கடந்த வாரம் கேட்கப்பட்ட "வேட்பாளர்களைவிட "நோட்டா'வுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால் அந்தத் தொகுதியின் தேர்தலை செல்லாததாக அறிவிக்கலாமா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

 வேட்பாளர்களைவிட "நோட்டா'வுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால் அந்தத் தொகுதியின் தேர்தலை செல்லாததாக அறிவிக்க வேண்டும்.

 ஆதரவு இல்லை
 வேட்பாளர்களைவிட "நோட்டா'வுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால் அந்தத் தொகுதியின் தேர்தலை செல்லாததாக அறிவிக்க வேண்டும். போட்டியிடும் வேட்பாளர்களில் எவரையும் அத்தொகுதி மக்கள் ஆதரிக்கவில்லை என்பதே இதன் பொருள். எனவே, அத்தொகுதியில் மீண்டும் தேர்தல் நடைபெறும்போது மக்களால் நிராகரிக்கப்பட்ட அதே வேட்பாளர்கள் மீண்டும் அத்தொகுதியில் நிறுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
 குரு. பழனிசாமி, கோயமுத்தூர்.
 பெரும்பான்மை
 தொகுதியின் மொத்த வாக்குகளில் 50 விழுக்காட்டுக்கு மேற்பட்ட வாக்குகள் "நோட்டா'வுக்குக் கிடைத்தால் அந்தத் தொகுதியின் தேர்தலை செல்லாததாக அறிவிக்கலாம். சட்டப்பேரவை உள்ளிட்ட எந்த அவையிலும் 50 விழுக்காட்டுக்கு மேல் இருப்பதே பெரும்பான்மை என்று கொள்ளப்படுகிறது. மேலும், மீண்டும் நடத்தப்படும் தேர்தலில் புதிய வேட்பாளர்களே நிறுத்தப்பட வேண்டும்.
 கோ. லோகநாதன், திருப்பத்தூர்.
 நியாயமல்ல
 தேர்தலை செல்லாததாக அறிவிப்பது நியாயமல்ல. வேட்பாளர்களில் எவர் அதிக வாக்குகள் பெற்றிருக்கிறாரோ அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிப்பதுதான் சரி. வேட்பாளர்களைவிட "நோட்டா' அதிக வாக்குகள் பெற்றால் அதற்காக அரசியல் கட்சிகள்தான் கவலைப்பட வேண்டும். புதிதாக அமையும் அரசு அந்தத் தொகுதி வாக்காளர்களின் குறைகளைக் கண்டறிந்து தீர்வு காண வேண்டும். தேர்தலை செல்லாததாக்குவது தீர்வாகாது.
 பொன். கருணாநிதி, கோட்டூர்.
 விருப்பமின்மை
 தேர்தல் செல்லாததாக அறிவிக்க வேண்டும். ஒரு தொகுதியில் நிற்கும் வேட்பாளர்கள் அனைவருமே ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருக்கும்போது மக்கள் தங்களின் விருப்பமின்மையை "நோட்டா'வின் மூலம் வெளிப்படுத்துகின்றனர். அங்கு மீண்டும்
 தேர்தல் நடத்தும்போது ஏற்கனவே களம் கண்ட வேட்பாளர்களுக்கு மாற்றாக புதிய வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் நிறுத்த வேண்டும்.
 மா. பழனி, தருமபுரி.
