"ஆசிரியர்கள் வருகையை செயலி வாயிலாக பதிவு செய்யாமல் விரல் ரேகை வாயிலாக பதிவு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

ஆசிரியர்கள் வருகையை செயலி வாயிலாக பதிவு செய்யாமல் விரல் ரேகை வாயிலாக பதிவு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை சரியே

கோரிக்கை சரியே
ஆசிரியர்கள் வருகையை செயலி வாயிலாக பதிவு செய்யாமல் விரல் ரேகை வாயிலாக பதிவு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை சரியே. இன்று எதையும் துல்லியமாக அறிய அறிவியலின் துணை பெரிதும் தேவையாக உள்ளது. அறிவியல் கண்டுபிடிப்பை வைத்தும் கூட ஏமாற்றும் நிலை உள்ளதையும் மறுக்க முடியாது. செயலி வழியில் வராமலேயே வந்ததுபோல் பதிவு செய்து விடலாம். துல்லியப் பதிவிற்கு இன்னொரு அறிவியல் கண்டுபிடிப்புத் தேவைப்படுகிறது. அதுதான் விரல்ரேகை மூலம் பதிவிடும் பயோ மெட்ரிக் சிஸ்டம். இப்பதிவு நூறு விழுக்காடு துல்லியமாக இருப்பதால் ஆள் மாறாட்டத்திற்கோ, ஏமாற்றுவதற்கோ வாய்ப்பு இல்லை.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
புரியாத புதிர்
கைப்பேசி செயலி மூலம் வருகை பதிவு செய்யும் முறை ஏற்புடையதல்ல. இம்முறையில் ஆசிரியர் தன் இருப்பை எங்கிருந்தும் பதிவு செய்ய முடியும். தகவல் தொழில்நுட்பத் துறையில் இதுபோன்ற செயல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்க வேண்டும். ஏனைய துறைகளில் வருகைப் பதிவேடு முறையும், விரல் ரேகை பதிவு முறையும் நடைமுறையில் இருக்கும்போது பள்ளிகளில் மட்டும் இந்த செயலி மூலம் பதிவு முறையை அமல்படுத்த அரசு முடிவெடுத்திருப்பது புரியாத புதிராக உள்ளது. பள்ளிகளில் ஆசிரியர்கள் கைப்பேசியைத் தவிர்க்க வலியுறுத்தும் அரசு அதனைப் பயன்படுத்தத் தூண்டுவதுபோல் உள்ளது இந்த அறிவிப்பு.
பி.கே. ஜீவன், கும்பகோணம்.
இடர்ப்பாடுகள்
ஆசிரியர்கள் வருகையை செயலி வாயிலாகப் பதிவு செய்வது சரியான நடைமுறைதான். ஆனாலும் இதை ஆண்டு முழுவதும் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்த முடியுமா என்பது சந்தேகம்தான். பள்ளிகளின் இருப்பிடம், ஆசிரியர்களின் வருகை, பள்ளி வேலை நேரம் இவற்றை ஒப்பிடும்போது பல இடர்ப்பாடுகள் ஏற்படும். தலைமை ஆசிரியர், ஆசிரியர்- மாணவர் உறவில் நெருடல் உண்டாகலாம். உரிய நேரத்திற்குப் பதிவு செய்து விட்டு வெளியில் செல்வதை யார் தடுப்பது? பள்ளி கட்டமைப்பு உட்பட அனைத்து வசதிகளையும், அரசு ஏற்படுத்திக்கொடுப்பதுடன் முந்தைய ஆய்வு முறைகள் தொடர்ந்தாலே போதும்.
அ. கருப்பையா, பொன்னமராவதி.
குழப்பம்
இக்கோரிக்கை சரியே. கல்வித்துறையின் இந்த உத்தரவு ஆசிரியர்களைக் குழப்பி உள்ளது. இப்போது மாணவரின் வருகை பதிவை பதிவேட்டில் பதிவு செய்து பின்னர் செயலியில் பதிவேற்றம் செய்யும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் விரும்புகிறார்கள். மேலும் மாணவர்கள்,ஆசிரியர்கள் வருகையை விரல் ரேகை வழியே பதிவு செய்து ஆவணப்படுத்துவது தேவையான ஒன்று. இது குறித்து முழுமையான விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டும். ஆசிரியர்களை அழைத்து இது பற்றி முழுமையான செயல்முறைகள் நடத்தப்பட்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும்.
