கடந்த வாரம் கேட்கப்பட்ட "ஃபாஸ்டேக்' முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறித்து... என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

 "ஃபாஸ்டேக்' முறை தேவையற்றது. அரசியல் பிரமுகர்கள் தொழில் தொடர்புடையவர்கள் மற்றும் பொதுநலம் சார்ந்தவர்கள் தான் அடிக்கடி டோல்கேட்டை தாண்டும் அவசியமும் கட்டாயமும் வரும்.

 தேவையற்ற இழப்பு
 "ஃபாஸ்டேக்' முறை தேவையற்றது. அரசியல் பிரமுகர்கள் தொழில் தொடர்புடையவர்கள் மற்றும் பொதுநலம் சார்ந்தவர்கள் தான் அடிக்கடி டோல்கேட்டை தாண்டும் அவசியமும் கட்டாயமும் வரும். அவர்கள் ஃபாஸ்டேக் முறை வந்ததுமே அதை பயன்படுத்தத் தொடங்கினர். அது அவர்கள் பயண நேரத்தை குறைத்தது. ஆனால் சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த ஒருவரோ அல்லது அவரது முழு குடும்பமோ தனியார் வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி டோல்கேட்டை தாண்டும் போது இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்பது நடுத்தரவர்க்கத்தவர்களுக்கு தேவையற்ற இழப்பை சந்திக்க நேரிடும். .
 எஸ்.சொக்கலிங்கம், கொட்டாரம்.
 காலம் மிச்சப்படும்
 ஃபாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. சுங்கசாவடியில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள் பணத்தை கொடுத்து ரசீது பெற்று செல்வதற்கு காலவிரயம் ஏற்படுகிறது. ஃபாஸ்டேக் முறையால் மிக எளிமையான முறையில் விரைந்து செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த முறையை அனைத்து வாகனங்களும் பின்பற்றினால் நேரமும் காலமும் மிச்சப்படும். கொடுக்கல்-வாங்கலில் ஏற்படும் சில்லறை பிரச்னைகளும் தவிர்க்கப்பட்டு விரைவாக செல்வதற்கு இந்த முறை சரியானது.
 மா.பழனி, தருமபுரி.
 திடீர் பயணம்...
 வரவேற்கத்தக்கதே. கால விரயம், எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு நல்ல தீர்வு. அதே நேரத்தில் கட்டணம் கட்டி செல்வோருக்கும் ஓரிரு வரிசை ஏற்படுத்தி தருதல் திடீர் பயணம் மேற்கொள்வோருக்கு பயன் அளிக்கும்.
 ஏ.பி.மதிவாணன், சென்னை.
 மின்னணு முறை
 ஃபாஸ்டேக் முறை கட்டாயப்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்க செயல் தான்! நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் போக்குவரத்து எண்ணிக்கை நாளுக்கு நாள் மிக அதிகமாகி வருகின்றன. சுங்க சாவடி கட்டண வசூல் பகுதிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பது இதனால் தவிர்க்கப்படுகிறது. கட்டணம் எப்படியும் செலுத்தி தான் ஆக வேண்டும். அதை நவீன மின்னணு முறையில் செலுத்துவதில் எந்த எதிர்ப்பையும் சொல்ல முடியாது. நெடுஞ்சாலைகளில் வாகனங்களும் துரிதமாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 கு.அருணாசலம், தென்காசி.
 கசப்பு மருந்து
 இது வரவேற்கத்தக்கதுதான். ஒரே நேரத்தில் பணம் கட்டுவது சற்று சிரமம்தான் என்றாலும், குழந்தை குணமாகும் என்றால் அதற்கு கசப்பு மருந்து கொடுக்க வேண்டியதுதான். எனவே, சுங்கசாவடிகளில் பெரும்பாலான பகுதிகளில் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு முந்துவது இனி தவிர்க்கப்படும். இந்த முறை கசப்பு மருந்தாக இருந்தாலும் மக்கள் நலனை கவனத்தில் கொண்டு ஏற்றுக் கொள்வதுதான் முறை.
