"பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கோருவது நியாயமில்லை என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

 பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுவது நியாயமில்லை என்ற கருத்து சரியானதே.

சரியானதே
 பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுவது நியாயமில்லை என்ற கருத்து சரியானதே. தற்போது மத்திய அரசு இவற்றின் மீதான வரியை குறைத்து இருப்பதால், உடனடியாக மாநில அரசுளும் வரிகளைக் குறைக்க வேண்டும் என்பதும் சரியல்ல. மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்காமல் இருக்கிறது. இதனால், மாநில அரசுகள் நிர்வாக செலவினங்களை எதிர்கொள்ள மிகவும் சிரமப்பட நேரிடுகிறது. மத்திய அரசு ஜிஎஸ்டி வரி நிலுவையை மாநில அரசுகளுக்கு வழங்கிய பிறகு இதுபோன்ற கோரிக்கைகளை வைக்கலாம்.
 மா. பழனி, தருமபுரி.
 கூட்டுப் பொறுப்பு
 பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் வருவாய்க்கும் செலவுக்கும் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. தாங்கொணா வரிச்சுமைகளால் மக்கள் துயருரும்போது அவர்களைக் காக்கும் பொறுப்பு மாநில அரசுக்கும் உண்டு. ஏற்கெனவே ஒருசில மாநில அரசுகள் வரிகளை குறைத்துள்ளன. மத்திய அரசு சற்று ஆறுதலாக பெட்ரோல் டீசல் மீதான வரிகளை குறைத்திருக்கும்போது மாநில அரசுகளும் குறைக்க வேண்டும். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் கூட்டு பொறுப்பு உண்டு.
 உ. இராசமாணிக்கம், கடலூர்.
 பற்றாக்குறை
 மத்திய அரசு பெட்ரோல், டீசல் தவிர மற்ற பெரும்பாலான பொருள்களை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டுவந்துள்ளது. மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏற்படும் இழப்பீட்டுத் தொகை தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களுக்கு சரிவர இன்னும் வழங்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில அரசுகள் குறைத்தால் வேறு வரி வருவாய் இல்லாத மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத அளவு இருக்கும். ஆகவே பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கோருவது நியாயமில்லை என்கிற கருத்து சரியே.
 ஆ. ஜுடு ஜெப்ரி ராஜ், சோமனூர்.
 கடமை
 பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களுக்கான அடிப்படை விலையை எண்ணெய் நிறுவனங்களுடன் கலந்து பேசி நிர்ணயிக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை குறைக்கப்படும்போது, அதற்கேற்ற வகையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டியதும் மத்திய அரசின் கடமையாகும். அப்படியெல்லாம் மத்திய அரசு குறைத்ததாகத் தெரியவில்லை. இதனை நடைமுறைப்படுத்தினாலே பெட்ரோல், டீசல் விலை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். எனவே, தற்போது மத்திய அரசு மாநில அரசுகளை, வரிகளைக் குறைக்கக் கோருவது நியாயமில்லை என்கிற கருத்து சரியே.
 என்.பி.எஸ். மணியன், மணவாள நகர்.
 ஒத்துழைப்பு
 இக்கருத்து தவறு. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு கலால் வரியை குறைத்து பெட்ரோல் டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. இந்தச் சூழலில் மாநில அரசுகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்பதில் தவறொன்றுமில்லை. மத்திய அரசு குறைத்ததுபோல மாநில அரசும் வரிகளைக் குறைத்தால் சிறிது வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் அதனை மாற்று வழிகளில் சரிக்கட்ட முயல வேண்டும். பொதுவாகவே மத்திய - மாநில அரசுகள் சமமான வரிவிதிப்பு முறையைக் கையாள வேண்டும். எனவே மாநில அரசுகள் வரிகளைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கோருவது சரிதான்.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 நாடகம்
 பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய அரசு உயர்த்தும்போது மாநில அரசுகளை கலந்து ஆலோசித்ததா? முன்பு எதன் அடிப்படையில் விலையை உயர்த்தியது? தற்போது எந்த அடிப்படையில் குறைத்தது? எல்லாம் ஐந்து மாநிலத் தேர்தலை முன்வைத்து நடத்தப்பட்ட அரசியல் நாடகம்தானே தவிர வேறி ல்லை. எந்தக் காரணம் கொண்டும் எண்ணெய் நிறுவனங்களை அரசு நஷ்டமடைய விடாது என்பது நாட றிந்த ஒன்று. அதுவும் மத்திய அரசுக்கு வருவாய் தரும் கலால் வரியைக் குறைத்துவிட்டு மாநில அரசுகளை வரிகளைக் குறைக்கச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்?
