"ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தியை மக்கள் ஏற்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறியுள்ள கருத்து ஏற்கத்தக்கதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்தியை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறியிருப்பது அவரது தேசபக்தியைக் குறிப்பதாக இருக்கலாம். ஆனால் நடைமுறை சாத்தியமற்ற ஒன்று

பிற்போக்கு
 ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்தியை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறியிருப்பது அவரது தேசபக்தியைக் குறிப்பதாக இருக்கலாம். ஆனால் நடைமுறை சாத்தியமற்ற ஒன்று. உலகமயமாதலில் ஆங்கில அறிவின் காரணமாக நிறைய வேலைவாய்ப்புகள் வந்தது இதன் நன்மைகளில் ஒன்று. ஹிந்தியை ஆங்கிலத்திற்கு மாற்றாகக் கொண்டுவரும்போது தமிழகம் போன்ற மாநிலத்தவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர். வெளிநாட்டினரின் வருகையையும், சுற்றலாத் துறையில் ஆங்கிலத்தின் அவசியத்தையும் கருத்தில் கொள்ளும்போது, ஹிந்தியை நாம் ஆங்கிலத்திற்கு மாற்றாகப் பயன்படுத்துவது என்பது பிற்போக்குத்தனம்.
 சோம. இளங்கோவன், தென்காசி.
 ஒருமைப்பாடு சிதையும்
 இக்கருத்து ஏற்கத்தக்கதல்ல. ஆங்கிலம் என்பது உலகப் பொது மொழியாகிவிட்டது. சில குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே பேசப்படும் மொழியான ஹிந்தியைத் திணிக்கக்கூடாது. தமிழகத்தைப் பொறுத்தவரை இரு மொழிக் கொள்கை செயல்பாட்டில் உள்ளது. ஆங்கிலத்திற்கு மாற்று ஹிந்தி என்ற நிலை மக்களின் மொழி உரிமையை, இந்தியாவின் ஒருமைப்பாட்டை சிதைப்பது ஆகும். தமிழக மக்கள் மீது ஹிந்தி மொழியை திணிக்கக்கூடாது. இப்போது தமிழகத்தில் இருப்பதுபோல தமிழ், ஆங்கிலம் இரு மொழி கொள்கையே தொடர வேண்டும். விருப்பப்படுகின்றவர்கள் ஹிந்தி மொழி உள்பட எதை வேண்டுமானாலும் கற்கலாம்.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 பொருளாதார மேம்பாடு
 தாய்மொழிக்கு அடுத்த நிலையில் மக்களால் ஆங்கிலம் ஏற்கப்பட்டுள்ளது. மேலும் ஆங்கில மொழி வழியாகவே ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை போதிக்கப்படுகிறது. 1835-இல் மெக்காலே இந்நாட்டுக்குக் கொண்டு வந்த மேலை நாட்டுக் கல்வி முறை, ஆலமரமாய் வேரூன்றி, பல்லாயிரம் விழுதுகள் விட்ட மரமாய்ப் பல தலைமுறைகளைக் கண்டுவிட்டது. மேலும் ஒரு மொழியின் வளர்ச்சி பொருளாதார மேம்பாட்டுடன் தொடர்புடையதாக உள்ளது. ஹிந்தி கற்பதைப் பொருளாதார மேம்பாடுடன் மக்கள் பார்க்கும்படியான உணர்வை அரசு ஏற்படுத்துமானால், ஹிந்தி ஒரு விருப்ப மொழியாக மக்களால் ஏற்கப்படும்.
 உரப்புளி நா. ஜெயராமன், பரமக்குடி.
 தேவையற்றது
 தொடர்பு மொழியாக ஆங்கிலம் இருந்து வரும் நிலையில், ஹிந்தி மொழி தேவையற்ற ஒன்றாகும். ஹிந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தும் நாடகம் ஏற்புடையதல்ல. மொழிவாரி மாநிலங்கள் உருவான பிறகு, மாநில மொழி முதன்மை ஆகிறது. அதன் பிறகு அவரவர் விருப்பம் போல் எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்கலாம். இந்த மொழி தேவை, இந்த மொழி தேவையற்றது என அறிவுரை கூறுவதால் வீண் விவாதங்கள் வளரும். அகில இந்திய தொடர்பு மொழியாக ஆங்கிலம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தனிநபர் தங்களது விருப்ப அடிப்படையில் மாற்று மொழிகளை கற்க ஊக்கப்படுத்த வேண்டும்.
