கடந்த வாரம் கேட்கப்பட்ட "பள்ளிக்கூட பொதுத்தேர்வுகளை ஜூன் மாதம் நடத்தினால்தான் பாடத்திட்டத்தை முடிக்க இயலும் என்ற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

பள்ளிக்கூட பொதுத்தேர்வுகளை ஜூன் மாதம் நடத்தினால்தான் பாடத்திட்டத்தை முடிக்க இயலும் என்ற கருத்து சரியல்ல.

 சரியல்ல
 பள்ளிக்கூட பொதுத்தேர்வுகளை ஜூன் மாதம் நடத்தினால்தான் பாடத்திட்டத்தை முடிக்க இயலும் என்ற கருத்து சரியல்ல. பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டம் கிட்டத்தட்ட பாதியளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. கற்பித்தல் பணிகளை ஆசிரியர்கள் முறையாக செய்தால் சிறப்பாக குறித்த காலத்தில் பாடங்களை முடித்து விடலாம். இருக்கக்கூடிய பள்ளி வேலை நாட்களை ஆசிரியர்கள் சரியாகப் பயன்படுத்தினால் ஜூன் மாதம் வரை பாடம் நடத்த தேவை இல்லை.
 ரெ. சுப்பாராஜு, கோவில்பட்டி.
 கடமை
 கொள்ளை நோய்த்தொற்றுக் காலத்திலும் தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புக்களை நடத்தியுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்த நிலையில், தேர்வுக்குத் தேவையான பாடங்களை நடத்தி மாணவர்களைத் தயார் செய்ய வேண்டிய கடமை அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ளது. எனவே பொதுத்தேர்வை ஜூன் மாதம் நடத்த வேண்டும்.
 டி.ஆர். ராஜேஷ், கச்சமங்களம்.
 விடுமுறை கூடாது
 பாடத்திட்டம் குறைக்கப்பட்டிருப்பதால் பொதுத்தேர்வுகளை ஜூன் மாதம் வரை தள்ளிப்போடத் தேவையில்லை. விடுமுறை என்பதே இல்லாமல் தொடர்ந்து பாடங்களை நடத்தினால், ஏப்ரல் மாதம் தேர்வுகளை நடத்துவதற்கு தடை எதுவும் இராது. சில மாதங்களாக ஓய்வில் இருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் கடுமையாக உழைக்கத் தயாராக உள்ளனர். மாணவர் வருகைப் பதிவு கட்டாயமில்லை என்றாலும் இயன்றவரை வகுப்பில் கற்பதே சிறந்தது.
 ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
 ஆறு நாட்கள்
 தினமும் கூடுதல் நேரம் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்பட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து பாடங்களை நடத்தி, ஏப்ரல் முதல் வாரத்துக்குள் பாடங்களில் முக்கியப் பகுதிகளை முடித்துவிட வேண்டும். அப்படிச் செய்தால், பொதுத்தேர்வுகளை ஏப்ரல் மாத இறுதிக்குள் நடத்தி விடலாம். சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தொடங்குவதற்கு முன்னர் தேர்வுகளை முடித்து விடுவது நல்லது.
 உதயம் ராம், சென்னை.
 தாமதம் கூடாது
 இந்தக் கருத்து ஏற்கத்தக்கதல்ல. கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று காரணமாக பள்ளி மாணவர்களின் நேரடிக்கற்றல் கடந்த பத்து மாதங்களாக நடைபெறவில்லை. இனியும் காலதாமதம் கூடாது. பாடத்திட்டம் பாதியளவாகக் குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றை விரைந்து நடத்தி, ஏப்ரல் மாதத்திலாவது பொதுத்தேர்வினை நடத்துவதுதான் சரியாகும். பொதுத்தேர்தல் எப்போது நடைபெறும் என்பது உறுதியாகத் தெரியாத நிலையில் காலதாமதம் செய்வது சரியல்ல.
 ச. கண்ணபிரான், திருநெல்வேலி
 கடினமான பாடங்கள்
 கடந்த பத்து மாதங்களாக மாணவர்களுக்கு இணையவழியில் வகுப்புகள் நடைபெற்று வந்தன என்றாலும் வகுப்பில் நேரடியாக அமர்ந்து கற்றது போன்ற சூழலை அது அவர்களுக்குத் தரவில்லை. குறிப்பாக கணக்கும் அறிவியலும் மாணவர்களுக்குக் கடினமான பாடங்கள். இச்சூழலில் வழக்கம்போல மார்ச், ஏப்ரலில் தேர்வுகளை நடத்தினால் மாணவர்களால் சிறப்பாக தேர்வு எழுதிட இயலாது. எனவே மாணவர்களைத் தேர்விற்கு தயார்படுத்த கால அவகாசம் தேவை.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 மூன்று மாதங்கள்
 பள்ளிகள் பல மாதங்களாகச் செயல்படவில்லை. இணையவழி கற்றலில் எல்லா மாணவர்களும் பயனடைந்தார்கள் என்று கூற முடியாது. தற்போதுதான் சில வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. என்னதான் பாடங்கள் குறைக்கப்பட்டிருந்தாலும் குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது தொடர்ந்து வகுப்புகள் நடைபெற்றதால்தான் மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக முடியும். எனவே, ஜூன் மாதத்தில் தேர்வு நடத்துவதே சரி.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 அவசியம்
 பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்கவேண்டிய அவசியம் அரசுக்கு உள்ளது. இவற்றையெல்லாம் சிந்தித்தால் பள்ளித் தேர்வுகளை இந்தக் கல்வி ஆண்டிலேயே நடத்தி முடிப்பதே நல்லது. ஜூன் வரை நீட்டித்தால் வரும் கல்வி ஆண்டிலும் வேலை நாட்கள் குறையலாம். இந்தக் கல்வி ஆண்டை ஏப்ரலிலேயே முடித்து விடுவதே அரசுக்கும் பெற்றோர், மாணவர்க்கும் ஏற்றதாகும்.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 குழப்பம்
 மாணவர்களுக்கான பாடங்கள் இணையவழியிலும் தொலைக்காட்சி மூலமாகவும் நடத்தப்பட்டன. அதனடிப்படையில் வழக்கம்போல் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டு உரிய காலங்களில் தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த கல்வி ஆண்டை ஜூன் மாதத்தில் தொடங்க இயலும். ஜூன் மாதத்தில் தேர்வுகள் நடத்தினால் விடைத்தாள் திருத்துவது காலதாமதமாகும். அடுத்த கல்வி ஆண்டிலும் குழப்பமே ஏற்படும்.
