"இளைஞர்களின் ராணுவப்பணி லட்சியத்தை சிதைக்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்கிற கோரிக்கை சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்கிற கோரிக்கை சரியே. தனியார் பெருநிறுவனங்களில் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுப்பது போன்று

பாதுகாப்பு
 அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்கிற கோரிக்கை சரியே. தனியார் பெருநிறுவனங்களில் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுப்பது போன்று ராணுவத்துறையிலும் நான்காண்டு காலத்துக்கு மட்டும் என்ற ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களைத் தேர்ந்தெடுப்பது நாட்டின் பாதுகாப்புக்கு உகந்ததல்ல. நிரந்தரப் பணி என்று இல்லாத நிலையில், நான்கு வருடங்களுக்குப் பின், வீட்டுக்கு செல்ல வேண்டியதுதான், வேறு புதிய வேலை தேட வேண்டியதுதான் என்கிற மனநிலையில் இளைஞர்கள் எவ்வாறு அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுவார்கள்?
 ப. சிவபாதம், சோளிங்கர்.
 பெருமை
 நம் நாட்டுக்காக ராணுவத்தில் பணியாற்றும் வாய்ப்பு ஒருநாள் கிடைத்தாலும் இளைஞர்கள் அதனைப் பெருமையோடு ஏற்க வேண்டும். கார்கில் கமிட்டியின் பரிந்துரைப்படி நடைமுறைப்படுத்தப்படும் அக்னிபத் திட்டம் 25% இளைஞர்களுக்குத் தொடர்ந்து ராணுவத்தில் பணியாற்ற வாய்ப்பளிக்கும். மீதமுள்ள 75% இளைஞர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குகிறது. இத்திட்டத்தையும் அரசியலாக்குவது வேதனையளிக்கிறது. தேச சேவை, வேலைவாய்ப்பு இரண்டையும் ஒருசேர வழங்கும் சிறந்த திட்டம் அக்னிபத் திட்டம். இதனை கைவிடக் கூடாது.
 பா. அருள்ஜோதி, மன்னார்குடி.
 அவசர முடிவு
 அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, வன்முறைப் போராட்டங்கள் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அக்கினிபத் திட்டத்திற்கான எதிர்ப்பு கொழுந்துவிட்டு எரிகிறது. இந்தத் திட்டத்தில், சில நல்ல அம்சங்கள் இருக்கலாம். ஆயினும், பொறுப்பிலுள்ள சில ராணுவ அதிகாரிகளும், வேலையில்லாத பெருவாரியான இளைஞர்களும் இத்திட்டத்தை எதிர்ப்பதற்கான காரணங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. தேசப் பாதுகாப்பில் ராணுவத்தின் அர்ப்பணிப்பும் பங்களிப்பும் மக்களால் மதித்துப் போற்றப்படுதாகும். ஆகவே, அவசர முடிவுகளால் இவை சீர்குலைந்துவிடக்கூடாது. விவாதித்து தீர்வு காண்பதே நல்லது.
 கு.மா.பா. திருநாவுக்கரசு, சென்னை.
 படை வலிமை
 பல தனியார் நிறுவனங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் பயிற்சி பெறும் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். பயிற்சி முடித்த அனைவருக்கும் அந்தந்த நிறுவனங்களிலேயே நிரந்தரப் பணி கிடைப்பதில்லை. திறமையுள்ளோருக்கே கிடைக்கிறது. ஒரு நாட்டிற்கு படை வலிமை மிகவும் முக்கியம் போர் வந்தால் வீட்டுக்கு ஒருவர் நாட்டைக்காக்க புறப்பட்டதாக இலக்கியம் கூறுகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தவறான சித்தாந்தங்களுக்கு அடிமையாகாமல், அக்னிபத் திட்டத்தில் சேர்ந்து தனக்கும் தாய்நாட்டிற்கும் பெருமை சேர்த்து வாழ்வது நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மையைத் தரும்.
 உ. இராசமாணிக்கம், கடலூர்.