 ப. நரசிம்மன், திருச்சி.
 சரியானது
 அமித் ஷாவின் ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தியை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை சரியானதுதான். அதில் மாநில மொழிக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால், இந்த கோரிக்கையை அமல்படுத்தும் முன் ஹிந்தி நாட்டில் உள்ள எல்லோருக்கும் தெரிந்து இருக்க வேண்டும். ஹிந்தி படங்களுக்கு இசை அமைத்துப் பங்காற்றி பணம் ஈட்டும் திரை உலகினர், ஹிந்தி எதிர்ப்பு செய்வது நகைப்புக்குரியது. மத்திய அரசு பள்ளி மாணவர்கள் முதல் வயதான நபர் வரை கட்டாயம் ஹிந்தியைப் படிக்க வைக்க வேண்டும். அப்பொழுது மத்திய அமைச்சர் அமித் ஷா சொல்வது நடக்கும்.
 சி. ராமநாதன்,
 சென்னை.
 அவசியமில்லை
 ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்தியை மக்கள் ஏற்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது சரியில்லை. ஹிந்தி மொழியினை கற்றால் இந்தியாவில் மட்டுமே பயன்படும். வேறு நாடுகளுக்கு போகும் பொழுது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். உலகத்தைச் சுற்ற ஹிந்தியை கற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்தி என்று சொல்வது சரியில்லை. ஆங்கிலம் கற்றுக் கொண்டு ஹிந்தியையும் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னால்கூட பரவாயில்லை. ஆங்கிலத்திற்கு மாற்றாக என்று கட்டாயப்படுத்துவது சரியன்று.
 உஷா முத்துராமன், மதுரை.
 கிணற்றுத் தவளை
 இந்தியாவில் ஒரு மாநிலத்தை சேர்ந்தவர் இதர மொழி பேசும் மாநிலத்தவரிடம் பேச தற்சமயம் ஆங்கிலம்தான் பயன்பாட்டில் உள்ளது. அதற்கு பதிலாக ஹிந்தியை தாராளமாக உபயோகிக்கலாம். மேலும், அரசு அதிகாரிகள், தேசிய அளவில் வர்த்தகம் செய்வோர் மற்றும் அகில இந்திய பணியில் இருப்போர் அனைவருக்கும் ஹிந்தி பேச, எழுத, படிக்கத் தெரிந்தால் அவர்களுக்குப் பணி செய்ய, பணி உயர்வு பெற ஏதுவாக இருக்கும். ஆகவே, இந்தக் கருத்து ஏற்கத்தக்கதாகும். தவிர ஆங்கிலமும் கற்கலாம். பன்மொழிப் புலமை பெறுவது நல்லதுதானே. இதை ஹிந்தி திணிப்பு என்ற கோணத்தில் அணுகுவது குறுகிய கிணற்றுத் தவளை மனப்பான்மை ஆகும்.
 க.மா.க. விவேகானந்தம், மதுரை.
 தலைமுறை
 படிக்காதே என மாணவர்களிடம் சொல்லிவிட்டு, தன் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் ஹிந்தி படிக்க தனியார் பள்ளிக்கு அனுப்பினார்கள் சில அரசியல் தலைவர்கள். முன்னாள் பிரதமர் சாஸ்திரி, ஹிந்தி தெரியாத மக்கள் அதை ஏற்றும் கொள்ளும் வரை ஹிந்தி திணிக்கப்படாது என்றார். அரசுப் பள்ளியிலிருந்து ஹிந்தி பாடத்தையே எடுத்துவிட்டு தனியார் பள்ளிக்கு அனுமதி அளித்ததனால், ஏழை மாணவர்கள் ஹிந்தியைப் படிக்க முடியாமல் தவித்தனர். மற்ற மாநிலங்கள் அரசுப் பள்ளியில் ஹிந்தி படித்து பயன்பெறுகிறார்கள். இரண்டு தலைமுறையினரை பாழ்படுத்தியது போதும். இன்றைய மாணவர்கள் புத்திசாலிகள், ஹிந்தி கற்கிறார்கள்.
 க. சண்முகம், சேலம்.
