"உக்ரைனிலிருந்து வந்த மாணவர்கள் இந்திய கல்லூரிகளில் படிப்பைத் தொடர விதிகளில் இடம் இல்லை என்று மத்திய அரசு கூறுவது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

 இந்திய மாணவர்கள் உக்ரைன் சென்றது அவர்கள் சொந்த விருப்பத்தின் பேரில்தான்.

 சிக்கல்
 இந்திய மாணவர்கள் உக்ரைன் சென்றது அவர்கள் சொந்த விருப்பத்தின் பேரில்தான். மத்திய அரசு அவர்களுக்கு எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை. இங்குள்ள கல்லூரியில் பயில விரும்பாத வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள்தான் வெளிநாடுகளுக்கு கல்வி பயில செல்கின்றனர். எதிர்பாராத போர் சூழ்நிலையால் அங்கு படிப்பைத் தொடர முடியவில்லை. அப்படிப்பை இந்தியாவில் தொடர அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பது சரியல்ல. இதனால் பல சிக்கல் உருவாகும். எனவே, உக்ரைனில் நிலைமை மேம்படும் வரை மாணவர்கள் பொறுமையாக இருக்க வேண்டியதுதான்.
 கே. அனந்தநாராயணன், கன்னியாகுமரி.
 சொந்த முடிவு
 முற்றிலும் சரியே. மாணவர்கள் உக்ரைனில் படித்த பாடத் திட்டங்கள் வேறு; இந்திய கல்லூரிகளின் பாடத் திட்டங்கள் வேறு. வெளிநாடு சென்று படித்துக்கொண்டிருந்தவர்கள், அங்கு படிப்பை தொடர முடியாத சூழல் ஏற்பட்டால் அதற்கு இந்திய அரசு என்ன செய்ய முடியும்? அவர்கள்தானே முடிவெடுத்து வெளிநாடு சென்றார்கள்? இதே போல் வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை செய்தவர்கள் வேலைவாய்ப்பை இழந்து மீண்டும் இந்தியாவிற்கு வந்து அதே வேலையை செய்ய வாய்ப்பு தர வேண்டும் என்று கோரிக்கை வைக்க முடியுமா? அவரவர் சொந்த முடிவுக்கு அரசை குறை கூறுவது தவறு.
 சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.
 உறுதி
 மத்திய அரசின் முடிவு தவறு. கல்வி அனைவர்க்கும்பொதுவானது. உக்ரைனிலிருந்து தாயகத்திற்கு வந்துள்ள இந்திய மாணவர்கள் இந்தியக் கல்லூரிகளில் படிப்பைத் தொடர விதிகளில் இடம் இல்லை என்று கூறி கைவிரிப்பது அதிர்ச்சியளிக்கிறது. நாடு விடுதலையடைந்த 75-ஆவது ஆண்டில் தாய்மண் தங்களைக் காக்கும் என நம்பி வந்துள்ள இந்திய மாணவர்களின் கல்வியைத் தொடர மத்திய அரசு விதிகளைத் திருத்துவதற்கு ஆவன செய்ய வேண்டும். வாய்ப்பு கிடைத்து கல்வியைத் தொடரும் மாணவர்கள், தாங்கள் கற்ற கல்வியை இந்திய மண்ணிற்கே பயன்படுத்துவோம் என்று உறுதியேற்க வேண்டும்.
 எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
 கருணை உள்ளம்
 உக்ரைனிலிருந்து இந்தியா வந்துவிட்ட மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரசு கருணை உள்ளத்துடன் அவர்கள் தங்கள் படிப்பை இந்தியாவில் தொடர அனுமதிக்க வேண்டும். சட்டங்களும், விதிகளும் பலமுறை திருத்தங்களை ஏற்றே மேன்மையடைந்து வந்துள்ளன. இந்திய அரசு இதற்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டும். தேவையெனில், கல்விப்புலம் சார்ந்த நிபுணர்கள் அடங்கிய குழு அமைத்து, மாணவர்களின் தரத்தை மதிப்பீடு செய்து, அதனடிப்படையில் எத்தனை ஆண்டுகள் அவர்கள் இந்தியாவில் உயர்கல்வியை மேற்கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்யலாம்.
 பி.எஸ். ராஜசேகரன், அம்பாசமுத்திரம்.
 திருத்தம் தேவை
 உக்ரைன் அரசுடனோ, ரஷிய அரசுடனோ இந்திய அரசு தொடர்பு கொண்டு இந்திய மாணவர்கள் படிப்பு தொடர்வதற்கு வழி செய்ய வேண்டும். எதற்கெல்லாமோ விதிகளில் திருத்தம் செய்ய முடியும் என்கிறபோது மாணவர்களின் கல்விக்காக திருத்தம் செய்ய முடியாதா? அவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு விதிகளைத் திருத்தி அவர்கள் படிப்பைத் தொடர ஆவன செய்ய வேண்டும். அந்த மாணவர்கள் மருத்துவம் பயில வெளிநாடு செல்வதற்கு மத்திய அரசின் நீட் தேர்வும் ஒரு காரணம். எனவே இந்த விஷயத்தில் பெரும் பொறுப்பு மத்திய அரசுக்கே உள்ளது.
 ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
 அசாதாரண சூழல்
 உக்ரைன் - ரஷிய போர் என்கிற அசாதாரண சூழ்நிலையில்தான் அவர்கள் அங்கு பயின்ற மருத்துவக் கல்வியை பாதியில் விட்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி தொடர்ந்திட ஆவன செய்ய வேண்டிய கடமை மத்திய அரசுக்கே உள்ளது. உக்ரைனில் இன்னும் போர் முடிவுக்கு வராத நிலையில் அந்த மாணவர்களின் எதிர்கால நலனைக் காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கே உண்டு. ஏதாவது ஒரு வகையில் அந்த மாணவர்கள் தங்களின் மருத்துவ படிப்பை இந்தியாவில் தொடர வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது ஜனநாயக அரசின் கடமை ஆகும்.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 போட்டி நிறைந்தது
 உக்ரைன் மாணவர் விஷயத்தில் இந்திய அரசின் முடிவு சரியே. மருத்துவக் கல்வி பெற இயலாத நிலையில் தங்கள் உயிரையே மாய்த்துக்கொண்ட இளைஞர்களை ஒருகணம் எண்ணிப்பார்த்தால் மருத்துவம் நமது நாட்டில் பயில்வது எவ்வளவு போட்டி நிறைந்தது என்பது புரியும். விதிகளைத் திருத்தி இத்தனை ஆயிரம் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி தரும் வகையிலான கட்டமைப்பு நம்மிடையே இல்லை. அப்படி இருக்குமானால், அதை முன்னரே பயன்படுத்தி தங்களின் வாழ்வையே இழந்த மாணவர்களுக்கு உதவி இருக்க முடியுமே. மாணவர்களை தொடர்ந்து இங்கே பயில அனுமதிப்பது விதிகளுக்கு ஒவ்வாதது.
 த. முருகவேள், விழுப்புரம் .
 குழப்பம்
 உக்ரைன் நாட்டில் மருத்துவப் படிப்புகளில் சேர கட்டணம் குறைவாக இருப்பதால் அங்கு அதிக எண்ணிக்கையில் இந்திய மாணவர்கள் பயிலச் செல்கிறார்கள். நீட் போன்ற தகுதித் தேர்வுகள் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று, அனைத்துக் கல்லூரிகளில் முழு அளவில் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்த நிலையில், உக்ரைன் மாணவர்களையும் இந்திய கல்லூரிகளில் சேர்க்க முற்படுவது தேவையற்ற குழப்பங்களுக்கு வழிவகுக்கும். உக்ரைன் கல்லூரிகள் ஆன்லைனில் படிப்பைத் தொடர வாய்ப்பளித்துள்ளதைப் பயன்படுத்தி உக்ரைன் மாணவர்கள் அங்கேயே படிப்பைத் தொடரலாம்.
 கே. ராமநாதன், மதுரை.
 பாதிப்பு
 பள்ளித் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள்தான் நமது நாட்டு கல்லூரிகளில் இடம் கிடைக்காத நிலையில் அதிக பணம் செலுத்தி வெளிநாட்டுக் கல்லூரிகளில் பயிலச் செல்கின்றனர். அப்படியிருக்கும்போது உக்ரைனிலிருந்து திரும்பி வந்த மாணவர்களுக்கு இங்கே உள்ள கல்லூரிகளில் இடம் கொடுத்தால் அது இங்கு பயின்றுவரும் மாணவர்களின் கல்வியை நிச்சயம் பாதிக்கும். வெளிநாடுகளில் படித்தாலும் இங்கே தேர்வு எழுதினால் மட்டுமே அந்தப் படிப்பு அங்கீகரிக்கப்படும். எனவே உக்ரைனில் நிலைமை சீரடைந்ததும் மாணவர்களை திருப்பி அனுப்பலாம். மத்திய அரசின் கருத்து சரியானதே.
 கோ. ராஜேஷ் கோபால், அரவங்காடு.
 நியாயமற்றது
 இந்திய மாணவர்கள், கல்விக் கட்டணங்கள் குறைவு, உறவினர்கள் உதவியுடன் கற்றல் போன்ற காரணங்களுக்காக தங்களின் கல்லூரிப் படிப்பை வெளிநாடுகளில் மேற்கொள்கின்றனர். அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப விதிகளில் இடமிருக்கும்போது தவிர்க்கமுடியாத காரணங்களால் ஒட்டுமொத்த மாணவர்களும் படிப்பைத் தொடர முடியாத நிலையில் அப்படிப்பை இங்கே தொடர விதிகளில் இடமில்லை என்பது நியாயமற்றது. மாண வர்களின் நலனுக்காக விதிகளைத் திருத்தலாமே! நம் மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர்ந்திட ஆவன செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 கேள்விக்குறி
 மருத்துவப் படிப்பு உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகள் பயில்வதற்காக உக்ரைன் நாட்டிற்கு சென்றிருந்த மாணவர்களின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இந்த மாணவர்கள் இந்திய கல்லூரிகளில் பயில்வதற்கு விதிகளில் இடம் இல்லாவிட்டாலும், மத்திய அரசு,சிறப்பு அனுமதியை வழங்கி அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்ட வேண்டும். ஏற்கெனவே இருக்கின்ற விதிகளில் இடமில்லை என்று சொன்னால் தற்போது புதிய விதிகளை உருவாக்குவதில் தவறில்லை. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி அவர்களுக்கு வழிகாட்ட மத்திய - மாநில அரசுகள் விரைந்து செயல்பட வேண்டும்.
 மா. பழனி, தருமபுரி.
 மாற்றம் தேவை
 மாணவர்கள் மருத்துவப் படிப்பை முடிப்பதற்கு தேவையான வகையில் விதிகளை மாற்றுதல் வேண்டும். தமிழகத்திற்கு மட்டுமே சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களின் மருத்துவக் கனவு நிறைவேற மத்திய அரசு உதவ வேண்டும். தங்கள் கல்வி பாதிக்கப்பட்டதால் கலக்கமடைந்திருக்கும் மாணவர்களின் எதிர்காலம் கருதி மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விதிகளில் இடமில்லை என்று மத்திய அரசு கூறுவது, தனது பொறுப்பைத் தட்டிக்கழிப்பதாகும். விதிகளில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும்.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com