 வரப்பிரசாதம்
 ராணுவத்தில் சேரவேண்டும் என்று ஆசையிருந்தும் பல்வேறு காரணங்களால் சேரமுடியாமல் போனவர்களுக்கு ராணுவத்தில் நுழைய அக்னிபத் மூலம் கதவை திறந்து விட்டிருக்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அக்னிபத் யாருடைய கனவையும் எந்தவிதத்திலும் சிதைக்காது. போராட்டம் நடத்தி பொது சொத்துகளுக்கு நாசம் விளைவிப்பவர்கள் ஒருபோதும் ராணுவத்தில் சேரப்போவதில்லை. ராணுவத்தில் சேரவேண்டும் என்ற லட்சிய வேட்கை கொண்டவர்கள் யாரும் இப்படி போராடி தங்களின் எதிர்கால வாழ்க்கையை தொலைக்கவும் மாட்டார்கள். எனவே இத்திட்டத்தைக் கைவிடக் கூடாது.
 ஆர். ஹரிகோபி, புதுதில்லி.
 ஏற்புடையதல்ல
 இக்கோரிக்கை சரியே. ராணுவத்தில் சேர பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வழக்கமான தேர்வுக்கு நாட்டுப்பற்றுடன் ஏராளமானோர் காத்திருக்கும்போது ஒரே நேரத்தில் பயிற்சியே பெறாத இத்தனை பேருக்குப் பணி என்றால் ராணுவத்திற்கு அப்படி என்ன நெருக்கடி ஏற்பட்டது? இவர்கள் பயிற்சிக்காலம் முடித்து, எந்த முகாமிற்கும் செல்லாமலே வீடு திரும்பும்போது ராணுவத்தின் நிலையில் நெருக்கடி ஏதும் இருக்காதோ? நான்காண்டுகளுக்குப் பின்னர் எந்தப் பணியில் அவர்கள் சேரப்போகிறார்கள்? தாமும் கெட்டு சேர இருந்தவர்களின் வாய்ப்பையும் கெடுக்கும் "அக்னிபத்' திட்டம் ஏற்புடையதல்ல.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 அற்புதத் திட்டம்
 நாட்டிற்காக சேவை புரிய வேண்டும் என்று எண்ணும் இளைஞர்களுக்கான அற்புதத் திட்டம் அக்னிபத். நான்கு ஆண்டுகள் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு, ஆளுமைத் திறனை வளர்க்கும் முறையான ராணுவப் பயிற்சி, ஆயுள் காப்பீடு, ஊனமுற்றோர் நலக் காப்பீடு, தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு முப்படைகளில் பணியாற்ற அரிய வாய்ப்பு, சமுதாயப் பாதுகாப்பு, அக்னி வீரர் என்ற கெளரவம், உள்நாட்டு நிறுவனங்களின் வேலை வாய்ப்பில் முன்னுரிமை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி, ராணுவத்தின் ஆள் பற்றாக்குறைக்கும் தீர்வு காணும் அக்னிபத் திட்டத்தை கைவிடக் கூடாது.
 கே. ராமநாதன், மதுரை.
 முன்னுரிமை
 ராணுவத்தில் 40,000 பேரை நான்கு ஆண்டுகளுக்கு ஒப்பந்தப் பணியில் அமர்த்தி அதிலிருந்து தகுதியுடைய 10,000 பேரை ராணுவத்தில் நிரந்தரப் பணியில் அமர்த்துவதற்கான திட்டம் இது. மீதமுள்ள 30,000 பேருக்கு வேறு துறைகளில் முன்னுரிமை தர வழிவகை இருக்கிறது. இதில் எங்கே இளைஞர்களின் லட்சிய கனவு சிதைகிறது? வருடந்தோறும் கூடுதலாக 30,000 இளைஞர்களுக்கு ராணுவத்தில் நான்காண்டுகள் பணியாற்றும் நல்லதொரு வாய்ப்பை அக்னிபத் திட்டம் வழங்குகிறது. விருப்பம் உள்ளவர்களைத்தான் இந்த திட்டம் அழைக்கிறதே தவிர அனைத்து இளைஞர்களையும் கட்டாயப்படுத்தவில்லை.
 சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.
 கற்பனை
 "அக்னிபத் திட்டத்தால் இளைஞர்களின் ராணுவப்பணி லட்சியம் சிதைந்துவிடும்' என்பது வெறும் கற்பனையே. மேலும், உலகிலேயே அதிகமான இளைஞர் சக்தி கொண்ட நாடு, நம் பாரதம்தான். அந்த இளைஞர் சக்தியை ஒருமுகப்படுத்த "அக்னிபத்' போன்ற திட்டம் அவசியம் தேவை. உலகத்தின் பல நாடுகளிலும் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் இதே மாதிரியான திட்டத்தை இந்தியாவிலும் நடைமுறைப்படுத்துவதன் மூலம், இந்திய இளைஞர்களுக்கு உடல் வலிமை, மன வலிமை மட்டுமல்லாமல், கூடுதலாக தன்னம்பிக்கையும் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
 சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.
 அலட்சியம்
 இத்திட்டத்தை கைவிடுவதே சரியானதாகும். ராணுவத்துறையில் பரிசோதனை முயற்சி என்பது நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் அலட்சியம் காட்டுவதாகும். நமது அண்டை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் எப்போதும் நமக்கு பகை நாடுகளாகும். சீனா தொடர்ந்து ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாம் ராணுவத்தில் இடைக்கால வீரர்களைத் தேர்வு செய்வது அறிவுடைமையல்ல. மேலும் ராணுவத்தேர்வு எழுத ஆயிரக்கணக்கானவர்கள் காத்திருக்கும் நிலையில், அக்னிபத் திட்டம் அவர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருப்பதில் வியப்பில்லை.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 கனவு கலையும்
 அக்னிபத் திட்டத்தின் முழுமையான பலன்கள் தெளிவாக இல்லை. நான்கு ஆண்டுகள் கழித்து கிடைக்கும் ரூ. 11.71. லட்சம் ஏழை குடும்பச் செலவில் கரைந்துவிடும். ஆண்டிற்கு 46 ஆயிரம் வீரர்கள் தேர்வு என்றால், மேலும் வீரர்கள் தேவை எனில் அரசு என்ன செய்ய போகிறது? லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் சேர தோள் தட்டிக் கொண்டிருக்கும் நிலையில் இத்திட்டம் அவர்களின் கனவை கலைத்துவிடும். நிலையற்ற அக்னிபத் வீரர்களின் உறுதி அற்ற தன்மை ராணுவத்தினை பலவீனப்படுத்தி விடும். இத்திட்டத்தினால் ராணுவத்திற்கும் பலனில்லை, இளைஞர்களும் பயனில்லை.
 நா. குழந்தைவேலு, சென்னை.
 ஐயமில்லை
 அக்னிபத் திட்டத்தை கைவிட வேண்டும் என்கிற கோரிக்கை சரியானதல்ல. வழக்கத்தில் உள்ள குறுகிய காலப் பணியான ஐந்து ஆண்டுகள் ராணுவ அதிகாரிகள் பயிற்சி இருப்பது போன்றதுதான் அக்னிபத் திட்டமும். இதிலும் தொடர் பணிக்கு 10 % இட ஒதுக்கீடு உண்டு. வருங்கால வேலைவாய்ப்புக்கு சுமார் 12 லட்சம் நிதியுதவியும் குறுகிய காலத்தில் கிடைக்கிறது. விரும்புகிற இளைஞர்கள் சுயதொழிலும் செய்யலாம்; தனியார் நிறுவனங்களில் இவர்களுக்கு வேலை காத்திருக்கிறது. பிரதேச ராணுவப்படை போன்றதுதான் இதுவும். இதனால் இளைஞர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும் என்பதில் ஐயமில்லை.
 ரெ. சுப்பா ராஜு, கோவில்பட்டி.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com