கடந்த வாரம் கேட்கப்பட்ட "பள்ளிச் சான்றிதழ்களில் "இனிஷியல்' தமிழ் எழுத்தில்தான் இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

பள்ளிச் சான்றிதழ்களில் "இனிஷியல்' தமிழ் எழுத்தில்தான் இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருப்பது சரியே.

தமிழுணர்வு

பள்ளிச் சான்றிதழ்களில் "இனிஷியல்' தமிழ் எழுத்தில்தான் இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருப்பது சரியே. பள்ளியளவில் விதைக்கப்படும் தமிழுணர்வே தொடர்ந்து வளரும். ஒருவருடைய இனிஷியல் தமிழில் இருந்தால்தான், அவருடைய பெற்றோரின் பெயரை பிறரால் ஓரளவு ஊகிக்க இயலும். பெயரைத் தமிழில் எழுதிவிட்டு இனிஷியலை ஆங்கிலத்தில் இடுவது என்பது, பெயரை ஆங்கிலத்தில் எழுதிவிட்டு இனிஷியலைத் தமிழில் எழுதுவது போன்ற அருவருப்பானது. இனிஷியலை ஆங்கிலத்தில் எழுதுவது, மனத்தளவில் இன்னும் அடிமைத்தளை நீங்காமையையே காட்டுகிறது.

ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.

வரவேற்கத்தக்கது

பள்ளிச் சான்றிதழ்களில் மாணாக்கர்களின் பெயர்களுக்கு முன்னால் எழுதப்படும் "இனிஷியல்' எனப்படும் தலைப்பெழுத்தை தமிழிலேயே எழுத வேண்டும் என்கிற அரசின் உத்தரவு மிகவும் சரியானதே. பெயர் தமிழில் அமையும்போது, தகப்பனார் பெயரைக் குறிக்கும் தலைப்பெழுத்தும் அதை தமிழில் இருப்பதுதானே முறை? நீண்ட நாள்களாகவே இக்கோரிக்கையை தமிழறிஞர்கள் பலர் வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் ஏனோ அது நிறைவேறவில்லை. தற்போது அரசு இதனைக் கட்டாயப்படுத்துவது வரவேற்கத்தக்கது. வேற்று மொழியில் தலைப்பெழுத்தும் தாய்மொழியில் பெயரும் இருப்பது சரியல்ல.

தெ. முருகசாமி, புதுச்சேரி.

எப்படி முடியும்?

பள்ளிச் சான்றிதழ்களில் இனிஷியல் தமிழ் எழுத்தில் இருப்பதுதான் சரியாகும். க என்கிற இன்ஷியல் உள்ள மாணவனின் தந்தை பெயர் கண்ணன் என்று இருக்கும். அவன் கே என்ற ஆங்கில எழுத்தை பெயருக்கு முன் இனிஷியலாகப் போட்டால் அவன் தந்தை பெயரை எப்படி அறிந்துகொள்ள முடியும்? சில வகுப்புகளில் ஒரே பெயரும் ஒரே இனிஷியலும் உள்ள மாணவர்கள் மூவர் இருப்பார்கள். மூவருக்கும் ஆங்கிலத்தில் ஜி என்ற ஒரே இனிஷியல் இருக்கும். ஆனால், தமிழில் எழுதும்போது கு என்றும் கோ என்றும் கௌ என்றும் வரும். எனவே, தமிழில் இனிஷியல் இடுவதே சிறந்தது. அரசின் முடிவை வரவேற்போம்.
குரு. பழனிசாமி, கோயமுத்தூர்.

அவசியம்

அரசின் இந்த உத்தரவு மிகவும் சரியானது ஆகும். அ என்கிற தமிழ் எழுத்தை (அப்புசாமி) இனிஷியலாகக் கொண்ட மாணவனுக்கும், ஆ என்கிற தமிழ் எழுத்தை (ஆறுமுகம்) இனிஷியலாகக் கொண்ட மாணவனுக்கும் ஆங்கிலத்தில் ஏ என்கிற ஒரே எழுத்துதான் இனிஷியலாக அமையும். அப்போது மாணவனின் தந்தை பெயர் அறிவதில் குழப்பம் ஏற்பபடும். இது மட்டும்தான் என்றில்லை இதுபோன்று பல உதாரணங்களைக் கூறலாம். ஒருவருடைய பள்ளிச் சான்றிதழ் அவர் வாழ்நாள் முழுவதும் பயன்பட வேண்டிய தேவை இருப்பதால் சான்றிதழில் இனிஷியல் தமிழில் இருப்பது அவசியமே.

