"கரோனா அச்சம் மீண்டும் எழுந்துள்ள நிலையில், பொதுமுடக்கம் அறிவித்தால் அது பொருளாதார சரிவுக்கு வழிவகுத்துவிடும் என்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

இக்கருத்து சரியானதுதான். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மீண்டும் ஒரு பொது முடக்கம் அறிவிப்பது என்பது, மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிப்பதுபோல் ஆகிவிடும்.

சரியானது
 இக்கருத்து சரியானதுதான். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மீண்டும் ஒரு பொது முடக்கம் அறிவிப்பது என்பது, மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிப்பதுபோல் ஆகிவிடும். அது மட்டுமல்ல, பழைய அனுபவத்தில் இருந்து நாம் பாடம் எதுவும் கற்றுக்கொள்ளவில்லை என்று ஆகிவிடும். ஏற்கெனவே தடுப்பூசி, பூஸ்டர் ஆகியவற்றைச் செலுத்திக்கொண்டும், நிலவேம்புக் குடிநீர் உட்பட பல வழிமுறைகள் மூலமும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் முகக்கவசம் அணிதல், தனிமைப்படுத்திக் கொள்ளுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலே போதும்.
 சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.
 குழப்பம்
 வருங்காலம், பண்டிகைகள், தேர்வுகள் போன்றவற்றால் மக்கள் அதிகம் கூடுகின்ற காலமாகும். வாக்குவங்கியை மட்டுமே கருத்தில் கொண்டு கரோனா விஷயத்தில் ஆளுவோரும் எதிர்க்கட்சிகளும் கருத்துத் தெரிவித்து வருவது பொதுமக்களுக்குக் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. மீண்டும் பொதுமுடக்கம் அறிவித்தால் நடுத்தர மக்களும், கூலித்தொழிலாளர்ளும், ஏழைகளும், மாணவர்களும் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்தியாவில் கரோனாவின் தற்போதைய உண்மை நிலையை அறிவிப்பதும், அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்வதும் மத்திய அரசின் கடமையாகும்.
 எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
 அச்சம்
 கரோனாவின் தாக்கத்தால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சரிந்த பொருளாதாரம் இன்னும் பழைய நிலைக்கு மீண்டு வரவில்லை. பல சிறு, குறு தொழில்களை கொள்ளை நோய்த்தொற்று பாதிப்பு அழித்து விட்டது. அப்படிப்பட்ட நிலையில் மீண்டும் பொதுமுடக்கம் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது. கரோனாவின் தாக்கம், அதனால் ஏற்படும் பாதிப்பு, அதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் இவற்றைக் கடந்த மூன்று ஆண்டுகளாக முழுமையாகக் கற்றுக் கொண்டுவிட்டோம். எனவே மீண்டும் ஒரு பொதுமுடக்கம் நிச்சயம் தேவையற்றது.
 ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
 தேவையற்றது
 இக்கருத்து ஏற்புடையதே. கடந்த காலத்தில் பொதுமுடக்கத்தின்போது வேலை இழந்தோரும், பாதிக்கு மேல் ஊதியம் இழந்தோரும் அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை. பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டால், தனியார் நிறுவனங்கள் ஆட் குறைப்பும், ஊதிய குறைப்பும் உடனடியாக செய்வார்கள். தினக்கூலி பெறுபவர் நிலை சொல்ல வேண்டியதில்லை. கொள்ளை நோய்தொற்று அடங்கியது பொது முடக்கத்தாலா, தடுப்பூசியினாலா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஏறக்குறைய பெரும்பாலானோர் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டுவிட்ட நிலையில் பொது முடக்கம் தேவையற்றது.
 சீனி. செந்தில்குமார், தேனி.
 முழு வெற்றி
 பெரும்பாலான மக்கள் கரோனா தீநுண்மியால் ஏற்படக்கூடிய துன்பங்களை உணர்ந்துள்ளனர். எனவே பொதுமுடக்கம் தேவையில்லாத ஒன்று. அப்படி பொதுமுடக்கம் அறிவித்தால் கண்டிப்பாக பொருளாதார சரிவு ஏற்பட்டு, நாட்டின் உற்பத்தி பாதித்து விலைவாசி உயர்வுக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் வழிவகுத்து விடும். தவிர, ஏற்கனவே இரண்டு அலைகளை எதிர்கொண்டு தற்போதுதான் மக்கள் மெல்ல மெல்ல மீண்டு வருகிறார்கள். நமது நாட்டைப் பொறுத்தவரை தடுப்பூசித் திட்டம் முழுமையாக வெற்றியடைந்துள்ளது. எனவே பெரிய பாதிப்பு ஏற்படாது என்ற நம்பிக்கை உள்ளது.
 உ. இராசமாணிக்கம், கடலூர்.
