கடந்த வாரம் கேட்கப்பட்ட "கரோனா நோய்த்தொற்றுப் பரவல் முடிவுக்கு வராத நிலையில் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க அரசு முடிவெடுத்திருப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

கரோனா நோய்த்தொற்றுப் பரவல் முடிவுக்கு வராத நிலையில் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க அரசு முடிவெடுத்திருப்பது தவறு.

பேராபத்து
 கரோனா நோய்த்தொற்றுப் பரவல் முடிவுக்கு வராத நிலையில் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க அரசு முடிவெடுத்திருப்பது தவறு. எல்லா மாணவர்களும் நோய் எதிர்ப்புத்திறன் மிக்கவர்களாக இருக்க மாட்டார்கள். மேலும், அவர்கள் கல்வி நிலையங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதும் இயலாத காரியம். இதனால் எல்லா மாணவர்களுக்கும் நோய்த்தொற்று பரவிவிடும் பேராபத்து உள்ளது.
 வ. ரகுநாத், மதுரை.
 அடையாளம்
 எத்தனை காலம்தான் கரோனாவுக்கு பயந்து கொண்டு பள்ளிகளைத் திறக்காமல் இருப்பது? பொழுதுபோக்கும் இடமான திரையரங்குகளையே திறந்து விட்டார்கள். கல்வி கற்பிக்கும் பள்ளிகளைத் திறப்பதில் தயக்கம் தேவையில்லை. பள்ளிகளை திறக்காவிட்டால் மாணவர்கள் வீட்டில் இருக்க மாட்டார்கள்.
 படம் பார்க்கச் செல்வார்கள். பள்ளிகளையும், கல்லூரிகளையும் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இயக்கலாம். இயல்பு நிலைக்கு திரும்புவதன் அடையாளமே பள்ளித் திறப்பு.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 நோக்கம் சிதையும்
 மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தடுப்பதற்காகத்தான் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க, அரசே பள்ளி, கல்லூரிகளை திறக்க முடிவெடுத்தால், பொது முடக்கத்தின் நோக்கமே சிதைந்து விடும். மழைக்காலம் முடிந்த பின்பு கல்வி நிறுவனங்களைத் திறப்பது பற்றி அரசு யோசிப்பதே நல்லது. உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை செவிமடுத்து, பெற்றோரின் பதற்றையும் உணர்ந்து அரசு செயல்படுவதே புத்திசாலித்தனம்.
 ரெ. சுப்பாராஜு, கோவில்பட்டி.
 தொடர்கதை
 தமிழக அரசின் கல்வித்துறை சார்பாக ஏதாவது ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டால், அன்றைக்கே அதனை மாற்றி மற்றொரு அறிவிப்பு வரும். ஏனெனில், சரியான காரணங்களைப் பரிசீலிக்காமல் அரசு ஒரு அறிவிப்பை வெளியிடுவதும் பிறகு அதனை மாற்றி வேறு ஒரு அறிவிப்பை வெளியிடுவதும் தொடர்கதையாகி விட்டது. தீநுண்மிப் பரவும் வேகத்தையும் தடுப்பூசி இல்லா சோகத்தையும் கருத்தில் கொண்டு அரசு முடிவெடுக்க வேண்டும்.
 பா. சக்திவேல், கோயம்புத்தூர்.
 புறக்கணித்தது ஏனோ?
 அரசின் முடிவு தவறு. மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு வரும்போது தெருக்களிலும், பேருந்துகளிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது கடினம். மேலும், மழைக்காலத்தில் நோய்தொற்று அதிகரிக்கக் கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியதை அரசு புறக்கணித்தது ஏனோ? பள்ளித் திறப்புக்கு பதிலாக தற்போது நடைமுறையிலுள்ள ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தி, மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
 மா. இளையராஜா, திருச்சிராப்பள்ளி.
 அச்சம் இருக்கிறது
 நோய்த்தொற்றுப் பரவல் கட்டுக்குள் வரவில்லை. இன்னமும் தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்படவில்லை. கரோனா நீநுண்மியின் இரண்டாம் அலையும் வரலாம் என்ற அச்சமும் இருக்கிறது. இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. நம் நாட்டில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆன்லைன் வகுப்புகள் ஓரளவு நன்றாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அதுவே தொடரட்டும்.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 கட்டுப்படுத்த இயலாது
 அரசு முடிவெடுத்திருப்பது தவறு. பள்ளி, கல்லூரி மாணவர்களையும் ஆசிரியர்களையும் நோய்த்தொற்று தாக்கும் வாய்ப்பு உருவாகும். பேருந்துகள், கிருமிநாசினி மூலம் தூய்மை செய்யப்பட்டாலும் மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாத நிலைதான் உள்ளது. மாணவர்கள், தொடக்கத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தாலும் ஓரிரு நாட்களில் இயல்பாகப் பழக ஆரம்பித்து விடுவர். அவர்களைக் கட்டுப்படுத்த இயலாது.
 சோம பொன்னுசாமி, சென்னை.
 நிதர்சனம்
 அரசின் முடிவு சரியே. ஒழுக்கத்தையும், வாழ்வியல் முறைகளையும் கற்றுத் தரும் இடம் பள்ளியும் கல்லூரியுமே. மாணவர்கள், நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வை கல்வியோடு சேர்த்து கற்றுக்கொள்ளக்கூடிய இடமாக இவை அமையும். மேலும், இக்கல்வியாண்டை மாணவர்கள் இழந்தால், அரசு மற்றும் வங்கித் தேர்வுகளுக்கு ஒரு வருடத் தகுதியை இழந்து பின்னடைவார்கள் என்பதே நிதர்சனம்.
