கடந்த வாரம் கேட்கப்பட்ட "பள்ளிகள் பாடத் திட்டத்தை முடிக்க இயலாததால் கல்வி ஆண்டை ஜூலை வரை நீட்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கை சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

பள்ளிகள் பாடத் திட்டத்தை முடிக்க இயலாததால் கல்வி ஆண்டை ஜூலை வரை நீட்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கை சரியல்ல. பள்ளிகளை டிசம்பர் அல்லது ஜனவரியில் திறந்து மே வரை பாடங்களை நடத்தலாம்.

சரியல்ல
 பள்ளிகள் பாடத் திட்டத்தை முடிக்க இயலாததால் கல்வி ஆண்டை ஜூலை வரை நீட்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கை சரியல்ல. பள்ளிகளை டிசம்பர் அல்லது ஜனவரியில் திறந்து மே வரை பாடங்களை நடத்தலாம். அதுவரை நடத்தப்பட்ட பாடத் திட்டத்தில் வினாக்களை தயாரித்து தேர்வை நடத்தலாம். அடுத்த கல்வியாண்டை ஜூலையில் தொடங்கலாம். இந்த கல்வியாண்டை ஜூலை வரை நீட்டித்தால் தேர்வு எப்போது? அடுத்த கல்வியாண்டு எப்போது? எனவே, இந்த யோசனை தவறு.
 கே. வேலுச்சாமி, தாராபுரம்.
 அவசியமில்லை
 அரசு, பாடத் திட்டத்தைக் குறைத்துள்ளது. மேலும் பள்ளி பாடங்களை பல்வேறு தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி வருகின்றன. ஒன்பதாம் வகுப்பு வரைஅனைவரும் தேர்ச்சி என்ற முறையே இந்த ஆண்டு பின்பற்றப்படும். எனவே அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான தேர்வுகளை மட்டும் மார்ச் இறுதியில் தொடங்கி தொடர்ந்து நடத்தினால் கல்வி ஆண்டை நீட்டிக்க வேண்டியஅவசியமில்லை.
 ரெ. சுப்பாராஜு, கோவில்பட்டி.
 ஏற்புடையதன்று
 இணையதளம் மூலம் வகுப்புகள் நடத்தப்படும்போது வழக்கமான நேரத்தை விட குறைவான நேரத்தில் பாடங்களை முடிக்க முடியும். அதற்கு ஆசிரியர்களின் முன் தயாரிப்புகள், கடின உழைப்பு, திட்டமிடுதல் ஆகியவை அவசியம். மே மாதத்திற்குள் இந்தக் கல்வியாண்டை முடித்தால்தான் அடுத்த கல்வியாண்டாவது வழக்கம்போல் அமையும். ஆகவே, ஜூலை மாதம் வரை கல்வியாண்டை நீட்டிக்கச் செய்வது ஏற்புடையதன்று.
 பா. சக்திவேல், கோயம்புத்தூர்.
 சரியானதே
 இந்தக் கோரிக்கை சரியானதே. அப்போதுதான் ஓரளவுக்காவது பாடத் திட்டத்தை முடிக்க இயலும். ஆய்வக செய்முறைப் பயிற்சிகளை செய்து முடிக்க முடியும். எட்டு மாதங்களாக தடைபட்டுள்ள எழுத்துப் பயிற்சிகளை நிறைவேற்ற முடியும். அடுத்த ஆண்டு வரவுள்ள மாநில சட்டப்பேரவைத் தேர்தலையும் கணக்கில் கொள்ள வேண்டும். மாணவர்களை கல்வி ரீதியில் முழுமையாக தயார்படுத்தாத கல்வியாண்டு மதிப்பற்றது. கல்வியைப் பெறுவதற்கான ஒரே வழி கற்பதுதானே தவிர, காலத்தைக் குறைப்பதன்று.
 ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
 பள்ளிச் சூழல்
 மாணவர்கள் இணைய வழியிலும் தொலைக்காட்சி வாயிலாகவும் கல்வி கற்று வருகின்றனர். அவற்றில், பள்ளி வகுப்புகளைப்போல் அதிக நேரம் பாடங்களைக் கற்றுக்கொள்ள இயலாத சூழல்தான் உள்ளது. அதனால், மாணவர்கள் பாடத் திட்டத்தை முழுமையாக கற்று முடிக்க இயலாத நிலைதான் தற்போது இருக்கிறது. மாணவர்கள் மற்ற மாணவர்களோடு சேர்ந்து இருக்கும் பள்ளிச் சூழலுக்குள் தம்மை இணைத்துக்கொண்டால்தான் எளிதாகப் படிக்க இயலும்.
