கடந்த வாரம் கேட்கப்பட்ட "நோய்த்தொற்று பரவுவதால், தேர்தல் பிரசாரத்தை தொலைக்காட்சி வழியே மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

நோய்த்தொற்று பரவுவதால், தேர்தல் பிரசாரத்தை தொலைக்காட்சி வழியே மட்டும் மேற்கொள்ள வேண்டும் என்பது சரியல்ல.

ஒருவழிப் பாதை
 நோய்த்தொற்று பரவுவதால், தேர்தல் பிரசாரத்தை தொலைக்காட்சி வழியே மட்டும் மேற்கொள்ள வேண்டும் என்பது சரியல்ல. வேட்பாளர்களை நேரில் பார்க்கவே மக்கள் விரும்புகிறார்கள். பழைய வேட்பாளராக இருந்தால் தங்கள் குறைகளில், நிறைவேற்றப்பட்டதையும் நிறைவேற்றப்படாதததையும் அவரிடம் கூறுவார்கள். வாக்குறுதிகளை நேரில் வழங்குவதுதான் சிறந்தது. தொலைக்காட்சி வழி பிரசாரம் என்பது ஒருவழிப் பாதை போன்றது. அதனால் பயனில்லை.
 ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
 எப்படி?
 தமிழகத்தில் தீநுண்மியின் இரண்டாவது அலை வேகமாகப் பரவுவதற்குக் காரணமே, தேர்தல் பிரசாரக் கூட்டங்கள்தான். இந்தக் கூட்டங்களில் பாதியளவு நபர்கள்கூட முக கவசம் அணிவது கிடையாது. சமூக இடைவெளி என்பது சுத்தமாக இல்லை. பிறகு எப்படி நோய்த்தொற்று கட்டுக்குள் வரும்? உடனடியாக தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நிறுத்திவிட்டு, தொலைக்காட்சி வழியே மட்டுமே பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
 இரா. கல்யாணசுந்தரம், மதுரை.
 பெருந்துன்பம்
 மக்கள் கூட்டம் கூட்டமாக வாகனங்களில் அழைத்துவரப்படுகின்றனர். அப்போது அவர்களால் எப்படி சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியும்? தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்ள வரும் பகுதிகளில், போக்குவரத்து நெரிசல், வாகனங்களை தடுத்து நிறுத்தி வேறு பாதையில் மாற்றி அனுப்புதல் போன்றவற்றால் மக்கள் பெருந்துன்பத்துக்கு ஆளாகின்றனர். மேலும், தலைவர்களின் தொலைக்காட்சி உரை ஆவணமாகவும் இருக்கும்.
 சி.ஜி. தனபாண்டியன், ராணிப்பேட்டை.
 ஆபத்து
 நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிவரும் நிலையில் பொதுமக்களிடம் அது குறித்த அச்சம் சிறிதும் இல்லை. இந்த சூழலில், மக்கள் கூட்டம் கூட்டமாக தேர்தல் பிரசாரம் நடக்கும் இடத்தில் கூடுவது மிகவும் ஆபத்தானது. அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வாக்காளர்களை எச்சரிப்பதில்லை. நோய்த்தொற்றிலிருந்து மீள்வதற்கான ஒரேவழி, பிரசாரத்தை தொலைக்காட்சி வழியே மட்டும் மேற்கொள்வதுதான்.
 அ. சிவராம சேது, திருமுதுகுன்றம்.
 உயிர் முக்கியம்
 தேர்தல் பிரசாரத்தின்போது பொதுமக்கள் சமூக இடைவெளி, முக கவசம் இவற்றை முறையாகப் பின்பற்றுவதில்லை. அரசியல் கட்சிகளும் அதிகமான ஆட்களை ஒன்று திரட்டி தங்களின் பலத்தை நிரூபிப்பதற்கு துடிக்கின்றன. இதனால் நோய்த்தொற்று வேகமாக பரவும் அபாயம் உள்ளது. தேர்தலைவிட மக்களின் உயிர் முக்கியம் என்பதை அதிகாரத்தில் இருப்பவர்கள் உணர வேண்டும். தொலைக்காட்சி வழியே தேர்தல் பிரசாரம் செய்வதே சரியான நடைமுறையாகும்.
