
அரண்
பெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21-ஆக உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்திருப்பது சரியே. குழந்தைத் திருமணத்தைத் தடை செய்யும் சட்டத்திற்கு இது அரணாகவும் அமையும். பள்ளிப் படிப்பு முடிவடைந்தவுடன் பெண்களுக்குத் திருமணம் செய்துவைக்கப்படுவதால், அவர்கள் கல்லூரிக்குச் சென்று படிக்க இயலாத நிலையே உள்ளது. குழந்தைப் பேற்றைத் தாங்கும் உடல் உரனும், வாழ்க்கைச் சிக்கல்களை எதிர்கொள்ளும் பக்குவமும் 21 வயது நிறைந்த பெண்ணுக்கு வாய்க்கும். ஒரே வயதுடையவர்களின் திருமணத்தால் கல்வி, வேலைவாய்ப்புகளில் ஆணும், பெண்ணும் நிகர்நிலை பெறுவர்.
அ. சிவராம சேது, திருமுதுகுன்றம்.
மறுபரிசீலனை
மத்திய அரசின் முடிவு சரியல்ல. ஆண்களை விட, சில ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு பக்குவம் வந்துவிடுகிறது. ஆகவே, பெண்ணின் திருமண வயதை, ஆணின் திருமண வயதுக்கு நிகராகக் கொண்டு வருவது அர்த்தமற்றது. பருவம் எய்தியஉணர்வுகளுக்கு பெற்றோர் மதிப்பு கொடுக்க வேண்டும். பெண்கள் குறித்த புரிதல் பெற்றோருக்கு அவசியம். விஞ்ஞான ரீதியாக, ஆண்களுக்கு 21-உம் பெண்களுக்கு18-உம்தான் திருமணத்திற்கு ஏற்ற வயது. சமுக சமநிலை என்பது திருமண வயதை சமமாக்குவதால் கிடைத்துவிடாது. இம்முடிவு மறுபரிசீலனைக்கு உரியது.
கு. விஜயகுமார், சென்னை.
விழிப்புணர்வு
பெண்ணின் திருமண வயது 18 என்று தற்போது சட்டம் இருக்கும் நிலையிலும், அதனை மீறி குழந்தை திருமணங்கள் ஏராளமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பெண்ணின் திருமண வயது 21 என்று ஆனாலும் இதே நிலைதான் தொடரும். பொதுவாக பெண்கள் பூப்படைந்தவுடன் அவர்கள் திருமணத்திற்குத் தகுதி பெற்றுவிட்டதாகக் கருதும் போக்கு சமூகத்தில் நிலவுகிறது. இந்த எண்ணத்தை மக்கள் மனதிலிருந்து மாற்றுவதற்கான விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும். மன ரீதியாகவும் பெண்கள் திருமணத்திற்குத் தகுதி பெற்றிருக்க வேண்டும். அதற்கு மத்திய அரசின் முடிவு உதவும்.
க. ரவீந்திரன், ஈரோடு.
ஏற்புடையதல்ல
பெண்கள் தேர்தலில் வாக்களித்து ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு அவர்களுக்கு 18 வயது நிரம்பியிருந்தால் போதும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் திருமண வயதை மட்டும் தற்போதுள்ள 18-லிருந்து 21-ஆக உயர்த்துவது ஏற்புடையதல்ல. நாட்டில் படித்து பட்டம் பெற்று அரசின் வேலைவாய்ப்புக்காக லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். எனவே, அவர்களின் வேலைவாய்ப்புக்கான வயது வரம்பை உயர்த்துவது அவர்களுக்குப் பெரிதும் பலனளிக்கும். அதை விடுத்து பெண்களின் திருமண வயது வரம்பை உயர்த்துவது தேவையற்றது.
எஸ்.எம்.ஏ. செய்யது முகம்மது,
மேலப்பாளையம்.
புரிதல்
பெண்களின் சட்டபூர்வ திருமண வயதை 18-லிருந்து 21-ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது சரியானது. பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் இச்சட்டத்தினால், பெண்கள் கல்லூரிக்குச் சென்று குறைந்தது ஒரு இளங்கலைப் பட்டத்தையாவது பெறமுடியும். இதுவே அவர்களுக்கு சமூகம் பற்றிய புரிதலை முழுமையாக்கும். மேலும், பெண்கள் உடலளவிலும், மனதளவிலும் திருமண வாழ்வுக்குத் தேவையான பக்குவத்தை 21 வயதில்தான் அடைவர். 18 வயது முடிந்ததும் திருமணம் செய்துவைக்கப்படும் பெண்கள் குடும்பம், குழந்தை என்று குறுகிய வட்டத்திற்குள்தான் உழல வேண்டியிருக்கும்.
வே. வரதராஜன், மகாஜனம்பாக்கம்.
சரிநிகர் சமானம்
மத்திய அரசின் இந்த முடிவு சரியானது. பெண்கள் சுயமாக சிந்தித்து செயல்படவும், கல்விக்கேற்ற வேலைவாய்ப்பு பெற்று பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ளவும் அவர்களின் திருமண வயது 21 என்பது சரியானதே. அது மட்டுமல்ல, இதனால் குழந்தைத் திருமண நிகழ்வுகளும் கணிசமாகக் குறைந்துவிடும். பெண்களின் உடல் நலம் காக்கவும் இது உதவும். ஆண்களைப் போன்றே பெண்களுக்கும் திருமண வயது 21 என்பது ஆண்களும் பெண்களும் சரிநிகர் சமானம் என்பதை உறுதிப்படுத்துவதாகும். பெண்களின் நலனை கருத்தில் கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
ந. சண்முகம், திருவண்ணாமலை.