ந. சண்முகம், திருவண்ணாமலை.
குற்றச்சாட்டு
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு உரிய நேரத்தில் வருவதில்லை என்பதும், வந்த பின்பும் முழு நேரமும் பள்ளியில் இருப்பதில்லை என்பதும்தான் பொதுமக்களால் ஆசிரியர்கள் மீது வைக்கப்படும் பொதுவான குற்றச்சாட்டு. பள்ளிக்கு வராமலே மற்றவர்கள் மூலம் பதிவு செய்யும் வாய்ப்பு செயலி பயன்பாட்டில் இருப்பதால், அதனைத் தவிர்த்து விரல் ரேகை பதிவு முறையே ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருவதைக் கட்டாயமாக்கும். விரல் ரேகையைப் பதிவு செய்துவிட்டு வெளியே சென்றுவிடாமல் இருக்க, காலைப் பதிவுக்குப் பின்னர், மதியம் ஒரு பதிவு, மாலை ஒரு பதிவு என்று மூன்று முறை பதிவு செய்யும் முறையைக் கொண்டுவரலாம்.
முகதி. சுபா, திருநெல்வேலி.
போராட்டம்
ஆசிரியர்கள் வருகையை செயலி வாயிலாகப் பதிவு செய்யும்போது சரியான இணைய வசதி தேவை. பதிவேட்டிலும் செயலியிலும் இதுவரை வருகையை பதிவு செய்த ஆசிரியர்கள், ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்து செயலியில் மட்டுமே பதிவு செய்து வருகின்றனர். விரல் ரேகைப் பதிவு செய்யவும் அவர்கள் தயாராகவே உள்ளனர். ஆனால், இணையத்தில் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதால் ஆசிரியர்கள் வருகையைப் பதிவு செய்வதே மிகப்பெரிய போராட்டமாக உள்ளது. அரசு, உரிய வசதிகளை செய்து கொடுத்துவிட்டு எந்த முறையில் வருகைப் பதிவு செய்யச் சொன்னாலும் ஆசிரியர்கள் தயார்.
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
காத்திருத்தல்
புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளின் வரவால் செயலிகள் வழியே ஆசிரியர்கள் வருகையைப் பதிவு செய்யும் முறையைஅறிமுகப்படுத்துவது வரவேற்கத்தக்கதே. இருந்தாலும் பள்ளிகளின் உள்கட்டமைப்பை வலுப்படுத்திய பிறகு புதிய முறையான செயலி மூலம் வருகை பதிவு செய்யும் நடைமுறையை அமல்படுத்தினால் நல்லது. மின்கட்டணம் செலுத்தப் போனாலும், வங்கியில் பணம் பெற சென்றாலும், எந்த அரசு அலுவலகத்திற்கு சென்றாலும், கணினியில் சர்வர் வேலை செய்யவில்லை கொஞ்சம் காத்திருங்கள் என்று ஊழியர்கள் கூறுவதை நடைமுறையில் பார்க்கிறோம். ஆசிரியர்கள் வகுப்புக்கு செல்லாமல் காத்திருக்க முடியுமா?
என்.வி. சீனிவாசன், சென்னை.
மன உளைச்சல்
ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்வதற்கு நவீன தொழில்நுட்ப முறையான செயலி வழி பதிவைவிட, முந்தைய விரல் ரேகை பதிவு முறையான பயோ மெட்ரிக் முறை பயன்பாடுதான் எளிதானது. எனினும், சில நேரங்களில், தொழில்நுட்பக் குறைபாடுகளால் தங்கள் வருகையைப் பதிவு செய்ய ஆசிரியர்கள் வெகு நேரம் காத்திருக்க வேண்டியதாகிறது. இதனால் ஆசிரியர்கள் எரிச்சலடைய நேரிடுகிறது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு பாடங்கள் நடத்துவதில் போதிய கவனமில்லாது மாணவர்களின் படிப்பு பாதிப்படைகிறது. குறைகளைக் களைந்தால் பயோமெட்ரிக் முறையே வரவேற்கத்தக்கது. செயலி வேண்டாம்.