 மா. பழனி, தருமபுரி.
 வாய்ப்பு
 தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு மக்கள் பணம் கொடுத்து அழைத்து வரப்படுகிறார்கள். இதனால் கரோனா வேகமாகப் பரவுகின்ற வாய்ப்பு உள்ளது. எனவே, ஏராளமான பேர் ஒரே இடத்தில் கூடும் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும். கட்சித் தலைவர்கள் பொதுக்கூட்டங்களில் பேசுவதை நம்பி மக்கள் வாக்களிப்பதில்லை. அவர்களின் கடந்தகால செயல்பாடுகளை வைத்தே வாக்களிக்கிறார்கள்.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 சரியாக அமையாது
 கிராமப்புற வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பற்றிய சரியான புரிதல் இல்லாததால் தொலைக்காட்சிகளில் மட்டுமே தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்வது சரியாக அமையாது. அரசியல் கட்சிகள், தங்களுக்குத்தான் அதிக மக்கள் கூட்டம் வரவேண்டும் என்று எண்ணாமல், சிலரை மட்டும் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதித்து பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும். அந்த சிலரும் நெறிமுறைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும்.
 ரெ. சுப்பாராஜு, கோவில்பட்டி.
 பணம் மிச்சம்
 அரசியல் கட்சியினர் தொலைக்காட்சி வழியே பிரசாரம் செய்வதே சிறந்தது. இதனால் கட்சிகளுக்கு பணம் மிச்சமாகும். வாக்காளர்களும் நோய்த்தொற்று அச்சத்தோடு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம். மீண்டும் தீநுண்மி பரவுவதற்கு அரசியல் கட்சிகள் காரணமாகிவிடக் கூடாது. மாணவர்களே இணைய வழியில் படித்துப் புரிந்துகொள்ளும்போது, வாக்காளர்கள் தொலைக்காட்சி வழியே புரிந்துகொள்ள மாட்டார்களா?
 கோ. லோகநாதன், திருப்பத்தூர்.
 சாத்தியமற்றது
 தேர்தல் பிரசாரத்தை தொலக்காட்சி வழியே மட்டும் மேற்கொள்ள வேண்டும் என்பது சரியாக வராது. கட்சித் தலைவர்களையும் வேட்பாளர்களையும் வாக்களிக்கும் மக்கள் நேரடியாக சந்திக்க முடியாது. அதே போல அவர்களும் மக்களை சந்திக்க முடியாது. மேலும், மக்கள் மணிக்கணக்காக தொலைக்காட்சி பார்க்க மாட்டார்கள். இது தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்ப்பது போல ஆகி விடும். தேர்தல் பிரசாரத்தை தொலைக்காட்சி வழியாக மேற்கொள்வது சாத்தியமற்றது.
 எஸ்.வி. ராஜசேகர், சென்னை.
