"தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்கிற யோசனை சரியானதா?'

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்கிற யோசனை சரியானதுதான்.

சரியானதுதான்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்கிற யோசனை சரியானதுதான். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் தலைவர்கள், முதல் அமைச்சர், அமைச்சர், எதிர்கட்சித் தலைவர் என்ற தகுதியோடு ஈடுபடுவது முறை அல்ல. அரசியல் கட்சியினர் சாதாரண பிரஜைகளாகவே மக்களை சந்திக்க வேண்டும். நாட்டின் பிரதமரும் மத்திய அமைச்சர்களும்  தங்கள் கட்சியின் பிரசாரத்திற்கு மாநிலத்திற்கு வருவதும் தவறே. குடியரசுத் தலைவர் ஆட்சியில் தேர்தல் நடத்தினால்தான் அது முறையான தேர்தலாக அமையும்.                                                                                                
ரெ. சுப்பாராஜு, கோவில்பட்டி.

இருவரும் சமம்


இது நல்ல யோசனைதான். மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் ஆளுங்கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு வாய்ப்பு இருக்காது. அரசு செலவில் ஆட்சியாளர்கள் தேர்தல் பிரசார பயணம் மேற்கொள்வது தடுக்கப்படும். ஆளுங்கட்சி வேட்பாளரும் எதிர்க்கட்சி வேட்பாளரும் சமமாகக் கருதப்படுவர். வாக்குக்குப் பணம் தருவதும் பெறுவதும் குறையும். வாக்குவங்கியை மனதில் கொண்டு நடைமுறை சாத்தியமற்ற அறிவிப்புகளை அரசியல் கட்சிகள் வெளியிடும் நிலை மாறும்.
ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.

ஏற்கத்தக்கதல்ல

இந்த யோசனை ஏற்கத்தக்கதல்ல. ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டால் அது மத்திய அரசின் மறைமுக ஆட்சியாகத்தான் அமையும். தனது கூட்டணிக் கட்சிக்கு சாதகமாகத்தான் மத்திய அரசு செயல்படும். இதனால் பல அத்துமீறல்கள் நடக்க வாய்ப்பு ஏற்படும். அதிகாரத்தில் இருக்கும் மாநில ஆட்சியே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் காபந்து அரசாக செயல்பட வேண்டும். ஆனாலும், அரசின் கொள்கை சார்ந்த முக்கிய முடிவுகளை காபந்து அரசு எடுக்க அனுமதிக்கக் கூடாது.
கு.மா.பா. திருநாவுக்கரசு, சென்னை. 

அத்துமீறல்கள்

குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதன் மூலம் ஆளும் கட்சியின் அதிகார அத்துமீறல்களைத் தவிர்க்கலாம். அதே நேரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியின் பெயரால் மத்திய அரசு ஒரு சாராருக்கு சாதகமாக அதிகார அத்துமீறல்களில் ஈடுபடுவதையும் அனுமதிக்கக் கூடாது. உதாரணமாக தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தனக்கு வேண்டிய பிரமுகர்களுக்கு மத்திய அரசின் விருது அறிவிப்பது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டாலும் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.
க. ரவீந்திரன், ஈரோடு.

வாய்ப்பு இல்லை

இந்த யோசனை சரியல்ல. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டால் மாநில நிர்வாகம் முழுதும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். மாநிலத்தின் எந்தப்பகுதியில் விதிமீறல் நடந்தாலோ சட்டம்}ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டாலோ தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். மாநில அரசு எந்த அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட வாய்ப்பு இல்லை. மேலும், குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது மறைமுக மத்திய அரசின் ஆட்சியே.
ரெ. பிரபாகரன், செபஸ்தியார்புரம்.

ஜனநாயக கடமை

அரசியல்வாதிகளின் தந்திர வழிகளினால் எல்லாத் தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. வருங்கால சந்ததியினர் மனத்தில் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்கிற புரிதலை விதைக்க வேண்டும். எந்தக் கட்சியாக இருந்தாலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது  என்பதை முழுமையாகத் தடை செய்ய வேண்டும். அதற்கு முழு அதிகாரமும் பெற்ற குடியரசுத் தலைவர் ஆட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அவசியம் வேண்டும். 
ப. கோவிந்தராசு, ஊத்தங்கால்.  
 

