கடந்த வாரம் கேட்கப்பட்ட "உழைக்கும் மக்களை சோம்பேறிகளாக மாற்றும் அரசின் இலவசங்கள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்று கூறப்படுவது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சரியான யோசனை
 உழைக்கும் மக்களை சோம்பேறிகளாக மாற்றும் அரசின் இலவசங்கள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்று கூறப்படுவது சரியான யோசனை. அரிசி, பருப்பு முதல் தொலைக்காட்சி, மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வரை அனைத்தையும் இலவசமாகக் கொடுத்து அரசு மக்களை சோம்பேறிகளாக்கி விட்டது. போதாக்குறைக்கு பொங்கல் பரிசுப்பொருள்கள் இலவசம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இலவசங்கள் கிடைக்க வேண்டும்.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 மக்களின் வரிப்பணம்
 இக்கருத்து சரியே. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் மக்களுக்கு இலவசங்களை வழங்குவது கட்சி நிதியிலிருந்தல்ல, மக்களின் வரிப்பணத்தில்தான். இலவசங்களுக்காக செலவிடப்படும் தொகையைக் கொண்டு பல தொழிற்சாலைகளை ஏற்படுத்தி அதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கலாம். அதனால் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் குறையும். ஆயிரக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் முன்னேறும்.
 ந. கண்ணையன், கிருஷ்ணகிரி.
 பெருங்கொடுமை
 வசதி இல்லாதவர்களுக்கு இலவசங்கள் கொடுப்பதில் தவறில்லை. இலவச பொருட்களையும் ரொக்கப் பரிசுகளையும் வசதி படைத்தவர்களும் வாங்குவதுதான் பெருங்கொடுமை. மேலும், இலவச வேட்டி, சேலைகளைப் பயன்படுத்துவோர் குறைவு. அரசு, பொருள்களைக் கொள்முதல் செய்து இலவசமாக அளிப்பதற்கு பதிலாக, பயனாளிகளின் உண்மையான பொருளாதார நிலையை கண்டறிந்து அவர்களுக்கு மானியம் வழங்கலாம்.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 முற்றுப்புள்ளி
 அரசு, மக்களுக்கான உணவுப் பொருட்களையும், உடை போன்றவற்றையும் இலவசமாக வழங்குவது என்பது அவர்களை சோம்பேறிகளாக்கி அடிமைப்படுத்துவது போன்றதாகும். மக்கள் நலனில் அரசுக்கு அக்கறை இருந்தால் மக்களால் எளிதில் வாங்கமுடியாத பொருட்களை குறைந்த விலைக்குக் கொடுத்து உதவலாம். மனிதரின் உடலுழைப்பைக் கெடுக்கும் இலவசங்களுக்கு அரசு முற்றுப்புள்ளி வைப்பது நல்லது.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 வேலைக்கு ஆள் இல்லை
 ஆண்டு முழுவதும் அரிசி, பருப்பு, பண்டிகைகளின் போது செலவு செய்ய ரொக்கப்பணம் வழங்குவதும் அடித்தட்டு மக்களைக் கண்டிப்பாக சோம்பேறிகளாக மாற்றுகின்றன. இப்பொழுது தமிழ்நாட்டில் எந்தவொரு வேலைக்கும் ஆள் கிடைப்பதே இல்லை. வேலை செய்வதற்கு யாரும் தயாராகவும் இல்லை. அதனால்தான் பிற மாநிலத்தவர் அதிக அளவில் இங்கு பிழைப்பு நடத்துகின்றனர். இலவசங்கள் தொடருமானால் தமிழர்கள் உழைப்பை மறந்தே போய் விடுவார்கள்.
 அ. பட்டவராயன், திருச்செந்தூர்.
 மக்கள் நலன்
 இந்தக் கூற்று முற்றிலும் தவறு. வணிகர்களுக்கு கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு மானியம், மாணவர்களுக்கு தேவையான உபகரணங்கள் என பல பொருட்களை இலவசமாக வழங்கும்போது பொதுமக்களுக்கு இலவசங்கள் வழங்குவது தவறு அல்ல. அரசின் இலவசங்கள் தவிர்க்க முடியாதவை. அரசின் வருவாய் மக்கள் நலனுக்கு என்றால் இலவசங்களும் மக்கள் நலனுக்குத்தானே. இலவசங்கள் வழங்குவதை நிறுத்தக்கூடாது.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 குற்றம்
 இக்கருத்து மெத்த சரி. பேரிடர் போன்ற ஆபத்து காலத்தில் இலவசம் வழங்குவதில் தவறில்லை. ஆனால், உழைத்துப் பெற வேண்டியவற்றைக்கூட இலவசமாக வழங்குவது குற்றமாகும். எல்லாவற்றையும் இலவசமாக எதிர்பார்க்கும் மனநிலையில் மக்களை அரசியல்வாதிகள் வைத்துள்ளனர் என்பது துரதிருஷ்டவசமானது. வாக்குவங்கி அரசியல்தான் இலவசத்தை அளித்து, மக்களை உழைக்க விடமால் செய்கிறது. இது நீக்கப்பட வேண்டும்.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 ஒழுக்கச் சிதைவு
 இலவசங்கள் முற்றாக நிறுத்தபடவேண்டும் என்று கூறப்படுவது சரிதான். எல்லாமே இலவசமாகக் கிடைத்துவிடுவதால் மக்கள் உழைப்பை முன்னெடுக்காமல் அன்றாடம் மதுக்கடைகளுக்கு போகிறார்கள். மதுவால் குடும்பங்கள் சீரழிகின்றன. மதுவின் கொடுமையால் குடும்பப் பெண்களை அவதிக்கு உள்ளாக்குகின்றனர் ஆண்கள். மனிதர்களிடம் ஒழுக்கச் சிதைவு ஏற்பட இலவசங்கள் காரணமாகின்றன. இலவசங்கள் தேவையில்லை.
 ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
 சிறுமை
 இது சரியான கருத்து. இலவசம் என்பது அரசு மக்களுக்குத் தரும் கையூட்டு என்பதே சரி. கையூட்டு தருவதும் பெறுவதும் குற்றம் என்றால் இலவசமும் குற்றம்தான். கல்வியும் மருத்துவமும் மட்டுமே மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும். மற்ற இலவசங்கள் நிறுத்தப்பட வேண்டும். வசதியற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். இலவசங்களை வழங்கக்கூடாது. தமிழகம் இலவசங்களை வழங்குவதில் முன்னோடி மாநிலம் என்பது சிறுமையளிப்பதே.
 த. யாபேத் தாசன், பேய்க்குளம்.
 நெல்லுக்கிறைத்த நீர்
 வளமான வாழ்வு படைத்தோர்கூட அரிசிக்கான குடும்ப அட்டையை வைத்துக் கொண்டு இலவசங்களை வரிசையில் நின்று வாங்கிச் செல்கிறார்களே அவர்களெல்லாம் சோம்பேறிகளா? "நெல்லுக்கிறைத்தநீர் புல்லுக்கும் பொசியும்' என்றபடி உழைக்கும் மக்களுக்கு அரசின் இலவசங்கள் கிடைக்கும்போது வசதி படைத்தோரும்பலர் பயன் பெறுகின்றனர். அதனைத் தடுத்து ஏழை எளிய மக்கள் மட்டுமே பயனடையுமாறு செய்ய வேண்டும்.
 உ. இராஜமாணிக்கம், கடலூர்.
 பொறுப்பின்மை
 இலவசங்களை ஏழைகளுக்கு மட்டும் தரலாம். வசதியற்றவர்களும், ஆதரவற்றவர்களும் இலவசங்களால் பெரிதும் பயனடைகின்றனர். பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் இது காரணமாகிறது. ஆனால், அதே சமயம் இலவசத்திற்கு மேல் இலவசங்களை வழங்குவதால் உழைப்பின் அருமையை மக்கள் உணராமல் போகின்றனர். இது நாளடைவில் மக்களிடையே பொறுப்பின்மையைத்தான் உருவாக்கும்.
 ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
 உழைப்பின் மதிப்பு
 இலவசங்கள் படிப்படியாகவாவது நிறுத்தப்பட்டால்தான் மக்கள் வேலைக்கு சென்று உழைத்து உண்ண வேண்டும் என்ற மனநிலைக்கு ஆளாவர். உழைத்து பெறக் கூடிய பொருட்களின் மதிப்பை உணர்வார்கள். இலவசங்களுக்கு அரசு செலவிடும் நிதியைப் பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களுக்கு செலவிடலாம். இலவசங்களை நிறுத்தினால் அரசுக்கு நிதிச்சுமை குறையும். மேலும், நிதிப் பற்றாக்குறையும் ஏற்படாது.
 ரெ. சுப்பாராஜு, கோவில்பட்டி.
 தன்னிறைவு
 இது மிகச்சரியான கருத்து. அரசின் இலவசங்கள் மக்களை சோம்பேறிகள் ஆக்குகின்றன என்பதில் சந்தேகமில்லை. மக்களுக்கு இலவசங்களை வாரி வாரி வழங்குவதற்கு பதிலாக அவர்களின் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது அவர்களின் முன்னேற்றத்திற்கும் நாட்டு முன்னேற்றத்திற்கும் பயன்படும். இதுவே நாடு தன்னிறைவு அடைய வாய்ப்பாக அமையும். அரசு இலவசத்திற்கு பதிலாக மக்களை உழைக்க தூண்டுவதே சிறந்ததாகும்.
 மா. இளையராஜா, திருச்சிராப்பள்ளி.
 மாற்றம் தேவை
 சாதாரண ஏழை எளிய மக்களுக்கு அரசின் இலவச திட்டங்கள் பயனளிப்பதாக உள்ளது. இலவசத் திட்டங்கள் எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு உகந்த வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். மனித உழைப்பும் ஆற்றலும் வீணடிக்கப்பட்டால் தனிநபர் வளர்ச்சி மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படும். ஏழை மக்களின் வாழ்க்கைத் தரம் படிப்படியாக உயரும் வரை இலவசங்கள் தொடர்வதில் தவறில்லை.
 மா. பழனி, தருமபுரி.
 பேராசை
 உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம், கல்வி இவை அனைத்தும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இவ்வசதிகளைப் பெற முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு, அரசு இவை அனைத்தையும் இலவசமாக அளிக்க வேண்டும். மற்ற இலவசங்கள் மக்களை உழைக்காமல் சோம்பேறி ஆக்குவதோடு, அவர்கள் மனதில் பேராசையை விதைத்து, அவர்கள் அறவழியில் பொருள் ஈட்டுவதைத் தடுக்கும். எனவே, இலவசங்கள் கூடாது.
 வி. கிருஷ்ணமூர்த்தி, வேலூர்.
 மறுப்பதற்கில்லை
 அரசு கொடுக்கும் இலவசங்களினால்தான் இன்று பல குடும்பங்களுக்கு ஒரு வேளை உணவாவது கிடைக்கிறது. சென்ற வருடம் நோய்த்தொற்று வந்து எத்தனையோ பேருக்கு வேலை இல்லாமல் இருந்தபோது அரசு கொடுத்த இலவசங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பணம் படைத்தவர்களும் இந்த இலவசங்களை வாங்குகின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக இலவசத்தை முற்றிலும் நிறுத்தக் கூடாது.
 உஷா முத்துராமன், மதுரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com