 நெ. இராமச்சந்திரன், திருக்களம்பூர்.
 நேரடிக் கல்வி
 பள்ளிகளின் பாடத் திட்டத்தை நம்மால் குறைக்க முடியும். மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள பாடங்களில் மொழி மற்றும் கணிதப் பாடங்களை மட்டும் இந்த ஆண்டு முழுமையாகக் கற்பித்தால் போதும். மற்ற பாடங்களில் உள்ள மூன்றாம் பருவப் பாடங்களை அடுத்த ஆண்டு பாடத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம். அறுபது நாட்களாவது நேரடியான ஆசிரியர் - மாணவர் கல்விக்கு வழிவகை செய்ய வேண்டும்.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 நியாயம்தான்
 இந்தக் கோரிக்கை நியாயம்தான். பள்ளி என்றால் ஐந்து மணி நேரம் வகுப்புக்கள் நடக்கும். அனைத்து பாடங்களையும் சொல்லி கொடுக்க முடியும். ஆனால், ஆன்லைன் வகுப்புகள் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் மட்டுமே நடத்த முடிகிறது. அனைத்துப் பாடங்களையும் முடிக்க மேலும் சில மாதங்கள் வேண்டும். மாணவர்கள் பாடங்களை ஆழ்ந்து, புரிந்து படிக்க நிச்சயம் இந்த நீட்டிப்பு உதவும்.
 உஷாமுத்துராமன், மதுரை.
 தள்ளிப் போகும்
 நோய்த்தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக நாடே முடங்கியிருக்கிறது என்பதே உண்மை. ஆனாலும், பள்ளி மாணவர்கள்ஆன்லைன் முறையில் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த கல்வியாண்டை ஜூலை வரை நீட்டித்தால், அடுத்த கல்வியாண்டை வழக்கமான காலத்தில் தொடங்க இயலாது. தொடர்ந்து எல்லாமே தள்ளிப் போகும். எனவே, நடத்திய பாடங்களுக்கான வினாக்களைத் தயாரித்து தேர்வை நடத்துவதே நல்லது. அடுத்த கல்வியாண்டு முதல் முறையான பாடத் திட்டத்தை அமல்படுத்தலாம்.
 மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.
 சாத்தியமற்றது
 இந்த யோசனை தவறானது. கல்வி ஆண்டை ஜூலை வரை நீட்டித்தால் அடுத்தடுத்து வரும் கல்வி ஆண்டுகளை நிர்ணயிப்பதில் குழப்பம் ஏற்படும். இதனால் மாணவர்களின் கல்வி நிச்சயம் பாதிக்கப்படும். கல்வி ஆண்டை நீட்டிப்பதற்கு பதிலாக பள்ளிப் பாடங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, இந்த கல்வி ஆண்டையும் வழக்கம்போல் முடிப்பதுதான் சரியாகும். எத்தனை ஆண்டுகளுக்கு கல்வி ஆண்டை நீட்டித்துக் கொண்டே போக முடியும். அது சாத்தியமற்றது.
 கோ. ராஜேஷ் கோபால், அரவங்காடு.
 நம்பிக்கைக்குரியது
 கல்வியாண்டை ஜூலை வரை நீட்டித்தால்கூட பாடத் திட்டம் முழுவதையும் நடத்தி முடித்துவிட முடியாது. ஜூலைக்குப் பின்னர் எப்போது தேர்வு நடத்துவது? அடுத்த கல்வியாண்டின் தொடக்கம் எந்த மாதம்? இப்படி பற்பல கேள்விகள் எழுகின்றன. இணைய வழி கற்றலை மட்டும் வைத்து ஒரு மாணவனின் திறமையை அறிய இயலாது. வகுப்பறைக் கல்வியே நம்பிக்கைக்குரியது. எனவே இந்த யோசனை தவறு.
 கலைப்பித்தன், கடலூர்.
