"முற்பட்ட வகுப்பினருக்கான பத்து சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்கிற உச்சநீதிமன்றத் தீர்ப்பு, சமூகநீதிக்குப் பின்னடைவு ஆகுமா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சமுக நீதிக்குப்பின்னடைவு ஆகாது. முன்னேறிய வகுப்புகளில் பலர் திறமையிருந்தும் அடிப்படைத் தேவைகளுக்கே போராடும் ஏழைகளாகவே உள்ளனர்.

பின்னடைவு ஆகாது
 சமுக நீதிக்குப்பின்னடைவு ஆகாது. முன்னேறிய வகுப்புகளில் பலர் திறமையிருந்தும் அடிப்படைத் தேவைகளுக்கே போராடும் ஏழைகளாகவே உள்ளனர். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பலர் திறமை இல்லாவிடினும் இட ஒதுக்கீட்டால் அரசுப் பணியில் சேர்ந்து சாதிய அடிப்படையில் விரைவில் பதவி உயர்வும் பெற்றுவிடுகிறார்கள். நீதிபதி வழங்கிய தீர்ப்பில், "குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இட ஒதுக்கீட்டுக்கொள்கை ரத்து செய்யப்பட வேண்டும்' என்று கூறியுள்ளதை மனசாட்சி உள்ளோர் ஏற்பார்கள். முற்பட்ட வகுப்பில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதால் சமூக நீதி பலப்படும்.
 உ. இராசமாணிக்கம், கடலூர்.
 பயன்
 சமூகநீதி என்ற வார்த்தைக்கு ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு விளக்கத்தை அளிக்கின்ற இக்காலத்தில் முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு பின்னடைவு ஏற்படுத்தாது. காரணம் பொருளாதாரத்தில் பின்தங்கிய எத்தனையோ பேர் இந்தத் தீர்ப்பினால் பயனடைவர். ஜாதிகளை அடிப்படையாக வைத்து பயனாளிகளை நிர்ணயம் செய்வது தவறு. பொருளாதாரத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புகளில் ஒரே குடும்பத்தில் பல உயர்ந்த பதவிகளை வகிப்பவர்கள் ஏராளமானோர் உள்ளார்கள். எனவே இந்தத் தீர்ப்பு சமூக நீதிக்கு பின்னடைவு ஆகாது.
 அ. பட்டவராயன், திருச்செந்தூர்.
 பின்னடைவே
 இட ஒதுக்கீடு ஏழ்மையைப் போக்கும் கருவி அல்ல. வாய்ப்புகள் மறுக்கப்பட்ட வகுப்பினருக்கு அரசியல் சட்டம் வழங்கிய உரிமை. இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் பொருளாதார அளவுகோலை பயன்படுத்த முடியாது. பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான பத்து சதவீத இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட ஏழை மக்கள் போட்டியிட முடியாது. முன்னேறிய வகுப்பில் உள்ள ஏழைகளும் போட்டியிடும் வகையில் தமிழகத்தில் பொதுப்பிரிவிற்கான 31% இட ஒதுக்கீடு உள்ளது. தமிழ கத்தில் 69 % இட ஒதுக்கீடு உள்ளது. அதை ரத்து செய்யும் உள்நோக்கத்துடன் இந்தப் பொருளாதார இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கருத வேண்டியிருக்கிறது.
 எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
 ஏற்கத்தக்கதே
 சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் பொருளாதார ரீதியாக முன்னேறியவர்களும் பின்தங்கியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் முடிவு சரியே என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏற்கத்தக்கதே. முற்பட்ட வகுப்பினரில் எவ்வளவோ குடும்பங்கள் பின்தங்கி இருக்கும் சூழலில் தொடர்ந்து காலங்காலமாக அவர்கள் முன்னேறாமலே இருந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு 10% சதவீத இட ஒதுக்கீடு நிச்சயம் பயன்படும். நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பின்னரும் அனைத்து தரப்பும் சமநிலை அடையாத சூழல் நிலவிவருகிறது. இந்நிலையை மாற்ற இத்தீர்ப்பு வழிகோலும்.
 மா. பழனி, தருமபுரி.
 சமநீதி
 உச்சநீதிமன்றத் தீர்ப்பு, சமூகநீதிக்கு நிச்சயம் பின்னடைவாகும். பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டைப் பொறுத்தவரை எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீடுகளின் கீழ் வராத மக்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். ஏற்கெனவே இட ஒதுக்கீட்டால் பலன் பெறும் பிற்படுத்தப்பட்ட மக்கள், பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுத் திட்டத்தின் கீழ் வர மாட்டார்கள். ஆக முற்பட்ட வகுப்பினர் மட்டுமே இதில் பலன் பெறுவார்கள். இட ஒதுக்கீடு பின்பற்றப்பட மாட்டாது. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு எனும்போது அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களைக் கணக்கில் கொள்வதே சமநீதி.
 ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
 முரண்
 இட ஒதுக்கீடு என்பது எந்த விதத்திலும் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இல்லை. அதற்கான வாய்ப்பை உருவாக்கித் தருவதற்காகத்தான். கல்வி கற்க, அறிவை வளர்த்துக்கொள்ள தகுதி இல்லை என்று ஒதுக்கப்பட்ட, மறுக்கப்பட்ட மக்களுக்கான வாய்ப்பை வழங்கிக் கொண்டிருப்பது இட ஒதுக்கீடு. இன்னும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் லட்சக்கணக்கான மக்களைக் கொண்ட நாடு இந்தியா. இங்கு திறமையை மேம்படுத்திக் கொண்டால் எல்லா வாய்ப்புகளும், மரியாதைகளும் தடையின்றி திறக்கும் வகுப்பினர் முற்பட்ட வகுப்பினர். அவர்களுக்கு மட்டும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது முரணானது.
