'நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என்கிற கோரிக்கை சரியானதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

 நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என்கிற கோரிக்கை சரியானதே

சரியானதே
 நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என்கிற கோரிக்கை சரியானதே. ஏற்கெனவே பல்வேறு தொற்றுநோய்களுக்கு அரசு மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டுள்ளது. தற்போது வயதுவாரியாக, இலவசமாக, பணம் செலுத்தி என பல்வேறு பாகுபாடுகள் இருப்பதால் மக்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது குறித்து குழம்பிப் போய் உள்ளனர். வீடுதோறும் சென்று மக்கள் அனைவருக்கும் இலவசமாகவும் கட்டாயமாகவும் தடுப்பூசி போடப்பட்டால் மட்டுமே இந்த பெருந்தொற்றை முற்றாக ஒழிக்க முடியும்.
 கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
 தனியார் சேவை
 போலியோ, அம்மை, காலரா போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகள் இலவசமாகத்தான் போடப்படுகின்றன. பொதுமக்களுக்கு இலவசமாக பல பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரொக்கமாகப் பணமும் வழங்கப்படுகிறது. இதே அடிப்படையில் இதுவரை மனித குலம் கண்டிராத கரோனா தொற்றுக்கான தடுப்பூசியும் இலவசமாகவே போடப்பட வேண்டும். பல்வேறான தடுப்பூசி விலைகளையும் மக்களின் தயக்கத்தையும் இதன் மூலம் தவிர்க்கலாம். தடுப்பூசிகளை வேகமாக போட தனியார் மருத்துவமனைகளின் சேவையையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 ஒரேவழி
 முற்காலத்தில் வீடுவீடாகச் சென்று அம்மை நோய்க்கான தடுப்பூசியைப் போட்டிருக்கிறார்கள். தற்போது அம்மை நோய் முற்றிலும் இல்லாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அது போன்றுதான் போலியோ சொட்டு மருந்தும். தற்போது கரோனா தீநுண்மியின் தாக்கம் தீவிரமாகக் காணப்படுகிறது. தடுப்பூசி ஒன்றுதான் தற்போதைய சூழலில் நம்மைப் பாதுக்காக்கும் ஒரே வழி. எனவே, தேவையற்ற வதந்திகளைப் புறந்தள்ளி தற்போது கண்முன்னே தெரியும் காப்பு மருந்தாம் தடுப்பூசியினை அனைவருக்கும் அரசு இலவசமாகப் போட வேண்டும்.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 தலையாய கடமை
 இந்த யோசனை ஏற்கத்தக்கதே. நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கும் கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தடுப்பூசி போடப்படுவதும் ஓர் இன்றியமையாத செயல்பாடுதான். மேலும், வெளிநாட்டிலிருந்து தடுப்பூசி மருந்துகள் வரவழைக்கப்படுவதாக இருந்தாலும், கரோனா தடுப்பூசி நிதி ஒதுக்கீட்டின் கீழ்தான் அச்செலவுளும் அடங்கும். எனவே, அனைத்து மக்களுக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடுவதே அரசின் தலையாய கடமையாகும்.
 தெ. முருகசாமி, புதுச்சேரி.
 அரசு மானியம்
 இலவசமாக தடுப்பூசி போட்டாலும், பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர மாட்டார்கள். ஏனெனில் இலவசமாக கிடைக்கும் பொருட்கள் தரமற்றவை என்று எண்ணுகின்றனர். இது உயிர் காக்கும் மருந்து. இலவசமாக போட்டாலும் பணம் கொடுத்து போட்டாலும் ஒரே விதமாகத்தான் செயல்படும் என்பதை மக்களுக்குப் புரிய வைப்பது கடினம். ஆகவே, அரசு மானியம் வழங்கி, குறைந்தபட்ச விலையை தடுப்பூசிக்கு நிர்ணயிக்கலாம். இது அனைத்து மக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதி செய்யும்.
 மா. ஜான் ரவிசங்கர், அஸ்தம்பட்டி.
 எளிதல்ல
 இக்கோரிக்கை மிகவும் சரியானதே. கொள்ளை நோய்த்தொற்றிலிருந்து நாட்டு மக்களைக் காக்க வேண்டிய ஆளும் அரசின் கடமை. மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில்தான் அரசு இயங்குகிறது. அடித்தட்டு மக்களும், இணைநோய் உள்ளவர்களும் தடுப்பூசிக்காகப் பணம் செலவு செய்வது அவ்வளவு எளிதல்ல. ஏற்கெனவே கரோனா நோய்த்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை தடுப்பூசிக்காகவும் செலவு செய்ய வைப்பது நியாயமல்ல. அரசே இலவசமாகத் தடுப்பூசி போடுவதே சரியான நடவடிக்கையாக அமையும்.
 ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
 அரசின் பொறுப்பு
 கரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் இலவசமாக போடப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முற்றிலும் சரியே. கரோனா போன்ற கொள்ளை நோய் வரும்போது போதிய அளவு தடுப்பு மருந்துகளை அரசு கையிருப்பில் வைத்திருப்பதும் போர்க்கால அடிப்படையில் அவற்றை இலவசமாக வழங்குவதும் மக்கள் நலன் காக்கும் அரசின் பொறுப்பாகும். தனியார் மருத்துவமனைகளுக்கும் தடுப்பூசி மருந்தை அரசு இலவசமாக வழங்கலாம். தடுப்பூசி போடுவதற்கான கட்டணமாக ஒரு சிறிய தொகையை மட்டும் வாங்க அனுமதிக்கலாம்.
