டிஜிட்டல் ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?'


பொறுப்பற்ற செயல்

டிஜிட்டல் ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துகளுக்கு கட்டுப்பாடு விதிக்கவேண்டும் என்கிற கருத்து சரியே. டிஜிட்டல் வெளியில் வரும் கருத்துகளின் உண்மைத் தன்மையை அறிய இயலாது. யாரும் எதைப் பற்றியும் கருத்து கூறுவது சமூக அமைதிக்கு ஊறு விளைவிக்கும். எங்கோ ஓர் இடத்தில் நிகழும் சம்பவத்தை விமர்சிப்பதும் அதனைப் பற்றி தனக்கு தோன்றியதை எல்லாம் டிஜிட்டல் ஊடகத்தில் பதிவு இடுதலும் பொறுப்பற்ற செயல். எனவே, கட்டுப்பாடு தேவை.

வி.எஸ். ரவி, கடலூர்.

அறிவுடைமை அல்ல

டிஜிட்டல் ஊடகக் கருத்துகளுக்கு கட்டுப்பாடு கூடாது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் குழந்தை டிஜிட்டல் ஊடகம். உலகம் முழுதும் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் நாம் தெரிந்து கொள்ள உதவுவது டிஜிட்டல் ஊடகம்தான். சமூக விரோத கருத்துகள் எல்லா ஊடகங்களிலும் எப்போதாவது வருவதுதான். குற்றவாளிகளைத் தண்டிப்பதுதான் முறையே தவிர ஊடகக் கருத்துகளுக்கே கட்டுப்பாடு விதிப்பது அறிவுடைமை அல்ல.

சித. மெய்யப்பன், பள்ளத்தூர். 


குழப்பமான சூழல்

டிஜிட்டல் ஊடகக் கருத்துகளுக்குக் கட்டுப்பாடு தேவை. ஏனெனில் தனி மனிதரைப் பற்றியும், தலைவர்கள் பற்றியும், நாட்டைப் பற்றியும் எளிதாக அவதூறு செய்திகள் பரவ வாய்ப்பு உள்ளது. இதனால் குழப்பமான சூழல் உருவாவதோடு சில நேரங்களில் வன்முறை நிகழ்வுகளும் நடைபெறக்கூடும். ஆகவே டிஜிட்டல் ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துகளுக்குக் கட்டுப்பாடு தேவை.

சோம. பொன்னுசாமி, சென்னை.

கருத்து சுதந்திரம்

டிஜிட்டல் ஊடகங்களுக்குக் கட்டுப்பாடு தேவையில்லை. சிலர் தவறான கருத்துகளைப் பதிவிடுகின்றனர் என்பது உண்மையே. மருத்துவமனையில் இருப்பவர் இறந்து விட்டதாக செய்தி வெளியிடுகின்றனர். அப்படி செய்பவர்கள் மீது சைபர் கிரைம் பிரிவு மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தடை என்பது கருத்து சுதந்திரத்தை மறுப்பதாகும். கட்டுப்பாடு கூடாது.    

ரெ. சுப்பாராஜு, கோவில்பட்டி. 

ஏற்புடையது அல்ல

தங்கள் விருப்பம்போல் ஊடங்கங்களில் மரபுக்கு மீறிய கருத்துக்கள் இடம் பெறுகின்றன. அதனால் சமூகத்தில் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுகின்றன. எந்தக் கருத்தாக இருந்தாலும் அதில் பொது நன்மை கலந்திருக்க வேண்டும். எழுத்து சுதந்திரம் என்பதற்காக தவறான கருத்துக்களை வெளியிடுவது ஏற்புடையது அல்ல. ஆக்கபூர்வமான கருத்துக்களை மட்டுமே வெளியிட வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்க வேண்டியது அவசியம்தான். 

ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

மைல் கல்

ஒருவர் ஒரு செய்தியைப் பதிவு செய்தால் அது அடுத்த வினாடியே உலகத்தின் எந்த மூலையில் இருப்பவரையும் சென்று அடைகிறது. இது தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு மைல் கல். இதற்கு எதற்காகக் கட்டுப்பாடு? எல்லா நவீனத் தொழிலநுட்பத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கிறது. தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட்டால் குற்றங்கள் தானே குறையும். விரும்பிய கருத்தை வெளியிட ஜனநாயக நாட்டில் தடை கூடாது.

மா. முகிலன், செங்கோட்டை.   

எதிர்மறை விளைவு

இக்கருத்து சரியே. எந்த வகை ஊடகமும் தான் வெளியிடும் கருத்திற்கு முழு பொறுப்பினை ஏற்க வேண்டும். எவ்வித கட்டுப்பாடோ முறைப்படுத்தலோ இல்லாத போது உண்மைக்கு புறம்பான கருத்துகள் எளிதில் பரவும். அதன் காரணமாக சமூகத்தில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும். எனவே, நவீன தொழில்நுட்ப வடிவான டிஜிட்டல் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு அவசியம்.   

வ. ரகுநாத், மதுரை.  

மாற்றப்படும் பதிவு

டிஜிட்டல் ஊடகக் கருத்தை மக்கள் நம்பி
விடும் சூழல் இருக்கின்றது. மக்கள் பிரதிநிதிகள் பேசும் கருத்துகள் சில நேரம் டிஜிட்டல் ஊடகங்களில் வேறு மாதிரி மாற்றப்பட்டுப் பதிவு செய்யப்படுகின்றன. அதன் பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் உண்மையை விளக்க வேண்டியிருக்கிறது. எனவே பொதுவாக டிஜிட்டல் ஊடகக் கருத்துகளுக்கு கட்டுப்பாடு தேவையே. 

