கடந்த வாரம் கேட்கப்பட்ட "ரயில் நிலையங்களுக்கு அரசியல் தலைவர்களின் பெயரை வைக்கும் வழக்கத்தை அரசு கைவிட வேண்டும் என்று சிலர் கூறுவது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிள் கருத்துகள்

ரயில் நிலையங்களுக்கு அரசியல் தலைவர்களின் பெயரை வைக்கும் வழக்கத்தை அரசு கைவிட வேண்டும் என்ற கருத்து மிகவும் சரி.

தேவையற்றது
 ரயில் நிலையங்களுக்கு அரசியல் தலைவர்களின் பெயரை வைக்கும் வழக்கத்தை அரசு கைவிட வேண்டும் என்ற கருத்து மிகவும் சரி. ஆங்கிலேய அரசு, எந்த ரயில் நிலையத்திற்கும் அது அமைந்திருக்கும் ஊரின் பெயரை வைப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தது. ரயில் பயணிகளுக்கும் அது உதவியாக இருந்தது. அதனை தவிர்த்து அரசியல் தலைவர்களின் பெயரை வைக்கும் முறை பயணிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, இது போன்ற குழப்பம் தரும் பெயர் மாற்றம் தேவையற்றது.
 வி.எஸ். ரவி, கடலூர்.
 சமூக அமைதி
 தமிழகத்தில் முன்பு பேருந்து கழகங்களுக்கு தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டன. சில கட்சியினர் மாற்றுக் கட்சித் தலைவரின் பெயரில் இயங்கும் பேருந்துகளை சேதப்படுத்தினர். அதனால், தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. நாட்டுக்காகப் பாடுபட்ட தலைவர்களின் தியாகத்தை நினைவூட்ட பெயர் தேவைதான். ஆனாலும், அதனால் சமூக அமைதி கெடக்கூடும் என்பதால் பெயர் வைப்பதைத் தவிர்ப்பதே நல்லது.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 இன்னல்கள்
 முன்பு மாவட்டங்களுக்குத் தலைவர்களின் பெயரைச் சூட்டினார்கள். அதனால் போராட்டங்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு இன்னல்கள் விளைந்தன. ஒரு குறிப்பிட்ட தலைவரை இழிவு செய்ய வேண்டுமெனின் உடனே ரயில் நிலையத்தில் இருக்கும் அவருடைய பெயர் தாக்குதலுக்கு உள்ளாகி பெரிய போராட்டங்கள் ஏற்படும். எனவே ரயில் நிலையங்களுக்குத் தலைவர்கள் பெயரை வைக்க வேண்டாம்.
 வளவ. துரையன், கடலூர்.
 அடைமொழிகள்
 ரயில் நிலையங்களின் பெயர்கள் அனைத்து மாநிலத்தார்க்கும் புரியும் வண்ணமும் உச்சரிக்க எளிதாகவும் இருத்தல் வேண்டும். அது மட்டுமல்ல, தலைவர்களின் பெயர்கள் அடைமொழிகளோடு நீண்ட பெயராக வைக்கப்படுவது உச்சரிப்பைக் கடினமாக்குகிறது. ரயில் நிலையங்களுக்கு அந்தந்த ஊர்ப்பெயர்களை வைப்பது மட்டுமே சரியாக இருக்கும். அதுவே உச்சரிக்க எளிதாகவும் இருக்கும்.
 சிவ. வெங்கடேஷ், திருக்கோவிலூர்.
 சங்கடங்கள்
 தலைவர்கள் இந்த நாட்டிற்கும், மக்களுக்கும் செய்துள்ள நற்பணிகளை நினைவுகூர்ந்து அதன்படி இன்றைய ஆட்சியாளர்கள் மக்களுக்குப் பணி செய்தாலே போதும். அதை விடுத்து, ரயில் நிலையங்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்களின் பெயரை சூட்டுவது தேவையற்ற வேலையாகும். அப்பெயர்களை அடுத்த ஆட்சியினர் மாற்றியமைப்பது பற்பல சங்கடங்களை உண்டாக்கும். அரசுக்கு சொந்தமான எந்தவொரு கட்டடத்திற்கும் தலைவர்கள் பெயரை சூட்டக் கூடாது.
