"பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே இருக்க வேண்டும் என்கிற கோரிக்கை சரியானதா?' என்ற கேள்விக்கு  வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

 பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே இருக்க வேண்டும் என்ற கோரிக்கை சரியானது மட்டுமல்ல, நியாயமானதுங்கூட.

கேள்விக்குறி
 பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே இருக்க வேண்டும் என்ற கோரிக்கை சரியானது மட்டுமல்ல, நியாயமானதுங்கூட. ஆனால், சில மாநிலங்களில், அரசியல் காரணங்களுக்காகவும், சுயநல நோக்கங்களுக்காகவும் அரைகுறை கல்வியாளர்களோ கல்வித்துறைக்கே சம்பந்தமில்லாதவர்களோ பல்கலைக்கழக துணைவேந்தர்களாக நியமிக்கப்படுகிறார்கள். அந்த நிலையில், குறிப்பிட்ட பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகிறது. இந்தத் தவறான போக்கு நம் மாநிலத்தில் நிகழாது என்பதை உறுதிப்படுத்த முடியுமானால், பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே இருக்க வேண்டும் எனும் கோரிக்கையை நிறைவேற்றலாம்.
 சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.
 சரியானதல்ல
 பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே இருக்க வேண்டும் என்கிற கோரிக்கை சரியானதல்ல. பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி என்பது மாணவர்களின் எதிர்காலத்தோடு தொடர்புடையது. எனவே, அதில் அரசியல் தலையீடு இருத்தல் கூடாது. மாநில அரசுக்கே துணைவேந்தர் நியமன அதிகாரம் என்கிற நிலை வந்தால் நிச்சயம் அது லஞ்ச ஊழலுக்கே வழிவகுக்கும். துணைவேந்தர் பதவிக்கே அது இழுக்கை ஏற்படுத்திவிடும். அதே நேரத்தில், மாநில அரசைப் புறக்கணிப்பதும் சரியல்ல. முதலமைச்சரும், ஆளுநரும் இணைந்து துணைவேந்தரை நியமனம் செய்யலாம்.
 ஆர். சீனிவாசன், சிதம்பரம்.
 உரசல்
 ஒரு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்கும், அப்படிப் பராமரிக்கப்படாதபோது அது குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிப்பதற்கும்தான் ஆளுநர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இவற்றைத் தவிர மாநில அரசின் நிர்வாக நடைமுறைகளில் ஆளுநர் தலையிடுவது என்பது ஏற்புடையதல்ல. அப்படித் தலையிடுவது மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தேவையற்ற உரசலை ஏற்படுத்திவிடும். இதனைக் கருத்தில் கொண்டு பார்த்தால் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்க வேண்டும் என்பதே சரியானதாகும்.
 என்.பி.எஸ். மணியன்,
 மணவாள நகர்.
 தவறான கோரிக்கை
 இக்கோரிக்கை தவறானது. பல்கலைக்கழக துணைவேந்தரை மாநில அரசே நியமிப்பது தேவையற்ற சர்ச்சைக்கே வழிவகுக்கும். இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு. மத்திய அரசால் நியமிக்கப்படும் மாநில ஆளுநரே பல்கலைக்கழகங்களின் வேந்தர். கல்வி பொதுப் பட்டியலில் வருவது. பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்டங்களின் அடிப்படையில் இயங்குவன. பல்கலைக்கழக பேராசிரியர்களும் நிர்வாகப் பணியாளர்களும் மாநில அரசின் விதிகளின்படி நியமிக்கப்படுவர். துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருப்பதே நிர்வாக ரீதியில் சரியானது. அப்படி இல்லாவிடில், ஆளுங்கட்சிக்கு வேண்டியவரை துணைவேந்தராக நியமிக்க வேண்டிய கட்டாய நிலை உருவாகும். அது நல்லதல்ல.
 கரு. பாலகிருஷ்ணன், தேவகோட்டை.
 கூட்டுறவு
 பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன அதிகாரம் மாநில அரசுக்கு மட்டுமே என்று இல்லாமல் மாநில அரசுக்கும் என்று அமைய வேண்டும். மாநிலத்தில் மத்திய அரசின் சார்பில் ஆளுநர் என்ற பதவி உள்ளவரை ஆளுநரும் அரசும் கலந்தே துணைவேந்தரை நியமிப்பதே சிறப்பாகும். மாநில அரசு என்பது ஒரு கட்சி சார்ந்தது என்பதால் சுயநலத்திற்கு இடம் தரக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தன்னிச்சையாக ஆளுநர் முடிவெடுக்க வேண்டாம்; தன்னிச்சையாக முதலமைச்சரும் முடிவெடுக்க வேண்டாம். இருவரும் இணைந்து கூட்டுறவாக துணைவேந்தர் நியமனத்தை மேற்கொள்வது சிறப்பாக அமையும்.
 தெ. முருகசாமி, புதுச்சேரி.
 புள்ளிவிவரங்கள்
 இக்கருத்து முற்றிலும் ஏற்புடையதாகும். மத்திய அரசால் ஒரு மாநிலத்திற்கு நியமிக்கப்படும் ஆளுநர் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவராக உள்ளார். அவருக்கு அம்மாநிலத்தில் இருக்கும் தகுதி வாய்ந்த கல்வியாளர்கள் குறித்து தெளிவான புள்ளிவிவரங்கள் கிடைப்பது அரிது. மாநில ஆட்சியாளர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மாநில நிலைமை, கல்வியாளர்கள் குறித்த தெளிவான சிந்தனை முழுமையாக இருக்கும். மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநரை விட ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்களுக்கே உண்மையான அதிகாரம் உள்ளது.
