'கல்லூரித் தேர்வுகளை நேரடியாக நடத்தக்கூடாது, ஆன்லைன் மூலமாகத்தான் நடத்த வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்திருப்பது சரியா?''

கல்லூரித் தேர்வுகளை நேரடியாக நடத்தக்கூடாது, ஆன்லைன் மூலமாகத்தான் நடத்த வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்திருப்பது சரியல்ல.

அடையாளம்

கல்லூரித் தேர்வுகளை நேரடியாக நடத்தக்கூடாது, ஆன்லைன் மூலமாகத்தான் நடத்த வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்திருப்பது சரியல்ல. ஆன்லைன் மூலம் கல்வி என்பது ஒரு காலகட்டத் தேவைக்குப் பயன்பட்டது. அதையே தொடர்ந்து கடைப்பிடிப்பது அறிவு வளர்ச்சிக்கு உதவாது. மாணவர்களை சோம்பேறிகளாக்கிவிடும். நேரடித்தேர்வில் உள்ள மன ஒருமைப்பாடு, கையெழுத்துத் திறன், நினைவாற்றல் இவையெல்லாம் ஆன்லைன் தேர்வில் இல்லாமலாகி விடும். ஆன்லைன் தேர்வு கல்வி மேம்பாட்டிற்கான அடையாளம் ஆகாது.

தெ. முருகசாமி,
புதுச்சேரி.

சாத்தியமல்ல

கல்லூரித் தேர்வுகளை நேரடியாக நடத்தினால்தான் மாணவர்களின் திறமையை அறிந்துகொள்ள முடியும். நேரடித் தேர்வில் பாடக்குறிப்புகளை மறைத்து வைத்து எழுதவோ பக்கத்தில் இருப்பவரின் விடைத்தாளைப் பார்த்து எழுதுவதோ இயலாது. ஆனால், இவையெல்லாம் ஆன்லைன் தேர்வில் சாத்தியமே. கட்டுப்பாட்டோடு தேர்வுகளை நடத்துவதும், முறைகேடுகள் நடக்காமல் பறக்கும் படை மூலம் கண்காணிப்பதும் மாணவர்களின் உண்மைத் திறமையை அறிந்துகொள்ளவே. அது நேரடித் தேர்வில்தான் சாத்தியம். ஆன்லைன் தேர்வில் சாத்தியமல்ல. எனவே, நேரடித் தேர்வே நல்லது.

குரு. பழனிசாமி,
கோயமுத்தூர்.


அறிவுடைமை

இக்கோரிக்கை தவறானது. கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றன. தற்போது தொற்றுப் பரவல் குறித்த அச்சம் குறைந்திருக்கும் நிலையில் நேரடியாகத் தேர்வுகளை நடத்துவதே சிறந்தது. இதனை எதிர்ப்பதென்பது அறிவுடைமையல்ல. வீட்டில் இருந்தபடியே தேர்வு எழுதுவது தேர்வின் நம்பகத்தன்மையையே குலைத்து விடும். பள்ளியில் எல்லா மாணவர்களும் சேர்ந்து தேர்வுக் கூடத்தில் தேர்வு எழுதுவதுதான் உண்மையான தேர்வாகக் கருதப்படும். வழக்கமான நடைமுறையை மாற்ற வேண்டாம்.

கே. அனந்தநாராயணன்,
கன்னியாகுமரி.


காரணம்

ஆன்லைன் தேர்வை வலியுறுத்தும் மாணவர்கள், இதுவரை கற்றல்-கற்பித்தல் ஆன்லைனில் நடைபெற்றதால் தேர்வும் ஆன்லைனில் நடத்தப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், உண்மைக் காரணம், வீட்டிலேயே தேர்வு எழுதினால் காப்பி அடித்து எழுத முடியும் என்பதுதான். இது எல்லாருக்கும் தெரிந்ததுதான். அப்படி எழுதினால் அதற்குப் பெயர் தேர்வா? மேலும், தற்போது நோய்த்தொற்றுப் பரவல் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகளும் திறக்கப்பட்டு விட்டன. அப்புறம் எதற்கு ஆன்லைன் தேர்வு. நேரடித் தேர்வுதான் நல்லது. ஆன்லைன் தேர்வை அரசு அனுமதிக்கக்கூடாது.

