கடந்த வாரம் கேட்கப்பட்ட "ஓர் அரசியல் கட்சியைப் பதிவு செய்ய அதில் 25 ஆயிரம் உறுப்பினர்களாவது இருக்க வேண்டும் என்கிற உயர்நீதிமன்ற யோசனை சரியா? தவறா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

ஓர் அரசியல் கட்சியைப் பதிவு செய்ய அதில் 25 ஆயிரம் உறுப்பினர்களாவது இருக்க வேண்டும் என்கிற உயர்நீதிமன்ற யோசனை சரியே. ஒரு சிலர்,

வரவேற்கத்தக்கது
 ஓர் அரசியல் கட்சியைப் பதிவு செய்ய அதில் 25 ஆயிரம் உறுப்பினர்களாவது இருக்க வேண்டும் என்கிற உயர்நீதிமன்ற யோசனை சரியே. ஒரு சிலர், தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியின் தலைவரிடம் அதிருப்தி அடைந்து தனது ஜாதி சார்ந்த சிலரைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு புதிய கட்சியைத் தொடங்குகிறார்கள். அத்தகைய கட்சிகளால் எந்தப் பயனும் இல்லை. எனவே, உயர்நீதிமன்ற யோசனை வரவேற்கத்தக்கதே.
 மு. பரந்தாமன், திருவண்ணாமலை.
 குழப்பங்கள்
 இது சிறந்த யோசனைதான். யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சியைத் தொடங்கலாம் என்று அனுமதி வழங்கியதன் விளைவாக அரசியல் கட்சி என்ற பெயரில் பதிவு செய்துள்ள அமைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாகி விட்டன. இதன் விளைவாக ஏற்படுகின்ற குழப்பங்கள் மிக மிக அதிகம். அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கு உறுப்பினர் எண்ணிக்கையை நிர்ணயித்திருப்பது சரியானது.
 மா. பழனி, தருமபுரி.
 சிறந்த வழி
 இந்த யோசனையை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். நமது நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் சிறு சிறு கட்சிகள் ஏராளமாக இருக்கின்றன. குறிப்பாக, நாட்டில் மலிந்து கிடக்கும் சாதி அமைப்புகளையெல்லாம் அரசியல் கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். அதற்கு உயர்நீதிமன்றத்தின் இந்த யோசனையே சிறந்த வழியாகும். குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கையை ஐம்பதாயிரம் என்று உயர்த்தினாலும் தவறில்லை.
 அ. பட்டவராயன், திருச்செந்தூர்.
 ஒரே நோக்கம்
 உயர்நீதிமன்ற யோசனை சட்டமாக்கப்பட வேண்டும். மழையில் முளைத்த காளான்களைப்போல் புதிது புதிதாக கணக்கு வழக்கின்றி கட்சிகள் பெருகி இருப்பது ஜனநாயகத்திற்கு பெரும் தலைவலி மட்டுமல்ல, தேர்தல் கமிஷனுக்கு தேவையற்ற செலவும் கூட. இவ்வாறு புதிதாக முளைக்கும் அரசியல் கட்சிகளின் ஒரே நோக்கம், பெரிய கட்சிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு அக்கட்சிகளுக்கு சாதகமாக செயல்படுவதுதான். இது ஒரு நல்ல யோசனைதான்.
 ரெ. சுப்பாராஜு, கோவில்பட்டி.
 அரசியல் வியாபாரம்
 உறுப்பினர் எண்ணிக்கை வரையறையோடு, ஒருவர் ஒரு கட்சியில் மட்டுமே உறுப்பினராக இருக்க முடியும் என்பதையும் கட்டாயமாக்க வேண்டும். ஒருவரின் உறுப்பினர் அட்டை எண்ணோடு அவருடைய ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் இதைச் செய்ய முடியும். இதன் மூலம் சிறு சிறு கட்சிகள் நடத்தி சில தனி நபர்கள் அரசியல் வியாபாரம் செய்வதைத் தடுக்க முடியும். அரசியல் வியாபாரத்தை முடக்க இதுவே சிறந்த வழி.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 தொண்டர் பலம்
 லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் உறுப்பினர்கள் இருப்பதாக் கூறிக்கொள்ளும் கட்சிகளே தேர்தல் காலத்தில் மிகவும் சிரமப்படுகின்றன. சில ஆயிரம் உறுப்பினர்களே உள்ள கட்சிகள் என்ன செய்ய முடியும்? ஒரு அரசியல் கட்சி தேர்தலை எதிர்கொள்வதற்கு பணபலம் மட்டும் போதாது. தொண்டர் பலமும் தேவை. தேர்தல் முடிவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த இயலாத கட்சிகளை தடை செய்வதே நல்லது.
 ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
 கண்கூடு
 சிறிய கட்சிகள், தேர்தல் நேரத்தில் பெரிய கட்சிகளுடன் பேரம் பேசுவதையும் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம். சிறிய கட்சிகளால் வாக்குகள் சிதறி, தகுதியான பலர் வெற்றி வாய்ப்பை குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இழந்திருக்கின்றனர். இது போன்ற கட்சிகள், தேர்தல்ஆணையத்துக்கும் இடையூறாக இருப்பதால் உயர்நீதிமன்றத்தின் யோசனை முற்றிலும் சரியே.
 உ. இராசமாணிக்கம், கடலூர்.
 புற்றீசல்கள்
 உயர்நீதிமன்ற யோசனை மிகவும் வரவேற்கத்தக்கதாகும். குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வதன் மூலம் "லெட்டர் பேட்' கட்சிகள் என்று சொல்லக்கூடிய மக்கள் செல்வாக்கு இல்லாத சிறிய கட்சிகள் உருவாவதைத் தடுக்க முடியும். இதனை சட்ட வடிவமாக்கினால், அவ்வப்போது, குறிப்பாக, தேர்தல் நேரத்தில் புற்றீசல் போல புதிது புதிதாக உதயமாகும் அரசியல் கட்சிகளுக்கு அணை போட முடியும்.
 எஸ்.எம்.ஏ. செய்யது முகம்மது,
 மேலப்பாளையம்.
 துரதிருஷ்டவசமானது
 இந்த யோசனை ஜனநாயகத்துக்கு எதிரானதாகும். இந்தியாவில் ஜனநாயகம் இன்னும் பிழைத்திருப்பதற்குக் காரணம், பலகட்சி அரசியல் முறைதான். பின்னர் இரு கட்சி ஆட்சிமுறை என்பார்கள். அதன்பின் எதிர்க்கட்சிகள், நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறு என்று கூறி தடை செய்வார்கள். ஆட்சியாளர்களுக்கு எதிரான குரல் யாருக்கும் கேட்காமலே போகும். நீதிமன்றங்கள் ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படுவது துரதிருஷ்டவசமானது.
 டி. சரவணகுமார், தாராபுரம்.
 நியாயமற்றது
 பணம் வாங்கிக் கொண்டு ஓட்டளிக்கும் வாக்காளர்கள் இருக்கும் சமுதாயத்தில், கட்சியைப் பதிவு செய்ய இருபத்தைந்தாயிரம் பேராவது உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது நியாயமற்றது. இதனால் காலப்போக்கில் நல்ல கட்சிகள் தங்களது அங்கீகாரத்தையும் இழக்க நேரிடும். இப்போதே பணம் படைத்தவர்களால் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடிகிறது. இந்த யோசனை ஜனநாயகத்தை நீர்த்துப் போகச் செய்யும்.
 ஆ. ஜுடு ஜெப்ரி ராஜ், சோமனூர்.
 வசூல் வேட்டை
 சிறிய அரசியல் கட்சிகளால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். உள்ளூரில் இரு பிரிவினரிடையே பிரச்னை ஏற்பட்டால் அக்கட்சியினர் அதில் தலையிட்டு இரு தரப்பினரிடமும் பணம் பறிக்கின்றனர். வணிகர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். தேர்தல் நேரத்தில் பெரிய கட்சிகளிடம் பேரம் பேசி பணத்தை சுருட்டுகின்றனர். எனவே, அரசியல் கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கைக்கு வரையறை தேவைதான்.
 கா. பத்மாவதி, சேலம்.