 சீனி. செந்தில்குமார், தேனி.
 இடர்ப்பாடுகள்
 கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் செயல்படாமல் இணையவழியில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. அவ்வாறு நடைபெற்றபோதும் தொழில் நுட்பக் கோளாறு காரணமாகவும், மின்வெட்டு போன்ற இடர்ப்பாடுகள் காரணமாகவும் மாணவர்களும் ஆசிரியர்களும் பல சிக்கல்களை எதிர்கொண்டனர். ஆகவே பொதுத் தேர்வுகளை ஜூன் மாதம் நடத்தினால்தான் பாடத்திட்டத்தை முடிக்க இயலும்.
 மா. இளையராஜா, திருச்சிராப்பள்ளி.
 அவகாசம் தேவை
 ஏறக்குறைய பத்து மாதத்திற்குப் பின்னர் இப்போதுதான் மாணவர்கள் வகுப்புக்கு வந்துள்ளனர். அவர்கள் பழையபடி வகுப்பறைக் கல்விக்குப் பழக்கப்பட சில நாட்கள் ஆகக்கூடும். பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டாலும், அவற்றை முழுமையாகக் கற்பிக்க ஆசிரியர்களுக்கும் சிறிது கால அவகாசம் தேவை. மேலும், தேர்தல் பணிகளை அரசு தொடங்கிவிட்டால், ஆசிரியர்கள் வகுப்புகளை கவனிக்க இயலாத நிலை ஏற்படும். ஜூன் மாதத்தில் தேர்வுகளை நடத்துவதே ஏற்புடையது.
 பொன். கருணாநிதி, கோட்டூர்.
 பாடத்திட்டம் குறைப்பு
 பாடத்திட்டத்தின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்து பாடங்களைப் படிக்கத் தொடங்கி விட்டார்கள். இந்நிலையில் பொதுத்தேர்வுகளை வழக்கம்போல மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்துவதே சிறப்பு. மே மாதம் வெய்யில் அதிகம் இருக்கும். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவர். ஆகவே பள்ளி பொதுத் தேர்வுகளை வழக்கம்போல மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்துவதே சிறந்தது.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 பள்ளி நேரம் அதிகரிப்பு
 மாணவர்களும், ஆசிரியர்களும் கற்கவும் கற்பிக்கவும் தயாராக இருக்கின்றனர். வரும் நாட்களில் விடுமுறைகளைக் குறைத்துக் கொண்டு, பள்ளி இயங்கும் நேரத்தை அதிகரித்து, பாடத்திட்டங்களில் முக்கியப் பகுதிகளை மட்டும் கற்பிக்க வேண்டும். இதே வேகத்தில் பயணித்தால் ஏப்ரல் மத்தியில் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியையும், ஜுன் இறுதிக்குள் மீதமுள்ள பகுதியையும் முடிக்க இயலும். ஜுன் மாதம் பள்ளி பொதுத்தேர்வுகளை நடத்தலாம்.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 வரப்பிரசாதம்
 கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுக் காலத்தில் மாணவர்களுக்குக் கல்வி கிடைக்காத நிலையில், வரப்பிரசாதமாகக் கை கொடுத்தது இணையவழிக் கல்வி. இடைவெளியின்றி பாடங்கள் நடத்தப்பட்டும், பாடத்திட்டங்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டும் இந்தக் கல்வியாண்டை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் வருவதால் இந்தக் கல்வியாண்டை விரைந்து முடிப்பதே நல்லது.
 கே. ராமநாதன், மதுரை.
 காலத்தின் கட்டாயம்
 பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால், மாணவர்கள், குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் விவசாய கூலி வேலைகளுக்கும், பெற்றோரின் தொழில்களில் உதவி செய்வதற்கும் போய்விட்டனர். பள்ளிப்பாடங்களுக்கும் இவர்களுக்கும் இருந்த தொடர்பு கிட்டத்தட்ட அறுந்துவிட்டது. பாடத்திட்டத்தை அரசு குறைத்தாலும் மாணவர்கள் பழையபடி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வகுப்பறைக் கல்வியில் கவனம் செலுத்த அவகாசம் தர வேண்டியது காலத்தின் கட்டாயம்.
 வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்.
 புத்துணர்ச்சி
 தனியார் பள்ளிகளில் இணையவழியிலேயே பெரும்பாலான பாடப்பகுதிகள் நடத்தப்பட்டுவிட்டன. அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆசிரியர்களும் மாணவர்களும் ஏறத்தாழ பத்து மாத ஓய்வுக்குப் பின் புத்துணர்ச்சியோடு பள்ளிகளுக்கு வந்துள்ளனர். கடமை உணர்வோடு கற்றல் - கற்பித்தல் நடைபெற்றால் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பொதுத்தேர்வுகளை நடத்துவதில் எந்த இடர்ப்பாடும் இருக்காது.
 எம்.ஏ. செல்வராஜ், சென்னை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com