க. இளங்கோவன், மயிலாடுதுறை

.  
கண்கூடு

இன்று டிஜிட்டல் ஊடகம் என்பது கையில் இருக்கும் காகிதமும் பேனாவும் போல் ஆகிவிட்டது. இதில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம், எப்படி வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்  எனும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இதைப் பலரும் தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்பது கண்கூடு. இதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படா விட்டால் பல விபரீதங்கள் நிகழக்கூடிய அபாயம் உண்டு. எனவே இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். 

கோ.  ராஜேஷ் கோபால், அரவங்காடு.

நியாயமற்றது

ஜனநாயக நாட்டில் ஊடகங்களுக்குத் தடை கூடாது. டிஜிட்டல் ஊடகம் மூலம் பல உண்மைச் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள முடிகிறது. சிலர் சமூக விரோத கருத்துகளைப் பதிவிட்டிருக்கலாம். அவை எப்போதோ நடக்கும் நிகழ்வுகள். அதற்காக கருத்தை வெளியிடுவதற்கே கட்டுப்பாடு என்பது நியாயமற்றது. அச்சு ஊடகங்களில்கூட தவறான செய்திகள் இடம் பெற்றதுண்டு. அவற்றைத் தடை செய்யலாமா?

கு. மாணிக்கம், செங்கம்.

ஊடக உரிமை

மனம் போனபடி செயல்படுபவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு இருந்தால்தான் தவறான, அவதூறான, ஆபாசமான கருத்துகள் பதிவிடுவது நிறுத்தப்படும். கருத்து சுதந்திரம் என்பது ஊடகத்தினரின் உரிமைதான். ஆனால், அந்த உரிமையை சுயக் கட்டுப்பாடுடன் பயன்படுத்தத் தெரிய வேண்டும். கருத்து சுதந்திரம் வேண்டும்; அதில் கண்ணியம் காக்கப்படவும் வேண்டும்; அதற்குக் கட்டுப்பாடு வேண்டும். 

கு. இராஜாராமன், சீர்காழி.  

அவசியம்

டிஜிட்டல் ஊடகங்கள்  மூலம் வெளியிடப்படும் சில தவறான புள்ளிவிவரங்கள், சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும்படியான செய்திகள், குறிப்பிட்ட சமுதாயத்தினரைப் பாதிக்கும் செய்திகள் இவை உடனடியாகப் பரவுகின்றன. இதனால் தேவையற்ற கலவரங்கள்  ஏற்பட்டு அதனால் சட்டம்} ஒழுங்கு பாதிக்கப்படும் நிலை உருவாகிறது. எனவே, கட்டுப்பாடு மிக அவசியமானதே.

 
கே. ராமநாதன், மதுரை. 

வரப்பிரசாதம்

டிஜிட்டல் ஊடகம் கருத்துக்களை வேகமாக கொண்டு செல்கிறது. உடனுக்குடன் கருத்துக்கள் பதியப்பட்டு  கருத்துக்களை ஆதரித்தும் எதிர்த்தும் பதியப்படுகின்றன. கருத்தைப் பதிவிட்டவரும் படித்தவர்களும் தெளிவு பெறுகிறார்கள். தவறான கருத்துகள் வேகமாகப் பரவுகின்றன என்ற குற்றச்சாட்டு,  அவை உடனடியாகத் திருத்திக் கொள்ளப்படுவதால் வலுவிழந்து போய்விடுகிறது.  டிஜிட்டல் ஊடகம் சுதந்திரமான கருத்து பரிமாற்றத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம்.   

க. ரவீந்திரன்,  ஈரோடு.  

நிதர்சனம்

இக்கருத்து சரியானதே. தற்போது டிஜிட்டல் ஊடகம் என்பது பலதரப்பட்ட மக்களிடம் உடனுக்குடன் செய்திகளைக் கொண்டு சேர்க்கிறது. பல செய்திகள் சரியாக வாசிக்கப்படாமலேயே பிறருக்குப் பகிரப்படுகின்றன. பழைய செய்திகள் கூட மீண்டும் மீண்டும் சுழன்று கொண்டே வருகிறது. அதன் உண்மைத்தன்மை அனுப்பியவருக்கும் தெரியாது; பகிர்பவருக்கும் தெரியாது என்பதே நிதர்சனம். இதற்குக் கட்டுப்பாடு தேவைதான். 

சீனி. செந்தில்குமார், தேனி. 

நாகரிகமல்ல

டிஜிட்டல் ஊடகங்களில் யாரையும் எப்படியும் விமர்சிக்கலாம் என்பது நாகரிகமல்ல. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மதக்கலவரங்கள் உண்டாக்கும் வண்ணம் கருத்துக்கள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும் என்பது தவறு. கட்டுப்பாடு விதிப்பதன் மூலம் தேவையற்ற பிரசினைகள் தவிர்க்கப்படும். ஆகவே கட்டுப்பாடு அவசியம்.   

ந. சண்முகம், திருவண்ணாமலை.

தண்டனை தேவை


கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் நாட்டின் இறையாண்மையை இழிவு செய்யும் எந்த ஒரு செயலும் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது. கருத்து சுதந்திரத்திற்கு தணிக்கை அவசியமே. வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் தகவல் பரிமாற்றம் செய்வோர் தண்டிக்கப்பட வேண்டும். எனவே, டிஜிட்டல் ஊடகங்களுக்குக் கட்டுப்பாடு தேவைதான்.   

சிவ. வெங்கடேஷ், திருக்கோவிலூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com