"தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ள தொலைவிட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

 தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ள தொலைவிட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல.

 சரியல்ல
 தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ள தொலைவிட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல. பிற மாவட்டங்களில் பணியாற்றுவோர், தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டியிருப்பதால் அவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. பணியிடத்தில் இரண்டு நாட்களாவது விடுப்பு எடுக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. வெளி மாநிலத்திற்கு செல்ல வேண்டியவர்களுக்கு இன்னும் அதிக சிரமம் ஏற்படுவது தவிர்க்க இயலாதது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இந்திய தேர்தல் ஆணையம் தொலைவிட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வடிவமைத்திருக்கிறது.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 இயல்பே
 ஏற்கெனவே நடைமுறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்தே பல்வேறு புகார்கள் உள்ளன. இந்நிலையில் புலம்பெயர்ந்தவர் வாக்களிக்க வசதியாக தொலைவிட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டுவரத் திட்டமிடுவது எதிர்ப்புகளை சந்திப்பது இயல்பே. எத்தனை மாநிலக் கட்சிகளால் பிற மாநிலங்களில் உள்ள வாக்குச் சாவடிகளில் தேர்தல் முகவரை நியமித்துக் கண்காணிக்க முடியும் என்று முன்னாள் தேர்தல் ஆணையர் கோபாலசாமி எழுப்பியுள்ள கேள்விக்கு விடை காண வேண்டும். அனைத்துக் கட்சிகளிடமும் தொலைவிட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
 எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
 நம்பகத்தன்மை
 எதிர்கட்சிகளின் எதிர்ப்பில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. தொலைவிடவாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள்மீதான நம்பகத்தன்மை முழுமையாக உறுதி செய்யப்பட வேண்டும். எனவே சோதனை முறையில் ஓரிரு மாநிலங்களில் அவ்வியந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, எதிர்கட்சிகளும் ஊடகவியலாளர்களும் அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய வேண்டும். அதன் பின்னர் நாடுமுழுவதும் அவ்வியந்திரங்கள் அறிமுகம் செய்யப்படுவதில் எவருக்கும் மறுப்பு இருக்கப்போவதில்லை. எனவே சோதனை முறையில் அவற்றை முயன்று பார்ப்பதே அரசின் மீதான ஆளும் கட்சியின்மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.
 த. முருகவேள், விழுப்புரம்.
 சாத்தியமற்றது
 தொலைவிட வாக்குப்பதிவு இயந்திர நடைமுறைக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அரசியல் கட்சிகள் எழுப்பிய எந்த ஐயத்திற்கும் தேர்தல் ஆணையத்தால் உரிய பதிலளிக்க இயலவில்லை. இது ஒன்றே இது சாத்தியமற்றது என்பதற்கு சிறந்த சான்று. மேலும், நம் நாட்டி ல் வாக்களிக்காதவர்களில் பெரும்பாலோர் நகர்ப்புறங்களில் வசிப்போரும், வசதி படைத்தவர்களுமே ஆவர். இப்படிப்பட்டவர்கள்தான் தொலைவிடத்திலும் வசித்து வருகின்றனர். குறைவான எண்ணிக்கை கொண்ட அவர்களும் வாக்களிப்பதற்கான உரிமையைப் பெற்றிருப்பார்களா என்பது சந்தேகமே. அவர்களுக்காக தேர்தல் ஆணையம் நேரத்தையும் பொருளையும் செலவு செய்ய வேண்டாம்.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 தவிர்க்க இயலாதது
 முதலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அறிமுகமானபோது எதிர்ப்புதான் ஏற்பட்டது. பிறகு அது தவிர்க்க முடியாததாய் ஆகிவிட்டது. அதுபோல் தொலைவிட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரமும் தற்போது எதிர்ப்பை எதிர்கொள்கிறது. ஆனால் எண்ம யுகத்தில் இது தவிர்க்க இயலாதது. இந்திய நாட்டின் குடிமகன் இடம் பெயர்ந்து வாழ நேரிட்டாலும், அவனும் தன் வாக்குரிமையைச் செலுத்த இம்முறை உதவிகரமாக அமையும். தொலைவிட மின்னணு வாக்குப் பதிவு இயந்திர நடைமுறையைக் கொண்டு வருவதில் சிக்கல் இருக்கலாம். எதிர்க்கட்சிகள் இதனை எவ்வாறு சிறப்பாக நடைமுறைப்படுத்தலாம் என்று ஆலோசனை வழங்க வேண்டும்.
 நா. ஜெயராமன், பரமக்குடி.
 வரப்பிரசாதம்
 தொலைவிட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், சொந்த ஊரைவிட்டு பல ஊர்களிலும் புலம் பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். அதன் செயல் விளக்கத்தைக் கூடப் பாராமல், நிறைகுறைகளை ஆராயாமல் கண்மூடித்தனமாக எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு தெரிவிப்பது முற்றிலும் தவறு. எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள் வல்லுநர்களைக் கொண்டு இந்த இயந்திரத்தில் குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டட்டும். அது முற்றிலும் சரி செய்யப்பட்ட பின் ஏற்கட்டும். பரந்த பாரத தேசத்தில் புலம் பெயர்ந்தோர்க்கும் வாக்களிக்கும் உரிமைக்கு ஒரு வாய்ப்பு உருவாகும்போது அதை ஏற்க மறுப்பது ஏற்க இயலாத ஒன்று.
