கடந்த வாரம் கேட்கப்பட்ட "கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதால் இந்த ஆண்டை பூஜ்ய கல்வி ஆண்டாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதால் இந்த ஆண்டை பூஜ்ய கல்வி ஆண்டாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை சரியல்ல.

சரியல்ல
 கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதால் இந்த ஆண்டை பூஜ்ய கல்வி ஆண்டாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை சரியல்ல. தொலைக்காட்சி போன்ற பல்வேறு ஊடகங்களின் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வழக்கமாக ஒன்று முதல் ஒன்பது வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு இருக்கப்போவதில்லை. 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைந்த அளவு பாடத்திட்டத்தில் சிறு தேர்வு நடத்தி கல்வி ஆண்டை நிறைவு செய்யலாம்.
 ரெ. சுப்பாராஜு, கோவில்பட்டி.
 எப்படி முடியும்?
 இதுதான் மிகவும் சரியான யோசனை. மாணவர்கள் பாடங்களை கற்காத நிலையில், பாடங்களில் இருந்து வினாக்களை எடுத்து தேர்வு எப்படி வைக்க முடியும்? நகர்ப்புற தனியார் பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்பட்டிருக்கலாம். ஆனால், பெரும்பாலான கிராமப் பள்ளிகளில் எந்த கல்வி போதனையும் நடைபெறவில்லை. அதனால் இந்த கல்வி ஆண்டை பூஜ்ய கல்வி ஆண்டாக அறிவிப்பதே சரியானதாக இருக்கும்.
 கு. அருணாசலம், தென்காசி.
 அரசின் கடமை
 தகவல் தொழில் நுட்ப, இணையதள, நவீன கற்றல் முறைகள் மூலம் கல்விச் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. அரசுப் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்காக நாடு முழுவதுக்கும் பொதுவான செயலிகளை, வசதிகளை அமைத்துக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதை விடுத்து உயிரைவிட மேலான காலத்தை ஓராண்டு வீணடிப்பது அறிவுடைமை ஆகாது.
 பா. சக்திவேல், கோயம்புத்தூர்.
 தவறானது
 கரோனா தீநுண்மிப் பரவலின் காரணமாக உலகமே முடங்கிப் போயிருக்கிறது. தற்போது கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் முறையில் கல்வியைக் கற்பிக்கிறது. இந்நிலையில் கல்வி ஆண்டை வீணடிக்காமல் இருக்க மீதம் இருக்கும் கல்வி ஆண்டில் குறைந்த பாடங்களை நடத்தி அதற்கு தேர்வுகள் நடத்தலாம். ஒரு ஆண்டு பூஜ்யம் கல்வி ஆண்டாக அறிவிக்கப்பட்டால் மாணவர்களின் கல்வி கற்கும் காலம் பாழாகும். இந்த கோரிக்கை தவறானது.
 கோ. ராஜேஷ் கோபால், அரவங்காடு.
 ஏற்கத்தக்கதல்ல
 கல்வி நிலையங்கள் பூட்டியே கிடந்தாலும் கூட, மாணவர்களுக்கு வழங்கவேண்டிய பாடநூல்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டு விட்டன. ஆன்லைன் வகுப்பு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கல்வி ஆண்டில் இன்னும் சில மாதங்கள் இருப்பதால் பள்ளிகளை திறந்து மாணவர்களுக்கு குறைந்தபட்சம் கற்றல் குறித்து சோதித்தறிந்து கல்வி ஆண்டிற்கான முடிவை மேற்கொள்ள வேண்டும். இந்த யோசனை ஏற்கத்தக்கதல்ல.
 மா. பழனி, தருமபுரி.