 ஏ.பி. மதிவாணன், சென்னை.
 காலத்தின் கட்டாயம்
 தடுப்பூசி போடப்பட்டால்தான் கரோனா தீநுண்மியைக் கட்டுப்படுத்த முடியும். தீநுண்மியின் இரண்டாம் அலை குழந்தை முதல் முதியவர் வரை எல்லாரையும் பாதிக்கிறது. ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்குஉருமாற்றம் ஏற்படும் தீநுண்மியை எந்த அளவுக்கு எதிர்க்கும்ஆற்றல் உள்ளது என்ற நிலை சரியாக தெரியவில்லை. பாரபட்சமின்றி எல்லோருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்பட்டாலொழிய கரோனா தீநுண்மியை வெல்வது கடினமானதே. எனவே, நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
 உ. இராஜமாணிக்கம், கடலூர்.
 மனிதாபிமானம் அல்ல
 அரசாங்கம் பொதுமக்களுக்கு எத்தனையோ இலவசத் திட்டங்களை அறிவிக்கிறது. அவை எல்லாவற்றைக் காட்டிலும் தற்பொழுது தடுப்பூசி அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். உயிர் காக்கும் தடுப்பூசியை விலைக்குத்தான் மக்கள் வாங்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது மனிதாபிமானம் இல்லாத செயலாகும். மருத்துவத்துறையில் பணம் ஈட்ட ஆயிரம் வழிகள் உண்டு. இப்படிப்பட்ட இக்கட்டான நிலைமையில் இலவசமாக தடுப்பூசிகளைப் போடுவதே நல்லது. நாட்டுப்பற்று என்று பேசுவதைவிட அதனை நடைமுறையிலும் மருத்துவத்துறை பின்பற்ற வேண்டும்.
 சி. சுரேஷ், தருமபுரி.
 சாத்தியமில்லை
 தாமதத்தைத் தவிர்ப்பதற்காக சிலர், தனியார் மருத்துவமனைகளில் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்வதை வரவேற்கலாம். ஆனால், வசதியில்லாதவர்களுக்கு அது சாத்தியமில்லை. ஜாதி, இன, மத வேறுபாடின்றி ஏழை, பணக்காரன் என்கிற பாகுபாடின்றி, கண்ணுக்குத் தெரியாமல் பரவி அனைவரையும் தாக்கி அழித்துக்கொண்டிருக்கின்ற கொடிய கரோனா தீநுண்மி, கட்டுப்படுத்தப்பட வேண்டுமானால் நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படவேண்டும். அதுவும் தாமதமின்றி விரைவாக அனைவருக்கும் தடுப்பூசிப் போடப்படவேண்டும்.
 ப. கோவிந்தராசு, ஊத்தங்கால்.
 தவறான எண்ணம்
 இக்கோரிக்கை சரியல்ல. இலவசம் என்றாலே மக்களிடம் ஒரு வித அலட்சிய போக்கு வந்து விடுகிறது. அதனால் இப்படிச் செய்வதைவிட அரசு குறைந்த விலையில் தடுப்புப்பூசி போட்டால் மக்களும் தயங்காமல் போட்டுக் கொள்வார்கள். நியாய விலை கடையில் கொடுக்கப்படும் இலவச அரிசி வாங்கவதற்கே சிலர் யோசிக்கிறார்கள். அதேபோல் இலவசம் என்றால் அது மதிப்புக் குறைவு என்ற தவறான எண்ணம் பலரிடம் உள்ளது. அவர்களிடம் இலவசம் என்று கூறாமல் சிறிய தொகை என்றால் உடனே தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவார்கள்.
 உஷா முத்துராமன், மதுரை.
 ஏற்புடையதல்ல
 நாட்டு மக்கள் மக்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படவேண்டும் என்கிற கோரிக்கை ஏற்புடையதல்ல. வசதி உள்ளவர்கள் தனியார் மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். நடுத்தரப் பிரிவினரும் ஏழைகளும் அரசு மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். இலவசம் என்று இல்லாமல் குறைந்த கட்டணம் செலுத்தி தடுப்பு ஊசி போடுவது சரியாக இருக்கும். இப்போது தனியார் மருத்துவமனைகளில் நிர்ணயித்திருக்கும் கட்டணத்தைப் பாதியாகக் குறைக்கலாம். இலவசம் வேண்டாம்.
 ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
 ஒத்துழைப்பு தேவை
 இக்கோரிக்கை சரியானதே. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனாவின் தாக்கம் தற்போது நம் நாட்டில் அதிகமாகி அன்றாடம் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மக்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்பதால் கட்டாயம் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட வேண்டும். அரசின் செயல்பாட்டுக்கு மக்கள் முழு அளவில் ஒத்துழைப்பு தந்து தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். மக்கள் ஒத்துழைத்தால்தான் இதுபோன்ற தொற்றுநோய்களிலிருந்து அனைவரும் விடுபட முடியும்.
 மா. பழனி, கூத்தப்பாடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com