 உதவியும் பலனும்
 உயர்நீதிமன்ற யோசனை சரியே. அதிக உறுபினர்கள் இல்லாத சிறிய கட்சிகள், தேர்தல் நேரத்தில் பெரிய கட்சிகளுக்கு வாக்குச் சாவடியிலும் வாக்கு எண்ணிக்கையின்போதும் மட்டுமே உதவுகின்றன. அதற்கான பலனையும் பெற்றுக் கொள்கின்றன. மக்களுக்கு எந்தவிதத்திலும் பயன் அளிக்காத, இந்த சின்னஞ்சிறு கட்சிகள், முறைகேடான பணப் பரிமாற்றத்திற்கும், முறைகேடான அரசியல் நடவடிக்கைகளுக்குமே பயன்படுகின்றன. உயர்நீதிமன்றத்தின் யோசனை சரியே.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 முரண்பாடு
 மேலை நாடுகளைப் போன்று இரண்டு கட்சிகள் மட்டுமே என்பதை நம் நாட்டில் செயல்படுத்த இயலாது. ஒரே மாதிரியான கொள்கையைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியிலேயே பிரிவுகள் இருக்கின்றன. இதனால் கொள்கைக்காக வேறு வேறு கட்சி என்ற வாதம் அடிப்பட்டு போகிறது. கட்சித் தலைமையோடு முரண்பாடு ஏற்பட்டு புதிய கட்சியைத் தொடங்குவது இப்போது இயல்பாகி விட்டது. எனவே, உயர்நீதிமன்ற யோசனை சரியே.
 தொ.ச. சுகுமாறன், வேலூôர்.
 கருத்து வேற்றுமை
 சிறிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடும்போது நீண்டு விடும் வேட்பாளர் பட்டியலால் அரசுக்கு தேர்தல் நடைமுறைச் செலவு கூடுகிறது. அப்படியே தேர்தலில் உதிரிக் கட்சிகள் வென்று ஒன்றிணைந்து ஆட்சியமைத்தாலும் நாளாவட்டத்தில் கருத்து வேற்றுமைகளால் ஆட்சிக் கவிழ்ப்பு, குதிரை பேரம், கட்சித் தாவல் போன்ற நடவடிக்கைகளால் ஜனநாயகமே கேலிக்குரியதாகிறது. எனவே, உயர்நீதிமன்றத்தின் யோசனை வரவேற்கத் தக்கதே.
 கே. ராமநாதன், மதுரை.
 பொருத்தமானது
 உயர்நீதிமன்ற யோசனை சரியே. தேர்தல் காலத்தில் பெரிய கட்சிகள் சிறிய கட்சிகளை யும் கூட்டணியில் சேர்த்து ஒன்றிரண்டு இடங்களை அளித்து அங்கீகாரம் பெற வைத்துவிடுகன்றன. இப்போது உயர்நீதிமன்றம் கூறியுள்ள யோசனை மிகப் பொருத்தமானது. இருபத்தையாயிரம் பேர் மட்டுமல்ல ஐம்பதாயிரம் உறுப்பினர்கள் ஒரு கட்சியின் அங்கீகாரத்திற்குத் தேவை என்றாலும் வரவேற்கத்தக்கதே.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 சமூகத் தொல்லை
 ஓர் அரசியல் கட்சியைப் பதிவு செய்ய அதில் 25 ஆயிரம் உறுப்பினர்களாவது இருக்க வேண்டும் என்கிற உயர்நீதிமன்ற யோசனை சரியே. சிலர் தமக்கு செல்வாக்கு இருப்பதாக நம்பி, ஆரம்பித்த கட்சிகள் பலவும் மக்களால் ஏற்றுக்கொள்ளாமல் போனதே கடந்த கால வரலாறு. ஊருக்கு பத்து பேரை சேர்த்துக்கொண்டு, ஜாதி, மதம் போன்ற செல்வாக்குகளை நம்பி தொடங்கப்படும் கட்சிகள் சமூகத்திற்குப் பெரும் தொல்லையே. எனவே, புதிய கட்சிப் பதிவுக்கு, உறுப்பினர் எண்ணிக்கையில் வரையறை தேவைதான்.
 கா. சிங்காரவேலு, புவனகிரி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com