 மீண்டும் ஒருமுறை
 பாடத்தை முடிக்காமல் தேர்வு வைப்பது தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதுபோல் ஆகும். இல்லையென்றால், பள்ளிகள் திறந்த பின்னர் ஒருமுறை சில பாடங்களையாவது திரும்ப நேரில் நடத்திய பின்னர் தேர்வு வைக்கலாம். அப்படிப் பாடங்களைத் திரும்ப நடத்துவதற்கு ஆசிரியர்களுக்கு நேரம் இருக்க வேண்டும்; மாணவர்களும் திரும்பப் படிக்கத் தயாராக இருக்க வேண்டும். அவசர கதியில் முடிவு எடுப்பது கூடாது.
 ராம. பழனியப்பன், கோயம்புத்தூர்.
 அவசியம்
 இக்கல்வியாண்டில் எல்லாப் பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டாலும், அதனால் அனைத்து மாணவர்களும் பயன் பெற்றார்களா என்பது சந்தேகமே. குறிப்பாக, அரசுப் பள்ளி மாணவர்கள் இதில் பின்தங்கியே உள்ளனர். பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகளை நடத்தி, கொடுக்கப்பட்ட பாடத் திட்டத்தை முடிக்கவும், அரசுத் தேர்வுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத் தவும் ஆறுமாத காலமாவது வேண்டும். எனவே, குறையின்றி இந்தக் கல்வியாண்டை நிறைவு செய்ய கால நீட்டிப்பு அவசியமே.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 குழறுபடி
 இந்த யோசனை மிகமிக தவறானது. கல்விஆண்டில் பாடத் திட்டங்களைக் குறைத்து மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களைக் கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. வழக்கம்போல் ஏப்ரல் மாதத்தில் முடித்துவிட்டு ஜூன் மாதத்தில் அடுத்த ஆண்டிற்கான பாடத் திட்டத்தைத் தொடங்குவதே சரியாக இருக்கும். இந்த ஆண்டை நீட்டித்தால் அடுத்த ஆண்டிலும் குழறுபடி ஏற்படும். எனவே, இந்த கல்வி ஆண்டை வழக்கம்போல் உரிய காலத்தில் முடிக்க வேண்டும்.
 சீனி. செந்தில்குமார், தேனி.
 வரப்பிரசாதம்
 இணையவழிக் கல்வி ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. ஆனாலும் இந்தக் கல்வி ஆண்டுக்கான பாடத் திட்டங்களை குறித்த நாட்களுக்குள் முடிப்பது என்பது இயலாத காரியம். பாடச் சுமை அதிகரிப்பால் மாணவர்களுக்கு மன அழுத்தமும், வேகமாகப் பாடங்களை முடிக்க வேண்டியிருப்பதால் ஆசிரியர்களுக்கு மன உளைச்சலும் ஏற்படும். நிதானமான முறையில் பாடம் கற்பித்தலே இரு சாராருக்கும் பயன் தரும்.
 கே. ராமநாதன், மதுரை.
 அறிவுடைமை
 இந்த கல்வி ஆண்டை ஜூலை வரை தள்ளிப் போட்டால் ஒவ்வொரு ஆண்டும் தள்ளிப் போடாமல் பாடத் திட்டத்தைக் குறைத்து, அதன்பின் தேர்வை நடத்துவதே சரியானதாக இருக்கும். அதனால் மாணாக்கர்களும் சிரமப்பட வேண்டியிருக்காது. காலுக்கேற்றவாறு செருப்பை குறைப்பதா? செருப்புக்கேற்றவாறு காலைக் குறைப்பதா? எது அறிவுடைமை? இந்த கல்வி ஆண்டிற்குள்ளாகவே தேர்வை நடத்தி முடிப்பதே சரியானதாக இருக்கும்.
 உ. இராசமாணிக்கம், கடலூர்.
 முறையானது
 இக்கோரிக்கை ஏற்புடையது அல்ல. கல்வி ஆண்டு இதுவரை இருந்ததுபோலவே இந்த ஆண்டும் முடிக்கப்பட வேண்டும். பள்ளி பாடத் திட்டத்தின் அளவை வேண்டுமானால் குறைக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் திறப்பது போல கல்விக் கூடங்களைத் திறப்பதுதான் முறையானது. ஜூலை மாதம் வரை நீட்டித்தால் மீண்டும் கல்வியாண்டு மாறிப் போகும். இந்த நிலை நீடிக்க கூடாது. கல்வியாளர்கள் விரும்புவதும் இதைத்தான். பாடத் திட்டம் முடிக்கப்படாததால் கல்வியாண்டை மாற்றக் கூடாது.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com