 ஆர் எஸ் கண்ணன், புதுச்சேரி
 திட்டம்
 ஃபாஸ்டேக் முறை கட்டாயமாக்குவது என்பது சுங்கச்சாவடிகளே இல்லாமல் ஆக்குவதற்கான ஆரம்பம். அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தி வாகனங்களின் இயக்கத்தின் அடிப்படையில் வாகன உரிமையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை நேரடியாக எடுத்துக்கொள்வதே சாலை போக்குவரத்து துறையின் திட்டம். ஒரு குறிப்பிட்ட சாலையில் பயணிக்கும்போது அந்த சாலையை செப்பனிட்ட செலவை ஈடுகட்ட பணம் வசூலித்தது சரி. ஆனால் சொந்த தேசத்தில் வாகனத்தை இயக்க அரசுக்கு பணம் செலுத்த வேண்டும் என்பது நியாயமில்லை.
 என்.கோவிந்தராஜன், ஸ்ரீமுஷ்ணம்.
 தேவையற்றது...
 சுங்கக் கட்டணம் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்குத் தகுந்தாற் போல் சாலைகள் செப்பனிடப்படுவதில்லை. உலக வங்கியிடம் பெற்றக் கடனை இன்னுமா அடைத்துவிடவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஃபாஸ்டேக் மூலம் பணத்தினை செலுத்தும் போது குறிப்பிட்ட தொகை போக மீதமிருக்கும் தொகைக்கான வட்டி எங்கு செல்கிறது? ஃபாஸ்டேக் முறையினை எதற்கு கட்டாயப்படுத்த வேண்டும்? அதனால் வாகன உபயோகிப்பாளர்களுக்கு என்ன பயன்? தேவையற்ற சுமை மற்றும் மன உளைச்சலை வாகனம் வைத்திருப்பவர்களுக்குத் தருவது அவசியமற்றது.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 சரியான வழி
 ஃபாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது மிக மிக சரியான நடவடிக்கை. ஏனெனில் சுங்கச்சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பது தவிர்க்கப்படும். ஃபாஸ்டேக் முறை கட்டாயப்படுத்தப்படுவதால் இக்குறை கண்டிப்பாய் நீக்கப்படும். மத்திய அரசின் இந்த திட்டம் மிகக் சரியானது. இதை நடைமுறைப் படுத்துவதுதான் சரியான வழியாகும்.
 ந.கண்ணையன், கிருஷ்ணகிரி.
 கட்டாயப்படுத்தக்கூடாது
 அனைவரையும் பாஸ்ட்டேக் முறைக்கு கட்டாயப்படுத்தக்கூடாது. விரைந்து செல்ல விரும்புபவர்கள் பாஸ்டேக் வழியிலும், சாதாரணமாக செல்பவர்கள் அதற்கான வழியிலும் செல்லலாம் என்ற நடை முறைதான் ஏற்றது. இதில் பல சாதக பாதகங்கள் உள்ளது.
 ரெ. சுப்பாராஜு, கோவில்பட்டி.
 வரவேற்க தக்கது
 'ஃபாஸ்டேக்' முறை கட்டாயமாக்க பட்டுள்ளது வரவேற்கதக்கதாகும். வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி குறையும். உரிய கட்டணத்தைப் பணமாகச் செலுத்த வேண்டியதில்லை. வாங்கிக்கணக்கின் வாயிலாகச் செலுத்தலாம். தவறுசெய்ய முடியாது. இதனால் பலநன்மைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஏமாற்றுபவர்கள் தப்பி செல்ல முடியாது. இத்திட்டம் நேரத்தை மிச்சப்படுத்தும்.
 ச. கண்ணபிரான். திருநெல்வேலி.
 நெரிசல் குறையும்
 ஃபாஸ்டேக் முறையில் பல வண்டிகள் வைத்திருக்கும் உரிமையாளருக்கு முன்கூட்டியே பணம் செலுத்தும் வசதி இருக்கும். ஒரு சில வண்டிகள் வைத்திருக்கும் நபர்கள் மற்றும் எப்பொழுதாவது பயணம் செய்பவர்களுக்கு கட்டாயம் ஆக்கவேண்டியதில்லை. மேலும் அகில இந்திய தேசிய அனுமதி பெற்றுள்ள வாகனங்களுக்கு வேண்டுமானால் கட்டாயம் ஆக்கலாம். ஏனையோருக்கு கட்டாயம் ஆக்கவேண்டியதில்லை. இதனால் சுங்க சாவடியில் வாகனங்கள் நெரிசல் தவிர்க்கலாம்.