 மதிக்க வேண்டும்
 பதிவான மொத்த வாக்குகளில் 50 சதவீதத்திற்கு மேல் நோட்டாவுக்கு கிடைத்தால் மட்டுமே தேர்தலை செல்லாததாக அறிவிக்கலாம். அதாவது எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று சொல்பவர்கள் 50 சதவீதத்துக்கு மேல் இருக்க வேண்டும். குறைவாக இருந்தால் அதிக வாக்குகளைப் பெற்றவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கலாம். வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் பெரும்பான்மை வாக்காளர்களை மதிக்க வேண்டும்.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 வரப்பிரசாதம்
 "நோட்டா' என்பது வாக்களிக்க செல்லாமல் இருந்த வாக்காளர்களை வாக்களிக்க வைப்பதற்கு வரப்பிரசாதமாக இருக்கிறது. "நோட்டா'வுக்கு அதிக வாக்கு கிடைத்தால் வேட்பாளர்களின் மீதோ அரசியல் கட்சிகளின் மீதோ விருப்பமில்லை என்பதன் வெளிப்பாடாகவே இதனை எடுத்துக் கொண்டு அதனைக் களைய முற்பட வேண்டும். அந்தத் தொகுதியின் தேர்தலை செல்லாதாக அறிவிக்கத் தயங்கவே கூடாது.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 காரணங்கள்
 நோட்டா என்பது வேட்பாளர்கள் பிடிக்கவில்லை என்ற ஒற்றைக் கருத்து மட்டுமே கிடையாது. தேர்தல் முறையே சரியில்லை என்பதை சொல்வதற்கும் நோட்டா பயன்படுத்தப்படுகிறது. ஆக, பல காரணங்களால் நோட்டாவில் வாக்குகள் விழுகின்றன. நூற்றுக்கு நூறு சதவிகிதம் நோட்டா வாக்குகள் இருந்தால் ஒருவேளை இந்த கருத்து எடுபடலாம். நோட்டா என்பது ஒரு வேட்பாளர் இல்லை. உயிரற்ற செயல்முறை.
 சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.
 தேவையற்றது
 வேட்பாளர்களை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால் அந்தத் தொகுதியின் தேர்தலை செல்லாததாக அறிவிக்க வேண்டியதில்லை. ஏனெனில் இதை காரணம் காட்டியே நோட்டாவை நீக்க வேண்டி வரும். மேலும் பழையபடி விருப்பமில்லாமல் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டியிருக்கும். மேற்கொண்டு அது விஷயத்தில் கவனம் செலுத்துவது தேவையற்றது. வேட்பாளர்களே அது குறித்து சிந்தித்து செயல்பட வேண்டும்.
 என். கோவிந்தராஜன், ஸ்ரீமுஷ்ணம்.
 வாக்குவங்கி
 தேர்தல் செல்லாது என்று அறிவிப்பதே சரி. தரமற்ற வேட்பாளர்களை அங்கீகரிக்கக் கூடாது என்பதற்காகத்தான் நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது. இது நடைமுறைக்கு வந்தால் அரசியல் கட்சித் தலைவர்கள், குற்றப்பின்னணி உள்ள நபர்களை வேட்பாளர்களாக களமிறக்க மாட்டார்கள். நம் நாட்டில் ஒவ்வொரு கட்சிக்கும் குறிப்பிட்ட சதவீதம் வாக்குவங்கி இருப்பதால், நோட்டா முதல் இடத்தைப் பிடிப்பது அரிதுதான்.
 ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
 விழிப்புணர்வு
 நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுமானால் அந்தத் தொகுதியில் சரியான வேட்பாளர்களை கட்சிகள் நிறுத்தவில்லை என்றே அர்த்தமாகும். எல்லாத் தொகுதிகளிலும் இதுபோன்று நடப்பதில்லை. ஒன்றிரண்டு தொகுதிகளில் நடக்கலாம். வாக்காளர்கள் நோட்டாவைத் தவிர்க்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். யாருக்கும் பயன்படாத வாக்குகளை யாராவது ஒரு வேட்பாளருக்குப் பயன்பட வழிசெய்யப்பட வேண்டும்.
 உ. இராஜமாணிக்கம், கடலூர்.
 சீர்திருத்தம்
 நோட்டாவுக்கு வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் கிடைத்தால் அந்தத் தொகுதியில் நின்ற அத்தனை வேட்பாளர்களும் மக்களால் நிராகரிக்கப்பட்டதாகக் கருதி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அத்தொகுதியில் அந்த வேட்பாளர்கள் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும். இது ஒரு மிகப்பெரிய தேர்தல் சீர்திருத்தம். தற்போது, இருப்பதில் யார் மேல் என்று தீர்மானிக்க வேண்டிய நிர்பந்தம் வாக்காளர்களுக்கு உள்ளது.