மு.அ.ஆ. செல்வராசு, வல்லம்.

வேறுபாடு கூடாது

ஒரு மாணவனின் பள்ளிச் சான்றிதழ் அவனுடைய வாழ்க்கையின் அடிப்படை ஆவணமாகும். இதில் குறிப்பிடப்படும் பிறந்த தேதியே அவனது வாழ்நாள் முழுவதும் பின்பற்றப்படுகிறது. பிறப்பு சான்றிதழில் தமிழ் - ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இனிஷியல் உள்ளிட்ட விவரங்களை அளிப்பதுபோல பள்ளிச் சான்றிதழிலும் அளிக்கலாம். ஏற்கெனவே மாணவர்கள் வாங்கி வைத்திருக்கும் ஆதார் போன்ற ஆவணங்களுக்கும் பள்ளிச் சான்றிதழுக்கும் வேறுபாடு ஏற்பட்டுவிடக் கூடாது. எனவே, இந்த உத்தரவு, வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு அறிவிக்க வேண்டும்.

க. ரவீந்திரன், ஈரோடு.

வாய்ப்பு இல்லை

அரசு எந்த அடிப்படையில் இப்படி ஓர் உத்தரவை வெளியிட்டிருக்கிறதோ? பள்ளி மாணவர்கள் அனைவரின் இனிஷியலையும் தமிழ் எழுத்தில் இட முடியுமா? ஒரு மாணவனின் தந்தை பெயர் ஸ்டீபன் என்றும் மற்றொரு மாணவனின் தந்தை பெயர் ஹமீது என்றும் இருந்தால் அவர்கள் இனிஷியல் ஸ் என்றும், ஹ என்றும்தானே இருக்க முடியும்? இவை தமிழ் எழுத்துகளா? இல்லையே. எனவே, அரசின் தமிழ் வளர்க்கும் நோக்கம் நிறைவேற இதனால் வாய்ப்பு இல்லை. மேலும், சில நடைமுறை சிக்கல்களும் உருவாகும். தமிழை வளர்க்கும் முயற்சி வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால், அதற்கு இது வழியல்ல.

சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.


குழப்பம்

பள்ளி சான்றிதழ்களில் இனிஷியல் தமிழில்தான் இருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருப்பது என்பது "எங்கும் தமிழ் எதிலும் தமிழ்" என்கிற தமிழ்நாட்டின் கோட்பாட்டுக்கு வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால், மாணவர்கள் வேலை தேடி, தமிழ்மொழி பயன்பாட்டில் இல்லாத மாநிலங்களுக்கு செல்கிறபோது இத்தகைய "தமிழ் இனிஷியல் நடைமுறை' தேவையற்ற குழப்பத்தைத்தான் உருவாக்கும். இந்த உத்தரவை அரசு மறுபரிசீலனை செய்து பள்ளிச் சான்றிதழ்களில் ஆங்கிலத்தில் இருப்பதை அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் தேவையற்ற குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

ஆர். மாதவராமன், கிருஷ்ணகிரி.

ஓரவஞ்சனை

பள்ளிச் சான்றிதழ்களில் முதலெழுத்து தமிழ் எழுத்தில்தான் இருக்க வேண்டும் என்னும் அரசு உத்தரவு மிகச் சரியான ஒன்று. பள்ளிச் சான்றிதழ் மட்டுமல்லாமல் அனைத்து ஆவணங்களிலும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். ஏனெனில், ஆங்கிலத்தில் முதலெழுத்து எழுதிப் பழகியவர்கள் தொடர்ந்து தங்கள் முழுப்பெயரையும் ஆங்கிலத்தில் எழுதப்பழகி, பின்னாளில் தங்கள் பெயரைத் தமிழில் எழுதவே மறந்து விடுகிறார்கள். எவராவது ஆங்கில எழுத்துகளில் தனது பெயரையும், தமிழ் எழுத்தில் தனது இனிஷியலையும் எழுதுவாரா? தமிழுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை?