 ஆயுதமல்ல
 கரோனாவை எதிர்த்து சமாளிப்பதற்கு பொதுமுடக்கம் சரியான ஆயுதமல்ல என்பதை 2020-ஆம் ஆண்டின் பொதுமுடக்கத்தின் மூலம் நாம் அனுபவித்து அறிந்திருக்கிறோம். தவிர அன்றைய பொதுமுடக்கத்தில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் பலர் அதிலிருந்து மீண்டு வருவதற்கு இன்னமும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். நிலமை இப்படி இருக்கும்போது, மீண்டும் ஒரு பொதுமுடக்கத்தை அரசு கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும். மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகளைக் கடுமையாக்கி கரோனா பெருந்தொற்றின் வரவைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
 ஆர். ஹரிகோபி, புதுதில்லி.
 வீழ்ச்சி
 பொதுமுடக்கத்தின் காரணமாக ஏற்பட்ட இழப்பிலிருந்து பெரும்பாலான மக்கள் குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினர் இன்னமும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர். பணியிழந்தவர்கள், சொந்தத் தொழிலை விட்டவர்கள் இன்னமும் இயல்பு நிலைக்கு மாறமுடியாமல், தவித்து வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் பொதுமுடக்கம் கொண்டுவந்தால் அது பலருடைய வாழ்வின் வீழ்ச்சிக்கு காரணமாக விடும். எனவே, கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தாலே போதும். மேலும், இருதவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதால் அச்சம் தேவையில்லை.
 கோ. அமிர்தநேயன், உடுமலைப்பேட்டை.
 வாழ்வாதாரம்
 இக்கருத்து சரியே. கரோனா தீநுண்மி குறித்தோ, அதன் தாக்கம் எப்படியிருக்கும் என்பது குறித்தோ எதுவுமே தெரியாதபோது அதனை எதிர்கொள்ள பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. தற்போது பொதுமுடக்கத்தை அறிவித்தால் பொருளாதார சரிவு நிச்சயம் ஏற்படும். ஏற்கனவே அடித்தட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டால் அவர்களுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். முதலாளிகள் பொதுமுடக்கத்தில் இழந்த பொருளாதாரத்தை விலையேற்றத்தின் மூலம் மீட்டுக் கொள்ள முடியும். ஆனால் தொழிலாளர்கள் நிலை கவலைக்கிடமாக மாறும்.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 நல்லது
 கரோனாவிற்காக மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டால் இந்திய பொருளாதாரம் பாதிப்பு அடையும். முதல் அலை கரோனாவின்போது பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வர சிரமப்பட்டதை நாடு நன்கு அறியும். இரண்டாம் அலையின் போது கடும் பாதிப்பு இருந்தும் பொதுமுடக்கம் அறிவிக்கப்படாமல் அந்தந்த பகுதியில் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி நிலைமை சமாளிக்க பட்டது. தற்போது இந்திய தடுப்பூசிகள் மூன்றாம் அலையை சமாளிக்க கூடிய சக்தி வாய்ந்தவை என்று தெரிவிப்பதால், அந்தந்த பகுதிகளில் கட்டுப்பாட்டை அறிவித்து பொதுமுடக்கத்தை தவிர்ப்பது நல்லது.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 கேள்விக்குறி
 கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற தொழில் நகரங்களில் உள்ள பல சிறு, குறு தொழிற்சாலைகள் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் நசிந்து போய் விட்டன. ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் வேலைவாய்ப்பை இழந்தனர். அண்மைக்காலமாகத்தான் தொழில்துறை மெல்ல மெல்ல மீண்டெழுந்து வந்துகொண்டிருக்கிறது. தொழிலாளர்களும் வேலைவாய்ப்பைப் பெற்று ஓரளவு நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். இந்நிலையில் தற்போது மீண்டும் பொதுமுடக்கம் அறிவித்தால் அது பொருளாதார சீரழிவை ஏற்படுத்துவதோடு, சாமானிய மக்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிவிடும்.
 மு. நடராஜன், திருப்பூர்.
 தவிர்க்க இயலாதது
 மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டால் பொருளாதார சரிவு தவிர்க்க இயலாததாகிவிடும். கடந்த இரண்டு அலைகளின்போது நமக்கு ஏற்பட்ட அனுபவம் நிச்சயம் இப்போது கைகொடுக்கும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயப்படுத்துவதில் தவறில்லை. ஆனால், பொதுமுடக்கம் தேவையில்லை. அதனை மக்கள் விரும்பவில்லை. பெருமாபாலான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். எனவே, அச்சப்படத் தேவையில்லை. முகக்கவசம், சமூக இடைவெளி, கைகளைக் கழுவுதல் போன்ற சுகாதார நடவடிக்கைகளே போதுமானவையாகும். நோய்த்தொற்று குறித்த அச்சமின்றி வாழலாம்.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 பாடம்
 கடந்த கால அனுபவங்களில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். பொதுமுடக்கத்தால் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்து மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டார்கள் என்பதை இந்த நாடு கண்கூடாக பார்த்தது. மீண்டும் பொதுமுடக்கம் என்பதை நினைத்துப் பார்ப்பதே அச்சம் தருவதாக உள்ளது. கரோனாவை விட வறுமையும், பசியும் கொடூரமானவை என்பதை கடந்த காலங்களில் நாம் நன்கு உணர்ந்து விட்டோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மட்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மீண்டும் பொதுமுடக்கம் இல்லாமல் கரோனாவை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும்.
 மா. பழனி, தருமபுரி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com