 உலகப் பொது மொழி
 தமிழ்நாடு உள்பட இந்தியாவில் கல்வி அனைவருக்கும் சமமாக கிடைப்பதில்லை என்பது பெரும் வேதனைக்குரிய விஷயம். பணம் உள்ளவர்கள் ஆங்கிலம், ஹிந்தி என தேவைப்படும் மொழிகளைக் கற்கிறார்கள். நடுத்தர மக்கள் தேவையான கல்வியறிவைப் பெற பெரும் சிரமத்துக்கும் இன்னல்களுக்கும் உள்ளாகிறார்கள். ஏழை மக்கள் காசு கொடுத்து கல்வி கற்க முடியாத நிலையில், அரசு இலவசமாக தரும் தாய் மொழியும் மற்றும் உலகப் பொது மொழியான ஆங்கிலமுமே போதுமானதாக கருதத் தோன்றுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியாவில் ஹிந்தி திணிப்பு தேவையில்லாத ஒன்றே என கருத இடமிருக்கிறது. 
 மதுரை குழந்தைவேலு, சென்னை.
 புத்திசாலித்தனம்
 தமிழை மட்டும் அறிந்த ஒருவர், அடுத்த மாநிலத்திற்கு செல்ல இயலாது. ஹிந்தியை அறிந்து கொண்டால் இந்தியா முழுதும்  நாம் வாழ முடியும். அதே சமயம் ஆங்கிலம் தெரிந்து கொண்டால் உலகம் முழுதும் வலம் வரலாம். ஒரு மொழியை நாம் அறிந்து கொள்வது நமது தேவைகளை எளிதில் அடைவதற்கும், நம் தொடர்புகளை விரிவாக்கிக் கொள்வதற்கும்தான். தேவைகள் மனிதருக்கு மனிதர் மாறுபடும். ஒரு மொழிக்கு மாற்றாக மற்றது என்பதை, அவரவர் தேவையைப் பொறுத்து முடிவு செய்து கொள்ளலாம். அதனைப் பிறர் நிர்ணயம் செய்ய இயலாது. நம்முடைய தேவைகளுக்காக கூடுதல் மொழியைக் கற்றுக் கொள்வதே புத்திசாலித்தனம்.  
 எம். சங்கீதா, பட்டுக்கோட்டை.
 மனநிலை
 தமிழகம் எப்போதும் ஹிந்தியை எதிர்த்ததில்லை, ஹிந்தித் திணிப்பைதான் எதிர்த்து வருகிறது. மாநிலம் முழுவதும் ஹிந்திப் பயிற்சி நிலையங்கள் உள்ளன என்பதே இதற்கு சான்று. இந்தியாவிலேயே மிகவும் பழைமையான சம்ஸ்கிருதத்திற்கு இணையான செம்மொழியாகிய தமிழை ஏன் இணைப்பு மொழியாக ஆக்கக் கூடாது. தமிழை ஏற்பதனால் வட இந்தியர்களுக்கு ஏற்படும் அதே மனநிலைதான் தென்னிந்தியர்களுக்கு ஹிந்தியைத் திணிப்பதனால் ஏற்படுகிறது. அமைதியாக இருக்கும் இந்தியாவின் ஒருமைப்பாட்டை மத்திய உள்துறை அமைச்சரின் இதுபோன்ற கருத்துகள் சீர்குலைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
 என்.வி. சீனிவாசன்,  புது பெருங்களத்தூர்.
 திணிப்பு கூடாது
 ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்தியை ஏற்க வேண்டும் என்ற கருத்து சரிதான். ஆனால், ஹிந்தியை கட்டாயமாக கற்க வேண்டும் என்பது அவசியமில்லை. பல மொழி கலாசாரத்தை கொண்ட இந்தியாவில், ஒரு சாராரிடம் ஒரு மொழியைக் கற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சரியான செயல் அல்ல. மொழியை கற்பது மக்களின் விருப்பமாக இருக்கலாமே அன்றி, கட்டாயத்தின் பேரில் திணிப்பு கூடாது. தமிழ் மொழி ஏனைய மொழிகளுக்கு எவ்விதத்திலும் குறைந்தது அல்ல. மொழி பிரச்னையில் உணர்ச்சிபூர்வமாக அணுகுவதைவிட, அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்படுவது ஒன்றே அனைவருக்கும் நன்மை அளிக்கும்.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com