 தி. சிவம், திருச்சிராப்பள்ளி
 உயிர் முக்கியம்
 நோய்த்தொற்றுப் பரவல் உலகில் எங்குமே இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க தமிழக அரசு முடிவெடுத்திருப்பது சரியல்ல. கல்வி நிறுவனங்களை திறந்து மாணவர்களின் உயிரோடு விளையாட வேண்டாம். மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்பதும், அவர்கள் மனம் பாதிக்கப்படுகிறது என்பதும் உண்மைதான். அவற்றையெல்லாம்விட உயிர் முக்கியமானதல்லவா?
 த. இராமலிங்கம், சென்னை.
 கடினமான செயல்
 அரசு அறிவித்தபடி பள்ளி, கல்லூரிகளைத் திறந்தால், பொதுப் போக்குவரத்தில் காலையும் மாலையும் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க இயலாது. சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்க இயலாது. மேலும் பள்ளி மாணவர்களுக்கிடையே காலை முதல் மாலை வரை கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வைப்பதும், அவர்களைக் கண்காணிப்பதும் மிகவும் கடினமான செயல். எனவே அரசு, பள்ளி, கல்லூரிகளைத் திறக்க முடிவெடுத்துள்ளது சரியல்ல.
 ஆ. ஜுடு ஜெப்ரி ராஜ், சோமனூர்.
 கவனக்குறைவு
 கரோனா நோய்த்தொற்றுப் பரவல் முடிவுக்கு வராத நிலையில் அரசின் முடிவு சரியானதல்ல. பள்ளி செல்லும் குழந்தைகள் விளையாட்டுத்தனமாகவே செயல்படுவர். நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கும அளவுக்கு அவர்கள் பக்குபட்டவர்கள் அல்ல. மாணவர்களின் கவனக்குறைவு காரணமாக நோய்த்தொற்று பெற்றோரையும் பாதிக்கக் கூடும். எனவே, பள்ளி, கல்லூரிகளைத் திறக்காமல் இருப்பதே சாலச்சிறந்தது.
 எஸ்.எம்.ஏ. செய்யது முகம்மது,
 மேலப்பாளையம்.
 அதிக அச்சம்
 இப்போது பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது மிகவும் தவறான முடிவாகும். எத்துணைப் பாதுகாப்பாக இருப்பினும் எதிர்பாராத விதமாக நோய்த்தொற்று ஏற்படும் நிலையே எங்கும் காணப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல மாணவர்கள் அச்சப்படுகிறார்கள். அவர்களை அனுப்பி வைக்க பெற்றோர் அதிக அச்சப்படுகிறார்கள். அரசு, நோய்த்தொற்று பாதிப்பு முழுமையாக நீங்கிய பிறகே பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வேண்டும்.
 ஆர். தீனதயாளன், காரமடை.
 மறுபரிசீலனை தேவை
 பள்ளி, கல்லூரிகளைத் திறக்க அரசு முடிவு எடுத்திருப்பது சரியல்ல. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதை எண்ணியே அரசு இம்முடிவை எடுத்துள்ளது. இருப்பினும் இன்னும் சற்று நம்பிக்கையான சூழ்நிலை ஏற்படும் வரை நாம் பொறுத்திருப்பதுதான் நல்லது. இந்த அறிவிப்பை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அரசின் முடிவால் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்து விடக்கூடாது. பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வேண்டாம்.
 ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
 விளையாட வேண்டாம்
 தமிழகத்தில் நோய்தொற்றுப் பரவல் குறைந்து வருகிறதே தவிர முற்றிலுமாக நீங்கிவிடவில்லை. பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதற்கு அரசு அவசரம் காட்டி மாணவர்களின் உயிரோடு விளையாட வேண்டாம். பெற்றோர், மிகுந்த அச்சத்துடன்தான் தங்கள் பிள்ளைகளை அனுப்ப நேரிடும். அரசு, கரோனா பாதிப்பை சிறப்பு நிகழ்வாகக் கொண்டு, இந்த கல்வியாண்டை விடுமுறையாக அறிவித்து, வேலைவாய்ப்புக்கான வயது வரம்பை ஒரு ஆண்டு நீட்டிக்க வேண்டும்.
 ஏ.பி. மதிவாணன், சென்னை.
 தெரிந்தே செய்யும் தவறு
 நோய்த்தொற்று மெல்ல மெல்லக் குறைந்துவரும் நிலையில், இன்னும் சற்றுப் பொறுத்திருக்காமல் தியேட்டர்களை முன்னோட்டமாகத் திறந்து, அடுத்து பள்ளி, கல்லூரிகளைத் திறக்க அரசு முடிவெடுத்திருப்பது தெரிந்தே செய்யும் தவறாகும். மாணவர்களால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க இயலாது என்பது தெரிந்த செய்திதானே? மாணவர்கள் நலனில் அக்கறைக் காட்டாமல் அதை பெற்றோரின் பொறுப்பாக்கி அரசு வேடிக்கை பார்ப்பது போல் உள்ளது இந்த அறிவிப்பு.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 நல்லதல்ல
 பிரிட்டன், பிரான்ஸ் போன்ற பல நாடுகள் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்தச் சூழலில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளைத் திறக்கும் முடிவு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், அடிக்கடி கிருமிநாசினியால் கைகளைக் கழுவுதல் போன்றவை எந்த அளவுக்கு பள்ளி, கல்லூரிகளில் பின்பற்றப்படும்? மாணவர்களின் உயிரோடு விளையாடுவது நல்லதல்ல.
 மு. வசீகரன், ராஜபாளையம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com