மகிழ்நன்,
கடலூர்.


ஏற்புடையதே

கல்லூரித் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்த வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கை ஏற்புடையதே. தொழில்நுட்ப வளர்ச்சி மிகுந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்துவதே சிறந்தது. இதனால்   நேரம் விரயமாவது தவிர்க்கப்படும். தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடவும் முடியும். மாணவர்களை கண்காணிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இதனை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை ஆராய்ந்து முடிவு எடுக்கலாம். ஆன்லைன் தேர்வை  செயல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

சோ.பி. இளங்கோவன்,
தென்காசி.


அபத்தம்

கரோனா நோய்த்தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக கடந்த காலங்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. அப்படி நடத்தப்பட்டது வெறும் இடைக்கால ஏற்பாடுதானே தவிர அதுவே நிரந்தரமல்ல. இப்போது இயல்பு நிலை திரும்பி, வகுப்புகள் தொடங்கப்பட்டுவிட்ட நிலையில் தேர்வுகளும் நேரடியாக நடத்தப்படுவதுதானே நியாயம்? ஆன்லைனில்தான் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று கூறுவது அபத்தம். ஒன்றரை ஆண்டுகளாக தொய்வடைந்துவிட்ட கற்றல்-கற்பித்தலை நேரடி வகுப்புதான் சரிசெய்ய முடியும். மாணவர்கள் நேரடித் தேர்வை எதிர்கொள்ளத் தயாராவதே நல்லது.

அண்ணா அன்பழகன்,
அந்தணப்பேட்டை. 


நல்லதல்ல

தற்போது கரோனா தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் கல்லூரிகள் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக தேர்வுகளையும் நேரடியாக நடத்த அரசின் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதை எதிர்த்து மாணவர்கள் போராட்டங்கள் நடத்துவதிலிருந்தே ஆன்லைன் தேர்வு மாணவர்களுக்கு சாதகமானது என்று தெரிகிறது. முழுமையான ஆன்லைன் படிப்புக்கு ஆன்லைன் தேர்வு நடத்தலாம். அசாதாரணமான சூழ்நிலையில் இடைக்கால ஏற்பாடாக ஆன்லைனில் கல்வி கற்பிக்கப்பட்டது. தேர்வுகளை ஆன்லைனில் நடத்துவது நல்லதல்ல. நேரடித் தேர்வே மாணவர்கள் எதிர்காலத்துக்கு நல்லது.

க. ரவீந்திரன்,
ஈரோடு.


கண்கூடு

ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது, பெருந்தொற்று காலத்தில் இடைக்காலமாக செய்யப்பட்ட ஒரு ஏற்பாடு, அவ்வளவுதான். அதையே தொடர முடியாது. தேர்வுகளை வீட்டிலேயே எழுதினால் முறைகேடுகள் செய்யலாம் என்று மாணவர்கள் கருதுவதாலேயே இந்தக் கோரிக்கை என்பது கண்கூடு. அப்படி ஆன்லைன் தேர்வுதான் வேண்டுமெனில், போட்டித் தேர்வுகள் நடத்தப்படுவது போல ஒரே மையத்தில் குறிப்பிட்ட கால அளவில் தேர்வுகளை எழுத வேண்டும் என்றால் அதற்கு மாணவர்கள் தயாரா? நிச்சயமாக இதை ஏற்க மாட்டார்கள். நேரடித் தேர்வு என்பது தங்கள் நலனுக்காகவே என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.

கே. ஸ்டாலின்,
மணலூர்ப்பேட்டை.  