சொ.முத்துசாமி, பாளையங்கோட்டை.

காலத்தின் கட்டாயம்

பள்ளி சான்றிதழ்களில் பெயர் தமிழில் இருக்கும்போது இனிஷியலும் தமிழில்தான் இருக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல, ஆட்சியாளர்களும் அரசுத்துறை அலுவலர்களும் கோப்புகளில் தமிழில்தான் கையொப்பம் இட வேண்டும். இதற்கான அரசாணை ஏற்கெனவே உள்ளபோதிலும் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை. தமிழக மக்கள். அரசின் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும்போது தங்கள் பெயரையும் தலைப்பெழுத்தையும் தமிழ் எழுத்துகளிலேயே எழுத வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு இவற்றைப் பழக்குதல் காலத்தின் கட்டாயம்.

வீ. இராமலிங்கம், தாணிக்கோட்டகம்.

மதிப்பு

பள்ளி சான்றிதழ்களில் இனிஷியல் தமிழ் எழுத்தில்தான் இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது சரியே. தந்தை பெயரின் முதல் எழுத்தை இனிஷியல் ஆக கொண்டு எழுதுவது நடைமுறையில் உள்ளது. அது பெரும்பாலும் ஆங்கில எழுத்தை அப்படியே தமிழில் எழுதுவதாக அமைகிறது. தமிழ் எழுத்துகள் எழுதப்படுவது இல்லை. தமிழ் எழுத்தில் எழுதினால் ஒருவரின் தந்தை பெயரை அறிய முடியும். மேலும், இது மாணவர்கள் பெற்றோர் மீது தங்களுக்கு இருக்கும் மதிப்பை வெளிப்படுத்துவதாகவும் அமையும். அது மட்டுமல்ல, மாணவர்களுக்கு இயல்பாக தமிழின் மேல் பற்று ஏற்பட்டுவிடும்.

ப. தாணப்பன், தச்சநல்லூர்.

உண்மை ஆவணம்

பொதுவாகவே, ஆங்கிலத்தில் பெயரை எழுதும்போது ஆங்கில எழுத்தில்தான் இனிஷியலையும் எழுதுகிறோம். அதுபோல, தமிழில் பெயரை எழுதும்போதும் தமிழ் எழுத்திலேயே முதலெழுத்தை எழுதுவதே பொருத்தமாக இருக்கும். மேலும், தந்தை பெயரின் முதலெழுத்தை அப்படியே எழுதவும் வேண்டும். மாறாக, ஆங்கில எழுத்தின் உச்சரிப்பை தமிழில் எழுதுவதை தவிர்க்க வேண்டும். ஒருவரின் வாழ்நாள் முழுவதும் அவருடைய பள்ளிச் சான்றிதழ்களே உண்மை ஆவணங்களாகத் திகழ்கின்றன. அவற்றில், தந்தையின் பெயருக்கான தமிழ் எழுத்து முதல் எழுத்தாக இருப்பதே சரியானதாகும்.

வே. வரதராஜன், மகாஜனம்பாக்கம்.

எதற்காக?

தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது சரியே. பள்ளி மாணவன் ஒருவனின் தந்தை பெயரின் முதல் எழுத்து குறிலாக இருந்தாலும், நெடிலாக இருந்தாலும் ஆங்கிலத்தில் ஒரே எழுத்துதான் பயன்படுத்தப்படுகிறது. நடராஜனுக்கும் என் தான், நாராயணனுக்கும் என் தான். அரசு உத்தரவுப்படி எழுதினால் குறில், நெடில் வேறுபாட்டோடு எழுதலாம். தமிழில் உள்ள ஒரு பெயருக்கு ஆங்கில எழுத்து இனிஷியல் எதற்காக? தமிழில் இனிஷியல் இருப்பதே இயல்பானது. மேலும் ஸ, ஷ,ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ போன்ற வடமொழி எழுத்துகள் இனிஷியலில் வருமானால் அவற்றை அப்படியே பயன்படுத்தலாம், தவறில்லை.

நா. ஜெயராமன், பரமக்குடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com