கே. ராமநாதன், மதுரை.
அரசின் நோக்கம்
பலரும் ஒரே இடத்தில தங்களின் விரல் ரேகைகளை அழுத்திப் பதிவிடுவதை நிறுத்திவிட்டு தங்களின் கைப்பேசியில் செயலியை தரவிறக்கம் செய்து பள்ளிக்கு வந்ததும் அந்தச்செயலியில் தங்களின் வருகையை கைப்பேசியிலேயே சென்சார் முறையில் பதிவிடலாம். புளூடூத் அல்லது வைஃபைமுறையில் பள்ளி வருகைப் பதிவு இயந்திரத்துடன் இந்த செயலியை இணைக்க முடியும். இந்த தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்துவதன் மூலம் நடைமுறை சிக்கல்களை குறைக்கமுடிவதோடு, கால விரயத்தையும் தடுக்க முடியும். அனைவரும் உரிய நேரத்தில் பணிக்கு வரவேண்டும் என்ற அரசின் நோக்கம் நிறைவேறும்.
சோம. இளங்கோவன், தென்காசி.
தவறான கோரிக்கை
இக்கோரிக்கை சரியானதல்ல. ஏனெனில் பல சமயங்களில் விரல் ரேகை வைக்க பயன்படுத்தும் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதால் அவை சரியாக வேலை செய்வதில்லை. உதாரணத்திற்கு, நியாயவிலை கடைகளில் உள்ள விரல் ரேகை இயந்திரங்கள் பெரும்பாலும் உடனடியாக வேலை செய்வதில்லை. அதிக நேரம் நாம் காத்திருக்க வேண்டியதாகிறது. பள்ளிகளில் ஆசிரியர்கள் அவ்வாறு காத்திருக்க இயலாது. பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி மாணவர்களுக்கும் விரல் ரேகையைப் பயன்படுத்தத் தொடங்கினால் அதிக நேரம் விரயமாகும். எனவே செயலி வாயிலாக வருகையைப் பதிவு செய்யும் முறையே சிறந்ததாகும்.
ந. கண்ணையன், கிருஷ்ணகிரி.
நகைமுரண்
விரல் ரேகை வழி பதிவு முறையே மிகவும் துல்லியமானதும் எளிதானதும் ஆகும். அறிவியல் வளர்ந்துகொண்டே இருக்கிறது. அதனை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்தான். ஆனாலும், எல்லா மாற்றங்களையும் நாம் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும் என்கிற கட்டாயமில்லை. விரல் ரேகை வழி வருகைப் பதிவில் தவறு நிகழ்வதற்கு வாய்ப்பு இல்லை. தொழில்நுட்பக் கோளாறு எல்லா நவீன இயந்திரங்களிலும் இருப்பதுதான். அதனைப் பொருட்படுத்தத் தேவையில்லை. பள்ளிகளில் கைப்பேசி பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்று கூறும் அரசு செயலி வழி வருகைப் பதிவை அறிமுகப்படுத்துவது நகைமுரணாக உள்ளது.
தி. மணவாளன், நாமக்கல்.
விடை கொடுப்போம்
ஆசிரியர்கள் வருகையை செயலி வாயிலாக பதிவு செய்யாமல் விரல் ரேகை வாயிலாக பதிவு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை தவறானது. நவீன தொழில்நுட்பமான செயலியைப் பயன்படுத்தி வருகையைப் பதிவு செய்வதே நல்லது. கல்வியறிவு இல்லாதவர்களுக்கான விரல் ரேகை நடைமுறையை கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மீது திணிப்பது சரியல்ல. கடந்த இரண்டரை ஆண்டுகளாக கைப்பேசியிலேயே கற்றல் - கற்பித்தல் நடந்து வந்தது. இனிமேலாவது கைப்பேசிக்கு விடை கொடுக்க வேண்டும். விரல் ரேகைப் பதிவு நடைமுறையில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவை களையப்பட வேண்டும்.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com