மாற்றம் வரும்
இப்போதெல்லாம் பெண்களுக்கு 18 வயதிலேயே திருமணம் செய்துவைக்கும் போக்குதான் பெரும்பாலும் காணப்படுகிறது. அவர்களின் சட்டபூர்வ திருமண வயது 21 என்கிற நிலை வந்தால்தான் இந்த நிலையில் மாற்றம் வரும். 21 வயதில்தான் ஒரு பெண் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் முதிர்ச்சியடைகிறார். பள்ளிப் படிப்பை முடிக்காத நிலையிலும், பள்ளிப் படிப்பை முடித்தவுடனும் திருமணம் செய்துகொள்ளும் பெண்களால் வாழ்க்கையை சுலபமாக எதிர்கொள்ள இயலாது. அது மட்டுமல்ல, பெண்களின் திருமண வயது 21 என்கிற அறிவிப்பு நாட்டின் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக்கும் வழிகோலும்.
இ. ராஜு நரசிம்மன், சென்னை.
தகுதி
மத்திய அரசு முடிவு செய்துள்ளது சரியே. பெண்கள் பள்ளிப் படிப்பு முடித்து, கல்லூரியில் சேர்ந்து பட்டப் படிப்பு படித்து முடிப்பதற்கு 21 வயது ஆகிவிடும். அப்போதுதான் அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்கும் தகுதியைப் பெறுகிறார்கள். திருமணம் முடிந்தாலும், தற்போதைய சூழலில் ஆண் மட்டுமல்ல, பெண்ணும் கட்டாயமாக வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையே உள்ளது. எந்த வேலையாக இருந்தாலும் குறைந்தபட்ச கல்வித்தகுதி பட்டப் படிப்புதான். மேலும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பெண்கள் திருமணத்திற்கு தயாராவதற்கு 21 வயதுதான் சரியானதாகும்.
பி.கே. ஜீவன், கும்பகோணம்.
பயன் இல்லை
பெண்களின் சட்டபூர்வ திருமண வயதை 18-லிருந்து 21-ஆக உயர்த்துவதால் எந்தப் பயனும் ஏற்பட்டுவிடாது. அரசின் இந்த முடிவுக்கும் பாலின சமத்துவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. திருமண பந்தத்தில் ஆண் மூத்தவராகவும் பெண் இளையவராகவும் இணைவதுதான் காலங்காமாக உள்ள நடைமுறை. இதனைப் பாலின ஏற்றத்தாழ்வாகக் கருதுவது தவறு. ஆண்கள், பெண்களின் உடற்கூறு வேறுபாடு காரணமாகவே முன்னோர்கள் இவ்வேறுபாட்டை வைத்தனர். குழந்தைத் திருமணத்தைத் தடுக்க, இப்போதுள்ள சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தினாலே போதும்.
சுபா. மாணிக்கவாசகம், தெக்கலூர்.
கண்கூடு
குறைந்த வயதில் திருமணம் செய்துவைக்கப்படும் பெண்கள் ஏராளமான பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஒரு பெண் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் முதிர்ச்சி அடையும் வரை கல்வியைத் தொடர வேண்டும்; வேலைவாய்ப்புக்காக முயற்சி செய்ய வேண்டும். பின்னர் திருமணம் செய்து வைப்பதே முறை. இதற்கான சரியான வயது 21 என்பதே சரி. மேலும், 18 வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்படும் பெண்கள், மகப்பேறு, இல்லறக் கடமை இவற்றால் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய கல்லூரிக் கல்வி வேலைவாய்ப்பு இவற்றை இழந்து அல்லலுறுவது கண்கூடு.
உ. இராஜமாணிக்கம், கடலூர்.
தன்னம்பிக்கை
கிராமப்புறங்களில் பெரும்பாலும் பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்துவிடுவதால் அப்பெண்கள், ஆசைப்பட்டாலும்கூட கல்லூரியில் சேர்ந்து படித்து ஒரு பட்டம் பெற இயலாமல் போய்விடுகிறது. இது மிகவும் வருந்தத்தக்கது. பெண்களின் திருமண வயதை 21 என்று உயர்த்துவதால் அவர்கள் கல்லூரிக் கல்வியைப் பெற இயலும். அது அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையைக் கொடுக்கும். மேலும், திருமணத்திற்குப் பின்னர், அவர்கள் பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் கல்லூரிக் கல்வி அவர்களின் பணிவாய்ப்புக்குக் கைக்கொடுக்கும்.
டி.வி. கிருஷ்ணசாமி, சென்னை.
நல்லதல்ல
பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு எடுத்திருக்கும் சரியான முடிவு இது. ஒரு பெண் பருவமடைந்தவுடன் தாயாவது அவர் ஆரோக்கியத்திற்கும் குழந்தையின் ஆரோக்கியத்துக்கும் நல்லதல்ல. வருங்காலத் தலைமுறை ஆரோக்கியமாக வாழ அரசின் இந்த முடிவு வழிவகை செய்யும். பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டால் தங்கள் பொறுப்பு தீர்ந்து விட்டதாக எண்ணும் பெற்றோரின் மனநிலை மாற வேண்டும். ஒரு பெண் குடும்பத்தை நிர்வகிப்பதற்கும், பிள்ளையைப் பெறுவதற்கும், வாழ்வின் சிக்கல்களை எதிர்கொள்வதற்கும் அவருக்கு சரியான வயது 21 என்பதே சரி.
சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.