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 உண்மை
 நமது நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் 60 % அளவு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இங்கு அவ்வப்போது பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் குறைந்த விலைக்கு விற்றபோது நமது நாட்டில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தது. ஐந்து மாநிலங்களில் தேர்தல் வருவதற்கு முன்னர், கச்சா எண்ணெய் எவ்வளவு விலை உயர்ந்தாலும் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது என்பதுதான் உண்மை. எனவே மத்திய அரசு, பெட்ரோல், டீசல் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று கூறுவது நியாயமற்றது.
 என்.வி. சீனிவாசன், சென்னை.
 விலைக்குறைப்பு
 மத்திய அரசு, அண்மையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிகளை சற்று குறைத்துள்ளது. தமிழக அரசு, மத்திய அரசின் அறிவிப்புக்கு முன்பாகவே பெட்ரோல், டீசல் இவற்றை விலைக்குறைப்பு செய்தது. இந்த விலைக்குறைப்பால் ஏற்படுகின்ற வருவாய் இழப்பை, மாநில அரசுதான் எதிர்கொள்ள வேண்டும். மற்ற எல்லா மாநில அரசுகளும் குறைக்கவில்லை. ஒருசில மாநிலங்கள்தான் குறைத்துள்ளன. தமிழக அரசு ஏற்கெனவே குறைத்திருக்கிறது. அதனால் மத்திய அரசு இப்போது குறைத்துள்ள வரியிலிருந்து மேலும் குறைக்க முடியாது என தமிழக அரசு கூறுகிறது. ஆகவே தமிழக அரசு வரியை குறைக்க வேண்டும் என்கிற வாதம் சரியல்ல.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 வருவாய் இழப்பு
 பெட்ரோல் மற்றும் டீசல் மீது நான்கு வகையான வரிகள் விதிக்கப்படுகின்றன. அதில் கலால் வரிவிதிப்பில் மட்டுமே மாநில அரசுக்கு பங்கு வழங்கப்படும். அந்த வகையில் தற்போது குறைக்கப்பட்ட கலால் வரியால் மாநில அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அப்படி இருக்கும் நிலையில், மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்தால் மேலும் அதிக இழப்பு ஏற்படும். அதே நேரத்தில் வரியைக் கூட்டும் போதோ, குறைக்கும் போதோ மத்திய அரசு மாநில அரசுகளிடம் கலந்து ஆலோசிப்பதில்லை. எனவே மாநில அரசு வரிகளை குறைக்க வேண்டும் என்பது முற்றிலும் நியாயமற்றது.
 ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
 தேக்க நிலை
 உடனடியாக மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைப்பது என்பது சாத்தியமற்றது. மாநில அரசுகளுக்கும் பல்வேறு வகைகளில் நிதிச்சுமை உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த இரு ஆண்டுகளாக ஏற்பட்ட பொருளாதாரத் தேக்க நிலை மாநில அரசின் வருவாயை பெருமளவில் பாதித்து விட்டது. தற்போது மத்திய அரசு குறைந்த அளவில் கலால் வரிகளை குறைத்து உள்ளது. இவற்றை மேலும் குறைப்பதற்கான வாய்ப்புகளையும் ஆராய வேண்டும். மத்திய - மாநில அரசுகளுக்கு இடையில் சிக்கித்தவிக்கும் பொதுமக்களைப்பற்றிய நினைப்போடு பெட்ரோல், டீசல் விலைகள் அமைய வேண்டும்.
 சோம. இளங்கோவன், தென்காசி.
 போட்டி மனப்பான்மை
 நாட்டு வளர்ச்சிக்கு மத்திய அரசின் பங்களிப்பும், மாநில அரசுகளின் பங்களிப்பும் அவசியம் தேவை. இதில் யார் பெரியவர் என்ற போட்டி மனப்பான்மை உருவாகிவிடக் கூடாது. தற்போது உள்ள சூழலில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிகளை மத்திய அரசு ஓரளவு குறைத்துள்ளது. மாநில அரசுகளும் தங்களால் இயன்ற அளவுக்கு பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைப்பதுதான் நியாயம். மத்திய - மாநில அரசுகள் கௌரவம் பார்க்காமல் இந்த பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். மத்திய அரசும், மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
 ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
 ஏற்புடையதே
 பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்துக்கு மத்திய அரசு மட்டுமே காரணம் என்ற தவறான கருத்து உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கூடுவதையும், குறைவதையும் பொறுத்தே நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஓரளவு வரிக்குறைப்பு செய்துள்ள நிலையில் மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைப்பதுதான் நல்லது. ஏனெனில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொதுமக்களை நேரடியாக பாதிப்பதோடு அனைத்து பொருட்களின் விலையையும் அதிகரிக்கச் செய்கிறது.
 வீ. வேணுகுமார், கண்ணமங்கலம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com