 நிராகரிக்க வேண்டும்
 கல்வி நிறுவனங்கள் மூடி இருந்தாலும், பாடங்கள் ஆசிரியர்கள் மூலம், ஆன்லைனில் நடத்த பட்டும், அதை மாணவர்கள் கவனித்தும் வந்திருக்கிறனர். அப்படி இருக்கும் பொழுது பூஜ்ய கல்வி ஆண்டு என்று எப்படி சொல்ல முடியும்? பாடங்கள் நடத்தப்பட்டு தேர்வுகள்கூட நடந்து இருக்கும் பொழுது அதை பூஜ்ய கல்வி ஆண்டு என்று எப்படி சொல்வது? அதனால் இந்த கோரிக்கையை முழுமையாக நிராகரிக்க வேண்டும்.
 உஷா முத்துராமன், மதுரை.
 இழப்பு குறைவுதான்
 இது தவறான யோசனை. அப்படிச் செய்தால் இவ்வாண்டு மாணவர்களின் தகுதி மீது நம்பிக்கையற்ற நிலை ஏற்படும். படிப்பு முடித்து பணியில் சேர்பவர்களும் தகுதியற்றவர்களாகவே கருதப்படுவர். வழக்கமான விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டால் மாணவர்களின் இழப்பு என்பது மிகவும் குறைவுதான். அவர்கள் கல்வி முற்றாக வீணாகவில்லை. வரும் காலங்களில் ஈடுசெய்து விடலாம்.
 ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
 தவறான சிந்தனை
 ஒரு சில குறிப்பிட்ட வகுப்புகளுக்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதும், தேர்வுகளும் ஆன்லைன் வழியாக நடைபெறுவதையும் காண்கிறோம். ஆனால், மாணவர்களின் பயன்பாடு அதிகரித்ததாகத் தோன்றவில்லை. அரசாங்கம், பெற்றோர், மாணவர்கள் ஆகியோர் அடுத்த கல்வி ஆண்டில் தடையின்றி தடம் பதிப்பது தவறு. இது மாணவர்களின் கல்வி என்ற நீரோடையின் வறட்சிக்கு வழிவகுக்கும். இது தவறான சிந்தனை.
 எஸ்.சொக்கலிங்கம், கொட்டாரம்
 குழப்பம்
 கடந்த ஆறுமாத காலமாக பெரும்பாலான பள்ளிகள் இணைய வழியில் பாடங்களை நடத்தி தேர்வுகளையும் நடத்தி விட்டன. பாடம் நடத்தப்பட்ட நாட்கள் குறுகிய நாட்கள் என்பதால் பாடப்பகுதி குறைக்கப்பட்டது. இந்நிலையில் பூஜ்யம் கல்வி ஆண்டாக இந்த ஆண்டை அறிவித்தால் பெரும் குழப்பமே விளையும். மேலும் வரும் கல்வி ஆண்டில் வழக்கத்தைவிட இரண்டு மடங்கு மாணவர்கள் ஆரம்ப கல்வியில் சேரவேண்டிவரும். குழப்பத்தை ஏற்படுத்தும் கோரிக்கை இது.
 என். கோவிந்தராஜன், ஸ்ரீமுஷ்ணம்.
 புதிய சிக்கல்கள்
 ஆண்டு முழுதும் கல்வி நிறுவனங்கள் மூடியிருந்தாலும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்துகின்றன. அரசுப் பள்ளிகள் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்துகின்றன. அரசு கல்விக்கான செலவினங்கனைக் குறைக்காமல் தொடர்ந்து செலவிட்டுக் கொண்டு வருகிறது. பூஜ்ய ஆண்டாக அறிவித்தால் நிர்வாக சிக்கல்கள் எழும். இந்த ஆண்டை வழக்கம்போல் முழு கல்வி ஆண்டாக கருதுவதை தவிர வேறு வழியில்லை.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 விடுப்பு கல்வி ஆண்டு
 விடுப்பு கல்வி ஆண்டாக இந்த ஆண்டை அறிவிக்கலாம். பூஜ்ய கல்வி ஆண்டு என்று சொல்ல வேண்டாம். ஓராண்டு முறையான பயிற்றுவித்தல் இல்லாமல் இருக்கும் போது விடுப்பு கல்வி ஆண்டு என்று அறிவிப்பதே பொருத்தம். கல்வியின் தரமும் குறையாமல் மாணவ மாணவிகளின் எதிர்காலமும் பாதிக்காத வகையில் தகுந்த சட்டத்தின் மூலம் அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புத் தகுதியை அரசு ஓரண்டு நீட்டிக்க வேண்டும்.
