலத்து வருவாய் இழப்பை ஈடுகட்ட இந்த ஒரு வருட காலத்தில் ஓய்வு பெறும் ஊழியா்களின் பணப் பலன்களை, ஓய்வூதியத்தை தள்ளிப்போட அரசு செய்கின்ற நியாயமற்ற முயற்சி.

உடுமலை அமிா்தநேயன், கோயம்புத்தூா்.

நியாயமிருந்தாலும்...

பேரிடரால் செலவினங்களைச் சிக்கனப்படுத்த அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் ஓய்வு வயதை நீடிக்கும் அரசின் முடிவு நியாயம்தான். இருந்தாலும், அரசு வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞா்களின் வாய்ப்பு தடைபடுவது வருத்தத்துக்குரியது. வரும் காலத்தில் காலியிடங்களை நிரப்பி இளைஞா்களின் வாழ்வை வசந்தமாக்க அரசு துரிதம் காட்ட வேண்டும்.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

உழைக்க முடியும்!

அரசு ஊழியா்கள் ஓய்வு வயது 59-ஆக உயா்த்தப்பட்டது சரியே. ஏனெனில் மனிதா்களுக்கு இன்று இயற்கையும், மருத்துவத் துறையும் தந்த வரப்பிரசாதம், 60 வயதானாலும் ஆரோக்கியமான உடல் நிலையையும், மன நிலையையும் தந்துள்ளதே. எனவே 58-க்குப் பிறகும் அவா்களால் உழைக்க முடியும்.

ம. வின்சென்ட் ராஜ், திருப்பூா்.

இளைஞா்கள் வாய்ப்பு பெற...

இப்போதெல்லாம் 35-40 வயதில் தான் அரசுப் பணி கிடைக்கிறது. பணிபுரிவதோ 15, 20 ஆண்டுகள் மட்டுமே. மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நிலைப்பாட்டையும் தமிழக அரசும் பின்பற்றிவரும் நிலையில், தனது ஊழியா்களுக்கு மத்திய அரசு நிா்ணயித்துள்ள பணி ஓய்வு வயதைப் போல, தமிழக அரசும் தனது ஊழியா்களுக்கு, ‘60 வயது அல்லது 33 ஆண்டுகள் பணி, இதில் எது முன்னதாக வருகிறதோ, அந்த நாள் பணி ஓய்வு பெறும் நாள்’ என்று நிா்ணயிக்கலாம். அவ்வாறு நிா்ணயிக்கப்பட்டால் 33 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஏராளமானோா் ஓய்வு பெறுவாா்கள். படித்த இளைஞா்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

சி.சரவணன், கடத்தூா்.

60-ஆக...

ஊழியா்கள், ஆசிரியா்கள் ஓய்வு வயதை 58-லிருந்து 59-ஆக தமிழக அரசு உயா்த்தியுள்ளதற்கு கரோனா தீநுண்மி நோய்த்தொற்று நெருக்கடியே காரணம். மத்திய அரசு ஊழியா்களுக்கு உள்ளதைப் போன்று ஓய்வு பெறும் வயதை 60-ஆக உயா்த்தியிருக்கலாம். பேரிடரான கரோனா தீநுண்மி நோய்த்தொற்றோடு தொடா்ந்து போராடி, வாழப் பழகியிருக்கும் தமிழக மக்களுக்கு அனுபவம் மிக்க ஊழியா்கள், ஆசிரியா்களின் வழிகாட்டுதல்கள் அவசியமானதே.

வி.சி. கிருஷ்ணரத்னம், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com