 இரா. தமிழ்பாவலன், அரூர்.
 அரசியல் காரணம்
 உச்சநீதிமன்றத் தீர்ப்பு சமூகநீதிக்குப் பின்னடைவு ஆகாது. புதிய இட ஒதுக்கீட்டால், எந்த சமூகத்தினரின் இட ஒதுக்கீட்டு அளவும் குறைக்கப்படவில்லை. பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீட்டில் மாற்றம் இல்லாதபோது பொருளாதார நீதியில் நலிவுற்ற முற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதில் தவறு காண முடியாது. இத்தீர்ப்பை அரசியல் காரணங்களுக்காக மட்டும் எதிர்ப்பது நல்லதல்ல. இதுபோன்ற இட ஒதுக்கீட்டை முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். கொண்டு வர முற்பட்டார். இப்போது உச்சநீதிமன்றம் தீர்ப்பாகவே அளித்த பின்னும் அதை ஏற்க மறுப்பது சரியல்ல.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 உண்மை நிலை
 உச்சநீதிமன்றத் தீர்ப்பு, சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் பயன்பெற வழி
 வகுக்கும். பாராட்டத்தக்கத் தீர்ப்பாகும். அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்பை எவ்விதத்திலும் இத்தீர்ப்பு மீறவில்லை. அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்கும் இந்தத் தீர்ப்பு ஏற்கெனவே பல்வேறு பிரிவினருக்கு வழங்கப்பட்டுவரும் இட ஒதுக்கீட்டினை எவ்வகையிலும் பாதிக்காது. தற்போதுள்ள இட ஒதுக்கீட்டு முறையால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய திறமையுள்ள முற்பட்ட வகுப்பினருக்கு ஆறுதலாக அமைவதோடு, சமதர்ம சமுதாயம் அமைந்திடவும் வழிவகுக்கும். இத்தீர்ப்பால் சமூகநீதி காக்கப்பட்டுள்ளதே உண்மை நிலை.
 கே. ராமநாதன், மதுரை.
 சமவாய்ப்பு
 உச்சநீதிமன்றத் தீர்ப்பு சமூகநீதிக்குப் பின்னடைவை ஏற்படுத்தாது. சமூகநீதி அனைத்து சமூகத்தினருக்கும் உரியது. அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். சமூகநீதிக்கான வரையறை காலத்திற்கேற்றவாறு மாற்றியமைப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும். மேலும் இந்த தீர்ப்பு, ஏற்கெனவே இருக்கும் இட ஒதுக்கீட்டில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. நாடு விடுதலை அடைந்தபோது இருந்த நிலை இன்று இல்லை.
 நாம் நமது தகுதியை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்குரிய வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். அதற்கு இத்தீர்ப்பு உதவும்.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 துன்பம் தொடர்கிறது
 நாடு விடுதலை பெற்று 75 ஆண்டு கடந்துவிட்டது. இன்னும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட என்று கூறிக்கொண்டு ஒருசிலர் இட ஒதுக்கீட்டின் பலன்களை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் பொருளாதாரத்தில் பெரிதும் மேம்பட்டு விட்டனர். ஆயினும் அவர்களும் அவர்களின் வாரிசுகளும் இட ஒதுக்கீட்டால் பயன் பெறுவது தொடர்கிறது. முற்பட்ட வகுப்பினர் தகுதியிருந்தும் பொருளாதாரத்தில் நலிவுற்றிருப்பதால் முன்னேற இயலவில்லை. அவர்கள் துன்பம் தொடர்கிறது. ஒரு சிலர் மட்டுமே இட ஒதுக்கீட்டின் பலனைப் பெறுவதற்குப் பெயர்தான் சமூகநீதியா? பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை முன்னேற்றுவதுதான் உண்மையான சமூகநீதி.
 இ. ராஜு நரசிம்மன், சென்னை.
 ஐயமில்லை
 இட ஒதுக்கீடு என்பது சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. இது பொருளாதார அடிப்படையில் ஏற்படுத்தப்படவில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பில் இரு நீதிபதிகள் இதர பிசி, ஏபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஏழைகளை இட ஒதுக்கீட்டில் இணைத்து கொள்ளாதது ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியதே இதற்கு சான்றாகும். ஒரு சிலர் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது என்கிற தீர்ப்பின் மற்றொரு பகுதி சமூக நீதி இட ஒதுக்கீட்டாளரின் உரிமைகள் பறிக்க வழிவகுக்கும என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது. முற்பட்ட வகுப்பினருக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது நிச்சயமாக சமூகநீதிக்குப் பின்னடைவுதான்.
 நா. குழந்தைவேலு, மதுரை.
 குற்றம் அல்ல
 பொருளாதார அடிப்படையில் பின்தங்கி இருக்கின்ற முற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு என்பது வரவேற்கத்தக்கது. உண்மையில் முற்பட்ட வகுப்பினர் என்ற பிரிவுக்குள் எத்தனையோ பேர் பொருளாதார வசதியின்றி படிப்பைத் தொடர இயலாமல், வேலைவாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகின்றனர். முற்பட்ட வகுப்பில் பிறந்தது அவர்கள் குற்றம் அல்ல. அவர்களுக்கும் சமூகநீதி வழங்கப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டுச் சலுகைகளை குறிப்பிட்ட சில பிரிவினரே தொடர்ந்து அனுபவிப்பது என்பது சமூகநீதி அல்ல. குறிப்பிட்ட நிலையை எட்டியவுடன் இட ஒதுக்கீட்டுச் சலுகையை விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை யாருக்குமே இல்லை.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com