 முகதி. சுபா, திருநெல்வேலி.
 அடிப்படை உரிமை
 ஆளுங்கட்சி எந்தவொரு திட்டத்தைக் கொண்டுவந்தாலும் அதனை எதிர்ப்பதையே எதிர்க்கட்சிகள் தங்கள் குறிக்கோளாகக் கொண்டுள்ளன. அதை தவிர்த்து, திட்டத்தை சரியாக நிறைவேற்ற ஆக்கபூர்வமான யோசனைகளைத் தெரிவிக்கலாம். இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ள தொலைவிட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர நடைமுறையால், வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தியா முழுவதும் புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே 40 முதல் 45 கோடி ஆகும். தேர்தல் ஆணையத்தின் இந்த புதிய உத்தியால், பறிக்கப்பட்ட அவர்களது அடிப்படை உரிமை அவர்களுக்குத் திரும்ப கிடைக்கும்.
 டி.வி. ராமசாமி, சென்னை.
 இன்றியமையாதது
 வாக்காளர்கள் நாட்டின் எந்த மூலை முடுக்கிலிருந்தாலும் அங்கிருந்தபடியே தங்கள் ஜனநாயகக் கடமையினை ஆற்றுவதற்கு வழிவகை செய்வதற்கு தேர்தல் ஆணையம் கடமைப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சிகளுக்கும் செயல்முறை விளக்கம் அளிக்கவும் தேர்தல் ஆணையம் முன்வந்துள்ளது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் எதைப் பற்றியும் சிந்திக்காமல், கண்மூடித்தனமாக அந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பளிக்கிறது. இந்த நவீன தொழில்நுட்ப யுகத்தில் தேவைக்கேற்ப பல மாற்றங்களை மேற்கொள்வது இன்றியமையாதது. அந்த மாற்றங்களுக்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டியதும் இன்றயமையாதது.
 கே. ராமநாதன், மதுரை.
 சாதக பாதகங்கள்
 கடந்த சில ஆண்டுகளில் வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டபோது அவற்றுக்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால், இன்று அந்த தொழில்நுட்பங்கள் இல்லாமல் செயல்பட முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. எனவே, தொலைவிட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பொறுத்தவரை தொடக்கத்தில் அதை குறிப்பிட்ட சில இடங்களில் பரீட்சாத்த ரீதியாக செயல்படுத்தி பார்க்கலாம். அப்போதுதான் அதனால் ஏற்படும் சாதக பாதகங்களைக் கண்டறிய முடியும். குறை ஏதேனும் இருந்தால் அதனை சரிப்படுத்திவிட்டு, பின்னர் எல்லா இடங்களிலும் நடைமுறைப்படுத்தலாம்.
 சி. இரத்தினசாமி, திருப்பூர்.
 புதிதல்ல
 மத்திய அரசை எதிர்ப்பதே எதிர்க்கட்சிகளின் செயல்பாடாக இருந்துவருகிறது. தொலைவிட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர நடைமுறை என்பது புதிதல்ல. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் அடுத்த கட்ட தொழில்நுட்பம்தான். புலம்பெயர்ந்தவர்கள் தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பை உருவாக்கும் இந்த முயற்சி. தேர்தலில் தோல்வியடையும் கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது குறைகூறி வந்தன. இப்போது புதிய நடைமுறையை காரணமில்லாமல் எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. எதிர்க்கட்சிகளின் அச்சத்தைத்தான் இந்த எதிர்ப்பு காட்டுகிறது. இது சரியான செயல் அல்ல.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 தவறு இல்லை
 நவீன தொழில்நுட்பத்தைத் தவிர்க்க முடியாது என்பது உண்மைதான். தொழில்நுட்பத்தை எதிர்க்கட்சிகள் எதிர்க்கவில்லை. தொழில்நுட்பத்தை எதிர்ப்பவர்கள்பின்தங்கி விடுவார்கள்.தொலைவிட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்றுதான் எதிர்க்கட்சிள் கோருகின்றன. அதில் தவறு எதுவும் இல்லை. இந்த தொலைவிட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறை முதலில் ஒரு தொகுதியில் சோதனை அடிப்படையில் திட்டமிடப்படவேண்டும். அனைத்து சந்தேகங்களும் தீர்க்கப்பட்டபின்னர் அனைத்து கட்சிகளின் ஒப்புதல் பெற்று பின்னர் நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தலாம்.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 அவசியம்
 தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ள தொலைவிட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது நியாயமானதே. சுதந்திரமாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலை நீடித்தால், ஆளுங்கட்சியின் விருப்பம்போல்தான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்கிற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் மேலோங்கிவிடும். தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய தேர்தல் ஆணையம் எந்தவொரு புதிய நடைமுறைக்கும் அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் ஆலோசனையும் பெற வேண்டியது அவசியம்.
 மா. பழனி, தருமபுரி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com