 இரண்டாம் அலை
 நோய்த்தொற்றின் இரண்டாம் அலை முன்பை விட வீரியம் மிக்கதாக விரைவாக பரவிக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் தேர்தல் பிரசாரக் கூட்டம், ஊர்வலம், வாக்கு சேகரிப்பு என கூட்டம் கூடுவதால் நோய்த்தொற்று பரவ அதிக வாய்ப்பு இருக்கிறது. பள்ளிகளில் தேர்வு ரத்து, கல்லூரிகளில் நேரடி வகுப்பு ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வகுப்பு நடைபெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொலைக்காட்சி வழியே நல்லது.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 நன்மை பயக்கும்
 பொதுமக்கள் நோய்த்தோற்றின் இரண்டாவது அலை தீவிரத்தை அறியாதவர்களாக இருப்பதால் தொலைக்காட்சி வழி பிரசாரம் மேற்கொள்வதே நன்மை பயக்கும். அரசு அனைத்து அரசியல் கட்சியினருக்கும் சுழற்சி முறையில் நேரம் ஒதுக்கி, தொலைக்காட்சி வழி பிரசாரத்தை மேற்கொள்ளச் செய்யலாம். சமூக வலைதளம், தொலைக்காட்சி ஆகியவை சாத்தியமான வழிமுறை என்பதால், அதனை மேற்கொள்ள வேண்டும்.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 சம வாய்ப்பு அல்ல
 தொலைக்காட்சி வழியே மட்டும் பிரசாரம் செய்ய வேண்டும் என்று சொன்னால் அது அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் சம வாய்ப்பு அளித்ததாக இருக்காது. ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் பலமான ஊடக பலம் உள்ளது போல் மற்ற கட்சிகளுக்கு இல்லை என்பதே நிதர்சனம். அரசு அறிவித்திருக்கும் நோய்த்தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடித்து தேர்தல் பிரசாரத்தை அரங்குகளில் நடத்தலாம்.
 ஏ.பி. மதிவாணன், சென்னை.
 சரியான கூற்று
 நோய்தொற்று தீவிரமாக பரவுவதால் தேர்தல் பிரச்சாரத்தை தொலைக்காட்சி வழியே மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்பது மிகச்சரியான கூற்று. கட்சி பிரமுகர்கள் தொலைக்காட்சியில் பிரசாரம் செய்வதை விரும்ப மாட்டார்கள். அதேசமயம் கூட்டத்தில் கலந்துகொண்டதால் நோய்த்தொற்று ஏற்பட்டு பாதிக்கப்படப்போவது ஏதுமறியாத பாமர மக்கள்தான். எனவே, தேர்தல் பிரசாரத்தை தொலைக்காட்சி மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
 ஆர்.எஸ். மனோகரன், முடிச்சூர்.
 விழிப்புணர்வு
 நன்கு சிந்தித்து வாக்களிக்கும் அளவிற்கு மக்கள் விழிப்புணர்வு பெற்றுவிட்டனர். மாவட்டத் தலைநகரிலோ தொகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்திலோ அரசியல் கட்சியினர் ஒரு கூட்டம் நடத்தி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினால் போதுமானது. எல்லாக் கட்சிகளுக்கும் தொலைக்காட்சிகள் இருப்பதால் அவற்றின் வழியே பிரசாரத்தை மேற்கொள்ளலாம். மக்களின் உழைப்பு நேரம் செலவு எல்லாமே மிச்சமாகும்.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 அலட்சியம் கூடாது
 தற்போது அனைவரிடமும் கைப்பேசி வசதி உள்ளது. இணைய வசதி இல்லாதவருக்கும் குறுஞ்செய்தி மூலம் பிரசாரம் மேற்கொள்ளலாம். நாம் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியம் காட்டினால் நோய்த்தொற்று அதிகரிக்கும். மக்களுக்காகத்தான் தேர்தல், தேர்தலுக்காக மக்கள் இல்லை. எனவே பிரசாரத்தை தொலைக்காட்சி மூலம் மேற்கொள்ளலாம் என்பது சரியான கருத்து. இதன் மூலம் தேர்தல் செலவுகளும் கட்டுப்படுத்தப்படும்.
 ஆ. ஜுடு ஜெப்ரி ராஜ், சோமனூர்.
 ஏற்கத்தக்கது அன்று
 இந்த யோசனை ஏற்கத்தக்கது அன்று. அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தங்களிடம் நேரில் வந்து வாக்கு கேட்பதையே வாக்காளர்கள் விரும்புவார்கள். கட்சித் தலைவர்களும் வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்குறுதி அளித்து வாக்கு கேட்பதையே விரும்புவர். எனவே, அரசு அறிவித்துள்ள நோய்த்தொற்றுப் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி அரசியல் கட்சியினர் மக்களை சந்திக்க வேண்டும்.
 ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com