 எஸ்.எம்.ஏ. செய்யது முகம்மது,
 மேலப்பாளையம்.
 அரசியல்
 பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் இருக்க வேண்டும் என்ற கருத்து சரியானது அல்ல. பல்கலைக்கழக கல்வித்துறையை மாநில அரசிடம் அளித்தால், அவர்கள் அதையும் அரசியல் ஆக்கிவிடுவார்கள். துணைவேந்தர்கள் பதவியில் அரசியல்வாதிகள் அமர்த்தப்பட்டால் கல்லூரிக் கல்வி என்னவாகும் என்பதை கற்பனை செய்ய முடியவில்லை. ஏற்கெனவே நம் நாட்டுக் கல்லூரிகளின் தரம் தாழ்ந்து உள்ள நிலையில், இதனால் அது மேலும் தரம் தாழும் வாய்ப்பு உள்ளது. துணைவேந்தர்கள் நியமனம் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்தால்தான் பாடத் திட்டங்கள், நிர்வாகம், தேர்வுகள் சரியான முறையில் இருக்கும். தற்போதுள்ள நிலை மாற்றப்பட்டால், பல்கலைக்கழகங்களின் தரம் கேள்விக்குறியாகிவிடும்.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 மோதல் போக்கு
 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அந்தந்த மாநில அரசின் பரிந்துரை மூலம் நியமிப்பதே முறையானதாக இருக்கும். மாநில கல்விக் கொள்கை, மொழி உணர்வு, மாநிலத்தின் பிரத்யேக வரலாறு இவற்றை அறிந்தவராக துணைவேந்தர்கள் இருத்தல் அவசியம். ஒரு மாநில பல்கலைக்கழகத்திற்கு மற்றொரு மாநிலத்திலிருந்து ஒருவரை துணைவேந்தராக நியமித்தால், அவருக்கு மாநில அரசோடு மோதல் போக்குதான் உருவாகும். நன்கு கற்றுத் தேர்ந்த கல்வியாளர்களை துணைவேந்தர்களாக நியமனம் செய்ய வேண்டுமானால் துணைவேந்தர் நியமன அதிகாரம் மாநில அரசிடம் இருப்பதே நல்லது.
 ஏ.பி. மதிவாணன், சென்னை.
 தவிர்க்க முடியாதது
 பல்கலைக்கழக துணைவேந்தர் என்பவர் கல்லூரிக் கல்வியின் தரத்தை மேம்படுத்த வல்லவராக இருப்பது அவசியம். அப்படிப்பட்ட துணைவேந்தரை மாநில ஆளுநர் நியமிப்பதே சரியாகும். துணைவேந்தரை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் சட்டம் நடைமுறைக்கு வந்தால், ஆளுங்கட்சியின் தலையீடு தவிர்க்க முடியாதது. மேலும், ஆளும் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களும் பல்கலைக்கழகத்தில் செல்வாக்கு செலுத்த முனைவார்கள். எனவே, இந்த சிக்கல்கள் ஏற்படா வண்ணம் இப்போது உள்ள முறையே தொடரலாம். ஆனாலும், தற்போதைய காலச்சூழலுக்கு ஏற்ப ஆளுங்கட்சியுடன் இணைந்து ஆளுநர் துணைவேந்தரை நியமனம் செய்யலாம்.
 சி.ஆர். குப்புசாமி, உடுமலைப்பேட்டை.
 மாண்பு குலையும்
 பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்க வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் தவறானது. பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி என்பது வாரியத் தலைவர் பதவியன்று. அது மிகவும் பொறுப்பு மிக்க பதவி. மேலும், ஒரு ஆட்சியில் நியமிக்கப்படும் துணைவேந்தர் அந்த ஆட்சி மாறும்போது தனது பதவியை விட்டு விலக வேண்டிய நிலை ஏற்படும். அப்போது அவர் தனது பதவிக்காலத்தில் முன்னெடுத்த பணிகள் தொய்வு அடையும். அதுமட்டுமல்ல, துணைவேந்தர் கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது ஆளுங்கட்சியின் கொடிகளே எங்கும் பறக்கும். இது கல்விக்கூடத்தின் மாண்பைக் குலைத்துவிடும். எனவே, துணைவேந்தர் நியமனத்தில் தற்போதைய நிலை தொடர்வதே நல்லது.
 சி. இரத்தினசாமி, திருப்பூர்.
 காலத்தின் கட்டாயம்
 இக்கோரிக்கை மிகவும் சரியானது. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரமாக இருக்க வேண்டும். ஒரு சில மாநிலங்களில் இந்த நடைமுறை உள்ளது. ஏற்கெனவே, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இப்போது தமிழக அரசு மீண்டும் இந்த மசோதாவை நிறைவேற்ற முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. கல்வித்துறையில் பல மாற்றங்களை செய்துவரும் தமிழக அரசு இதனையும் நிறைவேற்ற வேண்டும். இது காலத்தின் கட்டாயம். தமிழக அரசின் கோரிக்கை நியாயமானது.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 முன்னுரிமை
 பல்கலைக்கழகங்கள் மாநில அரசினுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர ஆளுநரின் கைகளில் இருக்க வேண்டிய அவசியமில்லை. தேவைப்பட்டால் மாநில அரசு தகுதியான கல்வியாளர்களின் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி அதில் இருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கொடுக்கலாம். அதை விடுத்து, முழுக்க முழுக்க ஆளுநரே தன்னிச்சையாக துணைவேந்தர்களை நியமனம் செய்வதென்பது ஏற்புடையதாகாது. அந்தந்த மாநிலங்களில் உள்ளவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பட்டதாரிகள் ஆகியோர் வாக்களித்து துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் முறையை அமல்படுத்தலாம்.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com