 க. இளங்கோவன், மயிலாடுதுறை.
 வரலாற்றுச் சிறப்பு
 ஏற்கெனவே தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்கு தலைவர்களின் பெயர்களை சூட்டியதும், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தலைவர்களின் பெயரை சூட்டியதும் நிலைக்கவில்லை. தலைவர்களின் கொள்கைகளைக் கடைப்பிடித்துத்தான் அவர்களை சிறப்பிக்க வேண்டும். பல ஊர்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. ஒவ்வொரு தலைவரும் சிறந்தவராகத்தான் இருப்பார். ஒருவர் பெயரை வைப்பதால் மற்றவர்களை அரசு புறக்கணிப்பதாக சிலர் எண்ணக்கூடும்.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 தவறென்ன?
 ஒரு தனி மனிதன் வீடு கட்டினாலே அவன் அவ்வீட்டுக்குத் தனது பெற்றோர் அல்லது முன்னோர் பெயரை வைக்கும்போது, நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பல தியாகங்கள் செய்த தலைவர்களின் பெயரை ரயில் நிலையங்களுக்கு வைப்பதில் தவறென்ன? அது நாம் அவர்களுக்கு செய்யும் நன்றி கடன் போல அமையுமே. இந்த வழக்கத்தை ஏன் மாற்ற வேண்டும்? அந்த ரயில் நிலையங்கள் அவர்களின் பெயரைச் சொல்லட்டும்.
 உஷா முத்துராமன், மதுரை.
 எப்படிப் புரியும்?
 ஒரு ரயில் நிலையம் அந்த ஊரின் பெயரில் அழைக்கப்படுவதே சிறப்பு. சில ஊருக்கு சில சிறப்புகள் இருக்கும் அந்த சிறப்புகளும் இந்தப் பெயர் மாற்றத்தால் மறைந்துவிடும். மேலும், வெளி மாநிலத்தவருக்கு ஊர்ப்பெயர்தான் தெரியும். தலைவர் பெயர் இருந்தால் எப்படிப் புரியும்? தலைவர்களின் கொள்கையைப் பின்பற்றுவோம். அவர்கள் பெயர்கள் ரயில் நிலையங்களுக்கு வேண்டாம்.
 மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.
 மக்கள் வழக்கு
 ஆட்சியில் இருப்பவர்கள் ஒரு கட்டடத்துக்கு தங்கள் கட்சித் தலைவரின் பெயரைச் சூட்டினால் அடுத்து வரும் ஆட்சியாளர்கள் அந்தப் பெயரை மாற்றி, தங்கள் கட்சித் தலைவர் பெயரை வைக்கின்றனர். பல இடங்களுக்குத் தலைவர்கள் பெயர் வைக்கப்பட்டாலும் மக்கள் வழக்கில் அந்தப் பெயர்கள் இடம்பெறுவதில்லை. சென்ட்ரல் ஸ்டேஷன்தான்; கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்தான். எனவே பொது இடங்களுக்கு அரசியல் தலைவர்களின் பெயர்களை வைக்க வேண்டாம்.
 அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
 உத்தரவாதம் இல்லை
 ரயில் நிலையங்களுக்கு அரசியல் தலைவர்கள் பெயர்களை வைப்பது பொது அறிவுக்கு உகந்ததல்ல. பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் மாவட்டங்களுக்கும் பேருந்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் அரசியல் தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டன. அப்போது ஏற்பட்ட சில விரும்பத்தகாத நிகழ்வுகளால் பின்னர் அந்தப் பெயர்கள் மாற்றப்பட்டன. இன்றைக்கு வைக்கப்படும் பெயர்களும் நாளை மாற்றப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
 இ. ராஜு நரசிம்மன், சென்னை.
 தேவையா?