 ஏ.பி. மதிவணன், சென்னை.
 அனுபவக் கல்வி
 இந்த ஆண்டுதான் ஒவ்வொரு மாணவரும் தனது பெற்றோருடன் இருந்து அவர்கள் எவ்வளவு பாடுபட்டு தங்களை பாதுகாக்கிறார்கள், வளர்கிறார்கள், பள்ளி கல்லூரிகளுக்கு அனுப்பி கல்வி கற்க வைக்கிறார்கள் என்று அறிந்து பெற்றோரின் பெருமையை உணர்ந்த, அனுபவக் கல்வியைக் கற்ற ஆண்டு. ஆகவே இந்த ஆண்டை வெறும் பூஜ்ய கல்வி ஆண்டாக அறிவிக்காமல், முழுமையான கல்வி ஆண்டாக அறிவிக்க வேண்டும்.
 மா. ஜான் ரவிசங்கர், அஸ்தம்பட்டி.
 அதிக பாதிப்பு
 மாணவர்கள் இணைய வழியில் கல்வியை கற்று வருகிறார்கள், ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் இப்படிப்பட்ட முடிவினை அரசு எடுக்கக் கூடாது. இதனால் பெற்றோரும் மாணவர்களும் அதிக அளவு பாதிக்கப்படுவார்கள்.இப்போது படிக்கின்ற நிலையிலேயே அடுத்த ஆண்டும் மாணவர்கள் இருக்க வேண்டும் என்பது தவறு. வேறு வகையில் தேர்வுகள் நடத்தி மாணவர்களுடைய எதிர்காலம் சிறக்க ஆவன செய்ய வேண்டும்.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 மன அழுத்தம்
 இக்கோரிக்கை சரிதான். ஓராண்டு கல்வி மாணாக்கருக்கு பாதிக்கப்படும் என்கிற வேதனை ஒருபுறம் இருந்தாலும், அவர்களின் உயிர் மிக முக்கியம். பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அடுத்து வருடம் படிப்பிற்கு அடித்தளமாக இருக்கும் பாடத்திட்டத்தினை வைத்து தேர்வு நடத்தி, தேர்ச்சியினை அறிவிக்கலாம். தேர்ச்சியின்மைமைத் தவிர்ப்பது நல்லது. மாணாக்கரின் மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 மொழியறிவுத் தேர்வு
 உயர்கல்வி நிறுவனங்கள் முதலாம் ஆண்டைத் தவிர மற்ற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்தி முதல் செமஸ்டர் தேர்வுகளையும் நடத்தி முடித்து விட்டன. இந்த நிலையில் கல்வியாண்டின் இறுதியில் வயதிற்கேற்ற வகையில் மொழியறிவு மற்றும் பொது அறிவுத்தேர்வை மட்டும் நடத்தி அனைவருக்கும் தேர்ச்சியளித்து இக்கல்வியாண்டை நிறைவு செய்யலாம். பூஜ்யம் ஆண்டாக அறிவிக்கத் தேவையில்லை.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 கற்றல் இல்லை
 நேரடிக் கற்றல் இந்தக் கல்வியாண்டில் சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. இணைய வழிக் கல்வி என்பது தனியார் கல்வி நிறுவனங்கள் சம்பாத்திக்க வழியாக அமைந்ததே தவிர, மாணவர்களுக்கு சிறப்பான முறையில் கற்றலைத் தரவில்லை. அடுத்த கல்வியாண்டில் இரு பகுதிகளாகப் பிரித்து, கற்பித்தலைச் சரிசெய்ய இயலுமா என்பதை அறிய வேண்டும். இந்த கல்வியாண்டை பூஜ்ய கல்வியாண்டாக அறிவிக்கலாம்.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com