 தி.ரெ.ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 நடக்க முடியாது
 இந்த முறை கட்டாயமாக்கப்பட்டது அதிசயமாக உள்ளது. இந்த ஃபாஸ்டேக் முறை புழக்கத்திற்கு வந்து ஓராண்டிற்கு மேல் ஆகிறது. இருந்தும் இன்றும் பல வாகனங்களில் இந்த முறை பின்பற்றபடவில்லை என்பதை பார்க்கும் பொழுது மக்களிடம் பயமோ விழிப்புணர்வோ இல்லை என்றுதானே பொருள்.
 ஃபாஸ்டேக் இல்லை என்றால் அந்த வாகனம் எந்த டோலிலும் கடக்க முடயாதபடி ஒரு கடுமையான சட்டம் கொண்டுவந்தால்தான் இதற்கு முழுமையான தீர்வு காணமுடியும்.
 உஷா முத்துராமன், மதுரை.
 பல நன்மைகள்
 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஃபாஸ்டேக் முறையினால் நேரவிரயம், ரொக்கப் பரிமாற்றம் தவிர்ப்பு மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு என பல நன்மைகள் இருப்பினும், என்றாவது தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டுநர்கள், பல வாகனங்களை இயக்கும் தொழிலதிபர்கள் போன்றவர்கள் இம்முறை கட்டாயப்படுத்தப்படுவதால் சிரமங்களைச் சந்திக்க நேரும். பெரும்பான்மை டோல்கேட் பணியாளர்கள் வேலையிழப்பர். வலைதள பாதிப்புகள் பெரும் சிரமங்களை ஏற்படுத்தும். எனவே இம்முறையை கட்டாயப்படுத்துவது சரியானதல்ல!
 கே.ராமநாதன், மதுரை.
 கூடுதல் வேலை
 தற்போது சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் முறையை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது வாகன உரிமைதாரர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சற்று சிரமமானது தான். சாலைகள் போடப்பட்டதற்கும், அதை பராமரிப்பத ற்கும் ஆக வசூலிப்பதாகத் தெரிவிக்கப்படும் சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக அளிப்பதில் என்ன சிரமம் இருக்கப்போகிறது? சுங்கச் சாவடிகளில் செலவழிக்கப்படும் சில நிமிடத்துளிகள் குறைவாகப் போகிறது என்ற லாபத்தைத் தவிர வாகன ஓட்டிகளுக்கு எந்த வித லாபமும் இருப்பதாகத் தெரியவில்லை.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 எரிபொருள் சிக்கனம்
 இன்றைய பரபரப்பு உலகில் நேரம் என்பது மிக முக்கியமானதாக உள்ளது. ரொக்கப் பணப் பரிமாற்றத்தைக் கூடுமானவரை தவிர்ப்பது எளிமையானதும் பாதுகாப்பானதுமாகும். விரைவான சேவை, எளிய முறையிலான பணப்பரிமாற்றம், வெளிப்படைத்தன்மை, எரிபொருள் சிக்கனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு வழிகோலும் ஃபாஸ்டேக் முறை கட்டாயப்படுத்துப்படுவது வரவேற்கத்தக்கதே!
 ஆர்.ஜெயந்தி, மதுரை.
 உதவிகள்
 சுங்கச்சாவடியில் பணம் கட்டியே ஆக வேண்டும் என்றான பிறகு, ஃபாஸ்டேக் முறை அவசியமாகிறது. பணம் கட்டாமல் காரணம் சொல்பவர்களால், காலதாமதம் ஏற்படுகிறது. அதே சமயம், நாம் கட்டும் பணத்தால் நமக்கு கிடைக்கும் உதவிகள் முன்பு ரசீதின் பின்புறம் எழுதப்பட்டு இருக்கும். ஆனால் இப்போது ரசீது கிடையாது. எனவே, பணம் கட்டியதற்கான மெசேஜில் அவைகளையும் சேர்த்து அனுப்ப வேண்டும்!
 ஆர். அஸ்வின்குமார், கோயம்புத்தூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com