 ரயில் நிலையங்களுக்கு தலைவர்களின் பெயர்களை வைப்பதில் தவறில்லை. ஆனால் நடைமுறையில் நடப்பதென்ன? ஒரு கட்சியினர் போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் மாற்றுக்கட்சித் தலைவரின் சிலையை சேதப்படுத்துவது, அவர் பெயரில் உள்ள கட்டடத்தை சேதப்படுத்துவது இவைதான் நடக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் ரயில் நிலையங்களுக்கு தலைவர்கள் பெயர் தேவையா? அரசு சிந்திக்கட்டும்.
 குரு. பழனிசாமி, கோயமுத்தூர்.
 ஒருமித்த கருத்து
 பல ஊர்களிலும் அரசியல் தலைவர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றால் என்ன நன்மை ஏற்பட்டது? அவ்வப்போது அவை சிலரால் இழிவுபடுத்தப்பட்டு பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டு சமூக அமைதி கெட்டதுதான் மிச்சம். ரயில் நிலையங்களுக்குப் பெயர் வைப்பதில் ஒருமித்த கருத்து ஏற்படாது. நல்ல தலைவர்களை மக்கள் என்றும் மறப்பதில்லை.
 கே. அனந்தநாராயணன், கன்னியாகுமரி.
 அவசியமில்லை
 உயர்ந்த அரசியல் தலைவர்களின் பெயர்கள் எப்போதுமே மக்கள் மனத்தில் நிலைத்திருக்கும். ரயில் நிலையங்களுக்கு அவர்களின் பெயர்களை சூட்டித்தான் அவர்களை நினைவில் கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. மேலும், ஒரு ரயில் நிலையத்திற்கு குறிப்பிட்ட கட்சித் தலைவரின் பெயரைச் சூட்டுவது என்பது மற்ற கட்சிக்காரர்களால் தேவையற்ற விமர்சனங்கள் எழுவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும். எனவே இதனைத் தவிர்க்க வேண்டும்.
 வ. ரகுநாத், மதுரை.
 தனிப்பட்ட உணர்ச்சி
 ஏற்கெனவே மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசியல் தலைவர்கள் பெயரை வைத்தனர். பல இடங்களிலும் கலவரங்கள் ஏற்பட்டதன் விளைவாக அந்த வழக்கம் கைவிடப்பட்டது. ஊரின் பெயரால் ரயில் நிலையம் அழைக்கப்படும் போது உள்ள தனிப்பட்ட உணர்ச்சி, அரசியல் தலைவர்கள் பெயர் வைத்தால் வராது. எனவே அந்த வழக்கத்தை அரசு கைவிட வேண்டும் என்று கூறுவது சரியே.
 தி. நடராஜன், மாமல்லபுரம்.
 என்ன பயன்?
 சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் என்று உச்சரிக்க எளிமையாக இருந்தது புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று நீளமாக மாற்றப்பட்டது. இதனால் என்ன பயன்? இது போல் நிறைய சொல்லலாம். பேருந்து நிலையம், ரயில் நிலையம், அரசு மருத்துவமனை அனைத்தும் அந்தந்த ஊர்களின் பெயரிலேயே இருப்பதுதான் சரியாக இருக்கும்; குழப்பத்தைத் தவிர்க்கும்.
 கு.ப. இரகுநாதன், பூவிருந்தவல்லி.
 பொது அமைதி
 மாவட்டங்களுக்குத் தலைவர்களின் பெயர்களை வைத்து பின்னர் அதை மாற்றி மீண்டும் மாவட்டப் பெயரையே வைத்ததுதான் நினைவுக்கு வருகிறது. ரயில் நிலையங்களுக்கு அரசியல் தலைவர்களின் பெயர்களை வைப்பது தேவையற்றது. பின்னர் ஆட்சி அமைப்பவர்கள் அவற்றை மாற்றும் நிலை வரக்கூடும். அதனால் பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படும். எனவே, ரயில் நிலையங்களுக்கு தலைவர்களின் பெயர்கள் தேவையில்லை.
 ஆர். தீனதயாளன், காரமடை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com