வெளிப்படை

மாணவர்களின் கோரிக்கை நியாயமற்றது. கரோனா பாதிப்பில் உலகம் சிக்கித் தவித்தபோது மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்கிற நோக்கத்தில்தான் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது நோய்த்தொற்று அச்சத்திலிருந்து பெருமளவு மீண்டு வந்துவிட்டோம். அதனால்தான் கல்விக்கூடங்கள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்த நேரத்தில் மாணவர்கள் ஆன்லைன் தேர்வை வற்புறுத்துவது, ஆன்லைன் முறை தேர்வில் உள்ள அம்சங்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்குத்தான் என்பது வெளிப்படை. கல்வித்துறை இதனை அனுமதிக்கக் கூடாது. 

பா.சக்திவேல்,
கோயமுத்தூர்.


தேவையில்லை

உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தொடர்ந்து மூன்று பருவங்களாகத் தேர்வுகளை ஆன்லைனில் எழுதிப் பழகிவிட்டனர். புத்தகங்களைப் படிக்காமல் தேர்வில் பார்த்து எழுதும் முறையையே ஆன்லைன் தேர்வுமுறையில் பெரும்பாலான மாணவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். மாணவர்களிடம் படிக்கும் தன்மையை வளர்ப்பதற்குத்தான் தேர்வு முறை பயன்பட வேண்டும். எனவே அதற்கு நேரடித் தேர்வே சிறந்த தீர்வாக அமையும். நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக தவிர்க்க முடியாத சூழலில் அறிமுகம் செய்யப்பட்ட ஆன்லைன் தேர்வு முறை தற்போது தேவையில்லை. மாணவர்கள் தங்கள் நலன் கருதி நேரடித் தேர்வுக்குத் தயாராக வேண்டும். 

வீ. வேணுகுமார்,
கண்ணமங்கலம்.


உத்தரவாதம்

கல்லூரித் தேர்வுகளை ஆன்லைன் மூலமாகத்தான் நடத்தவேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைப்பது ஏற்புடையதல்ல. கரோனா நோய்த்தொற்று மிகுதியாக இருந்த நிலையில், அவசியம் கருதி அப்போது ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது. தற்போது நோய்த்தொற்று குறைந்துள்ள சூழலில் கல்லூரித் தேர்வுகளை நேரடியாக நடத்த அரசின் கல்வித்துறை முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. நேரடித் தேர்வு முறைதான் மாணவர்களின் நலனுக்கு உகந்ததாகும். எதிர்காலத்தில் மாணவர்களின் வேலைவாய்ப்புக்கு தகுந்த உத்தரவாதம் நேரடித் தேர்வின் மூலம் மட்டுமே கிடைக்கும். எனவே, கல்லூரித் தேர்வுகளை நேரடியாக நடத்துவதே சிறந்தது.  

க. இளங்கோவன்,
நன்னிலம்.


இயல்புதான்

ஆன்லைன் மூலமாக கற்பித்ததால், ஆன்லைன் மூலமாகவே தேர்வுகளையும் நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை சரியல்ல. பட்டம் பெறுவதோடு தங்கள் அறிவையும் வளர்த்துக்கொள்ள விரும்பும் மாணவர்கள் ஒழுங்காகப் பயின்று எந்த வகையான தேர்வையும் எதிர்கொள்வர். ஆனால், வேலைவாய்ப்புக்காக எளிய வழியில் பட்டம் பெற நினைப்பவர்கள் நேரடித் தேர்வுக்கு அஞ்சுவது இயல்புதான். மேலும், இப்படித்தான் தேர்வுகள் நடத்தப்பட  வேண்டும் என்று மாணவர்கள் எண்ணுவது அவர்களின் கற்றல் மனப்பான்மைக்கு ஆபத்தானது. வேலைக்கும் சென்றுகொண்டு, ஆன்லைன்வழி கற்பித்தல் கூட இல்லாமல், ஓய்வு நேரங்களில் சுயமாகப் பயின்று, மையங்களில் சென்று தேர்வு எழுதி, தங்கள் கல்வித் தகுதியை உயர்த்திக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறியவர் பலர் உண்டு என்பதை ஆன்லைன் தேர்வை வற்புறுத்துவோர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

கி. இராமசுப்ரமணியன்,
புதுச்சேரி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com