 ஏ.பி. மதிவாணன், சென்னை.
 பண விரயம்
 தேர்தலை செல்லாததாக அறிவிக்கக் கூடாது. அந்த தொகுதியில் நோட்டாவுக்கு அடுத்து அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளரை வெற்றி பெற்றவராக அறிவிக்கலாம். அதை விடுத்து தேர்தலை செல்லாததாக அறிவித்தால் தேர்தல் அலுவலர்களின் உழைப்பும், தேர்தலுக்காக அரசு செலவு செய்த பணமும் விரயமாகி விடும். மீண்டும் ஒருமுறை அந்த தொகுதியில் தேர்தலை நடத்த வேண்டிய தேவையற்ற சூழல் ஏற்படும்.
 மு. நடராஜன், திருப்பூர்.
 அறியாமை
 தேர்தலை செல்லாததாக அறிவிக்கக் கூடாது. இது தவறான முன்னுதாரணமாகிவிடும். தங்கள் வாக்குகள் வீணாவதை வாக்களித்த வாக்காளர்கள் ஏற்க மாட்டார்கள். சட்டம் இயற்றாமல் தேர்தலை ரத்து செய்ய முடியாது. இந்தச் சிந்தனை ஒரு மாயையாகும். வாக்குரிமை என்பது விலைமதிப்பற்றது. நோட்டாவையே மக்கள் வெறுக்கும் நிலை உருவாகும். வேட்பாளர்கள் அனைவரையும் புறக்கணிப்பது அறியாமையாகும்.
 ச.கண்ணபிரான், திருநெல்வேலி.
 சாத்தியமற்றது
 ஒரு தொகுதியில் நோட்டா வெற்றி பெற்றாலும் அரசாங்கமோ, உச்சநீதிமன்றமோ அந்த தொகுதியில் தேர்தல் செல்லாது எனச் சட்டம் இயற்றும் என்பது இந்திய அரசியலில் சாத்தியமற்ற ஒன்று. ஆகவே நோட்டாவுக்கு முதல்நிலை கிட்டும் வாய்ப்பு வர வாய்ப்பில்லை. நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிட்டும் நிலையே இல்லாத நிலையில் தேர்தலை செல்லாததாக அறிவிக்க வேண்டிய கட்டாயம் எழவில்லை.
 எஸ். சொக்கலிங்கம், கொட்டாரம்.
 மறு தேர்தல்
 வேட்பாளர்களைவிட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால் அத் தேர்தலை செல்லாததாக அறிவிக்கலாம். அத்தொகுதிக்கு மறு தேர்தல் நடத்தலாம். மேலும் மறுதேர்தலில் முந்தைய வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிடக் கூடாது. இல்லையேல் முதலிரண்டு வேட்பாளர்களை மட்டும் போட்டியிடச் செய்து யார் ஐம்பது சதவிகிதத்திற்கும் மேல் பெறுகிறாரோ அவரை வெற்றியாளராக அறிவிக்கலாம்.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேச்வரம்.
 வாய்ப்பு இல்லை
 நம் நாட்டைப் பொருத்தவரை நோட்டாவுக்கு வேட்பாளர்களைவிட அதிக வாக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை. அப்படியே ஓரிரு தொகுதியில் கிடைத்தாலும் அங்கெல்லாம் தேர்தலை ரத்து செய்வது தவறான செயல். போட்டியிட்ட வேட்பாளர்களில் யார் அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறாரோ அவர் வெற்றி பெற்றதாக அறிவிப்பதுதான் சரியான நடைமுறை. இதனால் அரசுக்கு மறு தேர்தல் செலவும் மிச்சம் ஆகும்.
 கே. விஸ்வநாதன், கோயமுத்தூர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com