"தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சியினர் சிலர் கோரிக்கை வைப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

 தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சியினர் சிலர் கோரிக்கை வைத்திருப்பது சரியானதே

சரியானதே
 தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சியினர் சிலர் கோரிக்கை வைத்திருப்பது சரியானதே. எந்த ஜாதியினர் எந்தப் பகுதியில் அதிகம் வசிக்கின்றனர் என்பதைக் கண்டறிந்து, அந்த ஜாதி வேட்பாளரை அப்பகுதியில் நிறுத்தலாம் என்பதற்காக அரசியல் கட்சியினர் இக்கோரிக்கையை வைக்கின்றனர். மேலும், இதன் மூலம் நலிவடைந்த, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வகை செய்யும் இட ஒதுக்கீட்டை நியாயமாக நடைமுறைப்படுத்தவும் முடியும். எனவே, இட ஒதுக்கீட்டை திட்டமிட உதவும் என்பதால் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது சரியே.
 ரெ. பிரபாகரன், செபஸ்தியார்புரம்.
 வாக்குவங்கி அரசியல்
 இது தவறான கோரிக்கை. ஜாதிகள் இல்லாத சமுதாயம் அமைவதற்கு ஆட்சியாளர்கள் முயல வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஜாதி பிரிவினையை ஊக்குவிப்பதாக அமையும். இது அனைவருக்குமான வளர்ச்சி என்பதைத் தடுக்கும். அரசியல்வாதிகள் வாக்குவங்கி அரசியலுக்காக ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்துகின்றனர். இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் அமையும் நிலை வந்தால் ஜாதியின் முக்கியத்துவம் குறைந்துவிடும். அதனை நோக்கியே நமது சமூகம் நகர வேண்டும். அரசியல்வாதிகளின் உள்நோக்கம் கொண்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட வேண்டும்.
 கலைப்பித்தன், கடலூர்.
 கால வரையறை
 ஜாதிவாரியாக உள்ள மக்களின் எண்ணிக்கையை வைத்து அரசியல் ஆதாயம் தேட முற்படும் சிலர்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்துகின்றனர். ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குதற்கு ஒரு கால வரையறை நிர்ணயிக்கப்பட வேண்டும். எந்த ஜாதியினராக இருந்தாலும், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு சட்டம் இயற்றப்பட வேண்டும். மத்திய அரசு சட்டத்தின்படி ரூ. 8 லட்சம் வரை வருவாய் உள்ள பிரிவினருக்கு சலுகை வழங்கப்படுகிறது. இது ரூ. 5 லட்சமாகக் குறைக்கப்பட்டால் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளோர் அதிகம் பேர் பயன்பெறுவார்கள்.
 கு.மா.பா. திருநாவுக்கரசு, சென்னை.
 நியாயமானதே
 ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை நியாயமானதே. இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்து இத்தனை ஆண்டுகள் கடந்த நிலையிலும் சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு அதன் பலன் சென்று சேரவில்லை. மாறாக, பலனடைந்தவர்களே மீண்டும் மீண்டும் பலனடைந்துகொண்டிருக்கிறார்கள்.இந்த நிலை மாற்றப்பட வேண்டும். ஒரு குடும்பத்தில் இரு தலைமுறை அரசுப் பணியில் இருந்தால், அவர்களின் வாரிசுகள் இட ஒதுக்கீட்டு சலுகை பெற தகுதியற்றவர்கள் என்று சட்டம் இயற்ற வேண்டும். வசதி உள்ளவர்களை இட ஒதுக்கீட்டுப் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும். அதுவரை ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவைதான்.
 வ.லோ. சந்தோஷ், ஈரோடு.
 வேண்டாத வேலை
 முன்னொருமுறை பொருளாதார அடிப்படையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அது தோல்வியில் முடிந்தது என்பது வரலாறு. அப்படியே தற்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும், தங்கள் ஜாதியினரே அதிகம் உள்ளனர் என்பதைக் காட்ட, ஒவ்வொரு ஜாதியினரும் தவறான விவரங்களைத் தருவர். எனவே, ஜாதி குறித்த புள்ளிவிவரங்கள் உண்மையானவையாக இருக்காது. தங்கள் கட்சியினரைத் திருப்திப்படுத்த வைக்கப்படும் கோரிக்கையான இக்கணக்கெடுப்பை நடத்துவது வேண்டாத வேலை. குழந்தைகளுக்கு "ஜாதிகள் உள்ளதடி பாப்பா' என்றா பாடம் சொல்லிக் கொடுக்கப்போகிறோம்?
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 அவசியம்
 கல்வி, வேலைவாய்ப்பு, நலத்திட்ட உதவி என அத்தனையும் ஜாதிய இட ஒதுக்கீட்டின்படி வழங்கப்படும்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியமானதே. இட ஒதுக்கீடு சதவீத வாரியாக கணக்கிடப்படும்போது எந்த ஜாதிக்கு எத்தனை சதவீத ஒதுக்கீடு என துல்லியமாய் கணக்கிட ஜாதிவாரி கணக்கெடுப்பு பயன்படும். இல்லையென்றால் அண்மையில் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டு திரும்பப் பெறப்பட்ட ஒரு குறிப்பிட்ட ஜாதியின் இட ஒதுக்கீடு போலாகிவிடும். ஜாதிவாரியாகவே இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால் ஜாதி ஒழிவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவைதான்.
 ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
 சம வாய்ப்பு
 ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி பாடினார். ஆனால் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்போது எந்த ஜாதி என்று கேட்கின்றனர். தமிழக அரசு, ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்ததை ரத்து செய்து தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். ஜாதிவாரி இட ஒதுக்கீடு அளித்ததில் விளக்கங்களை சரியாக எடுத்துக் கூறவில்லை என்றுதான் நீதிமன்றம் கூறியதே தவிர ஜாதிவாரி இட ஒதுக்கீடு கூடாது என்று அறிவிக்கவில்லை. அரசியல்வாதிகள், ஜாதி இல்லை என்று பேசினாலும், ஜாதிவாரி கணக்கெடுப்புதான், எல்லா சாதியினருக்கும் சமமான வாய்ப்பு அளிக்க உதவியாக இருக்கும்.
 க. அருச்சுனன், செங்கல்பட்டு.
 சிக்கல்
 தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது தற்போது தேவையற்றது. இது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. தற்போது ஜாதிவாரியான எண்ணிக்கை ஊகத்தின் அடிப்படையில் உள்ளது. இது அரசின் புள்ளிவிவரமாக வெளியிடப்பட்டால், ஏற்கெனவே உள்ள ஜாதி மோதல்கள் இன்னும் அதிகமாகும். அரசின் சலுகைகளை தங்கள் ஜாதிக்குப் பெற்றுவிட வேண்டும் என்று ஜாதி தலைவர்கள் ஏற்கெனவே போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். இந்த நேரத்தில் இப்படிப்பட்ட கோரிக்கை எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது. ஜாதி கணக்கெடுப்பு என்பது ஜாதியை ஒழிக்க உதவாது.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 அபாயம்
 அரசியல் கட்சியினர் சிலர் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை வைப்பதற்குக் காரணம், இரு ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருப்பதுதான். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் எந்தெந்த ஜாதியினர் எந்தெந்த பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர் என்பது ஆதாரபூர்வமாகத் தெரிந்துவிடும். இதனால் அப்பகுதிகளில் சிறிய கலவரம் நிகழ்ந்தாலும், அது பெரிய அளவிலான வன்முறையாக மாறிவிடக்கூடிய அபாயம் உள்ளது. எனவே, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கூடாது. எல்லா ஜாதியினரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையே தொடர வேண்டும்.
 மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.
 தந்திரம்
 பள்ளியில் சேரும்பொழுது கேட்கப்படும் முதல் கேள்வியே என்ன குழந்தை என்ன ஜாதி என்பதுதான். ஒரு பக்கம் ஜாதியை வைத்து கட்சி ஆரம்பித்து, தங்கள் ஜாதிக்கு நடைமுறைக்கு ஒவ்வாத பல உரிமைகளையும் இட ஒதுக்கீட்டு சலுகைகளையும் கேட்பதும், பொது மேடைகளில் ஜாதிகளே கூடாது என்று முழங்குவதும் இன்றைய தலைவர்களின் அரசியல் தந்திரமாகும். இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. எல்லாக் கட்சிகளுமே அந்தந்த தொகுதிகளில் ஒரு குறிப்பிட்ட சாதிகளின் வாக்கு வங்கியை நம்பித்தான் இருக்கின்றன. ஜாதிவாரி கணக்கெடுப்பு ஜாதிகளை ஒழிக்க உதவாது. எனவே, கணக்கெடுப்பு கூடாது.
 அ. பட்டவராயன், திருச்செந்தூர்.
 பலன் கிட்டாது
 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று பல பிரிவுகளில் தமிழக அரசு இட ஒதுக்கீடு வழங்கி வருகிறது. ஜாதி அடிப்படையில் கட்சிகளை வைத்துக்கொண்டு நாட்டை சீர்க்குலைக்க எண்ணுவோர்தான் இப்படிப்பட்ட கோரிக்கையை ஆதரிக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது தேவையற்றது. இதனால், வீண் கால விரயமும் பொருள் விரயமும் ஏற்படுமே தவிர, பலன் எதுவும் கிட்டாது. இப்போது ஜாதி விட்டு ஜாதி திருமணங்கள் ஏராளமாக நடைபெறுகின்றன. மக்களிடத்தில் ஜாதி உணர்வு இல்லை. அரசியல்வாதிகள் அதனை உருவாக்கிவிடக்கூடாது.
 ச.கண்ணபிரான், திருநெல்வேலி.
 ஏற்புடையதே
 தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சியினர் சிலர் கோரிக்கை வைப்பது ஏற்புடையதே. ஒவ்வொரு ஜாதி சார்ந்த தலைவரும் தங்கள் ஜாதியில் இத்தனை கோடி பேர் இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். அவர்கள் கூறும் எண்ணிக்கை மொத்த தமிழக மக்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக வருகிறது. சில மாநிலங்களைப்போல் தமிழ்நாட்டிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி இந்த ஜாதியில் இத்தனை பேர்தான் என்கிற தெளிவான முடிவை அரசு அறிவிக்க வேண்டும். அதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு காலத்தின் கட்டாயம்.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com