அச்சம்

இந்த யோசனை சரியானதுதான். ஏனெனில், காபந்து அரசு இருந்தாலும், அது பழைய அதிகாரத்திலேயே அதிகாரிகளுக்கும் காவல்துறைக்கும் பயத்தைத் தந்தவண்ணமே இருக்கும். மக்களும் ஆட்சியாளர்கள் என்கிற அச்சத்திலேயே இருப்பர். பல் பிடுங்கப்பட்டாலும் பாம்பு பாம்புதானே? காபந்து அரசு என்கிற பேச்சுக்கே இடமின்றி, குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்துவதும், தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி புதிய அரசு அமைத்ததும் அது விலக்கிக்கொள்ளப்படுவதுமே சரியாகும்.
தெ. முருகசாமி, புதுச்சேரி. 

முறையல்ல

தேர்தல் தேதி அறிவித்ததும் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட  வேண்டும் என்பது சரியல்ல. அப்படிச் செய்தால் மத்திய ஆட்சியரின் பிரதிநிதியான ஆளுநர் மூலம்  அவர்களின் அரசியல் தலையீடு இருக்கத்தான் செய்யும். மேலும், ஜனநாயக நாட்டில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசை இவ்விதமாக பதவிக்காலம் முடியுமுன் "டிஸ்மிஸ்' செய்வது முறையல்ல. தற்போது தேர்தல் முடியும் வரை தேர்தல் ஆணையரின் முழுக் கட்டுப்பாட்டில் அரசு இயங்குவது நம்பிக்கை அளிப்பதாகவே உள்ளது.   
ஏ.பி. மதிவாணன், சென்னை. 

தயக்கம்

இந்த யோசனை சரியானதே. காபந்து அரசு என்றால் ஆண்டு கொண்டிருக்கும் அரசே தொடரும் என்ற நிலை உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் குறிப்பாக காவல்துறையினர் ஆளும் கட்சியின் தேர்தல் நடத்தை விதிமீறல்களைத் தடுக்க தயக்கம் காட்டுவார்கள். சொல்லப்போனால் ஆளும் கட்சியினர் வாக்குக்கு பணம் கொடுப்பதற்கு காவல்துறையினரே துணைபோகவும் வாய்ப்புள்ளது. அரசு ஊழியர்களும், காவல்துறையினரும் தேர்தல் நேரத்தில் சுதந்திரமாக செயல்பட குடியரசுத் தலைவர் ஆட்சி அவசியமே.  
மு. நடராஜன், திருப்பூர்.

கேலிக்கூத்து

தேர்தல் தேதி அறிவிக்கப்பட் டவுடன் தேர்தல் ஆணையத் தின் கீழ் நிர்வாகம் வந்தாலும் ஆளும் கட்சியின் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க முடிவதில்லை. சமீபத்தில் தமிழகத்தில் நடந்த தேர்தலின் போது கூட்டம் கூட்டி அமைச்சர்கள் முன்னிலையிலேயே பணப் பட்டுவாடா நடந்ததையெல்லாம் ஊடகங்களில் காண முடிந்தது. ஆளுங்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை வேடிக்கை பார்த்த கேலிக் கூத்தும் நடைபெற்றது. இதையெல்லாம் பார்க்கும்போது மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதே நல்லது.         
அ. கருப்பையா, பொன்னமராவதி.

மேலாண்மை

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும்  மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை நடைமுறை படுத்துவது நல்லது. ஆனால், குடியரசு தலைவர் ஆட்சி என்பது ஆளுநர் ஆட்சியாகும். ஆளுநர் நிர்வாகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும். மத்தியில் உள்ள ஆளும் கட்சியின் மேலாண்மை மாநிலத்தில் இல்லாமல் இருப்பது நல்லது. அந்தக் கட்சியின் ஆசைப்படி செயல்படாமல் ஆளுநர் அரசமைப்புச் சட்டத்தின்படி செயல்படுபவராக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த யோசனை சரியானதாகும். 
தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.  

மறைமுக ஆட்சி

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படவேண்டும் என்கிற யோசனை சரியல்ல. தற்போது உள்ள நடைமுறைப்படி அதிகாரத்தில் உள்ள ஆட்சியே தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை தொடர வேண்டும். புதிய அறிவிப்புகள் எதையும் நடைமுறைப்படுத்தாமல் தங்களின் ஆட்சிக்காலம் முடியும் வரை இவர்களே ஆட்சி செய்வதுதான் ஏற்புடையது. குடியரசுத்தலைவரின் ஆட்சி என்பது மறைமுகமாக மத்திய அரசின் ஆட்சியாகத்தான் அமையும்.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com